வான்கா - Page 40
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
கே அருகில் இருந்தபோது வின்சென்ட் வரைந்த ஓவியங்கள், அதற்கு முன்பு அவன் வரைந்த ஓவியங்களைவிட நன்றாக இருந்தன. அவள் பக்கத்தில் இருந்தது, தன் உணர்வின் வெளிப்பாட்டிற்கு உந்து சக்தியாக இருந்ததை மனப்பூர்வமாக உணர்ந்தான் வின்சென்ட். அந்த ஓவியங்களில் சிலவற்றைத் தேர்வு செய்து தியோவிற்கு அவன் அனுப்பினான்.
வின்சென்ட் இப்போது கூட இந்த விஷயத்தில் நம்பிக்கையை இழந்து விடவில்லை. அவளை நேரில் பார்த்து, தான் அவள் மீது கொண்டிருக்கும் காதல் எந்த அளவிற்கு ஆழமானது என்பதை இன்னொரு முறை அவள் உணரும் விதத்தில் வெளிப்படுத்தும் பட்சம், ‘இல்ல... நான் உன்னைக் காதலிக்கல’ என்ற அவளின் வாயை ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொல்ல வைக்க முடியும் என்று நிச்சயமாக நம்பினான் வின்சென்ட்.
¤ ¤ ¤
வின்சென்ட் ஸ்ட்ரிக்கரின் வீட்டு வாசல் படியில் கால் வைத்தான். மணியை அடித்தான். வாசலில் வந்து எட்டிப் பார்த்தது ஒரு வேலைக்காரி.
“ரெவ. ஸ்ட்ரிக்கர் வீட்ல இருக்காரா?”- வின்சென்ட் கேட்டான்.
“இல்ல... வெளியே போயிருக்கார்”- இப்படித்தான் பதில் சொல்ல வேண்டும் என்று அவளுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
உள்ளே பேச்சு குரல் கேட்டது. வின்சென்ட் அந்த வேலைக்காரியைச் சற்று தள்ளி நிற்கச் சொன்னான்: “கொஞ்சம் வழியை விட்டு விலகி நில்லு.”
அவள் வின்சென்ட்டிற்குப் பின்னால் போய் அவனை உள்ளே போக விடாமல் தடுத்தாள்: “அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. நீங்க உள்ளே போக முடியாது.”
வின்சென்ட் வெளியே இருந்த ஹாலைத் தாண்டி சாப்பாட்டு அறையை நோக்கி நடந்தான். அப்போது அவனுக்கு நன்கு பரிச்சயமாகியிருக்கும் ஒரு கறுப்பு ஆடை இன்னொரு கதவு வழியாக அடுத்த அறைக்குள் நுழைவதை அவன் பார்த்தான். ஸ்ட்ரிக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாப்பாட்டு மேஜை முன் அமர்ந்திருந்தனர்.
“என்னால இவரை தடுத்து நிறுத்த முடியல. வேகமா என்னை ஓரம் கட்டிட்டு, இவர் வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டார்”- வேலைக்காரி சொன்னாள்.
மேஜைக்கு நடுவில் பெரிய ஒரு மெழுகுவர்த்தி மஞ்சள் நிறத்தில் எரிந்து கொண்டிருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த கெல்வினின் ஓவியத்தின்மேல் அந்த மஞ்சள் ஒளி பட்டு ஒரு புதுவித சூழலை அது உண்டாக்கியிருந்தது. சுவரில் இருந்த அலமாரியில் வெள்ளிப் பாத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.
“அது சரி வின்சென்ட்”- ஸ்ட்ரிக்கர் சொன்னார்: “ஒவ்வொரு நாளும் உன்னோட நடவடிக்கை மோசமாவே போய்க்கிட்டு இருக்கே!”
“கேயை நான் உடனே பார்க்கணும்.”
“அவ இங்க இல்ல...”
“நான் வாசல் கதவைத் தட்டுறப்போ அவ இங்கே நாற்காலியில உட்கார்ந்திருந்தா.”
ஸ்ட்ரிக்கர் மனைவி பக்கம் பார்த்து கூறினார்: “குழந்தைகளை கூப்பிட்டுக்கிட்டு நீ வெளியே போ...”
ஸ்ட்ரிக்கர் தொடர்ந்தார்: “இங்க பாரு வின்சென்ட், நீ தேவையில்லாம இங்க வந்து பிரச்சினை பண்ணாதே. எனக்கு மட்டுமில்ல, இங்க இருக்கிற எல்லாருக்குமே இப்போ பொறுமை கிடையாது. நீ ஒரு பிச்சைக்காரன், நாடோடி, நாகரீகம்னா என்னன்னு தெரியாதவன். எனக்கு தெரிஞ்ச வரையில நீ ஒரு நன்றி கெட்ட மனிதன். என் மகளைக் காதலிக்க உனக்கு எங்கே இருந்து தைரியம் வந்துச்சு? என்னை நீ அவமானப்படுத்துறே.”
