வான்கா - Page 56
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8856
“காகின். உனக்கு அவரைத் தெரியாதா?”
“இல்ல...”
“அப்படின்னா கட்டாயம் பழகிக்கணும். அவரோட `மார்ட்டினிக் பெண்’ன்ற ஓவியத்தை நீ பார்த்தது இல்லியா? காகின் கொஞ்ச நாளைக்கு முன்னாடி அங்கே தங்கியிருந்தார். பழைய காலத்துக்குத் திரும்பிப் போகணும்ன்றது அவரோட தணிக்க முடியாத தாகம். அருமையான ஓவியர். ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் நல்ல வருமானமுள்ள வேலையில இருந்தார். மனைவி, குழந்தைகள் எல்லாருமே இருக்காங்க. சும்மாபொழுது போக்குக்காக ஞாயிற்றுக் கிழமைகள்ல படம் வரைய உட்காருவார். ஒரு தடவை அவரோட ஓவியத்தைப் பார்த்த மானே ஆஹா ஓஹோன்னு பாராட்டினார். அவ்வளவுதான். தான் வேலை பார்த்த இடத்துல ராஜினாமாக் கடிதம் கொடுத்துட்டார். மனைவியையும், குழந்தைகளையும் வீட்டுல இருக்கச் சொன்னார். முழுக்க முழுக்க ஓவியம் வரையிறதுல மூழ்கி, இப்போ கால் காசுக்கு வழி இல்லாம ரோட்ல அலைஞ்சுக்கிட்டு இருக்காரு.”
“அவர் ஆளு எப்படி?”
“ரொம்ப கவனமாத்தான் யார்கிட்டயும் பழகுவார். நண்பர்களுக்கு நல்லா தண்ணி காட்டுவார். அது அவருக்கு ஒரு பொழுதுபோக்கு மாதிரி. மெளலின் ரோக், எலிஸீமோன் மார்த்ரி ஆகிய இடங்களைப் பார்க்கணுமா? உனக்கு பெண்களைப் பிடிக்குமா? அவங்க கூட படுக்கப் பிடிக்குமா? எனக்கு பெண்கள்னா ரொம்பப் பிடிக்கும். ஒரு ராத்திரி நாம ரெண்டு பேரும் கொண்டாடினா என்ன?”
“சரி...”
“அப்படியே செய்வோம். இப்போ கோர்மனோட இடத்துக்குத் திரும்புவோம். முதல்ல அந்தக் குப்பியைக் காலி பண்ணு. ஏய்... பாத்து நட... மேஜையைத் தட்டாமப் போ... வான்கா, நான் ஒரு பணக்காரன்டா. எங்கப்பா நான் கேக்குறப்பல்லாம் பணம் அனுப்பி வைப்பாரு. முடவனா பெத்ததுக்காக எங்கே நான் அந்த ஆளை கோபப்பட்டு திட்டிருவேனோன்னு பயந்தாரு. உனக்கு எப்படிப்பட்ட பெண்ணைப் பிடிக்கும்? கறுப்பு நிறத்துல இருப்பவள பிடிக்குமா? மாநிறமா இருந்தா பிடிக்குமா? நான் அங்கங்கே, நடக்குறதை நிறுத்திட்டு உனக்கு இடம் காண்பிச்சு தர்றது எதுக்குன்னு நினைக்கிறே? நம்ம ரெண்டு பேருக்கு இடையில ரகசியம் கிடையாது. நான் ஒரு பாழாய்ப்போன முடவனா ஆயிட்டதுனால... கொஞ்சம் சிந்திச்சுப் பார்த்தா நம்ம எல்லாருமே ஒரு விதத்துல இல்லாட்டி இன்னொரு விதத்துல முடவர்கள்தான்...”
¤ ¤ ¤
தியோ சாந்த சொரூபனாக இருந்தான். அவனது ஒவ்வொரு நடவடிக்கையும் நாகரீகமானதாக இருக்கும். ஒழுக்கமான – திட்டமான வாழ்க்கை. வின்சென்ட் பாரீஸுக்கு வந்ததுதான் வந்தான் ர்யூ லாவலில் உள்ள தியோவின் அறை அல்லோலகல்லோலப் பட்டது. வின்சென்ட் அறைக்குள் கண்டபடி நடப்பான். வழியில் ஏதாவது மரச் சாமான்கள் இருந்தால், அவற்றைக் காலால் உதைத்து தூக்கி எறிவான்.
கான்வாஸும், ப்ரஷ்களும், காலியான கலர் ட்யூப்களும் அறை முழுக்க – நினைத்த இடத்தில் எல்லாம் கிடக்கும். மேஜை மேலும், நாற்காலியிலும் அழுக்குத் துணிகளைக் கண்டபடி போட்டிருப்பான். பாத்திரங்களை உடைப்பான். அறை முழுக்க நிறங்களை உதறிவிடுவான். மொத்தத்தில் வின்சென்ட் இருந்தாலே அறை முழுக்க ஒரே அமர்க்களம்தான்.
“வின்சென்ட்... வின்சென்ட்...” – தியோ கத்துவான்: “இப்படித்தான் ஒரு காட்டு மனுஷன் மாதிரி நடக்குறதா?”
