வெளுத்த இரவுகள் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6573
அந்த வினோதமான பிறவி உண்மையிலேயே நல்ல ஒரு மனிதன் என்ற விஷயம் அந்த மனிதனுக்குத் தெரியும். எனினும், தன்னுடைய எண்ணத்தைச் சிறிது அவிழ்த்து விடாமல் இருக்க அவனால் முடியவில்லை. அதாவது- சற்று கடந்து சென்ற ஒரு ஒப்பிடலை நோக்கி அவனுடைய கவனம் செல்கிறது.
உரையாடும் நேரத்தில் தான் பார்க்க வந்திருக்கும் மனிதனின் முக வெளிப்பாட்டையும், ஒரு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் பூனைக் குட்டியின் முக வெளிபாட்டையும் அவன் ஒப்பிட்டுப் பார்க்கிறான். சில குட்டிகள் மோசமான பாதைகளின் மூலம் யாரென்று தெரியாத எல்லாரையும் பயமுறுத்தி, தொல்லைகள் கொடுத்து, தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது, ஓடிச்சென்று ஒரு நாற்காலிக்குக் கீழே மறைந்து கொள்ளும் பூனைக்குட்டி அது. உரோமங்கள் சிலிர்த்து நிற்க, சீறிக் கொண்டே தன்னுடைய இரண்டு உள்ளங்கைகளையும் கொண்டு, பரிதாபமான பிஞ்சு முகத்தை நக்கித் துடைத்துக் கொண்டே ஒரு மணி நேரம் முழுவதும் அது அங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டியதிருந்தது. அதற்குப் பிறகு நீண்ட நேரம் அது உலகத்தையே கூர்ந்து பகையுணர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தது. இரக்க குணம் கொண்ட வேலைக்காரி, இல்லத் தலைவனின் சாப்பாட்டு மேஜையிலிருந்து அதற்காக எடுத்து வைத்த எச்சில் பொருட்களின் மீதுகூட அதற்குப் பகைதான்.''
“நான் ஒரு விஷயத்தைக் கூறட்டுமா?'' இவ்வளவு நேரம் நான் கூறியதை கண்களை விரித்துக் கொண்டு, உதடுகளை மலரச் செய்து, ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நாஸ்தென்கா இடையில் புகுந்து சொன்னாள்: “இவையெல்லாம் எதற்காக நடந்தன என்பதையோ, நீங்கள் என்னிடம் இந்த வினோதமான கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள் என்பதையோ என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை. இந்த அனுபவங்கள் அனைத்தும் முதலிலிருந்து கடைசி வரை உங்களுக்கு நேர்ந்திருப்பவை.''
“சந்தேகமேயில்லை.'' முழுமையான மிடுக்குடன் நான் சொன்னேன்.
“அப்படியென்றால், மீதி விஷயங்களையும் கூறுங்கள்.'' அவள் சொன்னாள்: “காரணம்- இவை அனைத்தும் எங்கே சென்று முடியப் போகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.''
"கதாநாயகன்... அதாவது- நான்... காரணம்- இந்தக் கதையின் நாயகன் நான்தான். சாதுவான இந்த நான்- அந்த தூரத்து மூலையில் என்ன
செய்து கொண்டிருந்தேன் என்பதை மேடம், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தானே நாஸ்தென்கா? என்னுடைய நண்பனின் எதிர்பாராத வருகை என்னுடைய சமநிலையைத் தவறச் செய்ததும், ஒருநாள் முழுவதையும் என்னை பதைபதைப்பிற்குள்ளாக்கியதும் ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையா? திடீரென்று கதவைத் திறந்ததும், நான் அதிர்ச்சியடைந்து பதைபதைப்பு அடைந்ததற்கும், என்னைப் பார்க்க வந்த மனிதனுக்குத் தரவேண்டிய வரவேற்பைத் தருவதற்கு இயலாமல் போனதற்கும் என்னுடைய உபசார மரியாதை என்ற விஷயத்தின் கனத்தில் சிக்கி, அவமானப்பட்டு கீழே விழுந்ததற்கும் காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையா?''
“ஆமாம்... அதேதான்...'' நாஸ்தென்கா கூறினாள். “நான் தெரிந்து கொள்ள ஆசைப்படும் விஷயம் அதுதான். நீங்கள் அதை அழகாகக் கூறுகிறீர்கள். எனினும் சற்று கவர்ச்சியைக் குறைத்துக் கூறக் கூடாதா? காரணம்- ஏதோ புத்தகத்தை வாசிக்கச் செய்து கேட்பதைப்போல தோன்றுகிறது.''
