வெளுத்த இரவுகள் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6573
முதல் இரவு
ஒரு அழகான இரவாக அது இருந்தது. அன்பான வாசகர்களே, மிகவும் இளம் வயதில் இருக்கும்போது மட்டுமே நாம் உணரக் கூடிய ஒரு இரவு அது. வானம் நட்சத்திரங்கள் சகிதமாக இருந்தது. அது மிகவும் பிரகாசமானதாக இருந்தது. அதைப் பார்க்கும்போது நாம் கேட்போம்- நகைச்சுவை உணர்வு உள்ளவர்களும் தான்தோன்றித்தனமாகத் திரிபவர்களும் என்று இருக்கும் பலவகைப்பட்ட மனிதர்களும் இதைப் போன்ற ஒரு ஆகாயத்திற்குக் கீழே எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று.
கனிவான மனம் கொண்ட வாசகர்களே, இதுவும் இளமை தவழும் ஒரு கேள்விதான். மிக மிக இளமை நிறைந்த ஒரு கேள்வி. எனினும், இப்படிப்பட்ட கேள்விகள் உங்களுடைய இதயங்களை அவ்வப்போது உலுக்குவதற்கு தெய்வம் சூழ்நிலைகளை உண்டாக்கட்டும்! நகைச்சுவை உணர்வு கொண்டவர்களையும் தான்தோன்றித்தனமாக இருப்பவர்களைப் பற்றியும் கூறும்போது, அந்த நாள் முழுவதும் என்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் இருந்தது என்ற விஷயத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. காலையிலிருந்து நான் ஒரு குறிப்பிடத்தக்க கவலையில் மூழ்கிப்போய் விட்டிருந்தேன். எல்லாரும் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்பதைப்போலவும் என்னைக் கை கழுவிவிட்டார்கள் என்பதைப் போலவும் நான் உணர்ந்தேன். யார் இந்த எல்லாரும் என்று நியாயமாக கேள்வி கேட்கலாம். காரணம்- நான் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசிக்க ஆரம்பித்து எட்டு வருடங்கள்
ஆகிவிட்டன. வெளியே கூறிக் கொள்கிற அளவுக்கு பழக்கமான மனிதர்களைச் சம்பாதிப்பதற்கு என்னால் முடியவில்லை. அதேநேரத்தில் நான் எதற்காக பழக்கமான மனிதர்களைச் சம்பாதிக்க வேண்டும்? அவர்கள் இல்லாமலேயே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் முழுவதும் எனக்கு நன்கு தெரிந்துவிட்டிருக்கிறது. அதனால்தான் நகரத்தை ஒரேயடியாக மூட்டை கட்டி வைத்து விட்டு, திடீரென்று கிராமப்புறத்தைத் தேடிப் புறப்பட்டபோது, எல்லாரும் என்னை கைகழுவி விட்டார்கள் என்று எனக்குத் தோன்றியது. இந்தத் தனிமை என்னை பயமுறுத்தியது. முழுமையான விரக்தியில் மூழ்கி, எனக்கு என்ன ஆனது என்பதைப் புரிந்துகொள்வதற்கே ஆற்றல் இல்லாத நிலைக்கு ஆளாகி, நான் மூன்று நாட்கள் முழுவதும் தெருக்களில் சுற்றிக்கொண்டு திரிந்தேன். நான் நேவ்ஸ்கி ப்ராஸ்பெக்டிற்குச் சென்றேன். பூங்காவிற்குச் சென்றேன். நதிக்கரையில் இருந்த பாதையின் வழியாக எந்தவித இலக்கும் இல்லாமல் நடந்தேன். கடந்த ஒரு வருடமாக அதே இடத்தில் அதே நேரத்தில் நான் கண்டு பழகிய மனிதர்களை சென்ற இடங்களில் எங்கும் பார்க்கவில்லை. உண்மையிலேயே அவர்களுக்கு என்னைத் தெரியவில்லை. ஆனால், எனக்கு அவர்களைத் தெரியும். நன்றாகவே தெரியும். நான் அவர்களின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய முகம் உற்சாகமாக காணப்படும்போது நான் சந்தோஷப்படுகிறேன். வாடிய முகங்களுடன் இருக்கும்போது நான் கவலைப்படுகிறேன். ஃபொன்தான்காவின் கரையில் ஒரு நாள்கூட விடாமல் எல்லா நாட்களிலும் ஒரே நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான மனிதருடன் நான் நட்பு கொண்டிருந்தேன் என்றுகூட கூறலாம். அவருடைய முகம் மிடுக்கு நிறைந்ததாகவும் சிந்தனைகள் வயப்பட்டதாகவும் இருந்தது. அவர் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். இடது கையால் சைகை செய்து காட்டுவார். தங்க முலாம் பூசிய ஒரு மரக்கொம்பை வலது கையில் பிடித்திருப்பார்.
