வெள்ளம் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6375
வண்டிக்கு இன்னும் நேரம் இருந்ததால் அவர்கள் பிண்ணாக்கநாடு என்ற ஊரைச் சேர்ந்த வட்டைக்காட்டு இட்டியவீரா என்ற மனிதனின் தலைமையில் நகரம் முழுக்க சுற்றிப் பார்த்தார்கள். இட்டியவீரா தன்னுடன் வந்தவர்களுக்கு கப்பல்களைக் காண்பித்தான். கடலை அதிசயம் மேலோங்கப் பார்த்தாள் ஒரோதா. நங்கூரம் இடப்பட்டு நின்றிருக்கும் கப்பல்கள் உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்தவை என்று இட்டியவீரா சொன்னபோது ஒரோதாவின் வியப்பு மேலும் பல மடங்கு அதிகமானது. இந்தக் கப்பல்களில் ஏதாவதொன்றில் ஏறி பூமியில் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று அவள் அப்போது ஆர்வத்துடன் நினைத்துப் பார்த்தாள்.
“கப்பலுக்கு உள்ளே போயி நாம பார்க்க முடியுமா?” ஆர்வத்தை அடக்க முடியாமல் அவள் இட்டியவீராவைப் பார்த்துக் கேட்டாள்.
தன் நரைத்த தலைமுடியைக் கைகளால் தடவியவாறு அவன் சிரித்தான். “பார்க்கலாம் மகளே. ஆனா, இப்போ நடக்குறதுதான் கஷ்டம். அதை உள்ளே போயி பார்க்கணும்னா ரெண்டு நாளாவது நாம இங்கே தங்கணும். அதற்குன்னு இருக்கிற சிலரைப் போய்ப் பார்த்து அதுக்கு அனுமதி வாங்கணும். அனுமதி வாங்கிடலாம்னு வச்சுக்கோ. என்ன... இங்கே தங்கி பார்த்துட்டே போவமா?” எல்லோரையும் பார்த்து அவன் கேட்டான்.
“வேண்டாம்... வேண்டாம்... உனக்கு என்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருக்கா என்ன? என்று குஞ்ஞுவர்க்கியும் மற்றவர்களும் ஒரோதாவைப் பார்த்துக் கேட்டார்கள். அதைப் பார்த்து ஒரோதாவிற்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.
“இதுக்காக வருத்தப்படாதே மகளே...” -இட்டியவீரா என்ற அந்த வயதான மனிதன் அவளிடம் சொன்னான். “இதைப் பார்க்கிறதுக்கு உனக்கு ஒரு நாள் வராமலா இருக்கப் போகுது?”
புகைவண்டியைப் பார்த்தபோது அதைவிட ஒரு ஆச்சரியம் அவர்களுக்கு உண்டானது. நான்கரை வயதான அவளது மகன் வக்கச்சன் ஓசை எழுப்பியவாறு நெருப்பைத் துப்பிக் கொண்டு உரத்த குரலில் சக்-சக் என்று சத்தத்தை உண்டாக்கியவாறு சீறிக்கொண்டு பாய்ந்து வரும் இதற்கு முன்பு தான் பார்த்திராத அந்த அறிமுகமில்லாத மிருகத்தைப் பார்த்து பயந்தான். அச்சம் கலந்த நடுக்கத்துடன் தன் தாயைக் கட்டிப் பிடித்துக்கொண்ட அவன் அலற ஆரம்பித்தான். அவன் அச்சத்தைப் போக்குவதற்காக தன் மனதில் உண்டான ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் மறைத்து வைத்துக்கொண்டு ஒரோதா சொன்னாள். “அழாதே மகனே... அது ஒண்ணும் செய்யாது...”
ஆச்சரியமும் ஆர்வமும் கலந்த பார்வையுடன், ஒருவித பதைபதைப்புடன் சற்றுத் தள்ளி நின்றவாறு புகை வண்டியையே பார்த்தவாறு நின்றிருந்தான் வக்கச்சனின் தந்தை குஞ்ஞுவர்க்கி. வட்டைக்காட்டு இட்டியவீராவைத் தவிர அங்கு கூடியிருந்த எல்லாருமே அபாயகரமான ஒரு விநோத காட்டு விலங்கைப் பார்ப்பது மாதிரி பயத்துடன் புகை வண்டியைப் பார்த்தார்கள். இருந்தாலும் இட்டியவீரா சொன்னபடி ‘நன்மை நிறைந்த மரியம்’ கொண்டிருக்கும் வரிகளை வாய்க்குள் கூறிக் கொண்டே அவர்கள் வண்டிக்குள் ஏறினார்கள். ஒரு வயதான பெண் இன்னொரு பெண்ணிடம் கூறினாள். “இது மாதா படைச்சதா இருக்காதுடி. எது எப்படியோ நாம புறப்பட்டு வந்துட்டோம். எது நடக்கணுமோ அது நடக்கட்டும். இதுக்குள்ள நுழையிறதைத் தவிர நமக்கு வேற வழியே இல்ல, வா...”
