வெளுத்த இரவுகள் - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6573
“மேடம், நீங்கள் ஒரு வகையான குழப்பநிலையில் இருக்கிறீர்கள்.'' நான் சொன்னேன்: “மிகவும் பயந்துபோய் விட்டிருக்கிறீர்கள். அவன் வரமாட்டான் என்பதுதான் உங்களுடைய எண்ணம்.''
“தெய்வமே! இல்லை... இல்லை...'' அவள் சொன்னாள்: “இந்த அளவிற்கு சந்தோஷம் கொண்டவளாக நான் இல்லாமல் போயிருந்தால், ஒருவேளை நான் உங்களுடைய குற்றம் சுமத்தலையும் நம்பிக்கையில்லாத தன்மையையும் கேட்டு குலுங்கிக் குலுங்கி அழுதிருப்பேன். ஆனால், நீண்ட நாட்கள் சிந்திக்கக் கூடிய நிலையை நீங்கள் எனக்கு தந்து விட்டிருக்கிறீர்கள். எனினும், அதைப் பற்றி நான் பின்னால் சிந்தித்துக் கொள்கிறேன். இப்போது நான் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறேன். நீங்கள் கூறியது உண்மைதான். ஆமாம்... உண்மைதான். நான் என்ன காரணத்தாலோ மொத்தத்தில் சுருங்கிவிட்டிருக்கிறேன். மிகவும் அதிகமான எதிர்பார்ப்புடன் இருப்பதாலோ என்னவோ, என்னுடைய உணர்ச்சிகள் திடீரென்று பாதிக்கப்படுகின்றன. ஆனால்... நம்முடைய உணர்ச்சிகளை நாம் விலகி நிற்கச் செய்ய முடியும்!''
காலடிச் சத்தத்தைக் கேட்டு நாங்கள் அதிர்ந்து போனோம். இருட்டிற்குள்ளிருந்து ஒரு மனிதன் எங்களை நோக்கி நடந்து வந்தான். நாங்கள் இருவரும் உறைந்து போய் நின்றிருந்தோம். அவள் உரத்த குரலில் சத்தம் போட முயற்சித்தாள். நான் அவளுடைய பிடியை விட்டு, விலகிச் செல்லத் தொடங்கினேன். ஆனால், எங்களுக்கு தவறு நேர்ந்துவிட்டது. அது அவன் அல்ல.
“ஏன் இந்த அளவிற்கு பயம்? ஏன் கையிலிருந்த பிடியை விட்டீர்கள்?'' என்று கேட்டவாறு அவள் மீண்டும் கையை நீட்டினாள். “ஏன் கூடாது? நாம் ஒன்றாகவே சேர்ந்து அவனைப் பார்க்கலாம். நாம் எந்த அளவிற்கு ஒருவர்மீது ஒருவர் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை அவன் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.''
“நாம் எந்த அளவிற்கு ஒருவர்மீது ஒருவர் அன்பு வைத்திருக்கிறோமா?'' நான் ஆவேசத்துடன் கூறினேன். “ஹா... நாஸ்தென்கா... நாஸ்தென்கா?'' நான் மனதிற்குள் நினைத்தேன்: "எந்த அளவிற்கு ஆழமான அர்த்தம் அந்த ஒரு வார்த்தைக்குள் இருக்கிறது? இதைப் போன்ற அன்பு மனதை நெரித்து, இதயத்திற்குள் குளிர்ச்சியைப் பரவச் செய்யும் உன்னுடைய கை குளிர்ச்சியாக இருக்கும்போது, என் கை நெருப்பைப்போல தகிக்கிறது. ஹா... நாஸ்தென்கா! நீ இந்த அளவிற்கு குருடாகிப் போய் விட்டாயா? சந்தோஷத்தில் திளைப்பவர்கள் சில சூழ்நிலைகளில் எந்த அளவிற்கு தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக ஆகி விடுகிறார்கள்? ஆனால், உன்னைப் பார்த்து என்னால் எந்தச் சமயத்திலும் கோபப்பட இயலாது."
இறுதியில் என்னால் என்னுடைய உணர்ச்சிகளை அடக்கி வைக்க முடியவில்லை.
“நாஸ்தென்கா...'' நான் சொன்னேன்: “இன்று முழுவதும் நான் எப்படி இருக்கிறேன் என்பது தெரியுமா?''
“இல்லை... என்ன? சீக்கிரமாகச் சொல்லுங்கள்... “இதுவரை ஏன் எதுவுமே கூறாமல் இருந்தீர்கள்?''
“நாஸ்தென்கா... முதலிலேயே நான் உங்களுடைய எல்லா வேண்டுகோள்களையும் நிறைவேற்றினேன். உங்களின் நல்ல சினேகிதர்களைத் தேடிச் சென்று கடிதத்தைக் கொடுத்தேன். பிறகு... பிறகு... வீட்டுக்கு வந்து படுத்து உறங்கினேன்.''
“அவ்வளவுதானா?'' சிரித்துக் கொண்டே அவள் இடையில் புகுந்து கேட்டாள்:
“மொத்தத்தில் அவ்வளவுதான் என்று கூறலாம்...'' நான் வருத்தத்துடன் கூறினேன்.