அவர் என்னையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். என்மீது உண்மையான ஆர்வத்தைக் கொண்டிருந்தார். ஃபொன்தான்காவில் அதே இடத்தில் அதே நேரத்தில் என்னைப் பார்க்க முடியாமல் போனால் அவர் ஏமாற்றமடைவார் என்று நான் உறுதியாக நினைத்தேன். அந்த காரணத்தால்தான் சில நேரங்களில்- குறிப்பாக இரண்டு பேரும் சந்தோஷமாக இருக்கும் சமயங்களில் நாங்கள் ஒருவரோடொருவர் விசாரித்துக்கொள்வதில் ஈடுபட்டோம். சமீபத்தில் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒருவரையொருவர் பார்த்தபோது நாங்கள் உண்மையாகவே தொப்பியை உயர்த்திக் காட்ட ஆரம்பித்தோம். நல்லவேளை- நாங்கள் உரிய நேரத்தில் எங்களை நாங்களே கட்டுப்படுத்திக் கொண்டோம். கையை கீழே இறக்கிக் கொண்டு, இதயத்தில் தோன்றிய சந்தோஷ உணர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல், நாங்கள் ஒருவரையொருவர் கடந்து சென்றோம்.
கட்டிடங்களும் என்னுடைய நண்பர்கள்தான். நான் தெருவின் வழியாக நடந்து செல்லும்போது அவை அனைத்தும் முன்னால் வந்து சாளரங்களின் வழியாக என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டு என்னிடம் நலம் விசாரிப்பதைப்போல எனக்குத் தோன்றும். "என்ன விசேஷம்? நானும் நலமாக இருக்கிறேன். மே மாதம் எனக்கு மேலும் இன்னொரு மாடி வந்துசேரும்” என்றோ, "சுகமா? நாளையிலிருந்து எனக்கு மராமத்து வேலைகள் நடக்கப் போகின்றன” என்றோ, "எனக்கு நெருப்பு பிடிக்க ஆரம்பித்து விட்டது. நான் மிகவும் பயந்து போய் விட்டேன்” என்றோ அவை கூறலாம். அந்தக் கட்டிடங்களின் கூட்டத்தில் எனக்கு மிகவும் விருப்பமான நண்பர்களும் மிகவும் நெருக்கமான நண்பர்களும் இருப்பார்கள். அவற்றில் ஒன்று இந்த கோடை காலத்தில் சிற்பிகளின் சிகிச்சையில் இருக்கும். ஆபத்து எதுவும் உண்டாகாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நான் தினமும் வந்து பார்க்கப் போகிறேன். ஆனால், இந்த இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் அழகான ஒரு சிறிய வீட்டுக்கு என்ன நடந்தது என்பதை நான் எந்தச் சமயத்திலும் மறக்க மாட்டேன். அந்த அழகான சிறிய வீடு எந்த அளவுக்கு நட்புணர்வுடன் என்னை நோக்கிப் புன்னகைத்தது! எந்த அளவுக்கு இரக்கத்துடன் அலங்கோலமாகிப் போய் கிடந்து பக்கத்து வீடுகளை அது பார்த்தது? அதற்கு அருகில் நடந்து செல்லும்போதெல்லாம் என்னுடைய இதயத்தில் சந்தோஷம் அலை மோதிக் கொண்டிருக்கும். கடந்த வாரம் அந்தத் தெருவின் வழியாக நடந்து செல்லும்போது, நான் பரிதாபமான ஒரு ஓலத்தைக் கேட்டேன். "அவர்கள் எனக்கு மஞ்சள் வண்ணத்தைப் பூசுகிறார்கள்!” நான் என்னுடைய நண்பனைப் பார்த்தேன். மிருகங்கள்! காட்டுமிராண்டிகள்! அவர்கள் எதையும் வெறுமனே விட்டு வைக்கவில்லை. தூண்கள், கல் வேலைப்பாடுகள் எதையும்... என்னுடைய நண்பன் ஒரு காட்டுப் பறவையைப்போல மஞ்சள் நிறத்தில் இருந்தான். அதைப் பார்த்து, எனக்கு மஞ்சள் பித்தம் பிடித்துவிடும் போல தோன்றியது. சீனாக்காரனின் நிறத்தைப் பூசி அவலட்சணமாக்கப்பட்ட அந்த அப்பாவி நண்பனைப் போய் பார்க்க வேண்டும் என்று இன்று வரை எனக்கு மனம் வரவில்லை.
அன்புள்ள வாசகர்களே, மொத்தத்திலேயே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்னுடைய நண்பன் என்ற விஷயம் இப்போது புரிகிறது அல்லவா?
நான் மிகவும் கவலையில் மூழ்கி இருந்தேன் என்று முன்பு கூறினேன் அல்லவா? மூன்று நாட்கள் முழுவதும் அதே நிலை தொடர்ந்து கொண்டிருந்தது.