வெள்ளம் - Page 27
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6375
ஒரோதா அதற்கான திட்டங்களை வகுத்தாள். பெரும்பாலானவர்கள் அந்த முயற்சியிலிருந்து நழுவினார்கள். புதிய தலைமுறையைச் சேர்ந்த சில இளைஞர்கள், வயதானவர்களின் வார்த்தைகளைக் கொஞ்சம் கூட காதில் போட்டுக் கொள்ளாமல் தங்களின் ஒரோதா அக்காவின் தலைமையில் அணி சேர்ந்து நிற்கத் தயாரானார்கள். மலையின் மேற்கு சரிவில் வழி உண்டாக்கி மலை மேல் ஏறிச் செல்ல வேண்டும் என்பது திட்டம். பிக்காக்ஸுகளும், கோடரிகளும், கத்திகளும், வெட்டரிவாள்களும், மண்வெட்டிகளும் எடுத்துக்கொண்டு சுமார் அறுபது பேர் பெரும்பாலும் இளைஞர்கள்- ஒரோதாவின் தலைமையில் மலையடி வாரத்தை அடைந்து வேலையைத் தொடங்கினார்கள். இளைஞர்கள் கூட்டத்தில் ஒரோதா ஆற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய காரைக்காட்டு குட்டிச்சனின் மகன் பேபியும் இருந்தான். அவன் ஒரோதா அக்கா பக்கம் நின்றிருந்தான்.
வேலை மிகவும் கஷ்டம் நிறைந்ததாக இருந்தது. இரண்டு நாட்கள் வேலை முடிந்து மூன்றாம் நாள் வந்தபோது அந்தக் கூட்டத்திலிருந்து இரண்டு பேர் விலகிக் கொண்டார்கள். ஒரோதா அதற்காக மனம் தளரவில்லை. எல்லோருக்கும் வழிகாட்டுவதைப் போல் அவள் முன்னால் சென்றாள். சிறிது மேலே சென்றதும் கூக்குரலிட்டு அழைத்தாள். அப்போது கீழே நின்றிருந்தவர்கள் வழியை வெட்டி தெளிவாக்கி மேலே வந்தார்கள். இப்படித்தான் அவர்கள் வேலை செய்யும் முறை வகுக்கப்பட்டிருந்தது. நாட்கள் அதிகம் ஆக ஆக கடினமான உழைப்பும், அப்படி உழைத்ததால் உண்டான சோர்வும் அவர்களிடம் அதிகம் தெரிய ஆரம்பித்தது. கூட்டத்திலிருந்து மேலும் சிலர் காணாமல் போனார்கள். மீதி இருந்தவர்களைப் பார்த்து ஒரோதா தைரியம் சொன்னாள். "நாம மிகப் பெரிய ஒரு சாதனையைச் செய்ய இருக்கோம். நிறைய கஷ்டப்பட்டாத்தான் அந்தச் சாதனையை நம்மால செய்ய முடியும். நாம செய்யப் போற அந்தச் சாதனையோட ஒப்பிடுறப்போ, நம்மோட கஷ்டங்கள் ரொம்ப ரொம்ப சாதாரணம்."
ஒரு வாரம் வேலை முடிந்தபோது, ஒரோதாவிற்கு பத்து வயது கூடி விட்டதைப் போல் இருந்தது.அவளின் முகம் மிகவும் கறுத்துப் போய்விட்டது. கண்ணுக்குக் கீழே கோடுகள் தெரிந்தன. உடம்பு மிகவும் மெலிந்து விட்டது. ஆனால், மனம் மட்டும் கொஞ்சம் கூட தளரவில்லை. மாறாக, அது மேலும் வலிமை பெற்று திகழ்ந்தது.
