வெளுத்த இரவுகள் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
ஒருநாள் நான் ஒரு வழியைக் கையாண்டு பார்த்தேன். என்னுடைய இடத்தில் இருப்பதற்கு ஃப்யோக்லாவை ஒப்புக்கொள்ள வைத்தேன். எங்களுடைய வேலைக்காரியின் பெயர்தான் ஃப்யோக்லா. காது கேட்காது. அவள் நான் இருந்த இடத்தில் இருந்தாள். அந்த நேரத்தில் பாட்டி நாற்காலியில் உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நான் அருகிலிருந்த ஒரு தோழியைப் பார்ப்பதற்காக சென்றேன். காரியம் குழப்பத்தில் போய் முடிந்துவிட்டது என்று கூறினால் போதுமல்லவா? பாட்டி கண் விழித்தாள். நான் மிகவும் அடக்கமாக அருகில் இருக்கிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டு என்னவோ கூறினாள். பாட்டி என்னவோ கேட்கிறாள் என்பது ஃப்யோக்லாவிற்கு புரிந்தாலும், அவளால் அதைக் கேட்க முடியவில்லை. என்ன செய்ய வேண்டும் என்று அவள் ஆழமாக சிந்தித்திருக்கிறாள். இறுதியில் "பின்"னைக் கழற்றிவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டாள்.''
இந்த அளவிற்கு விஷயத்தைக் கூறியவுடன், நாஸ்தென்கா குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். நானும் அவளுடன் சேர்ந்து சிரித்தேன். திடீரென்று அவள் சிரிப்பை நிறுத்தினாள்.
“நான் ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா? நீங்கள் பாட்டியை கேலி பண்ணிச் சிரிக்கக் கூடாது. என்னால் சிரிக்காமல் இருக்க முடியும். சிரிப்பு வரக்கூடிய விஷயமாக இருப்பதால், பாட்டியால் உண்மையாகவே வேறு மாதிரி நடக்க முடியாது. எனினும், பாட்டி மீது எனக்கு கொஞ்சம் அன்பு இருக்கிறது. அன்று எனக்கு சரியான தண்டனை கிடைத்தது. என்னை மீண்டும் பழைய இடத்திலேயே கொண்டு போய் இருக்கும்படி செய்தாள். அதற்குப் பிறகு ஒரு சிறு விரலை அசைக்கக்கூட எனக்கு வழி இல்லாமல் போய்விட்டது.
ஒரு விஷயத்தைக் கூறுவதற்கு மறந்துவிட்டேன். எங்களுக்கு- பாட்டிக்கு என்று கூறுவதுதான் மிகவும் சரியாக இருக்கும்- சொந்தத்தில் ஒரு வீடு இருக்கிறது. தெருவைப் பார்க்கும் வண்ணம் மூன்றே மூன்று சாளரங்களைக் கொண்டிருக்கும் ஒரு சிறிய வீடு. முற்றிலும் மரத்தைக் கொண்டு கட்டப்பட்டது. பாட்டியின் வயது அதற்கும் இருக்கும். அதன் மாடியில் ஒரு அறை இருந்தது. ஒருநாள் புதிய ஒரு வாடகைக்காரன் அங்கு வந்து தங்கினான்.''
“அப்படியென்றால் பழைய ஒரு வாடகைக்காரன் இருந்தான் என்று அர்த்தம்.'' -நான் வெறுமனே கூறினேன்.
“உண்மை...'' நாஸ்தென்கா கூறினாள்: “அவன் உங்களைப்போல பேசிக்கொண்டே இருப்பவனல்ல. உண்மையாகக் கூறுவதாக இருந்தால், நாக்கை அசைப்பதற்கே முடியாத நிலையில் அவன் இருந்தான். மெலிந்து, கால் ஊனமுற்று, காது கேட்காமல், கண்களால் பார்க்க முடியாத ஒரு வயதான கிழவன். இறுதியில் அதிக நாள் வாழ முடியாமல், அவன் இறந்துவிட்டான். அதனால் தான் எங்களுக்கு புதிதாக ஒரு வாடகைக்கு வரும் மனிதன் தேவைப்பட்டான். காரணம்- எங்களுக்கு வாடகைக்கு ஒரு ஆள் இருந்தே ஆக வேண்டும். அவன் தரும் வாடகைப் பணமும் பாட்டிக்குக் கிடைக்கக் கூடிய பென்ஷன் தொகையும் மட்டுமே எங்களுடைய ஒட்டுமொத்த வருமானமாக இருந்தது. விதி என்றுதான் கூற வேண்டும். புதிதாக வாடகைக்கு வந்த மனிதன் ஒரு இளைஞனாக இருந்தான். அந்த ஊரைச் சேர்ந்தவன் அல்ல. வெளியிலிருந்து புதிதாக வந்து சேர்ந்த ஆள்.
