
அவர்கள் எல்லாரும் என்ன காரணத்தாலோ மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். எல்லாருடைய வாயிலும் ஒவ்வொரு சுருட்டு இருந்தன. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு சந்தோஷம் எனக்குள்ளும் உண்டானது. திடீரென்று இத்தாலியில் வந்து இறங்கிவிட்ட ஒரு தோணல். நெருங்கி நெருங்கி இருந்த தெருக்களில் மூச்சுவிட முடியாமல் பாதி நோயாளியாகி விட்டிருந்த ஒரு நகரத்து மனிதனான என்னிடம் இயற்கையுடன் உள்ள நட்பு உண்டாக்கிய விளைவு அந்த அளவுக்கு பலம் கொண்டதாக இருந்தது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சுற்றியிருந்த கிராமப் பகுதிகளில் இதயத்தைத் தொடக் கூடியதாகவும் மறைந்து போக முடியாததுமான ஏதோவொன்று இருந்தது. வசந்தத்தின் நறுமணத்துடன் இயற்கை, உடனடியாக அதன் அனைத்து பெருமைகளையும் தெய்வீக சக்தி படைத்த முழு தன்மையையும் வெளிப்படுத்தியது. பிரகாசித்துக் கொண்டிருந்த... மலர்களை அணிந்துகொண்டு அது மிகவும் மிடுக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தது. சயரோகம் பாதித்து வெளிறிப் போய் காணப்படும் ஒரு பெண்ணிடம் உண்டாகக்கூடிய மாற்றத்தை என்ன காரணத்தாலோ நான் நினைக்கத் தொடங்குகிறேன். சில நேரங்களில் பரிதாப உணர்ச்சி கலந்த பாசம் உண்டாகும். சில நேரங்களில் நமக்கு அவளிடம் இரக்கம் உண்டாகும். சில நேரங்களில் நாம் அவளை முழுமையாக அலட்சியப்படுத்தவும் செய்யலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென்று ஒரே நிமிடத்தில், அவள் விநோதமாக, ஆச்சரியப்படும் வகையில், அழகியாக மாறுகிறாள். நாம் அதிர்ச்சியடைந்து, திகைத்துப் போய், நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்கிறோம். கவலைகளும் சிந்தனைகளும் நிறைந்த அந்தக் கண்களில் நெருப்பை எரிய வைத்துக் கொண்டிருப்பது எந்த சக்தி? வெளிறி சோர்வடைந்து காணப்பட்ட முகம் இந்த அளவுக்கு மிகுந்த உணர்ச்சிகளுடன் எப்படி ஆனாது! அந்த மார்பகம் எதை வைத்து இப்படி உயர்ந்து தாழ்ந்து கொண்டிருக்கிறது? இந்த ஏழைப் பெண்ணின் முகத்தில் இந்த அளவுக்கு கவர்ச்சியான புன்னகையை அரும்பச் செய்வதற்கும் இந்த அளவுக்கு பலமான சிரிப்பை எழச் செய்வதற்குமான ஆற்றலும் உத்வேகமும் அழகும் இவ்வளவு சீக்கிரம் எங்கிருந்து வந்தன? நாம் ஆச்சரியத்துடன் சுற்றிலும் பார்க்கிறோம். அப்போதுதான் புரிய ஆரம்பிக்கிறது. ஆனால், அந்த நிமிடம் கடந்து போய் விடுகிறது. ஒருவேளை நாளை நாம் காணப் போவது சிந்தனைகள் நிறைந்த, செயலற்ற அதே பார்வையாக இருக்கும்... வெளிறி சோர்வடைந்த அதே முகமாக இருக்கும். வெட்கமும் கோழைத்தனமும் நிறைந்த அதே மனநிலையாக இருக்கும். அந்த நிமிட பாதிப்பின் மூலம் ஒரு வேளை- பரிதாப உணர்ச்சியைக்கூட தாங்கமுடியாத வேதனைகளின், கோபத்தின் வெளிப்பாடுகளைக்கூட சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.... ஒரு நொடி மட்டுமே தோன்றிய அந்த அழகு மலர் இவ்வளவு வேகமாக, என்றென்றைக்குமாக, வாடிக்கரிந்து போய்விட்டதே என்பதை நினைத்து நாம் கவலைப்படுகிறோம். அதன் மீது அன்பு செலுத்துவதற்கு ஒரு வாய்ப்புகூட கிடைக்கவில்லையே என்பதை நினைத்து நாம் மன வருத்தப்படுகிறோம்....