“நாஸ்தென்கா...'' சிரிப்பு வந்ததை அடக்கிக் கொண்டே நான் மிடுக்கும், கறார் தன்மையும் நிறைந்த குரலில் சொன்னேன்: “அன்பான நாஸ்தென்கா- என்னுடைய பேச்சு அழகாக இருந்தது என்ற விஷயம் எனக்கு தெரியும். ஆனால், வேறு மாதிரி என்னால் பேச முடியாது என்பதைக் கூறுவதற்காக நான் வருத்தப்படுகிறேன். இந்த நிமிடத்தில் நாஸ்தென்கா... நான் சாலமன் மன்னனின் பிணத்தைப்போல... ஏழு முத்திரைகள் வைத்து மூடப்பட்ட ஒரு பெட்டிக்குள் அதை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். இறுதியில் அது ஏழு முத்திரைகளையும் உடைத்தெறிந்துவிட்டது. அன்பான நாஸ்தென்கா, நீண்ட ஒரு பிரிவுக்குப் பிறகு நாம் இப்போது மீண்டும் சந்தித்திருக்கிறோம் அல்லவா? மேடம், உங்களை எனக்கு எவ்வளவோ காலமாகத் தெரியும் நாஸ்தென்கா, நீண்ட நாட்களாக நான் ஒரு ஆளைத் தேடிக் கொண்டிருந்தேன். நான் தேடிக் கொண்டிருந்தது, உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன் என்பதற்கும் நம்முடைய இந்தச் சந்திப்பு விதியின்படி நடக்கிறது என்பதற்குமான அடையாளம்தான் அது. என்னுடைய தலைக்குள் ஓராயிரம் மூடப்பட்டிருந்த விஷயங்கள் பிளந்து திறக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் வார்த்தைகளை வெளியே பாய்ந்தோடுவதற்கு அனுமதிக்கவில்லையென்றால், எனக்கு மூச்சு அடைக்க ஆரம்பித்துவிடும். அதனால்... நாஸ்தென்கா, நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து என்னுடைய பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டாம். நான் கூறுவதை அமைதியாகவும் கவனத்துடனும் கேளுங்கள். இல்லாவிட்டால் நான் பேச மாட்டேன்.''
“அய்யோ... கூடாது. தயவு செய்து பேச்சை ஆரம்பியுங்கள். நான் ஒரு வார்த்தைகூட பேச மாட்டேன்.''
“சரி... தொடர்ந்து கூறுகிறேன். என்னுடைய அன்புத் தோழியான நாஸ்தென்கா, எனக்கு என்னுடைய ஒரு நாளில் குறிப்பாக பிரியமான ஒரு மணி நேரம் இருக்கும். அன்றைய வேலைகளையும் பொறுப்புகளையும் முழுமையாக செய்து முடித்துவிட்டு உணவு சாப்பிடுவதற்கோ சிறிய அளவில் தூங்குவதற்கோ ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளுக்கு வேக வேகமாக செல்லக்கூடிய நேரமது, அப்போது அந்த சாயங்கால வேளையிலும் இரவிலும் எஞ்சியிருக்கும் ஓய்வு நேரம் முழுவதையும் எப்படிப்பட்ட பொழுதுபோக்கு விஷயங்களில் கழிக்கலாம் என்பதைச் சிந்தித்துக்கொண்டே அவர்கள் நடப்பார்கள். நம்முடைய கதாநாயகனும் சிரமப்பட்டு செலவழித்த ஒரு பகலுக்குப் பின்னால் மற்றவர்களுடன் சேர்ந்து வேகமாக நடந்து செல்வான். ஆனால், ஆனந்தத்தை வெளியே காட்டும் ஒரு தனிப்பட்ட பிரகாசம் அவனுடைய வெளிறிப்போன, ஏறக்குறைய களைத்துப் போன முகத்தில் தெரியும். செயின்ட் பீட்டாஸ்பர்க்கின் குளிர்ச்சியான வானத்தில் மறைந்து கொண்டிருக்கும் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருப்பதை அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பான். ஆனால், அவன் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்று நான் கூறுவது பொய். அவன் அதை கவனிப்பதில்லை. அலட்சியமாக இருப்பவனைப்போல, களைத்துப்போய்விட்டவனைப் போல, ஆர்வம் உள்ள வேறு ஏதோ விஷயத்தில் மூழ்கிவிட்டவனைப் போல, இந்த உலகத்தின் சூழலால் தனக்கு அளிக்க முடிந்தது- சாதாரண ஒரு நொடி மட்டுமே நீடித்து இருக்கக் கூடிய ஒரு குறிப்பிடத்தக்க தருணம் மட்டுமே என்ற நினைப்புடன் அவன் அதை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். மறுநாள் வரை எந்தவொரு காரியமும் தொல்லைகள் தரப்போவதில்லை என்பதால் அவன் சந்தோஷத்துடன் இருந்தான். வகுப்பறையை விட்டு வெளியேறிச் செல்வதற்கு அனுமதி கிடைத்த, விரும்பக்கூடிய விளையாட்டுகளிலும் குறும்புத்தனங்களிலும் ஈடுபடுவதற்காகத் திறந்து விடப்பட்ட ஒரு பள்ளிக்கூட சிறுவனைப்போல அவன் மகிழ்ச்சி நிறைந்த சிந்தனைகளில் மூழ்கி விட்டிருந்தான்.