வான்கா - Page 61
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“நான் அவங்களை அப்படியே ஒண்ணும் காப்பி அடிக்கல. அவுங்கக்கிட்ட இருந்து நான் கத்துக்கறேன்றதுதான் உண்மை!”
“அப்படிச் சொல்லாதே. அப்படியே அவங்களை ஈயடிச்சான் காப்பி மாதிரி பின்பற்றப் பாக்குறே. நீ வரைஞ்சிக்கிட்டு இருக்கிற கேன்வாஸைப் பாக்குறப்பவே, முந்தின நாள் நீ யார் கூட இருந்திருக்கேன்னு என்னால உறுதியா சொல்லிட முடியும்.”
“ஆனா... நான் வளர்ந்துக்கிட்டு இருக்கேன்றதை நீ ஒத்துக்கிறியா? இதோ... இந்த படங்களைப் பார். நிறங்கள் எவ்வளவு நேர்த்தியாக வந்திருக்கு தெரியுதா?”
“நீ ரொம்ப ரொம்ப கீழே போய்க்கிட்டு இருக்கே! ஒவ்வொரு படத்தை நீ வரையிறப்பவும், நீ வின்சென்ட் வான்காக்கிட்ட இருந்து விலகி விலகி போய்க்கிட்டு இருக்கே. உன்னோட வேலை சாதாரணமானது இல்ல. மிகவும் கஷ்டப்பட்டாக வேண்டிய நிலை. மத்தவங்களைப் பின்பற்றுற அளவுக்கு நீ திறமையே இல்லாத ஆளா என்ன? அந்த அளவிற்கு உன் மேல் உனக்கு நம்பிக்கை போயிடுச்சா என்ன? அவுங்கக்கிட்ட இருக்குற நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கோ. அதுதான் நல்லது!”
“தியோ, நான் சொல்றேன் இந்த படங்கள் எந்த அளவுக்கு உயர்வானதுன்னு...”
“நான் சொல்றேன் – இவை அப்படி ஒண்ணும் உயர்வானதா இல்ல... மகா மட்டமா இருக்குன்னு...”
ஒரு போரின் ஆரம்பமாக இருந்தது அது. ஒவ்வொரு நாளுமே தியோவிற்கும் வின்சென்ட்டிற்கும் சண்டைதான் – கருத்து மோதல் தான். தான் புதிதாக வரைந்திருக்கும் ஓவியங்களை தியோவிடம் காண்பிப்பான் வின்சென்ட். உண்மையைச் சொல்லாமல் இருந்தால், அவர்கள் இருவருக்குமிடையே மோதல் நீங்கி, அமைதியான சூழ்நிலை உண்டாகும் என்பதை நன்கு தெரிந்திருந்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் உண்மை எதுவோ அதைக் கொஞ்சமும் மறைக்காமல் முகத்துக்கு நேராகக் கூறுவான் தியோ.
“அடடா... படம் எவ்வளவு அழகா இருக்கு!” – வின்சென்ட் வரைந்த ஒரு படத்தைப் பார்த்து தியோ கூறினான்: “இந்த ஓவியத்திற்கு ‘உச்ச சங்கமம்’னு பேர் வச்சா நல்லா இருக்கும். இந்தப் படத்துல இருக்கிற ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியா பிரிச்சு பேர் கொடுத்தா புதுமையா இருக்கும்ன்றது என்னோட எண்ணம். இந்த மரம் காகின் வரையிற மாதிரி! அந்த மூலையில இருக்கிற பெண் துளுஸ் – லாத்ரெக்கோடது. நதியில வர்ற சூரிய வெளிச்சம் ஸிஸ்லிக்குச் சொந்தமானது. நிறம் மோனே பாணி! இலைகள் பிஸ்ஸாரோவுக்குச் சொந்தமானவை. களம் ஸெராவுடையது. மத்தியில் இருக்குற அந்த உருவம் மானேக்கு உரிமையானது!”
தியோ இப்படிச் சொன்னதை பலமாக எதிர்த்தான் வின்சென்ட். பயங்கரமான கோபத்துடன் எதிர்ப்புக்குரல் கொடுத்தான். அலுவலகத்தில் இருந்து களைப்புடன் வீடு திரும்பும் தியோவிற்கு மன அமைதி வேண்டுமென்றால் ஒரே ஒரு வழியே இருக்கிறது. தற்போது இருக்கும் இடத்திற்குப் பக்கத்திலேயே வேறொரு இடத்திற்கு மாற வேண்டியதுதான். அங்கே தனக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொண்டு, அதைப் பூட்டு போட்டு எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
“நான் மட்டும் இன்னும் கொஞ்சம் பலசாலியாக இருந்தா, உன்னை உதைச்சு துண்டு துண்டா ஆக்கிடுவேன்” – வின்சென்ட் ஒரு நாள் தியோவைப் பார்த்து இப்படிச் சொன்னான். அதற்கு தியோ சொன்னான்: “ஆனா, உனக்குத்தான் அது இல்லியே! அதனால என்னை அடிக்கணும்னா நீ காகினை வாடகைக்குக் கூப்பிட்டுட்டு வரணும். அந்த ஆளு அந்த வேலையை ஒழுங்கா செய்வார். என்னோட வேலை குபில்ஸில். உன்னோட வேலை படம் வரையிறது. காலையில நான் வேலைக்குப் போகணும். நீ என்னை ஒழுங்கா தூங்க விடலைன்னா, நான் இப்போ போலீஸைக் கூப்பிட வேண்டிய நிலை வரும்.”