ஒரு நாள் சாயங்காலம் தன்னுடன் வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொஞ்சம் காட்டை வெட்டி சுத்தமாக்க வேண்டுமென்றும்; காட்டு மிருகங்களை குரலெழுப்பி விரட்ட வேண்டுமென்றும் ஒரு இடத்தில் இருக்கச் செய்து விட்டு, ஒரோதா மட்டும் தனியே காட்டுச் செடிகளையும், புதர்களையும் வெட்டி நீக்கியவாறு மேலே போனாள். ஏறுவதற்கு முன்பு மேலே விரலால் சுட்டியவாறு அவள் சொன்னாள்: "அதோ தெரியுதே! அந்தப் பாறைக் கூட்டத்துக்குப் பக்கத்துல போனதும் நான் சத்தம் எழுப்பி கூப்பிடுறேன். அப்போ நீங்க வந்தா போதும். ரொம்பவும் தாமதமாயிடுச்சுன்னா, நீங்க வரவேண்டாம். நான் திரும்பி இறங்கி வந்திர்றேன்."
"எல்லோரும் அதற்கு "சரி" என்றார்கள்.
"நானும் உங்க கூட வரட்டுமா, ஒரோதா அக்கா?"- காரைக்காட்டு பேபி கேட்டான்.
"வேண்டாம், மகனே. நீ இங்கேயே இரு. நீங்க எல்லாரும் ஒண்ணா வந்தா போதும்."
காட்டை வெட்டி வழி உண்டாக்கி, அதில் ஒரோதா நடந்து முன்னால் ஏறினாள்.
எல்லோரும் காத்து நின்றிருந்தார்கள். ஒரோதா சொன்ன இடத்தை அடையும் நேரம் ஆன பிறகும் கூட, அங்கிருந்து எந்த கூக்குரலும் கேட்கவில்லை. அவர்கள் அதற்கு மேலும் காத்திருந்தார்கள். வெயில் முழுமையாக மறைந்தது. வானம் லேசாக மங்கலானது. ஒரோதா வரவில்லை. வானம் மேலும் மங்கலானது... வானம் முழுமையாக இருண்டது... ஒரோதா வரவில்லை.
அங்கு காத்திருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
கடைசியில் எல்லோரும் கீழே இறங்க முடிவெடுத்தார்கள். அவர்கள் கீழே இறங்கினார்கள். கிராமத்து மனிதர்களிடம் நடந்த விவரத்தைச் சொன்னார்கள். கிராமத்தின் எல்லையில் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து காத்திருந்தார்கள். ஒரோதா வரவில்லை.
ஒரோதா அதற்குப் பிறகும் செம்பேரி பகுதிக்குத் திரும்பி வரவில்லை.
அடுத்த நாள் பகலில் ஆட்கள் ஒரோதாவைத் தேடிச் சென்றார்கள். ஆனால், அவள் கிடைத்தால்தானே!
ஒரோதா எல்லோரிடமிருந்தும் மாயமாக மறைந்து விட்டிருந்தாள்.
13
பிற்காலத்தில் நாங்கள், செம்பேரி பகுதியில் வசிப்பவர்கள், அந்த மலையின் மேல் ஏறி, உச்சியில் தேவி குடிகொண்டிருக்குமிடம் என்று சொல்லப்பட்ட இடத்தை அடைந்தோம். அங்கு வற்றாத நீரூற்று என்று எதுவும் இல்லை. அங்கிருந்ததென்னவோ வெறும் பாறைகள்தான்.
போகும் வழியில் போனவர்கள் யாருமே ஒரோதாவைப் பார்க்கவில்லை. ஒரோதா சம்பந்தப்பட்ட எதுவுமே யார் கண்ணிலும் படவில்லை. ஒரோதாவின் குரல் கேட்கவில்லை. ஒரோதாவின் மணம் மட்டும் அந்த மலைப்பகுதி முழுவதும் பரவி இருந்தது. இன்னொரு வகையில் சொல்லப் போனால், அந்த மலைப்பகுதியில் இருந்த மணமே ஒரோதாவின் மணம்தான் என்று இந்த ஊர்க்காரர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.
