வெள்ளம் - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6375
“ஒரோதா அறிமுகப்படுத்தி வைக்கிற யாரா இருந்தாலும் என் சொந்தக்காரங்க மாதிரி...” -குட்டிச்சன் உணர்ச்சிவசப்பட்டு சொன்னான். தொடர்ந்து வெள்ளத்திலிருந்து எப்படி தன்னுடைய மகன் பேபியை ஒரோதா நீருக்குள் துணிச்சலுடன் பாய்ந்து காப்பாற்றினாள் என்பதை அவன் முத்துகிருஷ்ணனிடம் விளக்கிச் சொன்னான். இறுதியில் அவன் சொன்னான்: “அதனால... முத்துகிருஷ்ணன்... என்ன உனக்குத் தேவைப்பட்டாலும் தயங்காம என்கிட்ட கேளு. என்னால என்ன முடியுமோ, அதை நிச்சயம் உனக்குச் செய்வேன்!”
தேநீர் கடைக்குப் பக்கத்திலேயே முத்துகிருஷ்ணனுக்கு ஷெட் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை அவன் வாடகை இல்லாமல் கொடுத்தான். முத்துகிருஷ்ணன் ஷெட் கட்டினான். கொல்லர் வேலைகள் நடைபெறும் ஒரு பட்டறையையும் அங்கு உண்டாக்கினான். இப்படித்தான் செம்பேரியின் முதல் கொல்லர் வேலைகள் நடைபெறும் ஒரு இடம் உருவானது. விவசாயிகளுக்கு அந்தப் பட்டறை பலவிதத்திலும் பயனுள்ள ஒரு விஷயமாக இருந்தது.
ஔதக்குட்டியும் குஞ்ஞுவர்க்கியும் மற்றவர்களும் வாங்கிய நிலத்திற்கு சற்று மேற்பகுதியில் மலையில் முத்துகிருஷ்ணன் கொஞ்சம் நிலம் வாங்கினான். அந்த இடத்தை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்ததும், இடத்தை முத்துகிருஷ்ணனுக்குக் காட்டிக் கொடுத்ததும் குட்டிச்சன்தான்.
முத்துகிருஷ்ணனின் வரவு ஒரோதாவிற்கு மட்டுமல்ல, குஞ்ஞுவர்க்கிக்கும் சந்தோஷமும் புத்துணர்ச்சியும் தந்த ஒரு விஷயமாக இருந்தது. ஒரோதாவைப் பொறுத்தவரை அவளின் எல்லா வேலைகளுக்கும் உதவியாக இருந்தான் முத்துகிருஷ்ணன். குஞ்ஞுவர்க்கிக்கோ ஏதோ ஒரு நெருங்கிய சொந்தக்காரன் தன்னைத் தேடி வந்திருப்பதைப்போல இருந்தது. வேலை இல்லாத நேரங்களில் முத்துகிருஷ்ணன் குஞ்ஞுவர்க்கியுடன் தன்னுடைய நேரத்தை செலவிட்டான். சேர்ப்புங்கல்- பாலா சம்பந்தப்பட்ட கதைகளைப் பேசி, அவர்களின் இளம் பிராயத்து நினைவுகளில் மூழ்கி அவர்கள் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரோதா அந்த நேரங்களில் அவர்களுக்கு பால் கலக்காத காப்பி தயார் பண்ணிக் கொடுப்பாள். சமையல் வேலையும், தோட்ட வேலையும் இல்லாத நேரங்களில் அவர்களின் பேச்சில் அவளும் கலந்து கொள்ளுவாள். புதிதாக வாங்கிய இடத்தில் ஷெட் கட்டி முடிப்பது வரை முத்துகிருஷ்ணன் வேலை செய்யும் இடத்திலோ; இல்லாவிட்டால் குஞ்ஞுவர்க்கியின் வீட்டிலோதான் இரவு நேரங்களில் தூங்குவான். அவனுக்கு ஒரோதா மதிய உணவு கொடுத்தனுப்புவாள். அவள் வீட்டில் உணவு தயாரித்து வைத்திருப்பாள். முத்துகிருஷ்ணனுக்கு உதவியாக பட்டறையில் வேலை செய்யும் பையன் வீட்டிற்கு வந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு போவான்.
“இந்தப் பட்டறைக்காரனுக்கும் இவளுக்கும் நடுவுல அப்படியென்ன பெரிய நட்பு?” -ஔதக்குட்டி ஒரு நாள் சேச்சம்மாவை பார்த்து கேட்டான்.
“அவங்க ரெண்டு பேரும் சின்னப் பசங்களா இருக்குறப்போல இருந்தே ஒருத்தருக்கொருத்தர் நல்லா தெரிஞ்சவங்களாச்சே!”
“உனக்குத் தெரியாத ஒரு உறவு அவங்களோட நட்புக்குப் பின்னாடி இருக்கு...” -கள்ளத்தனமான ஒரு சிரிப்புடன் ஔதக்குட்டி சொன்னான்.
“எனக்குத் தெரியாமலா? அப்படியென்ன உறவு?” - சேச்சம்மா ஆர்வத்துடன் கேட்டாள்.
“இவனோட அம்மா பாப்பனோட ஆளா இருந்தா...”
“சும்மா சொல்லக்கூடாது...”
"சும்மா யாராவது சொல்லுவாங்களா? வேணும்னா நீ குஞ்ஞுவர்க்கிக்கிட்டயே கேளு. ஏன்... கொல்ல வேலை செய்கிற அவன் கிட்டயே கூட கேளு..."