வின்சென்ட் கூண்டில் அடைக்கப்பட்ட புலியைப்போல அறைக்குள் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்தான். இடையில் கையை வாயில் வைத்துக் கடித்தான். தனக்குத்தானே மெல்ல முணுமுணுத்தான். “தியோ நான் ரொம்ப ரொம்ப பின்னாடி இருக்கேன். படிச்ச விஷயங்களை எப்படி மாத்துறது? கிட்டத்தட்ட இருபது படங்கள் வரைஞ்சேன். பழைய படங்கள்ல இருந்து இவை ஒண்ணும் பெரிசா வித்தியாசமா இல்ல. என்னால முடிஞ்சது அவ்வளவுதான். ஓவியக் கலையைப் பத்தி முழுமையா என்னால படிக்க முடியலியே! கடவுளே, இனி நான் என்ன செய்யிறது?”
“நீ ஒரு தனி கழுதை, வின்சென்ட்”- தியோ சொன்னான்: “ஓவியத்துல புரட்சிகரமான மாற்றங்களை எல்லாம் ஒரே வாரத்துல கொண்டு வந்துட முடியும்னு நினைக்கிறியா என்ன? வா... ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வருவோம்... இங்கே இன்னும் சில நிமிடங்கள் உன்னோட நின்னா நானே தகர்ந்து போயிடுவேன்.
¤ ¤ ¤
‘பத்தாய்ல் ரெஸ்ட்டாரெண்ட்’- அவ்வப்போது ஓவியர்கள் பலரும் சந்திக்கக் கூடிய ஒரு இடம். முன்னால் நான்கோ ஐந்தோ மேஜைகள். உள்ளே- விசாலமான இரண்டு அறைகள். மேடம் பத்தாய்ல் ஒரே பார்வையில் ஓவியர் யார் என்பதைக் கண்டுபிடித்து விடுவாள். அவளுக்கு மட்டும் தனியாக ஒரு அறை. மற்றவர்களுக்கு அடுத்த அறை.
தியோவும் வின்சென்ட்டும் ஒரு மேஜையின் இரு பக்கமும் அமர்ந்தார்கள். தியோவுக்கு முன்னால் ஒரு க்ளாஸ் க்யூமல், வின்சென்ட்டுக்கு முன்னால் ஒரு கிளாஸ் காய்ன் ட்ரியு (க்யூமல், காய்ன்ட்ரியு- போதை மது பானங்கள்) வைக்கப்பட்டன. அவர்களைச் சுற்றிலும் பாரீஸ் நகரத்தின் செழிப்பை வெளிப்படுத்தும் பலப் பல அம்சங்கள்.
கருப்பு உடையணிந்த துணிகள் சுத்தமாக்கும் பெண்கள், இஸ்திரி இட்ட துணிகளை கூடைகளில் வைத்த போய்க் கொண்டிருக்கிறார்கள். ஹெரிங் மீனை வாலில் தூக்கிப் பிடித்தவாறு ஒரு தொழிலாளி போய்க் கொண்டிருக்கிறான். கான்வாஸும், ஈஸலும் எடுத்துக்கொண்டு சில ஓவியர்கள் வேகமாகப் போகிறார்கள். கருப்பு தொப்பியும், கோட்டும் அணிந்த வியாபாரிகள். மாமிசத்தையும், ஒயினையும் பைக்குள் வைத்து வேகமாக நடந்து செல்லும், நீளமான பாவாடையும், சிறு தொப்பியும் அணிந்த பெண்கள்.
“எத்தனை அழகான காட்சிகள்!”- வின்சென்ட் சொன்னான்.
“ஆமா... பாரீஸ் இப்பத்தான் விழித்தெழுது”- தியோ சொன்னான்.
“அப்படியா? இந்த பாரீஸ் நகரம் இவ்வளவு அழகா இருக்குறதுக்குக் காரணம் என்ன தெரியுமா?”
“அது எனக்கும் தெரியாது. உண்மையிலேயே யாருக்குமே தெரியாத ஒரு ரகசியம் அது. ஒருவேளை ப்ரெஞ்ச் மக்களோட சுபாவம்தான் இதற்குக் காரணமாக இருக்கலாம். இங்கே சுதந்திரம் இருக்கு... சகிப்புத்தன்மை இருக்கு. வாழ்க்கையை இருகரம் நீட்டி வரவேற்கிற குணம் இருக்கு...”
“ஹலோ...!”- மேஜைக்கருகில் வந்து நின்ற ஒரு மனிதரைப் பார்த்த தியோ சொன்னான்: “குட் ஈவினிங் பால். சவுக்கியம்தானே?”
“நல்லா இருக்கேன் தியோ, நன்றி!”
“இது என்னோட அண்ணன் வின்சென்ட். வின்சென்ட், இது பால் காகின். இருங்க பால், உங்களுக்கு எப்பவும் பிரியமான அப்ஸிந்த் (இது ஒரு போதை மதுபானம்) கொஞ்சம் குடிக்கலாம்ல?”
காகின் நாக்கு நுனியை அப்ஸிந்த் இருக்கும் கிளாஸுக்குள் முக்கி வாயின் உட்பகுதியை, மதுவால் நனைத்தார். தொடர்ந்து வின்சென்ட் பக்கம் திரும்பி கேட்டார்: “பாரீஸ் பிடிச்சிருக்கா, ம்ஸ்யெ வான்கா?”
“எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு!”
“சிலருக்கு இந்த ஊர் ஒரு பெரிய குப்பைத் தொட்டின்ற நினைப்பு. நாகரீகம்தான் அதுல போடுற குப்பை!”