வான்கா - Page 64
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“நண்பர்களே!”- ஸோலா தன் பேச்சின் இறுதி பகுதிக்கு வந்தார்: “நம்மளோட கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இப்போ நான் சொல்றேன். அதாவது இதுதான் நம்மோட ‘மேனிஃபெஸ்டோ’. முதலாவதாக எல்லா உண்மைகளையும் – அது அவலட்சணமா இருந்தாக் கூட, அழகானதுன்னு மனப்பூர்வமா ஏத்துக்குறோம். இயற்கையை, அதன் அழகோடு பூர்ணமாக நாம் ஏத்துக்குறோம். ஒழுக்கம்ன்ற பேர்ல புகை படிஞ்ச கண்ணாடியைப் போட்டுக்காம, வாழ்க்கையை அதன் முழுமையோடு நாம் வரவேற்கிறோம்.
¤ ¤ ¤
ஜூன் மாதத்தில் தியோவும் வின்சென்ட்டும் ர்யூ லெபிக்கில் இருக்கும் ஒரு புதிய வீட்டிற்கு மாறினார்கள். வின்சென்ட்டிற்கு ஒரு தனி அறை கிடைத்தது குறித்து ஒருவிதத்தில் தியோவிற்கு மகிழ்ச்சிதான்.
“வின்சென்ட்... தியோ ஒருநாள் ஞாபகப்படுத்தினான்: “நீ ஸ்கூல்ல சேர்ந்து மூணு மாசமாயிடுச்சு. நான் சொல்றது கோர்மன்னோட ஸ்கூல் இல்ல. பாரீஸைச் சொல்றேன். ஐரோப்பாவுல கடந்த மூணு நூற்றாண்டுகள்ல உருவான மிகச் சிறந்த ஓவியங்கள் எல்லாத்தையும் பார்த்தாச்சு. இனி சொந்தமா ஓவியம் வரையப் பாரு...”
தனக்கென்று சொந்தமான ஒரு பாணியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற அவசரத்தில் வின்சென்ட்டின் நரம்புகள் முறுக்கேறிப் போயிருந்தன. அதனால், தியோவின் அமைதியான நாட்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
“வின்சென்ட்... அமைதியா இரு...”- ஒருநாள் இரவு, அறைக்குள் இங்குமங்குமாய் உலாத்திக் கொண்டிருந்த வின்சென்ட்டிடம் தியோ சொன்னான்: “அந்த பாழாய்ப்போன அப்ஸிந்த் குடிக்கிறதை உடனே நிறுத்து. நீ நினைச்சுக்கிட்டு இருக்கே காகின் ஓவியனா ஆனது அப்ஸிந்த் குடிச்சதுனாலதான்னு. ஒரு விஷயத்தை கவனமா கேளு... முட்டாளே! ஒரு வருஷம் ஆனாக்கூட பரவாயில்ல. தெளிவான பார்வையோட ஓவியங்கள் வரையணும். நீ இப்படி பக்குவமில்லாம நடந்துக்கிட்டு என்ன பிரயோஜனம்? தேவையில்லாம நரம்பு நோயாளியா நீ ஆகப்போறேன்றதுதான் உண்மை. இந்தச் சூழ்நிலையில உன்னால நல்ல ஓவியம் எப்படி வரைய முடியும்?”
¤ ¤ ¤
பாரீஸில் கோடை காலம் ஆரம்பித்தது. தெருக்கள் உச்சகட்ட வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் உருகிக் கொண்டிருந்தன. பாரீஸ் நகர மக்கள் இரவு இரண்டு மணி வரை கஃபேக்களில் அபயம் தேடினர். குளிர்பானங்கள் எதையாவது குடித்தவாறு வட்டமாக உட்கார்ந்து ஊர் கதைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். மோன்மார்த்ரியில் பூக்கள் காய்ந்து கருகிக் கிடந்தன. பச்சைப் பசேல் என்று இருந்த இடத்தில் மருந்துக்குக் கூட பசுமையைப் பார்க்க முடியவில்லை. பல வித வர்ணங்கள் அழகு காட்டிக் கொண்டிருந்த இடத்தில் ஒரு வர்ணத்தைக்கூட காண முடியவில்லை. பச்சைப் புல்வெளிகளுக்கு மத்தியில் வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருக்கும் ஸெய்ன் நதி இப்போது வெயிலில் தகித்துக் கொண்டிருந்தது.
எல்லா நாட்களிலும் ஈஸலைச் சுமந்துகொண்டு படம் வரைய கிளம்பி விடுவான் வின்சென்ட். ஹாலண்டில் இப்படியொரு கோடையின் கொடுமையையும் நிறங்களின் பஞ்சத்தையும் அவன் உண்மையில் பார்த்ததே இல்லை.
காகின் வின்சென்ட்டிற்கு தான்குய்யை அறிமுகப்படுத்தி வைத்தார். பாரீஸில் பெயின்ட் விற்பனை செய்யக்கூடிய மனிதர் அவர். அதே நேரத்தில் அருமையான கலா ரசிகரும் கூட. புதிய ஓவியக் கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிக்கு வைப்பதில் எப்போதுமே ஆர்வம் அதிகம் கொண்டிருக்கக் கூடிய நல்ல மனிதர் அவர்.