இனம்புரியாத கண்ணீர் என் கண்களில் ததும்பி நிற்க ஆரம்பித்திருந்தது. “நம்முடைய சந்திப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் நான் கண் விழித்தேன். ஆனால், உறங்கியதாக எனக்குத் தோன்றவே இல்லை. காரியம் என்னவென்று சரியாக எனக்குப் புரியவில்லை. நான் உங்களிடம் கூறுவதற்காகவும் என்னைப் பொறுத்தவரையில் நேரம் நின்றுவிட்டதைப்போல தோன்றியது என்றும், அந்த நிமிடத்திலிருந்து இனி என்றென்றைக்கும் ஒரேயொரு உணர்ச்சி மட்டுமே, ஒரேயொரு ஒட்டுதல் மட்டுமே எனக்குள் எஞ்சியிருக்கும் என்பதையும், என்னைப் பொறுத்த வரையில் வாழ்க்கை அசைவே இல்லாமல் ஆகிவிட்டதைப் போன்ற அந்த ஒரு நிமிடம் என்றென்றைக்கும் நிலைபெற்று நின்று கொண்டிருக்கும் என்ற விஷயத்தையும் உங்களிடம் நான் கூறுவதற்காகவும்... அதற்காகத்தான் நான் இங்கு வந்தேன். கண்விழித்தபோது, முன்பு எப்போதோ நன்கு பழக்கமான ஒரு ராகத்தை நினைத்துப் பார்ப்பதைப்போல தோன்றியது. எங்கேயோ வைத்து ஒருமுறை கேட்டு விட்டு, பிறகு மறந்து போய்விட்ட இனிமையான ஒரு ராகம், இவ்வளவு காலமாக என்னுடைய இதயத்திற்குள்ளிருந்து தகர்த்துக் கொண்டு வெளியே வருவதற்காக துடித்துக்கொண்டிருந்தது என்பதையும் இப்போது கூறுவதற்காகத் தான் நான் வந்ததே...''
“தெய்வமே! தெய்வமே!'' நாஸ்தென்கா இடையில் புகுந்து சொன்னாள்: "நீங்க என்னவெல்லாம் சொல்கிறீர்கள்! எனக்கு ஒரு வார்த்தையைக்கூட புரிந்து கொள்ள முடியவில்லை.''
“ஹா... நாஸ்தென்கா! இந்த வினோதமான உணர்வை உங்களையும் அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய விருப்பம் எனக்கு இருந்தது.'' நான் மென்மையான குரலில் கூற ஆரம்பித்தேன். எனினும், மனதிலிருக்கும் ஆசையின் ஒரு மெல்லிய கீற்று அதில் அடங்கியிருந்தது.
“நிறுத்துங்கள்... இதற்குமேல் பேச வேண்டாம்.''-அவள் சொன்னாள். சில நொடிகளில் அவள் எல்லாவற்றையும் புரிந்து கொண்டாள். புத்திசாலி!
அந்த நிமிடத்தில் அவள் எப்போதையும்விட உரையாடலில் அதிக விருப்பம் கொண்டவளாகவும் சந்தோஷம் நிறைந்தவளாகவும் அழகானவளாகவும் காணப்பட்டாள். அவள் என் கையைப் பிடித்துக் கொண்டு, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். என்னையும் சிரிக்க வைக்க முயற்சித்தாள். பதைபதைப்பிற்கு மத்தியில் என்னுடைய வாயிலிருந்து வெளியே வந்த ஒவ்வொரு வார்த்தையும் அவளுடைய நீண்ட குலுங்கல் சிரிப்பிற்குக் காரணமாக இருந்தது. எனக்கு கோபம் வர ஆரம்பித்தது. திடீரென்று அவளுடைய உரையாடல் கவர்ச்சித் தன்மை கொண்டதாக ஆனது.
“நான் ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா?'' அவள் சொன்னாள்: “உங்களுக்கு என்மீது காதல் உண்டாகாததில், எனக்கு கொஞ்சம் கோபம் உண்டு. பெண் இதயத்தின் விடுகதைக்கு பதில் கண்டு பிடிப்பதற்கு இனி சற்று முயற்சி பண்ணிப் பாருங்கள். ஆனால், ஹே... பிடிவாதக்கார மனிதா! எதையும் மறைத்து வைக்காமல் பேசுவதற்காக நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும். நான் உங்களிடம் எல்லா விஷயங்களையும் கூறுகிறேன். என் தலைக்குள்ளிருந்து வரக்கூடிய எல்லா விஷயங்களையும் பரிமாறுகிறேன்.''
“கேளுங்கள் மணி பதினொன்று அடிக்கிறதோ?'' தூரத்திலிருந்த நகரத்தின் கோபுரத்திலிருந்து தாளத்தில் ஒலித்த மணிச் சத்தத்தைக் கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்டே நான் கேட்டேன். அவளுடைய சிரிப்பு திடீரென்று நின்றது. அமைதியாக அவள் மணியடிப்பதை எண்ணத் தொடங்கினாள்.
“ஆமாம்... பதினொன்று...'' இயல்பான, மென்மையான குரலில் அவள் சிரமப்பட்டுக் கூறினாள்.
அவளை பயப்படச் செய்ததற்காகவும், அவளை மணிச் சத்தத்தை எண்ணச் செய்ததற்காகவும் எனக்குள் அப்போது வருத்தம் உண்டானது. என்னை திடீரென்று துரோக குணம் ஆட்கொண்டதற்காக என்னை நானே திட்டிக் கொண்டேன்.