வெளுத்த இரவுகள் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6573
இரவில் வீட்டை அடைவதற்காக, தங்களுடன் யாரும் வருவதை விரும்பாத எல்லா பெண்களும் செய்யக் கூடிய காரியமே அது. என்னுடைய பக்கம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விதியின்படி, அந்த ஆடி ஆடி நடந்துகொண்டிருந்த மனிதனை எல்லையைக் கடந்த நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டாமல் விட்டிருந்தால், அவன் எந்தச் சமயத்திலும் அவளின் அருகில் சென்று சேர்ந்திருக்க முடியாது.
திடீரென்று ஒரு வார்த்தைகூட வாய்திறந்து கூறாமல், அந்த நாகரீக மனிதன் முன்னால் வேகமாகப் பாய்ந்து அவளுக்குப் பின்னால் ஓடினான். அவள் காற்றின் வேகத்தில் வேகமாக நடந்தாலும், அவர்களுக்கிடையே இருந்த தூரம் குறைந்து குறைந்து கொண்டேயிருந்தது. இறுதியில் அவன் அவளை நெருங்கிவிட்டான். அந்த இளம்பெண் உரத்த குரலில் சத்தம் போட்டாள். என்னுடைய வலது கையில் அந்த நேரத்தில் கூர்மையைக் கொண்ட அருமையான ஒரு மரக்கொம்பு இருந்தது என்னுடைய நல்ல நேரம் என்றுதான் கூற வேண்டும். நொடி நேரத்தில் நான் தெருவின் எதிர் பக்கம் சென்றேன். கண் இமைக்கும் நேரத்தில் அந்த தொந்தரவு செய்யும் மனிதன் விஷயத்தைப் புரிந்துகொண்டான். மரக்கொம்பின், எதிர்த்து நிற்க முடியாத அடிக்கு பயந்து, அவன் ஒரு வார்த்தைகூட பேசாமல் பின்னால் திரும்பி நடந்தான். நாங்கள் தூரத்தை அடைந்த பிறகுதான், அவன் தன்னுடைய எதிர்ப்பை கிட்டத்தட்ட கடுமையான மொழியில் வெளிப்படுத்தினான். ஆனால், அவனுடைய வார்த்தைகளை யாரும் பொருட்படுத்தவே இல்லை.
“என்னிடம் கையைக் கொடுங்க...'' நான் அந்த இளம்பெண்ணிடம் சொன்னேன்... “இனிமேல் அவன் பின்னால் தைரியத்துடன் வரமாட்டான்.''
அவள் மிகவும் அமைதியாக தன்னுடைய கையைத் தந்தாள். பயத்தாலும் களைப்பாலும் அது நடுங்கிக் கொண்டிருந்தது. ஹே! யாரென்று தெரியாத மனிதா! அந்த நிமிடம் நான் உன்னை எந்த அளவிற்கு வாழ்த்தினேன் தெரியுமா? நான் அவளை அருகில் சென்று பார்த்தேன். அழகான கறுப்பு நிற தலைமுடியைக் கொண்ட பெண்! நான் மனதில் நினைத்தது சரிதான்.... சற்று முன்பு உணர்ந்த பயத்தின்- அல்லது கவலையின் காரணமாக உண்டான கண்ணீர் அவளுடைய கறுத்த இமைகளில் அப்போதும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எனினும், அழகான ஒரு புன்னகை அவளுடைய உதடுகளில் தவழ்ந்து கொண்டிருந்தது. அவள் என்னை நோக்கி சிறிது பார்த்தாள். முகம் சற்று சிவந்தது. அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“என்னை சற்று முன்பு விட்டெறிந்திருக்கக் கூடாது என்று இப்போது புரிகிறதா? நான் உங்களுடன் இருந்திருந்தால், எதுவுமே நடந்திருக்காது.''
“ஆனால், எனக்கு உங்களைத் தெரியாதே! நான் நினைத்தேன்- நீங்களும்...''
“மேடம், இப்போது என்னைத் தெரிகிறதா?''
“கொஞ்சம்... முதலிலேயே கேட்கிறேன்- நீங்கள் ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்?''
“மேடம். நீங்கள் சரியாகவே மனதில் நினைத்திருக்கிறீர்கள். யாருடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தற்காலிகமாக நினைத்துப் பார்த்தேன்.'' என்னுடைய தோழி புத்திசாலி என்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டே நான் சொன்னேன்: “வெறும் அழகு மட்டுமல்ல; பெண்களுடன் பழகுவதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது என்பதும் உண்மைதான். சற்று முன்பு அந்த மனிதன் பயமுறுத்தியபோது மேடம், உங்களுக்கு உண்டான அளவிற்கு பதைபதைப்பு எனக்குள்ளும் உண்டானது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு இப்போது கொஞ்சம் பயமும் தோன்றுகிறது. ஒரு கனவைப்போல இது இருக்கிறது. ஒரு பெண்ணுடன் உரையாடுவேன் என்பதை நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை.''