வண்டி சீறியது. தொடர்ந்து மதம் பிடித்த யானையைப் போல ஒரு ஓசையை உண்டாக்கியது. வக்கச்சன் ஒரோதாவின் மடியில் தலையைப் புதைத்துக்கொண்டு அழுதான். குஞ்ஞுவர்க்கி, புகைவண்டி “ஊ...” என்று ஓசை உண்டாக்கியபோது தன்னுடைய இரண்டு காதுகளையும் கைகளால் மூடிக் கொண்டான். அதற்குப் பிறகும் இரண்டு மூன்று முறை “ஊ...” என்று ஓசை உண்டாக்கிய புகைவண்டி என்ற அந்த மிருகம் சக்... சக்... என்று சத்தம் உண்டாக்கியவாறு மெதுவாக நகர ஆரம்பித்தது. வெளியே பார்த்தவாறு, பயணத்தை ரசித்தவாறு ஒரோதா உட்கார்ந்திருந்தாள். வண்டியின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க கல்லைப் பொறுக்கி எறிவதைப் போல நிலக்கரித் துகள்கள் அவர்கள் மேல் வந்து விழுந்தன. ஒரு நிலக்கரித் துகள் ஒரோதாவின் கண்ணில் வந்து விழுந்தது. அவள் கண்களைக் கசக்கியதைப் பார்த்து குஞ்ஞுவர்க்கி சொன்னான். “இரு... நான் ஊதி விடுறேன்...” அவன் ஊதி விட்டான். நிலக்கரித்துகள் நீங்கியது. ஒரோதாவின் கண்களிலிருந்து நீர் வழிந்தது.
“நீ ஏன் அழுறே?” - குஞ்ஞுவர்க்கியின் அண்ணன் ஒளதக்குட்டி கேட்டான்.
“அழல... கண்ணுல நிலக்கரி விழுந்திருச்சு...” அவனைக் கொஞ்சமும் பிடிக்காத ஒரோதா சொன்னாள்.
வண்டி ஓடிக் கொண்டிருந்தது.
பல ஸ்டேஷன்களிலும் வண்டி நின்றது. சில ஸ்டேஷன்களில் ஏற்கனவே சில புகைவண்டிகள் நின்றிருந்தன. புகைவண்டி நிலையங்களின் பெயர்களைப் படித்தவாறு நிலக்கரித் துகள்களை கையால் தடுத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஒரோதா. நான்கரை வயது வக்கச்சன் அவளின் மடியில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தான். அதற்கடுத்த பையனான பாப்பன் குஞ்ஞுவர்க்கியின் தோள் மேல் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
ஷொர்னூர் என்ற புகைவண்டி நிலையத்தை அடைந்தபோது வட்டைக்காட்டு இட்டியவீரா சொன்னான். “எல்லாரும் இங்கே இறங்கணும்...” இறங்கிய பிறகு அவன் சொன்னான். “நாளைக்குக் காலையில்தான் நமக்கு வண்டி வெளியிலே போயி தங்குறதுன்னா நிறைய செலவாகும். அதனால இங்கேயே இருந்திடுவோம்...”
ஷொர்னூர் ப்ளாட்ஃபார்மில் உட்கார்ந்திருக்கும்போது குஞ்ஞுவர்க்கி அப்பாவித்தனமாக தன் மனதிற்குள் இருந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினான். “இட்டியவீராண்ணே... நாம எர்ணாகுளத்துல இருந்து வர்ற வழியில மூணு நாலு வண்டி தெற்கை நோக்கி ஓடுச்சு. வடக்குப் பக்கம் போற வண்டியும் நாம வந்ததும் ஒண்ணுதானா?” என்று அவன் கேட்டான்.
அதைக் கேட்டு இட்டியவீராவுடன் சேர்ந்து ஒரோதாவும் விழுந்து விழுந்து சிரித்தாள்.
“டேய் மடையா... நாம வந்த வண்டிக்குப் பின்னாடி வர்ற வண்டிகளை நாம பார்க்க முடியுமா?” என்றான் இட்டியவீரா.
அன்று இரவு அவர்கள் எல்லோரும் ப்ளாட்ஃபாரத்திலேயே தங்கினார்கள். இட்டியவீராவும், குஞ்ஞுவர்க்கியும் ஔதக்குட்டியும் மற்ற ஆண்களும் வெளியே போய் வந்தார்கள். வரும்போது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சாப்பிட சோறு வாங்கிக் கொண்டு வந்தார்கள். குழந்தைகளைப் படுக்கப் போட்டு, அவர்களுக்கு அருகில் ஒரோதா படுத்துக் கொண்டாள். அவளுக்குத் தூக்கமே வரவில்லை. அவளின் மனதில் முழுக்க முழுக்க நாளை காணப்போகும் கனவுபூமி மட்டுமே அப்போது நிறைந்திருந்தது. ஷொர்னூர் புகைவண்டி நிலையத்தில் இங்குமங்குமாய் போய்க்கொண்டிருக்கும் புகைவண்டிகளின் ஓசையைக் கேட்டவாறு கனவு பூமியைப் பற்றிய சிந்தனைகளுடன் படுத்துக் கிடந்த ஒரோதாவின் கண்களில் கிழக்குப் பக்க வெளிச்சம் தெரிந்தது.
மறுநாள் பகல் நேரத்தில் அவர்கள் கண்ணூரில் வண்டியை விட்டு இறங்கினார்கள்.