வெளுத்த இரவுகள் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6573
அதற்குப் பிறகுதான் அதற்கான காரணமே தெரிய வந்தது. வீட்டுக்கு வெளியே எனக்கு நடக்கக் கூடாத ஒரு விஷயம் நடந்துவிட்டது. (அந்த மனிதர் அங்கு இல்லை. அவர் இங்கு இல்லை. இப்போது அவருக்கு என்ன ஆனது?) வீட்டிற்கு உள்ளும் அமைதியற்ற நிலை நிலவியது. இரண்டு இரவுகள் தொடர்ந்து நான் தலைக்குள் அமைதி இல்லாமல் சிந்தனையில் மூழ்கினேன். வீட்டில் என்ன பிரச்சினை? என்ன காரணத்திற்காக எனக்கு அது இந்த அளவுக்கு வெறுப்பளிக்கக் கூடிய ஒன்றாகத் தோன்றுகிறது? பதிலைக் கண்டு பிடிப்பதற்காக நான் சுற்றிலும் பார்த்தேன்.
அழுக்கடைந்த பச்சை நிற சுவர்களையும். மத்ரயோனா சேர்த்து வைத்து ஆங்காங்கே இலைகள் கிடந்த மாடியையும் பார்த்தேன். எல்லா பொருட்களையும் ஆராய்ந்து பார்த்தேன். ஒருவேளை, குழப்பத்திற்கான வேர் இருப்பது அங்குதான் என்று நினைத்து ஒவ்வொரு நாற்காலியையும் உற்றுப் பார்த்தேன். (காரணம்- ஒரு நாற்காலிகூட முந்தின நாள் இருந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் இருந்தால் நான் நிலை குலைந்து போய்விடுவேன்.) நான் சாளரத்தின் வழியாகப் பார்த்தேன். அதற்குப் பிறகும் மனதில் நிம்மதி உண்டாகவில்லை. மத்ரயோனாவை அழைத்து இலைகளைப் பெருக்காமல் இருப்பதற்கும், பொதுவாக வீட்டைச் சுத்தம் செய்யாமல் வைத்திருப்பதற்கும் ஒரு தந்தையைப்போல திட்டுவதற்குக்கூட நான் முயன்றேன். ஆனால், அவள் என்னை பதைபதைப்புடன் பார்த்த விஷயம் மட்டும்தான் நடந்தது. ஒரு வார்த்தைகூட வாய்திறந்து பேசாமல், அறையை விட்டு அவள் வெளியேறிச் சென்றாள். இலைகள் முன்பு இருந்தது மாதிரியே இப்போது இருக்கின்றன. இறுதியாக இன்று இரவுதான் எனக்கு விஷயம் புரிந்தது. ஆட்கள் எனக்கு அருகில் இருப்பதிலிருந்து கிராமப்புறங்களைத் தேடிச் செல்கிறார்கள். இந்த நாகரீகமற்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மன்னிக்க வேண்டும். ஆனால், பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு என்னால் முடியவில்லை. ஏனென்றால், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் எல்லாருமே பொதுவாக கிராமப் பகுதிகளைத் தேடி போய்க் கொண்டிருந்தார்கள். அல்லது போய் விட்டிருந்தார்கள்.
ஏனென்றால், வண்டியை வாடகைக்கு எடுக்கும், உயர்குடியைச் சேர்ந்தவர் என்று தோன்றக் கூடிய ஒவ்வொரு மனிதனிடமும், அன்றைய வேலையை முடித்து தன்னுடைய வீட்டில் இருப்பவர்களைத் தேடிப் போக வேண்டும் என்று அவசரப்படக்கூடிய ஒரு குடும்பத் தலைவனைப் பார்த்தேன். எதை வைத்துக் கூறுகிறேன் என்றால், தெருவில் பார்த்த ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு வித்தியாசமான பார்வை தெரிந்தது- "மனிதர்களே, நாங்கள் இந்த வழியே வந்திருக்கிறோம். அவ்வளவுதான். இரண்டு மணி நேரங்களுக்குள் நகரத்தை விட்டு வெளியே சென்றுவிடுவோம்” என்று ஒவ்வொரு வழிப் போக்கரிடமும் கூறுவதைப் போன்ற பார்வை. சாளரம் தள்ளித் திறப்பதைப் பார்க்கும்போது, சர்க்கரை போல வெண்மையாக இருந்த மெல்லிய விரல்களை கண்ணாடியில் வைத்து தாளம் போட்டுக்கொண்டே, ஒரு அழகான இளம் பெண் தன் தலையை நீட்டி பூச்சட்டி விற்பவனை அழைப்பதைப் பார்க்கும்போது, அந்தப் பூக்களை வாங்குவது நகரத்தில் காற்றோட்டமே இல்லாத ஒரு வீட்டில் வசந்தத்தையும் மலர்களையும் அனுபவிப்பதற்காக அல்ல- வெகு சீக்கிரமே அவர்கள் எல்லாரும் அந்தப் பூக்களுடன் கிராமப் புறங்களைத் தேடிச் செல்லப்போகிறார்கள் என்பதை அந்த நிமிடத்திலேயே என்னால் கண்டுபிடித்துவிட முடியும். பார்த்தவுடன் உண்மை எது என்பதைக் கண்டுபிடித்து விடுவதில் நான் தேவையான அளவுக்கு வளர்ச்சி கண்டிருந்தேன். ஒவ்வொரு மனிதர்களின் வெளி