இன்று செம்பேரி பகுதி நல்ல செழிப்புடன் இருக்கிறது. இங்கு மனிதர்களுக்குத் தேவையான எல்லாமே இருக்கின்றன. தேவைப்படாததும் கூட இருக்கிறது.
வட்டைக்காட்டு இட்டியவீரா மரணமடைந்து விட்டான். ஆனால், அவனின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் இப்போது இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரோதாவின் கணவனின் அண்ணன் ஔதக்குட்டி இறந்து விட்டான். என்றாலும், சேச்சம்மாவும், அவளின் பிள்ளைகளும் இப்போது இருக்கவே செய்கிறார்கள்.காரைக்காட்டு குட்டிச்சனும் பாறைக்காட்டு குஞ்ஞாச்சனும் பார்பர் பாப்பனும் கொல்ல வேலை செய்யும் முத்துகிருஷ்ணனும் இப்போதும் இங்கு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் ஒரோதாவைப் பற்றி கதை கதையாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரோதா ஏறிச் சென்ற மலையை அவர்கள் ஒரோதா குன்று என்று அழைக்கிறார்கள்.
அவர்கள் கதை கூறும் போது, ஒரோதா உயிருடன் இருப்பதைப் போலவே எங்களுக்குத் தோன்றுகிறது. ஒரோதாவின் முகத்தை, முகங்களை நாங்கள் பார்க்கிறோம். மீனச்சில் ஆற்றின் வெள்ளத்தில் மிதந்து வந்த வீட்டிற்குள் துணியால் ஆன தொட்டிலில் படுத்துக் கொண்டு அழும் ஒரு வயது கூட ஆகாத குழந்தையின் முகம், வெட்டுக்காட்டு பாப்பனின் முதுகில் அமர்ந்து யானை விளையாட்டு விளையாடும் சுட்டிக் குழந்தையின் முகம், மாமரத்திற்குக் கீழே நின்று கொண்டு மேலே பார்த்தவாறு மாங்காய்க்காக காத்திருக்கும் பாவாடை அணிந்த சிறுமியின் முகம், குஞ்ஞுவர்க்கியைத் திருமணம் செய்து சர்ச்சை விட்டு வெளியே வரும் புதுப்பெண்ணின் பிரகாசமான முகம், தன் தந்தையின் பிணம் கிடக்கும் கட்டிலுக்கு அருகில் நின்று தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கும் வளர்ப்பு மகளின் கவலை நிரம்பிய முகம், கடுமையான உழைப்பின் சின்னமான ஒரோதாவின் எதையும் சவால்விட்டு அழைக்கிற முகம், கங்காணி இட்டுப்பின் கன்னத்தில் அறைந்த தன்மானம் கொண்ட பெண்ணின் முகம், தன்னுடன் சிறுவயதில் சேர்ந்து விளையாடியவனுடன் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை உடல் சுகம் அனுபவித்த பெண்ணின் காம வயப்பட்ட முகம், கணவனின் முன்னால் அழுது விழும் ஆதி பாவத்தின் முகம், மலையை வெட்டிக் காட்டை அழித்து உயரத்தை நோக்கி, மேலும் உயரத்தை நோக்கி நீரைத் தேடி ஏறிப் போகும் வெற்றி வீராங்கனையின் கறுத்துப் போன முகம்... அந்த முகங்கள் எங்களுக்கு முன்னால் வரிசையாகத் தெரிகின்றன.
செம்பேரி ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் போது நாங்கள் அந்த முகங்களைப் பார்க்கிறோம். அப்போது நாங்கள் ஒரோதாவை நினைத்துப் பார்க்கிறோம். ஒரோதாவை நினைக்கும்போது, நாங்கள் கண்ணீர் விட்டு அழுகிறோம்.
ஒரோதாவை நினைக்கும்போது அழாமல் இருக்க முடியாது. ஒரோதாவை நினைக்காமலும் எங்களால் இருக்க முடியாது.
ஒரோதா!