வான்கா - Page 53
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
மோனே இருண்ட நிறம் கொண்டு வரைந்திருந்த ஒரு ஓவியம், ஹாலண்ட் மியூஸியத்தில் பாதுகாத்து வைத்திருந்த பழைய ஓவியங்களைவிட பத்து மடங்கு சிறப்பாகவும், தெளிவானதாகவும் இருந்தது. ப்ரஷ் கொண்டு வரைந்த ஒவ்வொருவரைவும் இயற்கையின் தாளத்திற்கேற்ப இருந்தது. ‘பளீச்’ என்று தெரியும் வர்ணங்களைக் கொண்டு பகட்டாகத் தோற்றம் தந்த அந்த ஓவியங்களையே வைத்த கண் எடுக்காது பார்த்தான் வின்சென்ட்.
மற்றொரு ஓவியம்: கம்பளி ஆடையணிந்த ஒரு மனிதன் மிகவும் கவனத்துடன் படகை ஓட்டுகிறான். மாலை நேரம் தந்த ஆனந்தம் அவன் முகத்தில் முழுமையாகத் தெரிகிறது. பக்கத்தில் அவனின் மனைவி அமர்ந்திருக்கிறாள். வின்சென்ட் படத்தை வரைந்த ஓவியரின் பெயரைப் பார்த்தான். மோனேயாக இருக்குமா? ஆனால், முதல் படத்தைவிட இது வேறு மாதிரி இருக்கிறது! மீண்டும் பார்த்தான். இது மோனே வரைந்ததல்ல. கையெழுத்தைக் கூர்ந்து படித்தான்: ‘மானே’ என்றிருந்தது. அப்போது வின்சென்ட்டிற்கு ஒரு கதை ஞாபகத்தில் வந்தது. மானே வரைந்த ‘புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்’ ‘ஒலிம்பியா’ ஆகிய ஓவியங்களைக் கிழித்தெறிய ஒரு ஜனக்கூட்டம் முயல, அதைத் தடுக்க போலீஸ்காரர்கள் பயங்கரமாகப் போராட... இந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்த வின்சென்ட்டிற்கு மானே மீது ஒரு தணியாத காதலே பிறந்துவிட்டது.
மானேயின் ஓவியங்களைப் பார்த்தபோது வின்சென்ட்டிற்கு ஸோலாவின் புத்தகங்கள்தான் ஞாபகத்தில் வந்தன. ஸோலாவின் புத்தகங்களில் காணப்படும் அதே உண்மையைப் பற்றிய தேடல், அதே ஆழ்ந்து இறங்கிச் செல்லும் உள்பார்வை, இயல்பான போக்குதான் அழகு என்ற நம்பிக்கை! வின்சென்ட் ஓவியத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் கூர்ந்து அலசினான். வர்ணங்களை நேர்த்தியுடன் ஓவியத்தில் கலந்திருக்கிறார். பல விஷயங்களைச் சொல்லாமல் சூசகமாகச் சொல்லிவிடும் சூரத்தனம் ஓவியத்தில் தெரிகிறது. நிறங்களும், கோடுகளும், நிழலும், வெளிச்சமும் கோடு போட்டு பிரிக்கப்படாமல் பரஸ்பரம் ஒன்றோடொன்று விரும்பி கலக்கும் விந்தையைக் கண்டு அவனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
“இயற்கையுடன் அவை இரண்டறக் கலப்பது ஓவியத்திலயும் அப்படியே நடக்குது. இதுதான் ஆச்சரியம்!”- வின்சென்ட் தனக்குள் கூறிக் கொண்டான்:
ஓவியங்களின் முன்னால் அமர்ந்து அவற்றின் மேன்மைத்தனம் தனக்குள்ளும் நுழைய முழுமையாக அனுமதித்தான் வின்சென்ட். இந்த ஓவியங்களில் நிறைந்து நின்ற வெட்டவெளியும் சூழ்நிலையும்தான் அவற்றிற்கு உன்னத ஸ்தானம் தருபவை என்பதையும் அவன் உணர்ந்தான். பழைய மரபு ரீதியான ஓவியர்கள் சூழ்நிலையை ஓவியத்தில் கொண்டு வரவே மாட்டார்கள்.
ஆனால், இந்தப் புதிய ஓவியர்கள்! அவர்கள் வெளிச்சமும், காற்றும், சூரியனும் உள்ள சூழ்நிலையைக் கண்டவர்களாக இருக்கிறார்கள். அதன் ஒவ்வொரு அணுவிலும் துடித்து நிற்கும் வாழ்க்கையின் நீரோட்டத்தை அவர்கள் பார்க்கிறார்கள். ஓவியக் கலையைப் பொறுத்தவரை இனி ஒருபோதும் பழமையை நோக்கி அவர்கள் போக வேண்டிய அவசியமே இல்லை. பழைய பாணியைக் கடைப்பிடித்த ஓவியர்கள் காட்சிகளை அப்படியே ஓவியமாகத் தீட்டினார்கள் என்று சொல்லலாம். ஆனால், தங்களுக்கென்று இருக்கின்ற ஒரு தனிப்பார்வையுடன், ஒவ்வொன்றையும் பார்த்து வெளிச்சத்தின், வாழ்க்கை சக்தியின் ஒவ்வொரு அணுவையும் தங்களின் படைப்புகளில் உயிரோட்டத்துடன் படைக்க இந்தப் புதிய மனம் கொண்ட இளம் ஓவியர்களால் மட்டுமே முடியும். இவர்கள் சக்தி வாய்ந்த புது பாணியை ஓவியக் கலையில் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
இந்தப் புதிய கலைஞர்கள் கை வண்ணத்தில் மனம் லயித்து தன்னை மறந்து நின்று விட்ட வின்சென்ட், படிகளில் இறங்குகிற போது இலேசாக கால் இடறினான். தியோ புன்சிரிப்பு தவழ கீழே நின்றிருந்தான். வின்சென்ட்டின் முகத்தை உற்று நோக்கிய தியோ கேட்டான்: “என்ன வின்சென்ட், எப்படி இருந்துச்சு?”