“நினைத்துப் பார்த்ததில்லையா? உண்மையாகவா?''
“ஆமாம்... என்னுடைய கை இப்போது நடுங்கிக் கொண்டிருக்கிறது என்றால்... மேடம், உங்களிடம் இருப்பதைப் போன்ற ஒரு அழகான சிறிய கையை எந்தச் சமயத்திலும் தொட்டதில்லை என்பதுதான் காரணம். நான் பெண்களுடன் சிறிதுகூட நெருங்கிப் பழகியதில்லை. வேறு வகையில் கூறுவதாக இருந்தால், பழகியதே இல்லை என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். நான் இப்போது தனியாகவே இருக்கிறேன். அவர்களுடன் எப்படி உரையாடுவது என்ற விஷயம் கூட எனக்குத் தெரியாது. மேடம், இப்போதுகூட நான் உங்களுக்கு முன்னால் ஏதாவது முட்டாள்தனமாக நடந்து கொண்டிருப்பேன். சரிதானா? உண்மையைக் கூறுங்கள். நான் பதைபதைப்பு அடையவே மாட்டேன். அது மட்டும் உண்மை...''
“இல்லவே இல்லை. இதற்கு நேர்மாறாக நடந்ததுதான் உண்மை... உண்மையைக் கூற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், கூறுகிறேன்- பெண்களை ஈர்க்கக்கூடிய ஒரு குணம்தான் வெட்கம். மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இதையும்கூட கூறுகிறேன்- அது என்னையும் ஈர்க்கவே செய்கிறது. நான் வீட்டில் போய் சேரும் வரை, உங்களைப் போகச் சொல்ல மாட்டேன்.''
“மேடம், என்னுடைய வெட்கம் முழுவதையும் ஒரே நிமிடத்தில் இல்லாமல் செய்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!'' சந்தோஷ மிகுதியால் மூச்சை அடக்கிக்கொண்டு நான் சொன்னேன்: “அப்படியென்றால், என்னிடம் இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆயுதமும் இல்லாமல் போய்விடும்.''
“ஆயுதமா? என்ன ஆயுதம்? அப்படிக் கூறியது அழகாக இல்லை.''
“மன்னிக்க வேண்டும். இனிமேல் கூறமாட்டேன். என்னையும் மீறி நாக்கிலிருந்து வந்துவிட்டது. ஆனால், இதைப் போன்ற ஒரு நிமிடத்தில் எனக்கு ஒரு ஆசை உண்டாகாமல் இருக்கும் என்று கருதுகிறீர்களா?''
“என்ன ஆசை? விருப்பப்படுவதா?''
“ஆமாம்... அதேதான். என்னிடம் கனிவை வெளிப்படுத்துங்கள். கடவுளை மனதில் நினைத்துக்கொண்டு கனிவைக் காட்டுங்கள். நான் யார் என்பதைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள். இருபத்து ஆறு வயதாகிறது. எனினும், இதுவரை யாரையும் தெரியாது. பிறகு எப்படி அழகாகவும் அறிவுப் பூர்வமாகவும் மிகச் சிறப்பாகவும் நான் பேசுவேன்? எல்லா விஷயங்களையும் மனதைத் திறந்து, மறைத்து வைக்காமல் கூறுவதுதானே உங்களுக்கும் பிடித்த விஷயமாக இருக்கும்? என்னுடைய இதயம் எனக்குள் கிடந்து சத்தம் போட்டு கூக்குரல் எழுப்பும்போது, என்னால் அமைதியாக இருந்து கொண்டிருக்க முடியாது. அது இருக்கட்டும்... மேடம், நீங்கள் நம்புகிறீர்களா? ஒரு பெண்கூட இல்லை. எந்தச் சமயத்திலும் இருந்தது இல்லை. ஒரு நண்பன்கூட இல்லை. என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு இடத்தில் யாரையாவது சந்திப்பேன் என்று நான் கனவு கண்டுகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் நான் எவ்வளவோ முறைகள் காதல் வயப்பட்டிருக்கிறேன்.''
“எப்படி? யாருடன்?''
“யாருடனுமல்ல... கற்பனைக் கதாபாத்திரத்துடன். என்னுடைய கனவில் காணும் யாருடனும்... கனவில் நான் ஒரு கற்பனைக் கதையை உருவாக்குவேன். ஹா! மேடம், என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. உண்மையாகவே நான் இரண்டு மூன்று பெண்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், அவர்கள் எப்படிப்பட்ட பெண்களாக இருந்தார்கள்! இல்லத்தரசிகள்... ஆனால், கேட்டால் சிரிப்பை வரவழைக்கும் ஒரு விஷயத்தைக் கூறுகிறேன்.