வான்கா - Page 45
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8811
கண்ட கண்ட வியாபாரிகளோட இல்லாட்டி புதுமை பண்றோம்னு சொல்லிக்கிட்டு திரியிற பேர்வழிகளோட தாளத்துக்கெல்லாம் நீ ஆடிக்கிட்டு இருக்காதே. உன்னோட ஓவியத்தை விரும்புறவங்க, உன் பின்னாடி வருவாங்க... காலப் போக்குல நீ நிச்சயம் பெரிய ஆளா வருவே...”
கீழே கிழிந்து கிடந்த பேப்பர் துண்டுகளையே வெறித்துப் பார்த்த வின்சென்ட் தனக்குள் கூறினாள்: “நன்றி... நன்றி... எனக்கு இது தேவைதான்.”
¤ ¤ ¤
கிறிஸ்டின் வின்சென்ட்டின் அறைக்கு வந்தாள். வின்சென்ட் இரண்டு பேருக்கும் உணவு தயாரிக்க முற்பட்டபோது அவள் சொன்னாள்:
“அங்கே போய் உக்காரு. உனக்கு சமையலைப் பத்தி என்ன தெரியும்? அது பொம்பளைங்களோட வேலை ஆச்சே!”
அடுப்பில் இருந்த நெருப்பு, பக்கத்தில் நின்றிருந்த கிறிஸ்டினின் முகத்திற்கு ஒரு புதுவிதப் பிரகாசத்தைக் கொடுத்தது. உருளைக் கிழங்கு நறுக்கிக் கொண்டிருந்த அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்தான் வின்சென்ட். எங்கோ இருந்து வந்த ஒரு பெண் தனக்காக அன்பு மேலோங்க சமையல் பண்ணிக் கொண்டிருக்கிறாள் என்பதை நினைத்துப் பார்த்தபோது வின்சென்ட்டிற்கு ஒருவிதத்தில் அது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது. தன்னை நேசிக்கக் கூடிய ஒரு பெண் கிடைப்பாளா என்று எத்தனை முறை அவன் முயற்சி பண்ணி பார்த்திருக்கிறான்! அது இப்போதுதான் கை கூடி வந்திருக்கிறது என்று மனதிற்குள் எண்ணிய வின்சென்ட், ஒருவித திருப்தியுடன் நாற்காலியில் பின்னோக்கி சாய்ந்தான். இன்னும் பின்னால் அவன் சாய முயல, கிறிஸ்டின் ஓடி வந்தாள். “ஏய் கழுதை... நேரா உட்காரு. கழுத்து ஒடிஞ்சிடப் போகுது”- கிறிஸ்டின் சொன்னாள்.
அவ்வளவுதான்-
வின்சென்ட் சிரித்துவிட்டான். அவன் பழகிய பெண்கள் அனைவருமே... சகோதரிகளாகட்டும், அம்மாவாகட்டும், பெரியம்மா, சித்தி ஆகட்டும்- எல்லோருமே ஒரே மாதிரி அவனைப் பார்த்து சொல்வார்கள்: ‘வின்சென்ட் நேரா உட்காரு. கழுத்து ஒடிஞ்சிடப் போகுது.’
“சரி... ஸீன்”- கிறிஸ்டினை வின்சென்ட் ‘ஸீன்’ என்றுதான் அழைத்தான். “நான் நேரா உட்கார்றேன்.”
கிறிஸ்டின் அந்தப் பக்கம் திரும்பியவுடன் வின்சென்ட் முன்பு உட்கார்ந்த மாதிரி சாய்ந்து உட்கார்ந்தான். மனம் கவலை இல்லாமல் திருப்தியுடன் இருந்தது. இங்கே இரண்டு ஆத்மாக்கள், எந்தவித நடிப்பும் இல்லாமல் உண்மையான அன்புடன் நெருங்கி இருக்கின்றன. ஒருவரையொருவர் ஞாபகப்படுத்த முயற்சிக்க வேண்டியதில்லை. ஒருவர் மற்றவர் மீது குற்றம் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. இரண்டு ஆதரவில்லாதவர்கள் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். அன்று இரவு வின்சென்ட்டின் அறையில்தான் ஸீன் உறங்கினாள்.
¤ ¤ ¤
தெர்ஸ்டீக், வின்சென்ட்டின் ஓவியங்களை அவ்வளவு சீக்கிரம் அங்கீகரிக்கத் தயாராக இல்லை. மவ், ஓவியம் வரைவதில் மிகவும் பிஸியாக இருந்தான். வின்சென்ட்டுக்குத் தேவையான பாசத்தையும், பரிவையும் அளித்துக் கொண்டிருந்தவள் கிறிஸ்டின்தான்.
வீட்டு வேலைளை முழுக்க முழுக்க கிறிஸ்டின்தான் பார்த்துக் கொண்டாள். அதற்காக ரொம்பவும் சுத்தமாகவும், நாகரீகமாகவும் அவள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள் என்று கூறி விடுவதற்கில்லை. பல வருடங்கள் சுகாதாரமில்லாத சூழ்நிலையில் –அழுக்குப் பிடித்து வாழ்ந்த அவள் திடீரென்று ஒரு நாள் தன்னை முழுமையாக மாற்றிக் கொள்ள முடியுமா என்ன?
