வெள்ளம் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6375
சீட்டு விளையாடும் நாட்களில் பொதுவாக அவன் ரொம்பவும் தாமதமாகத்தான் வீட்டுக்கே வருவான். வந்தவுடன் வீட்டில் என்ன இருக்கிறதோ அதைச் சாப்பிட்டுவிட்டு அடுத்த நிமிடம் பாயில் போய் விழுவான். விழுந்த அடுத்த நிமிடமே புதர்களில் காற்றடிக்கிற மாதிரி குறட்டை விட்டுக்கொண்டே அவன் உறங்கிப் போவான். பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருக்கும் குஞ்ஞுவர்க்கியை, சுற்றியிருக்கும் இருட்டையே பார்த்தவாறு உட்கார்ந்திருக்கும் ஒரோதா மனதிற்குள் நினைத்துப் பார்ப்பாள். அவன் மீது அவளுக்கு வெறுப்புத் தோன்றவில்லை. மாறாக, ஒருவகை பரிதாப உணர்ச்சியே உண்டானது. கள்ளு குடிப்பதற்கு எதிராகவும், சீட்டு விளையாடுவதற்கு எதிராகவும் அவள் கடுமையான வார்த்தைகளைச் சொல்லி அவனைத் திட்டுகிற நிமிடங்களில் அவன் ஒருபோதும் அவளிடம் வாதம் செய்ததில்லை. அதற்கு மாறாக செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு அழுதவாறு அவள் கால்களில் விழுவான். அப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பார்த்து அவள் எப்படி கோபம் கொள்ள முடியும்? அதனால் அவள் தன் மனதிற்குள் தோன்றிய வேதனையை தானே யாருக்கும் தெரியாமல் அடக்கிக் கொண்டாள். விளக்கை அணைத்துவிட்டு படுத்தாலும் அவளுக்கென்னவோ ஒரு பொட்டு தூக்கம் கூட வராது. தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிய கவலை நிறைந்த சிந்தனைகள் அவளைப் பாடாய் படுத்திக்கொண்டிருக்கும். இப்படிச் சிந்தித்து சிந்தித்து தளர்ந்து போய் பின்னிரவு நேரத்தில்தான் அவளுக்குத் தூக்கம் என்பதே வரும். எவ்வளவு தாமதமாய் படுத்தாலும் அதிகாலையில் மீண்டும் சீக்கிரமே எழுந்துவிடுவாள். கவலை நிறைந்த அவளின் பகல் பொழுது மீண்டும் தொடரும்.
குடிப்பழக்கம் குஞ்ஞுவர்க்கியை ஒரு பயங்கர சோம்பேறியாக மாற்றிவிட்டிருந்தது. விவசாய வேலைகளில் பொதுவாக அவன் ஆர்வமே எடுத்துக்கொள்வதில்லை. வயல் வேலைகளையும் வீட்டில் சமையல் வேலைகளையும் ஒரோதா ஒருத்தி மட்டுமே பார்த்துக் கொண்டாள். சில நேரங்களில் மீன் பிடிப்பதற்கும் படகு ஓட்டவும்கூட அவள் போவாள்.
அவளைச் சுற்றியிருந்த வாழ்க்கைச் சூழலும் பயங்கரம் நிறைந்ததாகவே வெட்டுக்காட்டு பாப்பன் என்ற ஒரு மனிதன் இல்லாததால் மடுக்காம்குழிக்காரர்களின் செல்வாக்கு பல மடங்கு அதிகரித்திருந்தது. அவர்கள் பல நேரங்களில் தேவையில்லாமல் குஞ்ஞுவர்க்கியிடம் தகராறு பண்ணினார்கள். ஒன்றிரண்டு முறை ஒரோதாவுடன் வீண் வம்புக்கு வரக்கூட அவர்கள் முயன்றார்கள். ஆனால், அவள் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசரவில்லை. முத்துகிருஷ்ணனும் ஜானம்மாவும் மட்டும்தான் அவளுக்குத் துணையாக இருந்தவர்கள். இதற்கிடையில் முத்துகிருஷ்ணன் கமலாட்சியைத் திருமணம் செய்துகொண்டான். நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரோதா மனப்பூர்வமாக சந்தோஷப்பட்ட நாள் அதுதான்.
ஊரில் வாழ்க்கை வறுமையும், கஷ்டங்களும் நிறைந்ததாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் வெளியே போய்விட்டு திரும்பி வந்த குஞ்ஞுவர்க்கி, ஒரோதாவிடம் சொன்னான். “இங்க இருக்கவங்கள்ல நிறைய பேரு மலபாரைத் தேடி போறாங்க. எங்க சித்தப்பாமார்களும், பெரியப்பன்மார்களும், சொந்தக்காரங்களும் எல்லாருமே போறாங்க. மலபார் பக்கம் குறைவான விலையில் பூமி கிடைக்குதாம். இங்கே இருக்குற எல்லாத்தையும் வித்துட்டு நாமும் மலபார் பக்கம் போனா என்ன?”
