வான்கா - Page 50
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
தான் எடுத்திருக்கும தீர்மானத்தை வின்சென்ட் தியோவிற்கு எழுத, தியோ வண்டிச் செலவுக்கு கொஞ்சம் அதிகமாகவே பணம் அனுப்பி வைத்தான். கிறிஸ்டினை விட்டுப் பிரிந்து போவது என்பது வின்சென்ட்டைப் பொறுத்தவரை மிகவும் கஷ்டமான ஒரு காரியமாக இருந்தது. எல்லா மாதமும் கட்டாயம் பணம் அனுப்பி வைப்பதாக அவளுக்கு வாக்குறுதி தந்தான் அவன்.
தன் தந்தை முன்பு சொன்ன ஒரு விஷயம் வின்சென்ட்டின் ஞாபகத்தில் வந்தது. குடும்பம் இப்போது இருப்பது ந்யூனனில். ப்ரபான்டை அடுத்து இருக்கும் ஒரு சிறு கிராமம் அது. அங்கே மொத்தம் இருப்பவர்களே நூறு பேர்கள்தாம். எக்ஸிமோக்களின் இக்ளூ மாதிரி இருக்கும் சிறு சர்ச். அதைச் சுற்றிலும் பூக்கள் பூத்திருக்கும் சிறு மைதானம். இங்குமங்குமாய் மண் குவியல்களும், மரச்சிலுவைகளும், பார்ப்பதற்கு மிக மிக அழகான கிராமம் என்று தியோடரஸ் கூறியிருந்தார்.
ந்யூனனுக்குப் போகலாம் என்று தீர்மானித்தான் வின்சென்ட். இதன் மூலம் தாயின் அருகில் சில நாட்கள் இருக்கலாம் என்ற ஆசையே காரணம். இப்போது அவனுக்குக் கட்டாயம் தேவை மன சாந்தி.
கிறிஸ்டினும் குழந்தைகளும் வின்சென்ட்டை வழியனுப்பி வைக்க ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் பேசலாம் என்றால் வார்த்தைகளே அவனுக்கு வரவில்லை. வண்டி மெல்ல சூரிய வெளிச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது வின்சென்ட் பின்னால் திரும்பிப் பார்த்தான். கிறிஸ்டின் ஸ்டேஷனை மூடி இருந்த இருட்டில் மறைந்து போயிருந்தாள்.
¤ ¤ ¤
ந்யூனன்
ந்யூனனில் இருந்த வீடு இரண்டு மாடிகளைக் கொண்டிருந்தது. வீட்டுக்குப் பின்னால் ஒரு பெரிய தோட்டம். எம் மரங்களுக்கும் ஓக் மரங்களுக்குமிடையில் பூச்செடிகள். ஒரு பக்கம் ஒரு சிறிய குளம்.
காலையில் படுக்கையை விட்டு எழும்போது, சூரியனின் கதிர்கள் சர்ச் கோபுரத்தின் மீது பட்டு, பக்கத்தில் இருக்கும் குளத்தின் நீரில் விழுந்து, அங்கு ஒரு பரவச சூழ்நிலையை உண்டாக்கி இருக்கும். சூரியனின் கதிர்கள் நீரில் பட்டு பல்வேறு நிறங்கள் அங்கு தெரியும். மாலை நேரம் வந்துவிட்டால் இந்த நிறங்கள் அத்தனையும், கருமை சேர்ந்து இன்னும் கொஞ்சம் அடர்த்தியான வர்ணங்களாகும். நீரின் மேற்பரப்பில் எண்ணெய்ப் படலம் போல வெளிச்சம் படர்வதையும், நேரம் செல்லச் செல்ல இருட்டில் அது மறைந்து போவதையும் பார்த்துக் கொண்டே இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தான் வின்சென்ட்.
ந்யூனனில் பெரும்பாலானவர்கள் நெசவுத் தொழில் செய்பவர்கள். போரினேஜில் இருந்த சுரங்கத் தொழிலாளர்களைப் போல அவர்கள் முரட்டு குணம் படைத்தவர்கள் இல்லை. வண்டி இழுக்கும் குதிரைகளைப் போல எந்தவிதக் குறைபாடுகளும் சொல்லாமல், வாழ்க்கையை உள்ளபடியே ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த கிராமத்து மக்கள் வாழ்க்கையில் எதற்காகவும் ஆசைப்படாமல் உள்ளத்தில் நிறைவு கண்டு வாழும் அப்பாவி மக்கள் என்பதுதான் உண்மை.