"சேச்சே... நான் யார்கிட்டயும் கேட்க விரும்பல."
முத்துகிருஷ்ணனும் குஞ்ஞுவர்க்கியும் அமர்ந்து பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட ஒரோதாவிற்கு தொண்ணூற்றொன்பதாம் வருடம் உண்டான மிகப் பெரும் வெள்ளத்தில் ஆற்று நீரில் தான் மிதந்து வந்த மீனச்சில் ஆற்றின் கரையில் உள்ள சேர்ப்புங்கல் என்ற அந்த கிராமத்திற்கே பயணம் செய்து போவதைப் போல் இருந்தது. அங்கிருக்கும் பழைய மனிதர்களை அவள் சந்தித்தாள். அவளின் நினைவுகள் வெட்டுக்காட்டு பாப்பன் என்ற அவளின் தந்தைமேல் போய் நின்றன. அப்போது அவள் கண்கள் நனைந்தன. பிறகு கண்ணீரால் நிறைந்தன. அந்தக் கண்ணீர் பெருகி வழிய ஆரம்பித்தது. கன்னத்தின் வழியே அருவியென விழந்து கொண்டிருந்த கண்ணீரை அவள் தன்னுடைய முண்டு முனையால் துடைத்தாள். கண்ணீரைத் துடைத்தவாறு, அடுப்பை நோக்கி நடந்தாள்.
முத்துகிருஷ்ணன் பட்டறையில் இருக்கும்போது, அவன் நிலத்தில் உள்ள வேலைகளைப் பார்த்துக் கொண்டது ஒரோதாதான். கூலிக்காரர்களை வைத்து வேலை செய்ய வைப்பது மட்டுமல்ல, அவர்களில் தானும் ஒருத்தியாய் நின்று அவளும் வேலை செய்வாள்.
"அந்த ஒரோதா அக்காவுக்குச் சரிசமமா நின்னு வேலை பார்க்குறது ரொம்பவும் கஷ்டம்..."- வேலை முடிந்து சாயங்காலம் காரைக்காட்டு குட்டிச்சனின் தேநீர் கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கும்போது, கூலி வேலைக்காரர்கள் பேசிக் கொண்டார்கள். "அந்த அக்கா நம்மளை விட அருமையா வேலை செய்யிறாங்க. அப்படி இருக்குறப்போ நாம எப்படி வேலை செய்யாம திருட்டுத்தனம் பண்ண முடியும்?"
சற்று தள்ளி பட்டறையில் இருந்தவாறு அதைக் கேட்க நேர்ந்த முத்துகிருஷ்ணன் சிரித்தவாறு சொன்னான்:
"அப்படின்னா ஒரோதாவுக்குப் பதில் அங்கே நான் இருந்திருந்தா, என்னை நீங்க நல்லா ஏமாத்துவீங்கன்னு சொல்லுங்க..."
வேலை செய்பவர்களில் ஒருவன் சொன்னான். "அதுல என்ன சந்தேகம்?"
அதைக் கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்- குட்டிச்சனும்தான்.
மலை மேலிருந்து மண் வருவதைத் தடுப்பதற்கு மேலே இருக்கும் எல்லையில் பாறைக்கற்களால் சுவர் அமைக்கலாம் என்ற எண்ணத்தை முதலில் சொன்னது ஒரோதாதான். எல்லா விவசாயிகளும் ஒரே மாதிரி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும், எல்லோரும் ஒன்று சேர்ந்து அதற்குத் தேவையான செலவுகளைச் செய்ய வேண்டும் என்றாள் ஒரோதா. அப்படிச் செய்வதால் உண்டாகும் பலன் என்ன என்பதை ஒரோதா விளக்கமாக எடுத்துச் சொன்னதைக் கேட்ட எல்லோரும் அவள் எண்ணத்திற்குச் சம்மதித்தார்கள். ஔதக்குட்டி கூட அதற்கு எதிராக ஒரு வார்த்தை பேசவில்லை.
ஸ்ரீகண்டபுரத்தில் இருந்த ஆட்களை அழைத்து வந்து பாறைகளைப் பிளக்கச் செய்தார்கள். எல்லா காரியங்களும் படுவேகத்தில் நடந்தன. ஒன்றாகச் சேர்ந்து எந்த காரியத்தைச் செய்தாலும், அது நினைப்பதைவிட மிகவும் வேகமாக நடக்கும் என்பதை அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தார்கள். முன்பு இந்த மாதிரி எல்லா விஷயங்களிலும் ஒன்று பட்டு நிற்காமல் போனோமே என்பதற்காக கடந்து போன நிகழ்ச்சிகளை மனதில் அசை போட்டுப் பார்த்து வருந்தினார்கள். மலை மேலிருந்து மண் வருவது என்ற விஷயம் நிரந்தரமாக முடிவுக்கு வந்தது.
முத்துகிருஷ்ணனின் நிலத்தில் ஷெட் வேலை முடிவுற்றதும் அவன் அங்கேயே இரவு நேரங்களில் உறங்கத் தொடங்கினான். இருந்தாலும், பெரும்பாலும் அவன் சாப்பிடுவது ஒரோதாவின் வீட்டில்தான். மாலை நேரம் ஆனதும் அவன் பட்டறையைப் பூட்டி விட்டு ஒரோதாவின் வீட்டிற்கு வந்தான்.