வான்கா - Page 63
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“நீங்க ஏதோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு...” – வின்சென்ட் சொன்னான்.
“நான் என்னோட நாவலுக்கு விஷயங்கள் சேகரிக்கணும்னு ஐந்து நாட்கள் போரினேஜில் தங்கி இருந்தேன். அங்கே இருக்குற கறுப்பு நிற மனிதர்கள், அவங்க தங்களுடன் வாழ்ந்த ஒரு புதிய கிறிஸ்துவைப் பத்தி பேசுவதை நான் கேட்டேன்...”
“தயவு செஞ்சு மெதுவா பேசுங்க...”
ஸோலா சொன்னார்: “வின்சென்ட், இதுல வெட்கப்படுற மாதிரி ஒண்ணுமில்ல. நீங்க தேர்ந்தெடுத்த வழி தப்பாயிடுச்சு. அவ்வளவுதான். மதம் மனிதனை எங்கேயும் கொண்டு போகாது. பரலோகத்தில் சுகமா இருக்குறதுக்காக இந்த உலகத்துல கஷ்டங்களை அனுபவிக்கணும்னா, அறிவே இல்லாதவன்தான் அதுக்குத் தயாரா இருப்பான்.”
“இந்த விஷயத்தை நான் ரொம்பவும் தாமதமாத்தான் புரிஞ்சுக்கிட்டேன்.”
“நீங்க போரினேஜில் ரெண்டு வருஷங்கள் இருந்தீங்க. எல்லா தியாகமும் செஞ்சீங்க. கடினமா வேலை செஞ்சீங்க. எல்லாம் செஞ்சும், உங்களுக்கு என்ன கிடைச்சது? ஒண்ணுமே கிடைக்கல. அவங்க உங்களை பைத்தியக்காரன்னு பட்டம் கட்டி சர்ச்சை விட்டே வெளியேத்தினாங்க. நீங்க அந்த இடத்தை விட்டு வெளியே வந்தபிறகு, அங்க ஒண்ணும் புதுசா எந்த மாற்றமும் உண்டாகல. சொல்லப்போனா, நிலைமை இன்னும் மோசமானதுதான் மிச்சம்.”
“ஆனா, என்னால அதைச் சாதிச்சுக்காட்ட முடியும்”- ஸோலா தொடர்ந்தார்: “எழுதப்பட்ட வார்த்தைகள் புரட்சியை உண்டாக்கும். என்னுடைய ‘ஜெர்மினல்’ நாவலை, படிக்கத் தெரிஞ்ச எல்லா தொழிலாளிகளும் படிச்சிருக்காங்க. ஃபிரான்ஸ்ல என்னோட புத்தகம் இல்லாத ஒரு காப்பிக் கடையோ வீடோ இல்லைன்றதுதான் உண்மை. மத்தவங்களை வாசிக்கச் சொல்லி கேட்டார்கள்! இதுவரை நாலு வேலை நிறுத்தங்கள் உண்டாகி இருக்கு. இனியும் வேலை நிறுத்தம் நடக்கும். உங்களோட மதத்தால் சாதிச்சுக் காட்ட முடியாமற் போனதை, என்னோட புத்தகம் சாதிச்சுக் காட்டும். இதன் மூலம் ஒரு புதிய சமூகம் உயிர்பெற்று எழும்... எனக்கு இதுல எந்த அளவுக்கு பிரதிபலன் கிடைக்குது தெரியுமா?”
“என்ன கிடைக்குது?”
“பணம்... தாராளமா பணம்...”
அடுத்த மேஜையில் லாத்ரெக்கும் ஸெராவும் ரூஸோவும் ஓவியக் கலையைப் பற்றி காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
“என்னோட புத்தகங்கள் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதுன்னு சிலர் எப்போதும் முத்திரை குத்துவதுண்டு”- ஸோலா தொடர்ந்தார்: “லாத்ரெக்கின் ஓவியங்களையும் அவங்க இதே மாதிரிதான் சொல்றாங்க. அவங்க நம்புறதைத்தான் கலையில் சொல்லணும்னு நினைக்கிறது அவங்களோட மிகப்பெரிய தப்பு. கலை எல்லாவித நம்பிக்கைகளுக்கும் அப்பாற்பட்டது.”
“என்னோட அபிப்ராயத்தில் ஆபாச ஓவியங்களோ புத்தகங்களோ இல்லை மோசமா கற்பனை செய்யப்பட்டு, தரம் தாழ்ந்து வரையப்பட்ட படைப்புகள் இருக்கலாம். விஷயம் அதுதான். துளுஸ் – லாத்ரெக் வரைஞ்ச தேவடியாள்களோட படத்திலும் அழகுண்டு – ஒழுக்கமுண்டு. நான் சொல்றது அந்தப் பெண்களோட புற அழகை அல்ல. அக அழகை. அந்த அக அழகைத்தான் அந்த ஆளு ஓவியமா தீட்டி இருக்காரு. புகரோ வரைஞ்ச கிராமத்துப் பெண்ணை அப்படி ஏத்துக்க முடியாது. காரணம் – அவளை அசிங்கமா – அளவுக்கு மேல் அழகை ஏற்றி – அருவருக்கத்தக்க அளவுக்கு அவர் வரைஞ்சிருப்பார். அந்தப் பெண்ணைப் பார்த்தா, நமக்கு அழகுணர்வு வராது – வாந்திதான் வரும்.”