¤ ¤ ¤
ஹென்ரி ரூஸோ தியோவை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார். அவனுடன் வின்சென்ட்டும் சென்றிருந்தான்.
நாற்பது வயதுவரை கஸ்டம்ஸ் இலாகாவில் வேலை பார்த்தவர் ரூஸோ. பிறகு பாரீஸுக்கு வந்து பேஸ்டில் என்ற இடத்திற்குப் பக்கத்தில் தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய ஒரு பகுதியில் அவர் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். ரூஸோ ஓவியங்கள் வரைவார். கவிதைகள் எழுதுவார். அவரே இசையமைக்கவும் செய்வார். குழந்தைகளுக்கு வயலின் சொல்லிக் கொடுப்பார். பியானோ கற்றுத் தருவார். ஒன்றிரண்டு பேர்களுக்கு ஓவியம் வரையவும் கற்றுத் தருவார்.
“அந்த ஆளு எப்படிப்பட்ட ஓவியங்களை வரைவார்?”- வின்சென்ட் தியோவிடம் கேட்டான்.
“ஆழ்ந்த கனவுகள்ல மட்டுமே வரக்கூடிய வனபூமிகளை அவர் ஓவியமாத் தீட்டுவார்” – தியோ சொன்னான்: “அவற்றில் ஒளிஞ்சு வாழுற விசித்திரமான மிருகங்கள்! அவற்றையும் வரைவார். காகின் அவரை எப்போதும் கேலி செய்வார்.”
“அவரோட ஓவியங்களைப் பத்தி உன்னோட அபிப்ராயம் என்ன?”
“எனக்குத் தெரியல. ஆளுங்க பொதுவா அவரை மந்தபுத்திக்காரர், பைத்தியம்னு சொல்லுவாங்க!”
“அவர் உண்மையிலேயே அப்படித்தானா?”
“சொல்லப்போனா, அவர் வயசான சின்னப்பிள்ளை மாதிரி. நீயே நேர்ல பார்த்தா, புரிஞ்சுக்குவே!”
விருந்துக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மேல்தட்டு வர்க்கத்தினர் – பணக்காரர்கள். கலையைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்றால் கூட எல்லாமே தெரியும் என்பது மாதிரி காட்டிக் கொண்டு நடித்துக் கொண்டிருப்பவர்கள். பார்ப்பதற்கு நவநாகரீக உடையணிந்து பந்தாவாக இருப்பார்கள். உடம்பில் ‘கும்’ என்று வாசனைத் திரவியங்கள் மணம் வீசிக் கொண்டிருக்கும்.
பெண்கள் ரூஸோவைச் சுற்றி நின்றிருந்தார்கள். பாரீஸில் கலை உலகில் பிரபலம் பெற்று ஒரு கலைஞன் விளங்கினால் அவனைச் சுற்றி நின்று – அவனை இடித்துக்கொண்டு அவர்கள் நிற்க வேண்டும்! சொந்தமாக ஒவ்வொரு ஓவியத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும். மற்ற பணக்காரர்களிடம் அதைக் காண்பிக்க வேண்டும். கலைமீது தங்களுக்கு எந்த அளவிற்கு பற்று இருக்கிறது என்பதை அவர்களுக்கு பறைசாற்றிக் காட்ட வேண்டும். இது ஒன்றுதான் அவர்களின் குறிக்கோள்.
இருபத்தைந்து ப்ராங்க், முப்பது ஃப்ராங்க் என்று ரூஸோவின் ஓவியங்களை அவர்கள் விலைக்கு வாங்கினார்கள். காப்பி குடிப்பதற்கு இடையில் ஒரே ஆரவாரம். மற்றொரு விருந்திற்கும் அவர்கள் போக வேண்டியதிருந்ததால், எல்லோரும் ஒரே நேரத்தில் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.
இடம் காலியானவுடன் ரூஸோவும், வின்சென்ட்டும் மட்டும் தனியாக இருந்தார்கள். பணத்தை எண்ணிக் கொண்டே ரூஸோ திரும்பிப் பார்த்தார். வின்சென்ட்டைப் பார்த்து, அவர் அசட்டுத்தனமான ஒரு சிரிப்பு சிரித்தார்.
“அந்த முகமூடியைக் கழற்றுங்க. நானும் ஒரு நாட்டுப்புறத்துல இருந்து வந்திருக்கிற ஓவியன்தான்” – வின்சென்ட் சொன்னான்.
ரூஸோ தன்னை நெருங்கி வந்த வின்சென்ட்டின் கைகளை இறுகப் பற்றினார். “நான் நீங்க வரைஞ்ச விவசாயிகளோட ஓவியங்களைப் பார்த்திருக்கேன். ரொம்பவும் பிரமாதமா இருந்தன. உங்க மேல எனக்கு பெரிய மதிப்பு இருக்கு.”
“நானும் உங்களோட ஓவியங்களை இப்போ பார்த்தேன். எனக்கு உண்மையிலேயே உங்க மேல பெரிய மரியாதை உண்டாகியிருக்கு!”