கிறிஸ்டினுக்குக் கோபம் வந்தால், கண் மண்ணே தெரியாது. அவளுக்குப் பிடிக்காதது ஏதாவது நடந்துவிட்டால் அவ்வளவுதான்- அவளுடைய வாயில் இருந்து புறப்பட்டு வரும் கெட்ட வார்த்தைகளைக் கேட்க வேண்டுமே! ஆனால், வின்சென்ட் அவள் மீது உண்மையாகவே பரிதாபப்பட்டான். ‘பாவம் அவள்’ என்று பச்சாதாபப்பட்டான். தன்னைப் போலவே அவளும் கொஞ்சம் முரட்டுத்தனமான இயல்பைக் கொண்டவள் என்றெண்ணி அவள் போக்கைச் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டான் வின்சென்ட்.
அதேபோல் கிறிஸ்டினுக்கும் வின்சென்ட் மீது ஒரு பரிதாப உணர்ச்சி இருந்தது. தான் வரைந்து கொண்டிருக்கும் படம் சரியாக வராமல் போனாலோ, அவள் போஸ் கொடுப்பது சரியாக இல்லாமல் இருந்தாலோ கோபம் தலைக்கேறி கத்த ஆரம்பித்து விடுவான் வின்சென்ட். அறையின் சுவரே ஆடிப்போகிற அளவுக்கு கூச்சல் போடுவான். அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு வார்த்தை கூட வாய் திறக்காமல் அமைதியாக நின்றிருப்பாள் கிறிஸ்டின். நல்ல வேளை- இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் இதுவரை கோபம் வந்ததில்லை.
கிறிஸ்டினின் உருவத்தைப் பல தடவை வரைந்த பிறகு, அவளை மாடலாக்கி சரியான ஒரு படம் வரைய மனப்பூர்வமாக ஆசைப்பட்டான் வின்சென்ட். மிச்லெயின் ஒரு வாசகம்தான் அப்படி அவன் ஆசைப்படக் காரணமாக அமைந்தது. அடுப்புக்குப் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தடி மேல் கிறிஸ்டினை உட்காரச் சொன்னான் வின்சென்ட். அவளின் கைகளை முழங்கால் முட்டில் இருக்கச் செய்து கைகள்மேல் முகத்தைத் தாழ்த்தி, அடர்த்தி குறைவான தலைமுடியால் பின்பாகத்தை பாதிவரை மூடச்செய்து, உருண்டு திரண்டிருந்த முலைகளை கால்களில் படுமாறு செய்து, அவளின் கால்களை நிலத்தில் படாமல் இருக்க வைத்து, பின்புலத்தின் இயற்கைக் காட்சிகள் அழகு செய்ய, அவளை ஓவியமாக வரைந்தான் வின்சென்ட். ஓவியத்திற்கு ‘துக்கம்’ என்ற பெயரையும் சூட்டினான். ஓவியத்திற்குக் கீழே மிச்லெயின் வாசகத்தை எழுதினான்: “என்ன காரணத்தால், ஒருத்தி மட்டும் இந்த உலகத்தில் இந்த அளவிற்கு விரக்தி அடைந்து போனாள்?”
¤ ¤ ¤
ஓவியம் வரையத் தொடங்கிவிட்டால், மவ் இன்னொரு உலகத்திற்குப் போய்விடுவான். யாரையும் அதற்குப் பிறகு அவன கவனிக்கமாட்டான். யார் எது சொன்னாலும் அவன் காதுகளில் அது விழாது. யாராவது படம் வரையும் போது தொந்தரவு செய்வது மாதிரி தெரிந்தால் பயங்கரமாகக் கோபம் கொண்டு கத்துவான்.
“உனக்கு என்ன வேணும்?”- வரைந்து கொண்டிருந்த ஓவியத்தை ஒரு துணியால் மூடியவாறு மவ் வின்சென்ட்டிடம் கேட்டான்:
“நான் கொஞ்சம் வாட்டர் கலர்கொண்டு வரைஞ்ச ஓவியங்கள் கொண்டு வந்திருக்கேன். எனக்காக சில நிமிடங்கள் செலவழிக்கக் கூடாதா?”
தூரிகையைக் கழுவியவாறு மவ் திரும்பிப் பார்த்தான்.
“எந்த நேரத்துல இதைப் பார்க்க எனக்கு நேரம் இருக்கும்னு சொல்ல முடியாது. தெய்வத்துக்கிட்ட வேண்டிக்கிட்டு இன்னொரு நாளைக்கு வா.”
மறுநாள் சென்றபோது, மவ்வின் நண்பன் வெய்ஸன் ப்ரூக் அங்கே உட்கார்ந்திருந்தான். நரம்புகள் புடைத்துப்போன நிலையில் அமர்ந்திருந்தான் மவ். வின்சென்ட்டைப் பார்த்ததும் என்ன நினைத்தானோ, அவனைக் கேலி செய்ய ஆரம்பித்துவிட்டான் மவ்.
“இவனைப் பாத்தியா? இவன் எப்பவும் இப்படித்தான் பார்ப்பான்....”
மவ் எப்போதுமே இன்னொருத்தர் மாதிரி நடித்துக் காட்டுவதில் படுகில்லாடி. வின்சென்ட்டைப் போல கண்களைச் சுருக்கிக் கொண்டு தாடியை முன்னால் நீட்டிக் கொண்டு வெய்ஸன் ப்ரூக்கிற்கு முன்னால் அவன் நடந்தான். “இங்க பாரு...