“நீங்க சொல்றதை நான் ஒத்துக்குறேன்.” – தியோ சொன்னான்.
சுற்றிலும் கூறியிருந்த ஓவியர்களுக்கு ஸோலா மீது மிகவும் மதிப்பு – மரியாதை. அவர்களுக்கு பழக்கமில்லாத ஒரு மீடியாவைக் கையில் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் அவர் ஆராய்ச்சி பண்ணி எழுதிக் கொண்டிருப்பதே காரணம்.
ஸோலா தொடர்ந்தார்: “சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை அவங்க எந்த விஷயத்தையும் கறுப்பாவும் வெள்ளையாவும் மட்டும்தான் பார்ப்பாங்க. ஆனா, இயற்கையில் அப்படியொண்ணும் பிரிவு இருக்குறதா சொல்ல முடியாது. நன்மையும் இல்லை, தீமையும் இல்லை. ஒரு செயலை நாம் செய்யிறதுக்கு முன்னாடியே இது நல்லது, இது கெட்டதுன்னு நாமே எழுதிடுறோம்.”
“ஆனா, சாதாரண மக்கள் தர்ம நியதிகள் இல்லாம வாழ முடியுமா?”- தியோ கேட்டான்.
“தர்ம நியதிகள்னு சொல்றது மதத்தைச் சொல்ற மாதிரிதான்”- துளுஸ் – லாத்ரெக் சொன்னான்: “வாழ்க்கையில் காணப்படுற பிரச்னைகளுக்கு எதிரா மக்களை கண்ணை மூடிக்கொள்ளச் சொல்ற ஒண்ணுதான் மதம் – கிட்டத்தட்ட அது ஒரு மயக்க மருந்து!”
“வாழ்க்கையில் சில ஒழுக்கங்கள் இருக்கத்தான் செய்யுது”- ஸோலா தன்னுடைய சிந்தனையைத் தொடர்ந்தார்! “என்னைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட ஒழுக்கங்கள் மேல எதிர்ப்பெல்லாம் கிடையாது. ஆனா, எதற்கும் ஒரு வரையறை இருக்கு. அளவுக்கு மேல எது இருந்தாலும் நல்லதில்ல. மானேயோட ‘ஒலிம்பியா’ன்ற ஓவியத்தின் மீது காறித் துப்புற விஷயத்தையோ, மாப்பஸானோட புத்தகங்களைத் தடை செய்யச் சொல்ற ஒரு காரியத்தையோ நிச்சயம் நான் பலமா எதிர்க்கிறேன். ஒழுக்கம் அது இதுன்னு ஒரு பேரை வச்சிக்கிட்டு யார் இப்படிப்பட்ட காரியங்கள்ல இறங்கினாலும், நிச்சயம் நான் அதை வன்மையா எதிர்ப்பேன். இங்கே இப்போ ஒழுக்கம்ன்றது கோவணத்துல வந்து நின்னுக்கிட்டு இருக்குது.”
“ஆட்கள் சொல்றது ஒரு அர்த்தத்துல பார்த்தா சரியானதுதான்”- ஸெரா குறிக்கிட்டுச் சொன்னார்: “கலைன்னு எடுத்துக்கிட்டா அதுல முக்கியமான விஷயங்கள் நிறம், ரூபம், பாவம் ஆகிய மூன்றுதான். சமுதாய வளர்ச்சிக்கான வழியை கலை செய்ய முடியாது. வடிவங்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்றது கலையோட வேலை இல்லை. ஓவியக் கலையைப் பொறுத்தவரை இசையைப் போலத்தான். அன்றாட வாழ்க்கையிலிருந்து அது உயர்ந்து நிற்கணும்!”
“விக்டர் ஹ்யூகோ மரணமடைஞ்சாச்சு”- ஸோலா சொன்னார்: “அவரோட மரணத்தோட, ஒரு கோட்பாடும் மரணம் அடைஞ்சிடுச்சு. அதாவது – அழகுள்ள அங்கக் குறைபாடுகளின், கலைத்தன்மை கலந்த பொய்மைகளின், சூத்திரத்திலடங்கிய திருட்டுத்தனங்களின் கோட்பாடு அவரோடு அழிஞ்சிடுச்சு. என்னோட புத்தகங்கள் இருபதாம் நூற்றாண்டின், விழிப்புணர்வு கொண்ட ஒரு நாகரீக சமுதாயத்தைப் பிரதிநிதித்துவம் செய்யுது. உங்களோட ஓவியங்களும் அப்படியே! மானேயின் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட அன்னைக்கே, புகரோவின் காலகட்டம் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம். மானேயும், தாமேயும் போயிட்டாங்க. ஆனா, இப்போ நமக்கு தெகாவும், லாத்ரெக்கும், காகினும் இருக்காங்கல்ல...!”
“அந்தப் பட்டியல்ல வின்சென்ட் வான்காவோட பெயரையும் சேர்த்துக்கங்க...”- லாத்ரெக் உரத்த குரலில் சொன்னான்.
“பட்டியலின் ஆரம்பத்திலேயே அந்தப் பெயரைச் சேர்க்கணும்”- இது ரூஸோ.
“சரி... வின்சென்ட், உங்க பெயரை பலமா எல்லாரும் சிபாரிசு பண்றாங்க. நீங்க அதற்குச் சம்மதிக்கிறீங்களா?”
“நான் பிறந்ததே அதற்குத்தானே!”- வின்சென்ட் சொன்னான்.