ஒரோதா அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. ஆனால் அந்த விஷயத்தைப் பற்றி தீவிரமாக அவள் சிந்தித்துப் பார்த்தாள். பலரும் மலபார் பக்கம் போய் குடியேறிக் கொண்டிருப்பதை அவளும் நித்தமும் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருந்தாள். அங்கே போனால் குறைவான விலைக்கு நிலம் கிடைக்கும். வாங்குவதற்குத் தேவையான நல்ல இடத்தை அங்கு வாங்கலாம். நல்ல மண். ஆனால், கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும். வேலை செய்தால், கட்டாயம் அதற்குரிய பலன் இருக்கவே செய்கிறது. ஒளிமயமான ஒரு எதிர்காலம் அவளின் மனதில் உதித்து வந்தது. மலபார் ஒரு இனிய கனவாக அவளுடைய உள்ளத்தின் அடித்தளத்தில் முகம் காட்டியது. இந்த விஷயத்தைக் குறித்து முத்துகிருஷ்ணன், கமலாட்சி, ஜானம்மா எல்லோரிடமும் அவள் பேசிப் பார்த்தாள். அவர்கள் பொதுவாகவே இது ஒரு நல்ல தீர்மானம்தான் என்று கூறினார்கள். திரும்பி வந்த அவள் குஞ்ஞுவர்க்கியிடம் சொன்னாள். “இன்னொரு விஷயம்... அங்கே போன பிறகு கள்ளு குடிச்சிட்டு சும்மா சுற்றித் திரியக்கூடாது. அது நடக்காத விஷயம். அங்கே இருக்கிறதா இருந்தா ஒழுங்கா வேலை செய்யணும்.”
நன்கு குடித்திருந்த குஞ்ஞுவர்க்கி நாக்கு குழைய திணறித் திணறிச் சொன்னான். “அப்படியே நான் ஒழுங்கா நடப்பேன்... ஒழுங்கா... ஒழுங்கா... போதுமா?”
அதற்குப் பிறகு அவள் தாமதிக்கவில்லை. எல்லா வேலைகளும் படுவேகமாக நடந்தன. கையில் இருந்த நிலத்தை அவள் விற்றாள்.
பூவரணி, பைகா, பிண்ணாக்கநாடு, தம்பலக்காடு ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்ட ஏராளமான சொந்தக்காரர்களும், நன்கு தெரிந்தவர்களும் இதற்கு முன்பு அறிமுகமே இல்லாதவர்களும் அடங்கிய ஒரு பெரிய கூட்டத்தில் ஒரோதாவும் குஞ்ஞுவர்க்கியும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் இணைந்து கொண்டார்கள். கமலாட்சி கர்ப்பமா இருந்ததால், முத்துகிருஷ்ணனும் அவன் குடும்பமும் அப்போது புறப்படவில்லை. எல்லோரும் கிளம்புகிற நேரத்தில் முத்துகிருஷ்ணன் சொன்னான். “நாங்க பின்னாடி வர்றோம். எங்களுக்கும் கொஞ்சம் பூமியைப் பார்த்து வச்சிரு...”
ஜானம்மா ஒரோதாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள். “மகளே ஒன்பது மாத குழந்தையா நீ இருந்தப்போ உங்கப்பா உன்னை என்னிட்ட கொண்டு வந்து தந்தாரு. இதுவரை நாம ஒண்ணாவே இருந்தோம். ஆனா, இப்போ... நாம பார்ப்போம் மகளே... உன்னைப் பார்க்கிறதுக்கு நான் அங்கே வருவேன். கடவுள் எனக்கு வாழுறதுக்கான பாக்கியத்தைத் தந்தால்...”
பயணம் கஷ்டமாக இருந்தாலும், அது ஒரு புதிய அனுபவமாகவும் இருந்தது.
மாட்டு வண்டியில்தான் அவர்கள் கொச்சிவரை பயணம் செய்தார்கள். வழியில் சுங்க வரி வசூலிப்பதும், எல்லையைக் கடப்பதும் ஒருவித மாறுபட்ட அனுபவமாக ஒரோதாவிற்கு இருந்தது.
சொந்த வீட்டை விட்டுப் போகிறோம் என்ற கவலையை விட புதிதாக ஏதோவொன்றைத் தேடிப் போகிறோம் என்ற உத்வேகம்தான் அவள் மனதில் அப்போது இருந்தது. நான்கரை வயதான தன்னுடைய மூத்த மகனுக்குப் போகும் வழியில் பார்க்கும் விஷயங்களைப் பற்றி தனக்குத் தெரிந்த அளவில் அவள் சொல்லித்தர மறக்கவில்லை.
எர்ணாகுளம் நகரத்தைப் பார்த்தபோது உண்மையிலேயே வாயடைத்துப் போய்விட்டாள் ஒரோதா. அவள் அதுவரை பார்த்த நகரங்களில் மிகப்பெரிய நகரமாக இருந்தது பாலாதான். எர்ணாகுளத்தைப் பார்த்தவுடன் பாலா ஒரு சாதாரண மாட்டுத் தொழுவத்தைப் போல் தோன்றியது ஒரோதாவிற்கு. உயரமான கட்டிடங்கள், அகலமான சாலைகள், அவற்றில் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும ஆயிரக்கணக்கான வாகனங்கள், மக்கள் கூட்டம், பாட்டுகள் ஒலித்துக்கொண்டிருக்கும் உணவு விடுதிகள், படகுகள் நிற்கும் இடம், துறைமுகம்- எல்லாவற்றையும் அவள் கண் குளிரப் பார்த்தாள்.