வின்சென்ட் இந்த மக்களுடன் மிகவும் நெருங்கிப் பழகினான். மில்லேயைப் போல இந்த கிராமத்து மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்தான். அவர்களுடைய வாழ்க்கையை நன்றாகத் தெரிந்து, அவர்களுடைய பழக்க வழக்கங்களையும், அன்றாட நடவடிக்கைகளையும், வாழ்க்கை முறையையும் ஓவியங்களாகத் தீட்டத் தீர்மானித்தான் அவன். உருவங்களை வரைவதில் முன்பு ஆர்வம் காட்டியிருந்த வின்சென்ட்டின் மனதில் இப்போது வர்ணங்களின் மேல் அளவற்ற ஈடுபாடு வந்திருந்தது. ஆகாயத்தின் நீல நிறம், பாதி விளைந்த நிலையில் இருக்கும் சோள வயல்களின் பொன் நிறம், வெயில் பட்டு வெளிறிப் போயிருக்கும் விவசாய வேலைபார்க்கும் பெண்கள், அவர்களின் நீல ஆடைகளும், தலையில் அணிந்திருக்கும் கறுப்பு தொப்பிகளும்! இப்படி பலவற்றையும் படமாக வரைந்தான் வின்சென்ட். கை இடுக்கில் கான்வாஸை சுருட்டி வைத்துக் கொண்டு, ஈஸலை தோளில் சுமந்தவாறு பாதையில் நடந்து செல்லும் வின்சென்ட்டையே வியப்புடன் பார்ப்பார்கள் கிராமத்து பெண்கள்.
¤ ¤ ¤
கொஞ்சமும் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில்தான் வின்சென்ட்டின் வாழ்க்கையில் மார்கோ பெகமான் கால் வைத்தது. ஒருநாள் வயலில் அமர்ந்து ஓவியம் வரைந்து கொண்டிருந்தான் வின்சென்ட். அப்போது தன்னை யாரோ நோக்கிக் கொண்டிருப்பதை வின்சென்ட் உணர்ந்தான். சிறிது நேரம் சென்ற பிறகுதான் தெரிந்தது- அது பெகமான் குடும்பத்தின் ஐந்து திருமணமாகாத சகோதரிகளில் ஒருவளான மார்கோ என்று.
மத்திய வயதை எட்டியிருந்த மார்கோ அன்புக்காக நித்தமும் ஏங்கிக் கொண்டிருந்தாள். தன் மீது யாதாவது அன்பைக் காட்ட மாட்டார்களா என்று அவள் மனம் சதா நேரமும் தவித்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் படம் வரைந்து கொண்டிருந்த வின்சென்ட்டை அவள் பார்த்தது. இரும்பின் மேல் ஈர்க்கப்படும் காந்தத்தைப் போல எப்படியோ அவள் வின்சென்ட்டின் பால் ஈர்க்கப்பட்டாள்.
வின்சென்ட்டுடன் அவள் கொண்ட நெருக்கமான உணர்வு, வறண்டு போய் பாலைவனமென இருந்த அவள் மனதில் பசுமை எண்ணங்களை கிளர்ந்தெழச் செய்து, அவள் வாழ்க்கையில் புது வசந்தத்தை உண்டாக்கியது. புதிதாகக் கிடைத்த இந்த உறவில், துவண்டு கிடந்த அவள் மனம் புத்துணர்ச்சி பெற்று பூத்துக் குலுங்கியது. அந்த காதல் பெருவெள்ளத்தில், சோம்பிக் கிடந்த அவள் அழகு மெருகேறி புது வனப்பைக் காட்டியது.
அவள் மீது சொல்லப்போனால் வின்சென்ட்டிற்கு அனுதாபம்தான் உண்டானது. காதல் கொஞ்சம் கூட அவன் மனதில் எழவில்லை இந்த விஷயம் மார்கோவிற்கும் நன்றாகத் தெரியும். இருந்தாலும், சுவையான உணவு தயாரித்துக் கொடுப்பதிலும், வின்சென்ட் விருப்பப்படும் புத்தகங்களைப் பரிசுப் பொருட்களாகக் கொண்டு வந்து கொடுப்பதிலும் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தாள் மார்கோ. பைபிளில் வரும் ரூத்தின் வாசகங்கள் மூலம் தன் காதலை வின்சென்ட்டிடம் வெளிப்படுத்தினாள் மார்கோ: ‘நீ போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீ வசிக்கும் இடத்தில் நானும் வசிப்பேன்!’
இருந்தாலும், இந்த உறவு அதிக நாட்கள் நீடிக்கவில்லை. மார்கோவின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இந்த உறவு தெரியவந்தபோது, இதற்கு அவர்கள் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தார்கள். மார்கோவின் தற்கொலையில்தான் இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.
¤ ¤ ¤
நிறங்களை வைத்து சோதனை செய்து பார்ப்பதை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தான் வின்சென்ட். ‘பிட்டுமென்’ சேர்த்தால் வர்ணங்களுக்கு மெருகும், மென்மையும் கூடும் என்பதைக் காலப்போக்கில் அவன் தெரிந்து கொண்டான்.
தியோவிற்கு சம்பளம் அதிகம் கிடைக்கக்கூடிய பெரிய ஒரு வேலை கிடைத்தது. ஆனால், அவன் அதை ஒத்துக் கொள்ளவில்லை. ஒருநாள் குபில்ஸில் இம்ப்ரஸனிஸ்ட்டுகளின் ஒரு கண்காட்சியை தான் எப்படியும் அனுமதி பெற்று நடத்தியே தீர்வது என்பதில் மிகவும் நம்பிக்கையுடனும், தீர்மானத்துடனும் இருந்தான் தியோ.