வெள்ளம் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6375
பொழுது சாய ஆரம்பித்துவிட்டால் பனங்கள்ளு குடிக்க ஆரம்பித்து விடுவான். உருக்கு போல உறுதியான உடம்பைக் கொண்ட பாப்பனின் மீசை மிகவும் அடர்த்தியாக இருக்கும். தலை முடியை ஒட்ட வெட்டி இருப்பான். உடம்பு முழுக்க முடி இருக்கும். கழுத்துப் பகுதியில் லேசான தழும்பு இருக்கும். அவனுக்கு ஜானம்மா என்றொரு பெண்ணுடன் ரகசிய உறவு இருந்தது. ஜானம்மாவின் கணவன் அவளை வேண்டாமென்று உதறித்தள்ளிவிட்டு மூத்த இரண்டு பிள்ளைகளுடன் ஓடிப்போனான். கடைசிப் பிள்ளை முத்துகிருஷ்ணனுடன் ஜானம்மா அங்கேயே தங்கிவிட்டாள். கணவன் தன்னை விட்டுப் போன பிறகுதான் பாப்பனுடன் அவளுக்கு உறவு உண்டாக ஆரம்பித்தது. ஜானம்மா ஒரு கொல்லர் பணி செய்கிற பெண் என்பதால் பாப்பனின் ரகசியத்தைத் தெரிந்துகொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒரு அட்டையையோ பாம்பையோ பார்ப்பது மாதிரி அருவருப்புடன் பாப்பனைப் பார்ப்பார்கள். பாப்பன் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை. அவனைப் பற்றி தாறுமாறாகப் பேசிய ஒன்றிரண்டு ஆட்களைக் கூட உண்டு இல்லை என்று பார்த்துவிட்டான் பாப்பன். அதற்குப் பிறகு அந்த விஷயத்தைப் பற்றி பாப்பனிடம் பேசுவதற்கான தைரியம் ஒரு ஆளுக்குக் கூட இல்லை. கள்ளுக் கடையில் இருந்து பாப்பன் நேராகச் செல்வது ஜானம்மாவின் நிர்வாண உடம்பைப் பார்க்கத்தான். பனங்கள்ளு தரும் போதையும், பெண் தரும் இன்பமும் அவனைத் திக்குமுக்காடச் செய்யும். எல்லாம் முடிந்து வியர்வை வழிய உட்காரும்போது அன்றைய வருமானத்திலிருந்து ஒரு பகுதியை ஜானம்மா கையில் தருவான். அதற்குப் பிறகு தனக்கென்று சொந்தமாக இருக்கும் குடிசையை நோக்கி அவன் வருவான். கிணற்றில் நீர் இறைத்து குளித்து, நெஞ்சில் சிலுவை வரைந்தவாறு படுக்கையில் போய் விழுவான். வாழ்க்கையே அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். கட்டுப்பாடே இல்லாத சுதந்திர மனிதனாக நல்ல நிம்மதியுடன் அவன் உறங்க ஆரம்பிப்பான்.
பாப்பனுக்கென்று சில கொள்கைகள் இருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் அவன் படகை கையிலேயே எடுப்பதில்லை. சர்ச்சுக்குப் போனால் போரடிக்குமென்று கள்ளுக் கடையில் போய் உட்காருவான். ஆனால், முக்கியமான திருவிழாக்கள் நடைபெறுகிற நாட்களிலும், சொந்தக்காரர்களின் திருமண விசேஷங்களுக்கும் சர்ச்சுக்குப் போக பாப்பன் ஒரு நாளும் மறந்ததில்லை.
“பாப்பன் அண்ணே... நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்கல?”
தன்னிடம் விசாரித்தவர்களுக்குக் கூறுவதற்கு பாப்பனிடம் ஒரே ஒரு பதில்தான் இருந்தது. “எனக்கு அந்த எண்ணமே தோணல...”
பாப்பனின் ரோமங்கள் அடர்ந்த மார்பில் அரும்பியிருந்த வியர்வை உப்பை ருசித்தவாறு அவனுடன் ரொம்பவும் நெருக்கமாக இருந்த ஒரு வேளையில் ஜானம்மாவே பாப்பனைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டாள். அப்போது கூட அவனுடைய பதில் அதுவாகத்தான் இருந்தது.
அதற்குப் பிறகு அவள் ஒரு நாளும் அந்தக் கேள்வியை அவனைப் பார்த்துக் கேட்டதே இல்லை.