“ஓ... என் அன்பு தியோ...”- என்ன சொல்வது என்று தெரியாமல் வார்த்தைகள் தேடி அலைந்தான் வின்சென்ட். ஒன்றுமே பேசாமல், மேல் நோக்கி விழிகளை உயர்த்திக் காட்டிய அவன், அடுத்த நிமிடம் கேலரியை விட்டு வெளியே வந்தான்.
சாயங்காலம் தங்கியிருந்த இடத்திற்கு தியோ திரும்பி வந்தபோது, தான் வரைந்திருந்த ஓவியங்களை தரையில் சிதறப் போட்டவாறு, அவற்றின் முன் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தான் வின்சென்ட். கேலரியை விட்டு வெளியே வந்தபிறகு, தன்னைத்தானே விமர்சனத்திற்குள்ளாக்கிப் பார்த்தான் வின்சென்ட். கடவுளே... இதெல்லாம் என்ன படைப்புகள்! உயிரோட்டமே இல்லாத பிணத்திற்கு நிகரான ஓவியங்கள் இவை! கடந்த நூற்றாண்டில் இருந்த ஓவியக்கலை பாணியைப் பின்பற்றி தான் ஓவியம் வரைந்தது எத்தனை முட்டாள்தனம் என்பதைப் புரிந்து கொண்டான் வின்சென்ட். இங்கு வந்தபிறகுதான் அவனுக்கே இது தெரிய வந்தது.
தியோ வின்சென்ட்டுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். அறையில் இருள் சூழ்ந்தது.
“வின்சென்ட், நீ என்ன நினைக்கிறேன்றதை என்னால புரிஞ்சுக்க முடியுது. அங்கே இருந்த ஓவியங்களைப் பார்த்து நீ ஒரு மாதிரி ஆயிட்டே! இல்லியா? அவை எவ்வளவு உன்னதமானவை! கம்பீரமானவை! பழைய ஓவியங்களை, சொல்லப் போனா நாங்க வெளியே எறியிறோம்!”
“தியோ, இதை ஏன் என்கிட்ட நீ முன்னாடி சொல்லல?”
தம்பியின் கண்களை உற்று நோக்கிய வின்சென்ட் கேட்டான்: “நான் ஏன் இதையெல்லாம் தெரியாம இருந்திருக்கேன்? இதுவரை நான் ஏன் இங்கே வரல? வாழ்க்கையில அறு வருடங்களை தேவையில்லாம வீணாக்கிட்டேனே!”
“நீ ஒண்ணும் வீணாக்கலியே! முட்டாள்தனமா பேசாதே. நீ உன் தொழில்ல மூழ்கிப் போய்த்தானே இருந்தே! நீ ஓவியம் வரையிறது வின்சென்ட் வான்கா வரையிறதைப் போல... இன்னொருத்தர் வரையிறதைப் போல இல்ல... நீ உன்னோட கலையில பக்குவம் அடையிறதுக்கு முன்னாடி இங்கே வந்திருந்தேன்னா, என்ன நடந்திருக்கும்? பாரீஸ்ல உள்ள ஓவியர்கள் வரையிற பாணியில நீ உன்னை இழந்திருப்பே! இதுதான் உண்மையில நடந்திருக்கும்.”
“ஆனா, இப்போ நான் என்ன செய்றது? இந்தக் குப்பைகளை ஒரு நிமிடம் பாரேன்”- ஒரு ஓவியத்தை காலால் எத்தியவாறு வின்சென்ட் புலம்பினான்: “நான் வெறுத்துப் போயிட்டேன், தியோ. இந்த ஓவியங்கள் எதுக்குமே லாயக்கு இல்லாம போச்சு!”
“என்ன செய்யிறதுன்னு நீ என்கிட்ட கேக்குறியா? சரி... நான் சொல்லித்தர்றேன். இம்ப்ரஸனிஸ்டுகளிடமிருந்து வெளிச்சத்தையும், நிறத்தையும் எப்படி உபயோகப்படுத்தணும்ன்றதை தெரிஞ்சுக்கோ... அதை... அதை மட்டும்... நீ அவங்கக்கிட்ட இருந்து கடன் வாங்கிக்கலாம். ஆனா, அவங்களைப் பின்பற்றக் கூடாது. உன்ன நீ இழக்க பாரீஸை எந்தக் காலத்திலும் அனுமதிக்காதே!”
“எல்லாத்தையும் புதுசா படிக்க வேண்டியது இருக்கே, தியோ!”
“வெளிச்சம், நிறம்- இந்த ரெண்டையும் விட்டுட்டு பார்த்தா நீ செஞ்சது எல்லாமே சரிதான். போரினேஜில் ஓவியம் வரையிறதுக்காக முதன்முதலா நீ பென்சிலைக் கையில எடுத்த நாள் முதலே நீ ஒரு இம்ப்ரஸனிஸ்ட்தான்.