வெளுத்த இரவுகள் - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6573
மூன்றாவது இரவு
அன்று வெறுப்பைத் தரும் ஒரு மழை நாளாக இருந்தது. வெளிச்சத்திற்கான ஒரு அறிகுறிகூட இல்லை. இந்த நாளைப்போலவே இருக்கும் என்னுடைய தனிமை நிறைந்த முதிய காலம். வினோதமான சிந்தனைகள் என்னை நாலா பக்கங்களிலிருந்தும் வந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. தெளிவற்ற உணர்ச்சிகளும், துயரம் நிறைந்த பிரச்சினைகளும் என்னுடைய மனதிற்குள் வந்து நிறைந்து கொண்டிருந்தன.
ஆனால், அவற்றுக்கு ஒரு தெளிவை அளிக்கக்கூடிய சக்தியோ விருப்பமோ எனக்கு என்ன காரணத்தாலோ இல்லாமலிருந்தது. இதற்கெல்லாம் ஒரு பரிகாரத்தைக் கண்டுபிடிப்பதற்கு நான் தயாராக இல்லை.
நாங்கள் ஒருவரையொருவர் இன்று இரவு பார்ப்பதாக இல்லை. நேற்று இரவு நாங்கள் விடை பெற்றுக்கொண்டு பிரிந்தபோது, வானத்தில் கரிய மேகங்கள் ஒன்று சேரத் தொடங்கியிருந்தன. ஒரு மூடுபனி பரவத் தொடங்கியிருந்தது. நாளைய காலநிலை மோசமாக இருக்கும் என்று நான் கூறியபோது, அவள் பதிலெதுவும் கூறவில்லை. அவள் தான் ஏமாற்றம் அடைவதை விரும்பவில்லை. அவளைப் பொறுத்தவரையில், அவளுடைய சந்தோஷத்தின்மீது நிழல் உண்டாக்க சிறிய ஒரு கரிய மேகம்கூட இல்லாமல், பிரகாசமும் அழகும் நிறைந்த ஒரு நாளாக இருக்கும் அது.
“மழை பெய்தால் நாம் சந்திக்க முடியாது.'' அப்போது அவள் கூறினாள்: “நான் வரமாட்டேன்.''
இன்று மழை பெய்த விஷயத்தை அவள் கவனித்திருக்க மாட்டாள் என்று நான் நினைத்தேன். ஆனால், அவள் வரவில்லை.
நேற்று இரவு எங்களுடைய மூன்றாவது சந்திப்பு நடைபெற்றது. எங்களுடைய மூன்றாவது வெளுத்த இரவு...
ஆனந்தமும் உற்சாகமும் ஒரு ஆளுக்கு எந்த அளவிற்கு அழகை அளிக்கும் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.
இதயத்தில் காதல் நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கிறது. மனதிற்குள் இருக்கும் காதல் முழுவதையும் இன்னொரு இதயத்திற்குள் பொழியச் செய்வதற்கு ஆசை உண்டாகிறது. சுற்றியிருக்கும் எல்லா விஷயங்களையும் சந்தோஷம் நிறைந்த- வாய் திறந்த சிரிப்புடன் பேச வேண்டும் என்று ஆவல் உண்டாகிறது. சந்தோஷம் என்பது எந்த அளவிற்கு அனைத்தும் ஒன்று சேர்ந்த ஒரு விஷயமாக இருக்கிறது! நேற்று இரவு அவளுடைய வார்த்தைகளில் எந்த அளவிற்கு அன்பு கலந்திருந்தது? அவளுடைய இதயத்தில் எந்த அளவிற்கு ஒரு கனிவு நிறைந்து விட்டிருந்தது! எந்த அளவிற்கு இனிமையாக அவள் என்னிடம் பேசினாள்! எந்த அளவிற்கு பரந்த மனதுடன் என்னுடைய உணர்ச்சிகளை மதித்தாள்! எந்த அளவிற்கு இனிமையான குரலில் அவள் எனக்கு ஆசையையும் புத்துணர்ச்சியையும் அளித்தாள்! எப்படிப்பட்ட ஒரு அழகான பிரபஞ்சத்தை அவளுடைய சந்தோஷம் நிறைந்த ஆவேசம் படைத்து விட்டது! நான்... நான் நினைத்தேன்- அது உண்மை என்று. நான் நினைத்தேன்- அவள்...