ரவுடிப்பாப்பன் என்றும் கள்ளு பாப்பன் என்றும் கொல்லப் பாப்பன் என்றும் பாப்பனின் காதில் விழாமலே அவனைப் பற்றி பல்வேறு வகைகளில் பேசிக் கொண்டிருந்த கிராமத்து ஆட்கள் வெட்டு காட்டு பாப்பனைப் பற்றி உண்மையாகவே தெரிந்து கொண்டது வெள்ளம் பெருக்கெடுத்து வந்த நாட்களில்தான். மற்ற எல்லோருமே உன்மத்தம் பிடித்த நிலையில், பயந்து போய் பந்தங்கள் அனைவரையும் விட்டு விட்டு தங்களின் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன வழி என்று தெரியாமல் இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருக்க, வேறு சிலரோ மெழுகுவர்த்திகளையும், அர்ச்சனைகளையும் கடவுளுக்கு பயபக்தியுடன் வழங்கிக் கொண்டிருந்தனர். பாப்பன் இந்த இரண்டு கூட்டத்திலுமே இல்லை. வெள்ளத்தைப் பார்த்து அவன் பயந்தோடவும் இல்லை. மாறாக, ஆற்றின் கரைகளில் அவன் ஓடி ஓடி மனிதர்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றினான். தண்ணீரில் மிதந்து வேகமாக வந்து கொண்டிருந்தவர்களை அவன் வெறித்தனமாக ஓடி வந்து கொண்டிருக்கும் நதி நீரின் மேல் பாய்ந்து காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தான்.
“பயப்படாம இருங்கடா. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்.”
மற்றவர்களுக்கு தைரியம் உண்டாகும் வகையில் பாப்பன் பேசினான். அபூர்வமாக சில இளைஞர்கள் தயங்கித் தயங்கி பாப்பனுடன் நிற்கத் தயாராயினர்.
தண்ணீரில் மிதந்து வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டுக்குட்டியைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்த போதுதான் வெள்ளத்தின் ஓட்டத்தோடு சேர்ந்து மிதந்து வந்து கொண்டிருந்த ஒரு வீடு பாப்பனின் கண்களில் பட்டது. அடுத்தடுத்து இருந்த இரண்டு மரங்களில் பட்டு வந்த வீடு தண்ணீரில் அப்படியே நின்றது. வீட்டுக்குள் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்பது போல் பாப்பன் அப்போது உணர்ந்தான். எது நடந்தாலும் நடக்கட்டும் என்று துணிந்த பாப்பன் அடுத்த நிமிடம் வீட்டிற்குள் புகுந்தான். அருகில் நின்றிருந்தவர்கள் தடுத்தது எதுவும் அவன் காதுகளில் விழவே இல்லை. அவன் காதுகளில் ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் மட்டுமே கேட்டது.
வீட்டிற்குள் கண்ட காட்சி பாப்பனை நடுங்கச் செய்து விட்டது. துணியால் ஆன தொட்டிலில் படுத்தவாறு ஒரு குழந்தை கை கால்களை உதைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தது. அந்தக் குழந்தை பிறந்தே அதிக பட்சம் எட்டு அல்லது ஒன்பது மாதங்கள்தான் இருக்கும். வீட்டிற்குள் வேறு யாருமே இல்லை. வீடு கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கிக் கொண்டிருந்தது. பாப்பன் இடுப்பில் இருந்து மடக்கு கத்தி ஒன்றை எடுத்து விரித்தான். தொட்டிலின் கயிறை கத்தியால் அறுத்தான். துணித் தொட்டிலால் சுற்றி குழந்தையைக் கையிலெடுத்து மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். கரைகளில் இங்குமங்குமாய் மோதி அப்போதும் வீடு நீரோடு போய்க் கொண்டிருந்தது. குழந்தையுடன் பாப்பன் வீட்டு வாசலில் வந்து நின்றான். மீண்டும் வீடு கரையை நெருங்கியபோது, பாப்பன் குழந்தையுடன் வெளியே குதித்தான். பாதி கரையிலும் பாதி நீரிலுமாக பாப்பன் விழுந்தான். இருப்பினும் கஷ்டப்பட்டு அவன் கரையை நோக்கி முக்கி முனகி நகர்ந்தான்.
அப்போது குழந்தை உரத்த குரலில் அழுதது.