வாடகை விஷயத்தில் பேரம் பேசாததால், பாட்டி அவனுக்கு அறையைக் கொடுத்துவிட்டாள். அவள் என்னிடம் கேட்டாள்: "நாஸ்தென்கா... நம்முடைய வாடகைக்காரன் இளைஞனா?” பொய் கூறுவதற்கு தயங்கிக் கொண்டே நான் சொன்னேன்: "அந்த அளவிற்கு இளைஞன் என்று கூறுவதற்கில்லை, பாட்டி... வயதான ஆளுமல்ல.” அப்போது பாட்டி கேட்டாள்: "பார்ப்பதற்கு ஆள் நன்றாக இருக்கிறானா?”
மீண்டும் பொய் கூறுவதற்கு தயங்கிக் கொண்டே நான் சொன்னேன்: "பார்ப்பதற்கு பரவாயில்லை.” அதற்கு பாட்டி சொன்னாள்: "வெட்கம்! வெட்கம்! பேத்தியே, எச்சரிக்கையாக இரு. அவனைப் பார்க்கவோ நினைக்கவோ கூடாது. கஷ்டம்! உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? ஒரு விஷயத்தை நினைத்துப் பார். மேல் மாடியிலிருக்கும் அறையில் தங்கியிருக்கும் வெறும் ஒரு வாடகைக்காரன்! போதாததற்கு... பார்ப்பதற்கும் அவன் பரவாயில்லை என்று வேறு கூறுகிறாய். என்னுடைய காலத்தில் இப்படியெல்லாம் நடக்காது.”
பாட்டி எப்போதும் தன்னுடைய காலத்தைப் பற்றி கூறிக்கொண்டே இருப்பாள். தன்னுடைய காலத்தில் தான் மிகவும் இளமையாக இருந்ததாக... தன்னுடைய காலத்தில் சூரியனுக்கு அதிகமான வெப்பம் இருந்ததாக... பாலாடை இந்த அளவிற்கு புளிப்பாக இல்லை என்று... பேசும்போதெல்லாம் தன்னுடைய காலத்தைப் பற்றிப் பேச்சு. நான் அங்கேயே உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பேன். வாடகைக்கு இருப்பவன் இளைஞனா, அழகான தோற்றத்தைக் கொண்டவனா என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டு பாட்டி எதற்காக என்னுடைய தலைக்குள் பலவிதப்பட்ட சிந்தனைகளை நுழைத்துவிட வேண்டும்? அதே நேரத்தில், நான் அதைப் பற்றி இயல்பாகவே சிந்தித்துக் கொண்டிருந்தேன். பின்னுவதற்காக நூலை எடுத்து பின்ன ஆரம்பித்தவுடன் நான் அந்த விஷயத்தை மறந்துவிட்டேன்.
எங்களுடைய வீட்டில் தங்கியிருந்த இளைஞனின் அறையில் புதிய சுவர் தாள் ஒட்டித் தருகிறோம் என்று நாங்கள் கூறியிருந்தோம்.. ஒரு நாள் காலையில் அவன் அந்த விஷயத்தைப் பற்றி கேட்பதற்காக வந்தான். பேச்சு ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பாட்டி நன்கு உரையாடக் கூடிய ஒரு பெண். அவள் என்னிடம் சொன்னாள்: "நாஸ்தென்கா, நீ என்னுடைய படுக்கையறைக்குச் சென்று அந்த கணக்குப் போடும் பலகையை எடுத்துக் கொண்டு வா." நான் அப்போதே வேகமாக எழுந்தேன். என்ன காரணம் என்று தெரியவில்லை- என்னுடைய முகம் சிவந்துவிட்டது. "பின்”னால் இணைத்து வைக்கப்பட்டிருந்த விஷயத்தை நான் மறந்துவிட்டேன். வாடகைக்குத் தங்கியிருந்த இளைஞனுக்குத் தெரியாமல், தந்திரமாக "பின்"னைக் கழற்றுவதற்கு பதிலாக பாட்டியின் நாற்காலியை தரையில் இழுத்துக் கொண்டே நான் வேகமாக எழுந்தேன். என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அந்த இளைஞன் புரிந்துகொண்டான் என்பதைத் தெரிந்துகொண்டவுடன், நான் நின்ற இடத்திலேயே சிறிதும் அசையாமல் நின்று கொண்டு திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுதேன். அந்தக் கவலையையும் வெட்கக் கேடான விஷயத்தையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. "நீ ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்?" என்று பாட்டி கோபமாகக் கேட்டதும், நான் மேலும் உரத்த குரலில் அழுதேன். என்னுடைய அவமானத்திற்குரிய செயலுக்கு தான்தான் காரணம் என்பதை உணர்ந்த அந்த வாடகைக்குத் தங்கியிருந்த இளைஞன் அந்த நிமிடமே விடை பெற்றுக் கொண்டு வெளியேறினான்.
அதற்குப் பிறகு ஹாலில் சத்தம் கேட்கும்போதெல்லாம் எனக்கு உயிரே போய் விடுவதைப்போல இருக்கும். வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்கும் இளைஞன் வருகிறான் என்று நினைத்து நான் மெதுவாக "பின்”னைக் கழற்றுவேன்.