நடவடிக்கைகளைக் கொண்டே அவர்களின் குளிர்கால வீடு எங்கே இருக்கிறது என்பதை தவறே இல்லாமல் கூறுவதற்கு நான் கற்றிருந்தேன். காமென்னி தீவிலிருந்து- அப்தேக்கர்ஸ்கி தீவிலிருந்து- இல்லாவிட்டால் பீட்டர்ஹாஃப் சாலையிலிருந்து வருபவர்களை, அவர்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்பட்ட படித்த வாசனையையும், அழகான குளிர்கால ஆடைகளையும், அவர்களை நகரத்திற்குக் கொண்டு வந்து சேர்த்த பெரும்பாலான வண்டிகளையும் வைத்து அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும். பர்கோலோவேயிலிருந்தும் அதற்கு அப்பாலிருந்தும் வருபவர்களின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளும் உயர்வான போக்குகளும் அந்தக் கணமே மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அதேநேரத்தில், க்ரெஸ்தோவிஸ்கி தீவில் கோடைகாலத்தைக் கழித்து கொண்டிருப்பவர்களிடம் வெளிப்படக்கூடிய விஷயங்களோ சுறுசுறுப்பும் உற்சாகமும் நிறைந்ததாக இருக்கும். பொருட்கள் ஏற்றப்பட்டிருக்கும் வண்டிகளுக்கு அருகில் கையில் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு அலட்சியமாக வண்டிக்காரர்கள் நீளமான வரிசையில் நடந்து செல்வதை சில நேரங்களில் நான் பார்ப்பேன். நாற்காலிகள், மேஜைகள், ஸோஃபாக்கள் உட்பட்ட எல்லா வகையான வீட்டுப் பொருட்களையும் வண்டிகளில் ஒன்று சேர்த்து வைத்திருப்பார்கள். எல்லாவற்றின் தலைப் பகுதியிலும், தன்னுடைய எஜமானின் பொருட்களை எச்சரிக்கை உணர்வுடன் பத்திரமாகக் காப்பாற்றிக்கொண்டு எலும்புக் கூடாக மட்டுமே காட்சியளிக்கும் ஒரே சமையல்காரி உட்கார்ந்திருப்பாள். சில நேரங்களில் வீட்டுப் பொருட்களும் பாத்திரங்களும் ஏற்றப்பட்டிருக்கும் படகுகள் நேவாவின் வழியாகவோ ஃபொன்தான்காவின் வழியாகவோ ச்யோர்னயா நதிக்கோ தீவுகளுக்கோ செல்வதை நான் பார்த்துக் கொண்டு நின்றிருப்பேன். இரண்டு இடங்களில் எங்குச் சென்றாலும், அந்த வண்டிகளும் படகுகளும் என்னுடைய கண்களில் பல மடங்கு, நூறு மடங்கு பெருகித் தெரியும். எல்லா வண்டிகளும் புறப்பட்டுப் போய்விட்டன என்றும் பாதைக்குச் சென்றுவிட்டன என்றும் கூட்டம் கூட்டமாக கிராமப் புறங்களை நோக்கிச் சென்றிருக்கின்றன என்றும் எனக்குத் தோன்றியது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கே ஒரு பாலைவனமாக ஆகிவிடுமோ என்றுகூட தோன்றியது. அப்போது எனக்கு வெட்கமும் வேதனையும் கவலையும் தோன்றியது. கிராமப் பகுதிகளை நோக்கிச் செல்வதற்கு எனக்கு எந்தவொரு காரணமும் இல்லை. இடமும் இல்லை. ஒவ்வொரு பொருட்கள் ஏற்றப்பட்டிருக்கும் வண்டியுடனும் சேர்ந்து, சவாரி வண்டியை வாடகைக்கு எடுக்கக் கூடிய உயர்குடியைச் சேர்ந்தவர்கள் என்று தோன்றக் கூடிய ஒவ்வொரு மனிதனுடனும் சேர்ந்து செல்வதற்கு நான் தயாராக இருந்தேன். ஆனால் யாரும்- ஒரு ஆள் கூட என்னை அழைக்கவில்லை. என்னை மறந்துவிட்டதைப்போல அவர்களுக்கு நான் ஒரு அன்னியனாகி விட்டதைப்போல தோன்றியது.
நான் நீண்ட நேரம்... நீண்ட நேரம் நடந்தேன். இறுதியில் எங்கு போய்ச் சேர்ந்தேன் என்ற ஒரு வடிவமே கிடைக்கவில்லை. பல நேரங்களில் எனக்கு இது நடக்கக் கூடியதுதான். திடீரென்று நான் நகரத்தின் எல்லையை அடைந்துவிட்டதைப்போல தோன்றியது. அந்த நிமிடமே எனக்கு சந்தோஷம் உண்டானது. நான் வெளியே கடந்து பச்சை வயல்கள் வழியாகவும் புற்பரப்புகளின் வழியாகவும் நடந்தேன். சிறிதுகூட களைப்பு தோன்றவில்லை. என்னுடைய மனச்சுமை விலகிக் கொண்டிருக்கிறது என்பதை எனக்குள் இருக்கும் ஒவ்வொரு நரம்பிலும் உணர்ந்தேன். வண்டியில் என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் என்னை நோக்கி நட்புணர்வு கலந்த பார்வைகளைச் செலுத்தினர். நலம் விசாரிக்கவில்லை. அவ்வளவுதான்.