வெளுத்த இரவுகள் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
அன்று இப்போது இருப்பதை விட பெரிய உயர்வு எதுவும் இல்லையென்றாலும், அந்தக் காலத்தில் வாழ்க்கை மேலும் சற்று எளிதானதாகவும் சந்தோஷம் நிறைந்ததாகவும் இருந்தது என்ற விஷயம் என்ன காரணத்தாலோ என் மனதில் தோன்றுகிறது. என்னை இப்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சந்தோஷமற்ற சிந்தனைகள் அந்தக் காலத்தில் என்னை பாதிக்கவே இல்லை என்றும், எனக்கு இரவும் பகலும் நிம்மதி அளித்திராத பலமான, வேதனைகள் நிறைந்த மனசாட்சியின் குத்தல்களுக்கு அன்று நான் இரையாகவில்லை என்றும் தோன்றுகிறது. நாம் நமக்குள் கேட்டுக் கொள்கிறோம். அந்த கனவுகள் எங்கு போயின? நாம் தலையை ஆட்டிக்கொண்டு கூறுகிறோம்: வருடங்கள் எவ்வளவு வேகமாக கடந்து செல்கின்றன. மீண்டும் நமக்குள் கேட்டுக் கொள்கிறோம்: உன்னுடைய வாழ்க்கையில் என்ன செய்திருக்கிறாய். உன்னுடைய மிகச் சிறந்த வருடங்களை எங்கு கொண்டு போய் புதைத்து மூடினாய்? நீ வாழ்ந்தாயா இல்லையா? இங்கே பார்... நாம் நமக்குள் கூறிக்கொள்கிறோம். பார்... உலகம் எந்த அளவிற்கு குளிர்ச்சியடைந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை... அமைதியான தனிமையை நிலை நிறுத்திக்கொண்டு வருடங்கள் இனியும் கடந்து செல்லும். பிறகு கொம்பு ஊன்றி, நடுங்கிக் கொண்டு முதுமையின் வருகை... அதையும் தாண்டி விட்டால்...? துன்பங்களும் வெறுமையும் மட்டும்... உங்களுடைய கற்பனை உலகம் ஒளி குறைந்ததாக ஆகிவிடும். கனவுகள் உயிரற்ற மஞ்சள் நிற இலைகளைப்போல வாடி உதிர்ந்து விடுகின்றன. ஹா... நாஸ்தென்கா! தனிமையில் வாழ்வது... இறுதி வரை தனித்து வாழ்வது எந்த அளவிற்கு கவலையான விஷயம் அது! வருத்தப்படுவதற்குக் கூட எதுவுமில்லை. எதுவுமே... காரணம்- எனக்கு இழப்பதற்கென்று இருப்பவை கனவுகள்தான்... இல்லாமை... கேவலம்... அர்த்தமே இல்லாத இல்லாமை!''
“அய்யோ... நிறுத்துங்க... எனக்கு இப்போது அழுகை வருகிறது.'' ஒரு கண்ணீர்த் துளியைத் துடைத்துக் கொண்டே நாஸ்தென்கா கூறினாள்: “அவை அனைத்தும் இன்றோடு முடிந்துவிட்டன. சொல்லப்போனால்... நாம் இரண்டு பேர் இருக்கிறோம். எனக்கு எது நடந்தாலும், நாம் இனி எந்தச் சமயத்திலும் பிரிய மாட்டோம். நான் ஒரு அப்பிராணிப் பெண். பாட்டி ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்து தந்திருந்தாலும், எனக்கு பெரிய அளவில் படிப்பு இல்லை. எனினும், நீங்கள் கூறுவதை உண்மையாகவே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம்- நீங்கள் இப்போது என்னிடம் கூறிய அனைத்து விஷயங்களும், பாட்டியின் ஆடையுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் காலத்தில் நானே அனுபவப் பூர்வமாக உணர்ந்தவைதான். உண்மையாகவே அதை உங்களிடம் அழகாக விவரித்துக் கூறுவதற்கு என்னால் முடியவில்லை. காரணம்- எனக்கு படிப்பு இல்லை.'' அவள் சிறிது வெட்கத்தையும் சேர்த்துக் கொண்டு கூறினாள். என்னுடைய நாடகத்தனமான உரையாடல்மீதும் உயர்ந்த உரையாடல் முறைமீதும் அவளுக்குச் சிறிய மதிப்பு உண்டாகிவிட்டிருந்தது. “எனினும், எனக்கு முன்னால் உங்களுடைய இதயத்தை நீங்கள் திறந்து வைத்தது குறித்து, நான் சந்தோஷப்படுகிறேன். இப்போது உங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நன்றாகவே புரிகிறது. என்னுடைய கதையை உங்களிடம் கூறுவதற்கு நானும் விரும்புகிறேன். காலவரையறை இல்லாமல் முழுவதையும்... பிறகு... நீங்கள் எனக்கு அறிவுரை கூற வேண்டும். நீங்கள் மிகவும் திறமையானவர். கதையைக் கேட்டு முடித்து, அறிவுரை கூறுவதற்கு ஒப்புக் கொள்வீர்களா?''