“நான் கேயைப் பார்க்கணும். நான் அவள்கிட்ட பேச வேண்டியதிருக்கு.”
“அவ உன்கிட்ட பேசுறதா இல்ல. உன்னை அவ பார்க்கக்கூட விரும்பல.”
“அவளே இதைச் சொன்னாளா?”
“ஆமா...”
“நான் நம்பமாட்டேன்.”
அவ்வளவுதான்-
கடுப்பாகி விட்டார் ஸ்ட்ரிக்கர். வாழ்க்கையில் ஒரு மனிதன் அவரைப் பொய் சொல்வதாகக் கூறுவது இதுவே முதல் முறை.
“நான் பொய் சொல்றதா, சொல்றதுக்கு உனக்கு என்ன தைரியம் இருக்கணும்!”
“அவளே நேரடியா வந்து சொல்லாம நான் இதை நம்ப மாட்டேன்.”
“நான் உனக்காக செலவழிச்ச பணம், நேரம் எல்லாமே வீணாயிடுச்சு!”
அடுத்த சில நிமிடங்கள் ஸ்ட்ரிக்கரிடம் அழுது புலம்பினான் வின்சென்ட். தன் காதலைப் பற்றி, தனிமையைப் பற்றி, தற்போதைய மன பாதிப்பைப் பற்றி, அவளை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற தன் ஆசையைப் பற்றி... மடை திறந்த வெள்ளமென கொட்டினான் வின்சென்ட்.
ஸ்ட்ரிக்கர் அவனைக் கேவலமாகப் பார்த்தார்: “நீ ஒரு சபல புத்திக்காரனாவும், கோழையாவும் இருப்பதைப் பார்த்து எனக்கே அசிங்கமா இருக்கு!” என்றார்.
அவ்வளவுதான்-
வின்சென்ட் எழுந்தான். நடுவில் மேஜையும் மெழுகுவர்த்தி ஸ்டாண்டும் இல்லையென்றால், நிச்சயம் ஸ்ட்ரிக்கரை அவன் அடித்திருப்பான். அறைக்குள் ஒரே நிசப்தம். இரண்டு பேரும் நெருப்பு கக்கும் விழிகளோடு ஒருவரையொருவர் கோபத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தார்கள்.
வின்சென்ட் தன் கைகளை மெழுகுவர்த்தியின் திரியை நோக்கி நீட்டினான்.
“என் கை தீயில் இருக்கிற நேரம் எவ்வளவோ, அவ்வளவு நேரமாவது நான் கேயோட பேசணும்.”
வின்சென்ட் தன் கையை நீட்டி தீயில் காட்டினான். அறையில் இப்போது வெளிச்சம் குறைந்தது. கையின் தோல் தீயில் கருகியது. சில நிமிடங்களில் அது வெந்து சிவப்பானது. தீ பட்டு ஒரு கீறல் விழுந்தது. வின்சென்ட் அசையவே இல்லை. அவன் கண்கள் ஸ்ட்ரிக்கரின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தன. நிமிடங்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. கையின் தோல் வீங்கி குமிழ் குமிழாகத் தெரிந்தது. ஸ்ட்ரிக்கர் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்தார். அவரின் உடலில் ஒரு பதைபதைப்பு உண்டானது. வின்சென்ட்டின் கண்களையே உற்றுப் பார்த்தார்.
சில வினாடிகள் கழிந்தன. வின்சென்ட்டின் கையில் இருந்த தோல் தீயில் கருகி உதிர்ந்தது. மாமிசத்தின் கருகல் வாடை எங்கும் பரவியது. வின்சென்ட் அப்போதும் தன் கையைத் தீயிலிருந்து எடுக்கவில்லை. ஸ்ட்ரிக்கரே இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்து போனார்.
“டேய்... பைத்தியக்காரா! பைத்தியக்காரக் கழுதை...” உரக்க சத்தமிட்டார் ஸ்ட்ரிக்கர். அடுத்த நிமிடம் – வேகமாக ஓடி மெழுகுவர்த்தியை கையால் எடுத்து அதை அணைத்தார்.
“உனக்கு கிறுக்கு பிடிச்சிருச்சா என்ன?”- ஸ்ட்ரிக்கர் கத்தினார்: “கேக்கு உன் முகத்தைப் பார்த்தாலே பிடிக்கல. இனி இந்த வீட்ல கால் வைக்காதே. அவ்வளவுதான் சொல்வேன்.”
வின்சென்ட் மெல்ல இருளை நோக்கி நடந்தான். தெருவிளக்கு வெளிச்சத்தில் கரிந்து போன தன் கையைப் பார்த்தான். சிறிது தூரம் முன்னால் நடந்தான். நீர் நிரம்பியிருந்த ஒரு தடாகத்தின் கரையில் சிறிது நேரம் அமர்ந்தான். மனம் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தது. ஒரு கூழாங்கல்லை எடுத்து நீரில் எறிந்தான். பச்சை நிறத்தில் இருந்த நீரில், வின்சென்ட் எறிந்த கல் உள்ளே போய் மறைந்தது.