கடவுளே! எனக்கு எப்படி அப்படியெல்லாம் சிந்திக்கத் தோன்றியது! அனைத்தும் இன்னொரு ஆளைச் சேர்ந்ததாக இருந்து, எனக்கென்று எதுவுமே இல்லாத சூழ்நிலையில், அவளுடைய அன்பும் ஆர்வமும் சினேகமும்- ஆமாம்... என்மீது உள்ள சினேகம்கூட- வெளியூரிலிருந்து வந்திருக்கும் மனிதனை மீண்டும் சந்திக்கப் போகிறோம் என்பதில் உண்டான சந்தோஷம் மட்டுமே இருக்கும்போது, அந்த சந்தோஷத்தை நானும் சேர்ந்து பங்கிடக் கூடிய முயற்சி மட்டும் இருக்கும்போது, நான் எப்படி இந்த அளவிற்கு குருடனாகி விட்டேன்? காரணம்- அவன் வராமல் போய், எங்களுடைய காத்திருத்தல் பயனற்ற விஷயமாக ஆனபோது, அவளுடைய முகம் வாடிப்போய்விட்டது. அவள் பயம் நிறைந்தவளாகவும் கோழையாகவும் ஆனாள். அவளுடைய அசைவுகளும் வார்த்தைகளும் முன்பு இருந்ததைப்போல இனிமையானதாகவோ உற்சாகமுள்ளதாகவோ இல்லை. வினோதம் என்றுதான் கூறவேண்டும்- என்மீது அவள் கொண்டிருக்கும் ஈடுபாடு அதைத் தொடர்ந்து அதிகமானது. தான் ஆசைப்பட்டதும், நிறைவேறாது என்று சிந்திப்பதற்கு பயப்படக்கூடியதும் எதுவோ அதை என்மீது பலமாகப் பொழியச் செய்வதற்கு அவளுக்குள் ஒரு தூண்டுதல் உண்டானதைப் போல தோன்றியது. என்னுடைய நாஸ்தென்கா மிகவும் பயந்துபோயும் பதைபதைப்பு அடைந்தும் காணப்பட்டாள். நான் அவளைக் காதலிக்கிறேன் என்பதை இறுதியில் புரிந்துகொண்டு, அவள் என் பலவீனமான இதயத்திடம் இரக்கம் காட்டுவதைப்போல உணர்ந்தேன். நாம் கவலையில் மூழ்கும்போது, மற்றவர்களின் துயரத்தை மேலும் எளிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. நமக்குள் அப்போது உணர்ச்சி அழிவதில்லை. மேலும் பலம் கொண்டதாக அது ஆகிறது.
மீண்டும் சந்திப்பு நேரப்போகும் சந்தர்ப்பத்திற்காக ஆர்வம் நிறைந்த இதயத்துடன் நான் அவளின் அருகில் சென்றேன். எனக்கு இப்போது என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி எந்தவொரு முன்னறிவிப்பும் அந்தச் சமயத்தில் என்னிடம் இல்லை. இந்த அளவிற்கு எதிர்பாராத ஒரு முடிவு உண்டாகும் என்பதற்காக எந்தவொரு முன் அறிகுறியும் இல்லாமலிருந்தது. அவனுடைய முகம் சந்தோஷத்தில் ஒளிர்ந்து காணப்பட்டது. அவள் அவளுடைய பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். அவன்தான் அவளுக்கான பதில். அவன் வரவேண்டும். அவளுடைய அழைப்பைக் கேட்டு ஓடி வரவேண்டும். நான் வந்து சேர்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அவள் அங்கு வந்துவிட்டிருந்தாள். முதலில் அவளுக்கு எல்லா விஷயங்களும் ரசிக்கக் கூடியவையாக இருந்தன. நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு அவள் சிரித்தாள். என்னுடைய இதயத்திற்குள் இருப்பதை வெளியே கூற வேண்டும் என்று தோன்றினாலும், நான் கூறவில்லை.
“எனக்கு இந்த அளவிற்கு சந்தோஷம் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?'' அவள் கேட்டாள்: “உங்களிடம் எனக்கு இந்த அளவிற்கு சந்தோஷம் தோன்றியதற்குக் காரணம்...? இன்று எனக்கு உங்களிடம் இந்த அளவிற்கு சினேகம் தோன்றுவதற்குக் காரணம்...?''
“இல்லை... தெரியாது...'' என்ன? -நான் இதயம் துடிக்க கேட்டேன்.
“நீங்கள் என்மீது காதல் கொள்ளாமல் இருக்கும் காரணத்தால் தான் எனக்கு உங்களிடம் இந்த அளவிற்கு அதிகமான சினேகம் தோன்றியிருக்கிறது. உங்களின் இடத்தில் வேறு யாராக இருந்தாலும், என்னைத் தொந்தரவு செய்து பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு செய்திருப்பார்கள். கவலைக்குள்ளாகி நீண்ட பெரு மூச்சை விட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், நீங்கள் எந்த அளவிற்கு நல்லவர்?''
இவ்வளவையும் கூறியவாறு அவள் என்னுடைய கையை பலமாக அழுத்தினாள். நான் வேதனையால் உரக்க கத்தவில்லை. அவ்வளவுதான். அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
“எந்த அளவிற்கு சினேகிதனாக நீங்கள் இருக்கிறீர்கள்?'' ஒரு நிமிடத்திற்குப் பிறகு முழுமையான மிடுக்குடன் அவள் சொன்னாள்: “தெய்வம்தான் உங்களை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறது. இப்போது நீங்கள் என்னுடன் இல்லாமலிருந்தால், எனக்கு என்ன நடந்திருக்கும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எந்தளவிற்கு சுயநலமற்ற மனிதராக நீங்கள் இருக்கிறீர்கள்! எந்த அளவிற்கு பெருந்தன்மை கொண்டதாக இருக்கிறது நீங்கள் என்மீது கொண்டிருக்கும் சினேகம்! என்னுடைய திருமணத்திற்குப் பிறகும் நாம் நெருங்கிய நண்பர்களாக இருப்போம். உடன்பிறந்தவர்களாக இருந்து பெறும் சிறப்பைவிட மேலானது நெருங்கிய நண்பர்களாக இருப்பதுதான். கிட்டத்தட்ட அவனளவிற்கு உங்களையும் நான் சினேகிப்பேன்.''
ஒரு நிமிட நேரத்திற்கு எனக்கு பலமான வருத்தம் உண்டானது. ஆனால், சிரிப்புடன் கலந்த ஒரு உணர்ச்சி என் இதயத்தைக் கிச்சுக்கிச்சு மூட்டிக்கொண்டிருந்தது.