“நாஸ்தென்கா...'' நான் சொன்னேன்: “நான் இதுவரை அறிவுரை கூறக்கூடிய மனிதனாக இருந்ததில்லை. அதுவும் திறமைசாலியான ஒரு அறிவுரை கூறக்கூடிய மனிதனாக... எனினும், நாம் இப்படியே தொடர்கிறோம் என்றால், அதுதான் மிகச்சிறந்த ஒரே வழி என்று தோன்றுகிறது. நாம் ஒருவரோடொருவர் மிகச்சிறந்த அறிவுரைகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். நாஸ்தென்கா, என் அழகியே... நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? என்னிடம் மனம் திறந்து கூறுங்கள். நான் இப்போது மிகவும் சந்தோஷம் கொண்ட மனிதனாகவும் மிகுந்த உற்சாகத்தைக் கொண்டவனாகவும் தைரியசாலியாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறேன் என்பதால், ஒரு பதிலுக்காக சிரமப்பட வேண்டியதில்லை.''
“இல்லை... இல்லை...'' நாஸ்தென்கா குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே இடையில் புகுந்து கூறினாள்:
“எனக்கு வேண்டியது வெறும் சாமர்த்தியமான அறிவுரை அல்ல. மனப்பூர்வமான, நட்புணர்வு கொண்ட அறிவுரை... வாழ்க்கை முழுவதும் என்மீது விருப்பம் கொண்டிருக்கும்பட்சம், தரக்கூடிய தரத்தைக் கொண்ட அறிவுரைகள்.''
“சம்மதிக்கிறேன், நாஸ்தென்கா... சம்மதிக்கிறேன்.'' சந்தோஷத்துடன் நான் சொன்னேன்: “இருபது வருடங்கள் விருப்பம் கொண்டிருந்தாலும், மேடம், எனக்கு இப்போது தோன்றுவதைவிட அதிக விருப்பம் உங்கள்மீது தோன்றியதில்லை.''
“கையைக் கொடுங்கள்..'' நாஸ்தென்கா சொன்னாள்.
“இதோ!'' நான் அவளிடம் கையை நீட்டினேன்.
“அப்படியென்றால்... என் கதையை ஆரம்பிக்கலாம்.''
நாஸ்தென்காவின் கதை
“என் கதையின் பாதிப் பகுதி உங்களுக்கு இப்போதே தெரியும். குறைந்தபட்சம்- எனக்கு ஒரு பாட்டி இருக்கிறாள் என்ற விஷயமாவது தெரியுமே!''
“இன்னொரு பகுதியும் இந்த அளவிற்குச் சிறியதாக இருந்தால்...'' -நான் ஒரு சிறிய சிரிப்புடன் சொன்னேன்.
“பேசாமல் கேளுங்கள். ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே கூறி விடுகிறேன். இடையில் புகுந்து கூறாதீர்கள். இல்லாவிட்டால் நான் எல்லா விஷயங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்வேன். பேசாமல் உட்கார்ந்து கேளுங்கள்.
எனக்கு வயதான ஒரு பாட்டி இருக்கிறாள். என் தந்தையும் தாயும் இறந்து போய் விட்டதால், நான் குழந்தையாக இருந்தபோதிலிருந்தே பாட்டியுடன்தான் வாசம். இப்போது இருப்பதைவிட அன்று பாட்டியிடம் பணவசதி இருந்தது என்று தோன்றுகிறது. காரணம்- அவள் இப்போதும் நல்ல காலத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பதுண்டு. அவள்தான் என்னை ஃப்ரெஞ்ச் படிக்க வைத்தாள். பிறகு ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்தாள். எனக்கு பதினைந்து வயது ஆனபோது (இப்போது பதினேழு வயது) என்னுடைய படிப்பு நின்றுவிட்டது. அந்தச் சமயத்தில் நான் ஒரு குறும்புத்தனம் காட்டினேன். அது என்ன என்று கூறமாட்டேன். அந்த அளவிற்கு முக்கியமான ஒன்று அல்ல என்று கூறினால் போதுமல்லவா? ஆனால், ஒருநாள் காலையில் பாட்டி என்னை அருகில் அழைத்தாள். கண் பார்வை இல்லாததால், என்னை கண் பார்வையில் நிறுத்துவது என்பது முடியாத விஷயம் என்று கூறிக்கொண்டே, அவள் ஒரு சேஃப்ட்டி பின்னை எடுத்து என்னுடைய ஆடையையும் அவளுடைய ஆடையையும் சேர்த்து இணைத்துவிட்டாள். என்னுடைய நடத்தை சரியாக இல்லையென்றால், இனி இருக்கக் கூடிய காலம் முழுவதும் இதே மாதிரிதான் இருக்க வேண்டுமென்று அப்போது அவள் சொன்னாள். ஆரம்பத்தில் வெளியே தப்பித்துப் போவதற்கு எந்தவொரு வழியும் இல்லாமலிருந்தது. படிப்பதாக இருந்தாலும் வாசிப்பதாக இருந்தாலும் தைப்பதாக இருந்தாலும் பாட்டியின் அருகில் இருந்தே ஆக வேண்டும்.