வெளுத்த இரவுகள் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6573
நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஏதாவது பெண்ணைத் தெருவில் சந்திக்க நேர்ந்தால், அவர்களுடன் குறிப்பிட்ட நோக்கம் எதுவுமில்லாமல் எப்படி உரையாடலை ஆரம்பிப்பது என்பதைப் பற்றி நான் பல நேரங்களிலும் சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். உண்மையாகவே நான் அவர்களுடன் உரையாடுவது மிகவும் பணிவுடன் இருக்கும்... உணர்ச்சி நிறைந்ததாக இருக்கும். எனக்கு தனிமையில் இருப்பது வெறுப்பை அளிக்கக்கூடிய விஷயமாக ஆகிவிட்டது என்றும், என்னை விரட்டியடித்து விடாதீர்கள் என்றும் நான் அவர்களிடம் கூறுவேன். எந்தவொரு பெண்ணுடனும் பழகுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை என்று கூறுவேன். என்னைப் போன்ற ஒரு அதிர்ஷ்டமில்லாதவனின் எளிய வேண்டுகோளை காது கொடுத்துக் கேட்பது என்பது அவர்களுடைய பெண் தர்மத்தின் பகுதி என்பதை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுவேன். சகோதரனுடன் இருக்கக் கூடிய இரக்க உணர்வுடன் என்னிடம் இரண்டு வார்த்தைகள் கூற வேண்டும்... என்னை அப்போது விரட்டியடிக்கக் கூடாது... என்னை நம்ப வேண்டும்... நான் கூற விரும்புவதைக் கேட்க வேண்டும். சிரிக்க வேண்டுமென்று நினைத்தால், சிரித்துக் கொள்ளுங்கள். ஆனால், எனக்கு கொஞ்சமாவது வாக்குறுதிகள் தரவேண்டும். இனி எந்தச் சமயத்திலும் சந்திக்க வாய்ப்பில்லை என்றாலும் கூட, என்னிடம் சில வார்த்தைகளைக் கூற வேண்டும். கொஞ்சம் வார்த்தைகள் போதும்... இவ்வளவுதான் வேண்டும் என்று நான் கூறுவேன். ஆனால், மேடம்... நீங்கள் சிரிக்கிறீர்களே! அதற்கென்ன? அதற்காகத்தானே நான் இவற்றையெல்லாம் கூறினேன்?''
“வருத்தப்படக் கூடாது. நான் சிரித்ததற்குக் காரணம் வேறொன்றுமல்ல. உங்களுக்கு தனிமை உணர்வு தோன்றுகிறதென்றால், குற்றம் உங்களுடையதுதான். அதுமட்டுமல்ல; முயற்சித்துப் பார்த்தால் -ஒருவேளை நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்றுகூட வரலாம். தெருவில் வைத்து அந்த விஷயம் நடைபெறுகிறது என்றாலும்கூட காரியம் எளிதில் நடைபெற்று விட்டால், அந்த அளவிற்கு அது நல்லது. விவரம் இல்லாதவளோ, அந்த நிமிடத்தில் ஏதாவது காரணத்தால் கோபத்துடன் இருப்பவளோ, அல்லது நல்ல மனம் கொண்ட ஒரு பெண்ணோ கூட ஏதாவது சில வார்த்தைகளைப் பேச வேண்டும் என்ற உங்களுடைய பணிவான வேண்டுகோளை நிறைவேற்றாமல் உங்களை விரட்டியடிக்க முயற்சிக்க மாட்டாள். அப்போது... நான் என்ன கூறுகிறேன்? உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவர்கள் முடிவு செய்துவிடுவார்கள். சந்தேகமேயில்லை! நான் என்னுடைய விஷயத்தைச் சொன்னேன். அவ்வளவுதான். பெண்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி எனக்குப் பெரிதாக எதுவும் தெரியாது.''
“மேடம், உங்களுக்கு நன்றி!'' நான் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினேன்: “மேடம், நீங்கள் எனக்கு எவ்வளவு பெரிய உதவியைச் செய்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது.''
“நிறுத்துங்கள்... ஆனால், நான் ஒன்று கேட்கட்டுமா? உங்களுடைய அக்கறைக்கும் அன்பிற்கும் பாத்திரமான... நீங்கள் முன்பு கூறியதைப் போன்ற ஒரு இல்லத்தரசி அல்ல நான் என்று நீங்கள் எப்படி தீர்மானித்தீர்கள்?''
“ஏன் அப்படி கேட்கிறீர்கள்? மேடம், நீங்கள் தனியாக இருந்தீர்கள். அந்த மனிதன் தாறுமாறாக நடந்தான். போதாததற்கு இரவு நேரம் வேறு. மேடம், நீங்களே ஒப்புக் கொள்வீர்கள்.... ஒரு மனிதனின் கடமை...''
“இல்லை... இல்லை... அதற்கு முன்பு தெருவின் எதிர்பக்கத்தில் இருக்கும்போது... அப்போது நீங்கள் என்னை நெருங்கி வர முயற்சித்தீர்கள். இல்லையா?''
“ஓ... எதிர்பக்கத்திலா? அதை எப்படி கூறிப் புரியவைப்பது என்பதைப் பற்றி உண்மையிலேயே எனக்கு ஒரு வடிவமும் கிடைக்கவில்லை. இன்று எனக்கு பெரிய அளவில் சந்தோஷம் உண்டான ஒரு நாள். நான் பாடிக் கொண்டே நடந்தேன். நகரத்திற்கு வெளியே போய்விட்டேன். இந்த அளவிற்கு அதிகமான சந்தோஷத்தை நான் முன்பு எந்தச் சமயத்திலும் அடைந்ததே இல்லை. மேடம்... ஆனால் எனக்கு வெறுமனே தோன்றியிருக்கலாம். நான் அதை ஞாபகப்படுத்துவதற்காக மன்னிக்க வேண்டும். எனக்குத் தோன்றியது... மேடம், நீங்கள் அழுகிறீர்கள் என்று. என்னால்... என்னால்... அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அது என்னுடைய இதயத்தை மிகவும் வேதனைப்படுத்தியது.
கடவுளே! மேடம், உங்களின் பெயரைச் சொல்லி கவலைப்படுவதற்கு எனக்கு உரிமை இல்லையா? மேடம், உங்களிடம் சகோதரனுக்கு உண்டாகக் கூடியதைப் போன்ற இரக்கம் உண்டானது பாவம் என்று கூறுகிறீர்களா? நான் இரக்கம் என்று கூறியதற்கு மன்னிக்க வேண்டும். சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், மேடம், உங்களின் அருகில் வரவேண்டும் என்று எனக்கு திடீரென்று தோன்றிய ஆசையை ஒரு வரம்பு மீறிய விஷயம் என்று நினைக்கிறீர்களா?''
“நிறுத்துங்கள். இதற்குமேல் பேச வேண்டாம்.'' என்னுடைய கையை அழுத்தியவாறு அவள் சொன்னாள்: “குற்றம் என்னுடையது தான். அப்படி நடந்து கொண்டது நான்தானே? எனினும், உங்களைப் பற்றி மனதில் தோன்றிய அபிப்ராயம் தவறான ஒன்றல்ல என்பதைத் தெரிந்து கொண்டதில் நான் சந்தோஷப்படுகிறேன். இதோ நாம் வந்து சேர்ந்து விட்டோம். நான் இந்த வழியில் திரும்பிச் செல்ல வேண்டும். இங்கிருந்து ஒன்றிரண்டு அடிகள் எடுத்து வைத்தால் போதும். நான் வரட்டுமா? நன்றி...''
“நாம்- நாம் இனி எந்தக் காலத்திலும் ஒருவரையொருவர் பார்க்க மாட்டோம் என்று கூறுகிறீர்களா? இந்த இடத்திலேயே எல்லா விஷயங்களும் முடிவடைந்து விட்டனவா?''
“இதோ பாருங்கள்...'' அந்த இளம்பெண் சிரித்துக் கொண்டே கூறினாள்: “முதலில் சில வார்த்தைகள் உங்களுக்குத் தேவைப்பட்டன. ஆனால், இப்போது... ஆனால், இதற்குமேல் நான் எதுவும் கூற மாட்டேன். ஒருவேளை, நாம் நாளை மீண்டும் ஒருவரையொருவர் பார்த்தாலும் பார்க்கலாம்.''
“நான் இங்கு நாளைக்கு வருவேன்.'' நான் சொன்னேன்: “மன்னிக்க வேண்டும். நான் இதற்குள் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டேன்...''
“ஆமாம்... உங்களுக்கு பொறுமையே இல்லை. பிடிவாதம் கொஞ்சம் அதிகம்தான்...''
“தயவு செய்து இதைக் கொஞ்சம் கேளுங்கள்.'' நான் இடையில் புகுந்து சொன்னேன்: “நான் கூறக் கூடாதது எதையும் கூறிவிட்டால், மன்னிக்க வேண்டும். ஆனால்,என் விஷயம் அப்படித்தான். நாளை நான் இங்கு வந்தே ஆக வேண்டும். நான் ஒரு கனவு கண்டு கொண்டிருக்கும் மனிதன். இயல்பான வாழ்க்கை என்னிடம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதைப் போன்ற நிமிடங்கள் எனக்கு கிடைப்பது என்பது மிகமிக அரிதான ஒரு விஷயம். அதனால் என்னுடைய கனவுகளில் அவற்றைத் திரும்பத் திரும்ப கொண்டு வந்து பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இரவு முழுவதும், ஒரு வாரம் முழுவதும், ஒரு வருடம் முழுவதும்- மேடம், நான் உங்களைப் பற்றி கனவு கண்டு கொண்டிருப்பேன். உண்மையாகவே நான் நாளை இதே இடத்திற்கு இதே நேரத்திற்கு வருவேன்.