“தான்குய் –ஒரு சாதாரண ஆள்னு நினைச்சிடாதே. சாயத்தை அரைச்சு உண்டாக்குறதுதான் இந்த ஆளோட தொழில். ஆனா, கலையைப் பற்றிய நல்ல ரசனை உண்டு – அறிவு உண்டு. இந்த ஆள் கான்வாஸ் கேட்டா, உடனே கொடுக்கணும். பாரீஸ்ல கலை உலகத்துல வைக்கக்கூடிய நல்ல கால் வைப்பாக அது இருக்கும்” - காகின் உரத்த குரலில் சொன்னார்.
ர்யூ க்ளாஸெலில் உள்ள தான்குய்யின் கடையில் நிறைய ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன.
“இது என்னோட நண்பர் வின்சென்ட் வான்கா”- காகின் அறிமுகப்படுத்தினார். “இவர் ஒரு கம்யூனிஸ்ட்.”
“என் கடைக்கு வந்ததற்கு ரொம்ப நன்றி”- மகிழ்ச்சியுடன் வரவேற்றார் தான்குய். தடித்த முகத்தைக் கொண்ட மனிதர். கண்கள் வரை மூடியிருக்கும் பெரிய புல்தொப்பி. சிறிய தாடி – வலதுகண் இடது கண்ணை விட பெரியது.
“நீங்க ஒரு உண்மையான கம்யூனிஸ்டா ம்ஸ்யெ வான்கா?”- தான்குய் கேட்டார்.
“கம்யூனிஸம்ன்ற வார்த்தைக்கு நீங்க என்ன அர்த்தத்தை மனசுல வச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியல. என்னோட அபிப்பிராயத்தில் ஒவ்வொரு மனிதனும் அவனவனுடைய திறமைக்கு ஏத்தபடி விருப்பமுள்ள தொழிலைச் செய்ய வாய்ப்பு உண்டாக்கிக் கொடுக்கணும். அதே மாதிரி அவனவனுக்குத் தேவையான பொருட்களும் கிடைக்கச் செய்யணும்!”
“எவ்வளவு எளிமையா சொல்லிட்டீங்க!”- காகின் சிரித்தார்.
“பால்...” – தான்குய் கேட்டார்: “நீங்க ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்ல இல்ல வேலை பார்த்தீங்க? பணம்தான் மனிதனை மிருகமாக்குது... இல்ல?”
“ஆமா... அதே நேரத்துல பணம் இல்லாமையும்தான்...”
“இல்ல... பணம் இல்லாமை இல்ல. உணவும் வாழ்க்கைக்குத் தேவையான மற்ற பொருட்களும் கிடைக்காமல் இருப்பதும்னு வேணும்னா சொல்லலாம்.”
“நீங்க சொன்னதுதான் சரி”- வின்சென்ட் சொன்னான்.
“நம்ம நண்பர் பாலுக்கு பணக்காரர்களைக் கண்டா பிடிக்காது. பணம் சம்பாதிக்காத நம்மளைக் கண்டாலும் பிடிக்காது. ஆனா, எனக்கு ரெண்டாவது கூட்டத்தில் சேரத்தான் விருப்பம். தேவைக்கு அதிகமா பணம் சேர்ப்பவன் ஒரு அயோக்கியன்- போக்கிரி.”
“அப்படின்னா இந்தச் சூழ்நிலை என்மேல பாய்ந்து, என்னையே ஒண்ணும் செய்ய விடாம, அமுக்கி வச்சிருக்கு” – காகின் சொன்னார்: “சாயம் வாங்க காசில்ல... கடன் இனிமேல் வெளியே வாங்க முடியாத அளவுக்கு அதிகமாயிடுச்சு. இருந்தாலும், எனக்கு இன்னும் கொஞ்சம் சாயம் வேணும்...”
“சரி... தர்றேன்”- தான்குய் சொன்னார். அடுத்த நிமிடம் பின்னால் இருந்து ஒரு குரல்: “கடனைக் கொடுத்திட்டு இப்போ வேணும்ன்ற சாயத்தை வாங்கிட்டுப் போ!”
தான்குய்யின் மனைவியின் சப்தம் அது: “நாங்க என்ன இங்கே ஏதாவது தர்மஸ்தாபனமா வச்சு நடத்திக்கிட்டு இருக்கோம்! தான்குய்யோட கம்யூனிஸத்தை வச்சு வயிறை நெறைக்க முடியுமா? பணத்தை உடனே இங்கே வைக்கலைன்னா போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்திடுவேன்... ராஸ்கல்....”
காகின் அழகாக ஒரு சிரிப்பை வெளிப்படுத்தினார். தான்குய்யின் மனைவியின் கையைத் தொட்டு ஒரு முத்தம் தந்தார்: “என் சாந்திப்பி (சாக்ரட்டீஸின் மனைவி)... இந்த அதிகாலை வேளையில் நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா?”
காகின் தன்னைப் பார்க்கும்போதெல்லாம் “சாந்திப்பி... சாந்திப்பி” என்று அழைப்பது ஏன் என்று தான்குய்யின் மனைவிக்கே தெரியாது. ஆனால், அந்தப் பெயர் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன இருந்தாலும், தன்னை இந்த ஆள் புகழ்கிறான் அல்லவா?