எனினும், என்னுடைய இரவு, பகலைவிட சிறப்பானதாக இருந்தது! நடைபெற்றது இதுதான்:
நான் மிகவும் தாமதமாகத்தான் நகரத்திற்குத் திரும்பி வந்தேன். வீட்டை நெருங்கியபோது, கடிகாரத்தில் பத்து மணி அடித்து விட்டிருந்தது. ஏரியின் கரையின் வழியாகத்தான் நான் வீட்டிற்குச் செல்ல வேண்டியதிருந்தது. இரவின் அந்த நேரத்தில் அங்கு எந்த இடத்திலும் ஒரு உயிரைக்கூட பார்க்க முடியவில்லை. என்னுடைய வீடு நகரத்தின் ஒரு தொலைதூர மூலையில் இருந்தது. என்னுடைய வீடு என்பது என்னவோ உண்மைதான். நான் பாடிக்கொண்டே நடந்தேன். சந்தோஷம் தோன்றும் போதெல்லாம் நான் ஏதாவது பாட்டை முணுமுணுப்பேன். தன்னுடைய சந்தோஷத்தைப் பங்கு போட்டுக் கொள்வதற்கு நண்பர்களோ அறிமுகமானவர்களோ இல்லாமலிருக்கும் எந்தவொரு ஆளும் இதைத்தான் செய்வான். திடீரென்று சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு சாகசச் செயலில் நான் போய் குதித்தேன்.
என்னிடமிருந்து சற்று தள்ளி சுவரோடு சேர்ந்து ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் சுவரில் சாய்ந்து கொண்டு கலங்கலாகக் காட்சியளித்த ஏரியின் நீரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப்போல தோன்றியது. அழகான ஒரு மஞ்சள் நிறத் தொப்பியையும் மெல்லிய ஒரு சிறிய கறுப்பு நிறப் போர்வையையும் அவள் அணிந்திருந்தாள். "இளம்பெண்தான். தலைமுடி கறுப்பாக இருக்கிறது.” -நான் முடிவு செய்தேன். அவள் என்னுடைய காலடிச் சத்தத்தைக் கேட்கவில்லை என்று தோன்றியது. அடக்கி வைக்கப்பட்ட சுவாசத்துடனும் உரத்து துடித்துக்கொண்டிருந்த இதயத்துடனும் நான் கடந்து சென்றபோது, அவள் அசையவேயில்லை. "ஆச்சரியம்தான்!” -நான் நினைத்தேன்: "அவள் ஏதோ ஆழமான சிந்தனையில் மூழ்கிவிட்டிருக்க வேண்டும்.” திடீரென்று நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். அடக்கி வைக்கப்பட்ட கேவல் சத்தம் காதில் விழுந்ததைப்போல இருந்தது.
ஆமாம்... நான் நினைத்தது சரிதான். அந்த இளம்பெண் அழுது கொண்டிருந்தாள். தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். கடவுளே! என் இதயம் சுருங்கி விட்டது. பெண்களுடன் நெருங்குவது என்பது எனக்கு வெட்கமுள்ள விஷயமென்றாலும், அது ஒரு அசாதாரணமான நிமிடமாக இருந்தது. நான் திரும்பி அவளை நோக்கி நடந்தேன். "மேடம்...” என்று அழைக்க இருந்தேன். உயர்ந்த சமுதாயத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் எல்லா ரஷ்யன் நாவல்களிலும் சர்வசாதாரணமாக பல முறைகள் திரும்பத் திரும்ப அந்தச் சொல் வரக் கூடியதாயிற்றே என்பது தெரிந்திருந்த காரணத்தால், நான் அந்த வார்த்தையைக் கூறவில்லை. எப்படி ஆரம்பித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதைப் பற்றி நான் மிகவும் ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்ததற்கு மத்தியில் அந்த இளம்பெண் தன்னுடைய சுயஉணர்வு நிலைக்கு மீண்டும் வந்தாள். சுற்றிலும் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்து கொண்டு என்னைக் கடந்து, ஏரியின் கரையின் வழியாக நடந்து சென்றாள். நான் உடனடியாக அவளைப் பின்பற்றி நடந்து சென்றேன். ஆனால், என்னுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டு அவள் தெருவைக் குறுக்காகக் கடந்து எதிர் பக்கத்தின் ஓரத்தின் வழியாக தன்னுடைய நடையைத் தொடர்ந்தாள். நான் தெருவைக் குறுக்காகக் கடந்து செல்வதற்கு முயற்சிக்கவில்லை. கையில் பிடிபட்ட கிளியிடம் வெளிப்படுவதைப்போல என்னுடைய இதயம் துடித்தது. அப்போது
இயல்பாக ஒரு எதிர்பாராத சம்பவம் என்னுடைய துணைக்கு வந்து சேர்ந்தது.
மாலை நேர ஆடைகள் அணிந்திருந்த ஒரு நாகரீகமான மனிதன் திடீரென்று அந்த இளம்பெண்ணின் அருகில் வந்தான். வயதில் நல்லவனாகத் தெரிந்தாலும் நடவடிக்கைகள் அப்படிப்பட்டதாக இல்லை. கீழே விழாமல் இருப்பதற்காக சுவரைப் பிடித்துக் கொண்டு அவன் இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டே நடந்தான். ஒரு அம்பின் வேகத்துடனும் பக்குவத்துடனும் அந்த இளம்பெண் நடந்தாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook