வெளுத்த இரவுகள் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6573
“மிகவும் நல்லது... மேடம், ஒரு சீன இளவரசனை திருமணம் செய்து கொள்வதைப்போல கற்பனையில் பார்த்திருக்கும் உங்களுக்கு நான் கூறுவது நன்றாகவே புரியும். இதோ கேளுங்கள்... ஆனால், இருங்கள் வருகிறேன்... மேடம், இதுவரை நான் உங்களின் பெயரைக்கூட தெரிந்துகொள்ளவில்லையே!''
“இப்போதாவது கேட்டீர்களே! இவ்வளவு சீக்கிரம் கேட்டிருக்கக் கூடாது என்று தோன்றுகிறதா?''
“நல்ல விஷயம்! நான் அப்படிப்பட்ட ஒரு விஷயத்தையே மறந்துவிட்டேன். அது இல்லாமலே நான் தேவையான அளவுக்கு சந்தோஷம் உள்ளவனாக இருந்தேன்.''
“நாஸ்தென்கா என்பதுதான் என்னுடைய பெயர்.''
“நாஸ்தென்கா! அவ்வளவுதானா?''
“அவ்வளவுதானாவா? ஏன்... போதாதா? அதற்கும்மேலே வேண்டுமா?''
“போதாது என்றா சொன்னேன்? போதும்... போதும்... தாராளம்... நாஸ்தென்கா... மேடம், நீங்கள் ஒரு இரக்க குணம் கொண்ட பெண் என்று தோன்றுகிறது. காரணம்- ஆரம்பத்திலேயே நாஸ்தென்கா என்று அழைக்க என்னை அனுமதித்து விட்டீர்களே!''
“இருக்கலாம்... சரி... கூறத் தொடங்குங்கள்.''
“நாஸ்தென்கா, இந்த சுவாரசியமான கதையைக் கேளுங்கள்.''
நான் அவள் அருகில் போய் உட்கார்ந்தேன். மிகவும் கம்பீரமான ஒரு உணர்ச்சியை முகத்தில் வரவழைத்துக்கொண்டு, மனப்பாடம் செய்து படித்த ஒரு பகுதியைக் கூறுவதைப்போல நான் கூற ஆரம்பித்தேன்.
“பீட்டர்ஸ்பர்க்கில் வினோதமான சில மூலைகள் இருக்கக் கூடிய விஷயம்... நாஸ்தென்கா, உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நகரத்தின் எஞ்சிய பகுதிகளில் முழுமையாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரியன், அந்த இடங்களை எந்தச் சமயத்திலும் எட்டிப் பார்ப்பதே இல்லை என்று தோன்றும். அங்கு பிரகாசித்துக் கொண்டிருப்பது இன்னொரு சூரியன். புதிய ஒரு சூரியன்... அது எல்லாவற்றின்மீதும் மாறுபட்ட, விசேஷமான, ஒரு பிரகாசத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும். வாழ்க்கையுடன் எந்தவொரு சாயலும் இல்லாமல் அந்த தூரத்து மூலைகளின் விஷயங்கள் இருக்கும். இந்த சிரமங்கள் நிறைந்த காலத்தில் இந்த கிரகத்தில் அல்ல- வினோதமான ஏதோ கற்பனை உலகில் நிலவக் கூடிய ஒரு வாழ்க்கை... இந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டால்- முற்றிலும் கற்பனை நிறைந்ததாகவும், தீவிரமான கொள்கைகளைக் கொண்டதாகவும், மோசமான விஷயங்கள் நிறைந்த சர்வசாதாரணமானதாகவும், நம்பமுடியாத அளவுக்கு தகுதிகள் கொண்டதாகவும் அது இருந்தது. கஷ்டம் என்றுதான் கூற வேண்டும் நாஸ்தென்கா.''
“கடவுளே... என்ன ஒரு ஆரம்பம்! நான் என்னவெல்லாம் கேட்கப் போகிறேனோ?''
“நாஸ்தென்கா... (அந்தப் பெயரை எத்தனை முறை அழைத்தாலும் போதும் என்று தோன்றாது என்று தோன்றுகிறது. நாஸ்தென்கா, அந்தத் தொலைவில் இருக்கும் மூலையில் சில வினோதமான மனிதர்கள் வசிக்கிறார்கள்- கனவில் வாழ்பவர்கள். ஒரு கனவு காணும் மனிதன்- அந்த வார்த்தைக்கான ஆழமான விளக்கத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், கூறுகிறேன். உண்மையாகக் கூறுவதாக இருந்தால்- அவன் ஒரு மனிதன் அல்ல. ஒரு இரண்டும் கெட்டவன் என்று கூறக்கூடிய படைப்பு... பகல் வெளிச்சத்திலிருந்து ஒளிந்திருக்கிறோம் என்பதைப்போல அந்தப் பிறவி யாருக்கும் தெரியாத ஏதாவது ஒரு மூலையில் போய் இருந்து கொண்டிருப்பான். தன்னுடைய இருப்பிடத்திற்குள் நுழைந்துவிட்டால், அதற்குப் பிறகு அவன் ஒரு ஓணானைப்போல அந்தச் சூழலுடன் இரண்டறக் கலந்து விடுவான். அதாவது- இந்த விஷயத்தில் அவனுக்கு மிகவும் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய இன்னொரு உயிரினத்துடன்தான் மிகுந்த ஒற்றுமை... வீடும் உயிரும் ஒன்றாகச் சேர்ந்த நிலையில் இருக்கும் ஆமையுடன்... பச்சை நிற சாயம் பூசப்பட்டதும் அழுக்கு படிந்ததும் புகை பிடித்துப் பார்க்கப் பிடிக்காத அளவுக்கு கறுத்துப் போய் காணப்படுவதுமான தன்னுடைய நான்கு சுவர்களையும் அவன் இந்த அளவுக்கு விரும்புவதற்கு என்ன காரணம் என்று தோன்றுகிறது? அவனுடைய குறைவான நண்பர்களில் ஒருவன் (இறுதியில் அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை என்ற நிலை உண்டாகிறது) அவனை வந்து பார்க்கும்போது, நம்முடைய வினோத மனிதன் தன்னைப் பார்க்க வந்திருக்கும் விருந்தாளியை இந்த அளவுக்கு பதைபதைப்புடன் வரவேற்பதற்குக் காரணம் என்ன? அவனுக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்? அவனுடைய முகத்தில் ஏன் இந்த மாறுதல்கள்? அதைப் பார்த்தாலே தோன்றும்- தன்னுடைய நான்கு சுவர்களுக்குள் அவன் ஏதோ பாதகமான செயலைச் செய்திருக்கிறான் என்பது. அதாவது- கள்ள நோட்டுகளை அச்சிடுகிறான் என்பது. அதுவும் இல்லாவிட்டால் தன்னுடைய இறந்துபோன நண்பனான கவிஞரின் படைப்பைப் பிரசுரிப்பது தன்னுடைய தலையாய கடமை என்று நினைப்பதாகக் கூறிக்கொண்டு, பெயர் எழுதப்படாத ஒரு கடிதத்துடன் அனுப்புவதற்காக சில வார்த்தைகளை எழுதிக் கொண்டிருக்கிறான் என்பது... சொல்லுங்கள், நாஸ்தென்கா. அவர்களுடைய உரையாடல் ஏன் இந்த அளவுக்கு பொய்யானதாக இருக்கிறது? வேறு இடங்களில் ஒரு ரசிகனாகவும், நகைச்சுவையாக பேசக் கூடியவனாகவும், பெண்களைப் பற்றியும், சுவாரசியமான அப்படிப்பட்ட பிற விஷயங்களைப் பற்றியும் பேசுவதற்கு விருப்பப்படுபவனுமான விருந்தாளி, பதைபதைப்பு அடைந்து சிரிக்கவோ தமாஷாகப் பேசவோ செய்யாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? தன்னுடைய முதல் வருகையில் இருக்கும் (இது இறுதி வருகையாகக்கூட இருக்கலாம். காரணம்- அவன் இதற்கு மேல் வர மாட்டான் என்பது உண்மை) இந்த சமீபகால நண்பன் எந்த அளவுக்கு கூர்மையான அறிவைக் கொண்ட மனிதனாக இருந்தாலும் (அப்படி இருக்கும்பட்சம் என்று அர்த்தம்) தான் பார்க்க வந்திருக்கும் மனிதனின் பதைபதைப்பு நிறைந்த முக வெளிப்பாட்டைப் பார்க்கும்போது, முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு நிற்பதும், அதே நேரத்தில் அங்கிருப்பவன் இடைவெளியைச் சரி செய்து நிலைமையைச் சீராக்குவதற்கும் சமூக மரியாதைகள் தனக்கும் தெரியும் என்று காட்டுவதற்கும் பெண்களைப் பற்றி ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டு, அப்படியாவது தன்னைப் பார்ப்பதற்காக தவறுதலாக வந்திருக்கும் அந்த அப்பாவி மனிதனின் அன்பைப் பெறுவதற்காக செய்த சாகச முயற்சிகள் அனைத்தும் வீண் என்பதை உணர்ந்து தன்னுடைய செயல்களில் முழுமையாக மூழ்கி, சமநிலை தவறி, திகைத்துப் போய் நின்று கொண்டிருப்பதற்கும் காரணம் என்ன? மிகவும் முக்கியத்துவமற்ற- ஒரு இல்லாத காரியத்திற்கு போக வேண்டியதிருக்கிறது என்பதை திடீரென்று நினைத்துக் கொண்டு, பார்க்க வந்திருக்கும் விருந்தாளி தன்னுடைய நண்பனின் வெப்பமான கைப்பிடியிலிருந்து தன் கையைப் பின்னோக்கி இழுத்து, தொப்பியை அணிந்து கொண்டு வேகமாக வெளியேறிச் செல்வதும், அங்கிருக்கும் மனிதன் மனதிற்குள் வேதனைப்பட்டு கவலையை வெளிக்காட்டுவதும், இந்த மோசமான நிலைமை மாற வேண்டும் என்பதற்காக முடிந்த வரையில் முயற்சிகள் செய்வதும் எதற்காக? அறைக்கு வெளியே வந்தவுடன், வந்திருந்த விருந்தாளி குலுங்கிக் குலுங்கி சிரிப்பதும் இனிமேல் எந்தச் சமயத்திலும் அந்த வினோதமான உயிரினத்தை வந்து பார்க்கப் போவதே இல்லை என்று அந்த நேரத்தில் அதே இடத்தில் வைத்து சபதம் செய்வதும் எதற்காக?