வெளுத்த இரவுகள் - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
ஆனால், எந்தச் சமயத்திலும் அவன் வரவில்லை. அவன் வரவே இல்லை. இரண்டு வாரங்கள் கடந்தன. ஒருநாள் வாடகைக்குத் தங்கியிருந்த இளைஞன் ஃப்யோக்லாவின் மூலம் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினான். தன்னிடம் ஏராளமான ஃப்ரெஞ்ச் மொழிப் புத்தகங்கள் இருக்கின்றன என்பதையும், நான் அவற்றை வாசித்துக் கேட்கச் செய்தால் அது பாட்டிக்கு விருப்பமான விஷயமாக இருக்குமா என்பதையும் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்பதுதான் அதிலிருந்த விஷயம். பாட்டி அவனுடைய விருப்பத்தை நன்றியுடன் ஏற்றுக் கொண்டாள். எனினும், அந்தப் புத்தகங்கள் ஒழுக்கமானவையா என்பதை அவள் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தாள். "ஒழுக்கக்கேடானவையாக இருந்தால் அவற்றை வாசிப்பது நல்ல விஷயமில்லை, நாஸ்தென்கா”அவள் சொன்னாள்: "காரணம்- அவை உன்னைத் தவறு செய்வதற்கு கற்றுத் தரும்.”
"ஆனால், அவை எனக்கு எதைக் கற்றுத் தரும், பாட்டி? அவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?'
"சரிதான்...” அவள் சொன்னாள்: "இளைஞர்கள் நல்ல வசதி படைத்த பெண் பிள்ளைகளை வசீகரித்து, திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி, அவர்களுடைய தாய்- தந்தையரின் வீடுகளிலிருந்து கடத்திக்கொண்டு போவதையும், பிறகு அந்த அப்பாவிப் பெண்களை தெருக்களில் அனாதைகளாக விட்டுப் போவதையும்தான் அவற்றில் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு வந்துசேரும் துன்பங்கள் வாயால் விவரித்துக் கூற முடியாத அளவிற்கு கவலைகள் நிறைந்தவை. நான் அப்படிப்பட்ட புத்தகங்களை நிறைய வாசித்திருக்கிறேன்.” -பாட்டி தொடர்ந்து சொன்னாள்: "எந்த அளவிற்கு அழகாக இந்த விஷயங்கள் அந்தப் புத்தகங்களில் கூறப்பட்டிருக்கின்றன. வேறு யார் கண்களிலும் படாமல், இரவு முழுவதும் தூக்கத்தை விலக்கிவிட்டு உட்கார்ந்து வாசிப்பேன். நாஸ்தென்கா, அதனால் நீ அப்படிப்பட்ட புத்தகங்களை எந்தச் சமயத்திலும் வாசிக்கக் கூடாது. அவன் எப்படிப்பட்ட புத்தகங்களைக் கொடுத்து அனுப்பியிருக்கிறான் என்று நீ சொன்னாய்?"
"சர் வால்ட்டர் ஸ்காட் எழுதிய புதினங்கள்தான் அவை அனைத்தும், பாட்டி.”
"சர் வால்ட்டர் ஸ்காட்டின் புதினங்களா? அவன் தந்திரத்தனமான காரியங்கள் எதையும் செய்யவில்லை அல்லவா? அவற்றில் ஒன்றில் ஏதாவது காதல் கடிதத்தை மறைத்து வைத்திருக்கிறானா என்று பார்.”
"இல்லை, பாட்டி...” நான் சொன்னேன்: "கடிதம் எதுவுமில்லை.”
"வெளி அட்டைக்கு உள்ளே பார். அந்த மாதிரியான இளைஞர்கள் சில நேரங்களில் அவற்றிற்கு அடியில் நுழைந்து வைப்பார்கள். போக்கிரிகள்!"
"இல்லை, பாட்டி... வெளி அட்டைக்குக் கீழேயும் எதுவுமில்லை.”
"சரி... அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்.”
அதைத் தொடர்ந்து நாங்கள் சர் வால்ட்டர் ஸ்காட்டின் நூல்களை வாசிக்க ஆரம்பித்தோம். ஒரே மாதத்தில் பாதி புத்தகங்களை வாசித்து முடித்தோம். எங்களுடைய வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த இளைஞன் வேறு புத்தகங்களையும் கொடுத்தனுப்பினான். புஷ்கினின் சில நூல்களையும். இறுதியில் என்னால் புத்தகங்கள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை உண்டானது. நான் சீன இளவரசனைத் திருமணம் செய்துகொள்ளப் போவதைப் பற்றி கனவு காண ஆரம்பித்தேன்.
அப்படி போய்க் கொண்டிருந்தபோது, ஒருநாள் நான் எங்களுடைய வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த இளைஞனை மாடிப் படிகளில் வைத்து சந்திக்க நேர்ந்தது. பாட்டி எதையோ எடுத்துக்கொண்டு வருவதற்காக என்னை அனுப்பி வைத்திருந்தாள். அவன் நின்றான். என் முகம் சிவந்துவிட்டது. அவனுடைய முகமும்... எனினும், அவன் புன்னகைத்தான். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு அவன் கேட்டான்: "புத்தகங்களை வாசித்தீர்களா?" நான் சொன்னேன்: "வாசித்தேன்...” "எந்த புத்தகத்தை அதிகமாக விரும்பினீர்கள்?" என்று கேட்டதற்கு நான் சொன்னேன்: "எனக்கு மிகவும் பிடித்தமானவை ஐவன்ஹோவும் புஷ்கினின் நூல்களும்தான்”. அப்போது அந்த அளவிற்குத்தான் நடந்திருந்தது.
ஒரு வாரம் கழித்து நான் அவனைத் திரும்பவும் மாடிப்படியில் வைத்துப் பார்த்தேன். இந்தமுறை பாட்டி அனுப்பி வைக்கவில்லை. நானே எதையோ எடுப்பதற்காகச் சென்றேன். மணி இரண்டு கழிந்திருந்தது. எங்களுடைய வீட்டில் தங்கியிருந்த இளைஞன் சாதாரணமாகத் திரும்பி வரும் நேரமது. நாங்கள் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டோம். அவன் கேட்டான்: "பாட்டியின் அருகிலேயே தினந்தோறும் முழு நேரமும் உட்கார்ந்திருப்பது வெறுப்பாக இல்லையா?"
அவன் அதைக் கேட்டபோது, தாங்க முடியாத வெட்கமும் கவலையும் என்னை மீண்டும் சுட்டெரிப்பதைப்போல தோன்றியது. என்ன காரணத்தால் அது நடந்தது என்பதை உண்மையிலேயே என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை, மற்றவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்திருப்பதால் இருக்கலாம். நான் எதுவும் பேசாமல் போக வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், அதற்கான துணிச்சல் இல்லாமலிருந்தது.
"நீ ஒரு நல்ல இளம்பெண்.” அவன் சொன்னான்: "நான் உன்னிடம் இப்படிப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும். ஆனால், ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகக் கூற முடியும். உன்னுடைய விஷயத்தில் உன் பாட்டிக்கு இருப்பதைவிட எனக்கு அதிகமான ஆர்வம் இருக்கிறது. நீ சென்று பார்ப்பதற்கு சினேகிதிகள் யாரும் இல்லையா?”
தோழிகள் யாரும் இல்லையென்றும், மாஷென்கா என்ற ஒரு தோழி இருந்தாள் என்றும், அவள் பிஸ்கோவிற்குப் போய்விட்டாள் என்றும் நான் சொன்னேன்.
"ஒரு விஷயம் கேட்கட்டுமா?” -அவன் கேட்டான்: "என்னுடன் தியேட்டருக்கு வருகிறாயா?”
"தியேட்டருக்கா? ஆனால், பாட்டி என்ன சொல்லுவாள்?”
"பாட்டியிடம் சொல்லாமல் வா.”
"இல்லை... பாட்டியை ஏமாற்ற நான் விரும்பவில்லை” என்று கூறியவாறு நான் விடை பெற்றேன்.
அவனும் விடை பெற்றுக்கொள்வதைத் தவிர, அதிகமாக வேறு எதுவும் பேசவில்லை.
அன்றே மதிய உணவுக்குப் பிறகு அவன் எங்களுடைய அறைக்கு வந்தான். ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, பாட்டியிடம் நீண்ட நேரம் பேசினான். வெளியே எப்போதாவது போவது உண்டா, நண்பர்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் கேட்டான். திடீரென்று அவன் சொன்னான்: "நான் இன்று இரவு ஆப்பராவிற்கு டிக்கெட் எடுத்து வைத்திருக்கிறேன். "செவில்லியில் நாவிதன்” நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய சில நண்பர்களும் அங்கு வருவதாக கூறியிருந்தார்கள். ஆனால், இறுதியில் அவர்கள் தங்களின் மனதை மாற்றிக்கொண்டார்கள். இப்போது என் கையில் டிக்கெட் தேவைக்கு அதிகமாக இருக்கின்றன.”
"செவில்லியில் நாவிதனா?” பாட்டி ஆர்வத்துடன் கேட்டாள்: "என்னுடைய காலத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதே நாவிதனா?”
"ஆமாம்...” -அவன் சொன்னான்: "அதே நாவிதன்தான்...” அவன் என்னை நோக்கி கண்களைச் செலுத்தினான். எனக்கு விஷயம் புரிந்துவிட்டிருந்தது. என்னுடைய முகம் சிவந்துவிட்டது. இதயம் எதிர்பார்ப்புடன் துள்ளிக் குதித்தது.
"சரிதான்...” -பாட்டி சொன்னாள்: "சரிதான்... எனக்கு தெரியாதா? அந்தக் காலத்தில் எங்களுடைய நகரத்தின் நாடகக் கொட்டகையில் நானே ரொஸீனாவின் வேடத்தை ஏற்று நடித்திருக்கிறேன்.”