வான்கா
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8804
சுராவின் முன்னுரை
இர்விங் ஸ்டோன் ‘லஸ்ட் ஃபார் லைஃப்’ (Lust for life) என்ற பெயரில் எழுதியிருக்கும் ‘வின்சென்ட் வான்கா (Vincent van Gogh) பற்றிய நூலைப் படித்தேன். புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை. சாப்பாடு, தூக்கம் எல்லாவற்றையும் மறந்து இரவு – பகல் எந்நேரமும் படிக்கும் அளவிற்கு ஓவியர் வின்சென்ட் வான்காவின் வாழ்க்கை வரலாற்றை தன் எழுத்தாற்றலால் மகோன்னத நிலைக்குக் கொண்டு சென்றிருந்தார் இர்விங் ஸ்டோன்.
வான்காவின் வாழ்க்கைக் கதையை எழுத்தில் வடிப்பது என்றால் அது ஒரு சாதாரண விஷயமா என்ன? அவன் வாழ்ந்த இடங்களுக்குப் போய், அவனுடன் பழகிய மனிதர்களைச் சந்தித்து, அவனைப் பற்றி தெரிந்தவர்களையெல்லாம் விசாரித்து, அவன் எழுதிய கடிதங்களைத் திரட்டி, அவனின் ஓவியங்கள் இருக்குமிடம் தெரிந்து, அவனின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் – ஓவியக்கலை சம்பந்தப்பட்ட அவனின் படிப்படியான வளர்ச்சி நிலைகளையும் உயிரோட்டத்துடன் சொற்களால் வடித்து...
அப்பப்பா... இர்விங் ஸ்டோன் ஒரு உலகமகா ஓவியத்தையே இந்த நூல் வடிவில் வரைந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
வான்காவின் காதல் தோல்விகள், ஏமாற்றங்கள், தனக்குள் ஒரு ஓவியன் மறைந்திருக்கும் உண்மையை அவன் கண்டுபிடிக்கும் நிமிடங்கள், ஊண் – உறக்கம் மறந்து அவன் ஓவியமே வாழ்க்கை என வாழ்தல், போரினேஜின் சுரங்கத் தொழிலாளர்களிடம் அவன் கொண்ட மனித நேயம், வறுமையிலும் ஓவியமே கதி என்றிருத்தல், விலைமாது ஒருத்தியுடன் குடும்பம் நடத்துதல், அன்புக்கும் காதலுக்கும் ஏங்கி நிற்கும் ஒரு அவலநிலை, என்ன செய்கிறோம் என்று தெரியாமலே காதல் கொண்ட பெண்ணுக்காக காதை அறுக்கும் அப்பாவித்தனம், மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது வெறித்தனமாக ஓவியத்தை நேசிக்கும் குணம் – ஒவ்வொன்றையும் உயிர்ப்புடன் இந்நூலில் விவரித்திருக்கிறார் இர்விங் ஸ்டோன்.
வான்கா என்ற மகத்தான கலைஞனின் சோகங்கள் நிறைந்த அற்புத வாழ்வை நம் கண்முன் கொண்டு வந்து காட்டி, நம்மையும் அவன் வாழ்க்கையில் பங்குபெறும் மனிதர்களாக மாற்றிவிடும் மாயச் செயலை இர்விங் ஸ்டோன் செய்திருக்கிறார் என்பதென்னவோ உண்மை.
‘லஸ்ட்ஃபார் லைஃப்’ புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு கிட்டத்தட்ட அரை மணி நேரம் என் அலுவலகத்தில் நான் தனியே அமர்ந்து அழுதேன். அதேபோன்று இதை நான் தமிழில் மொழிபெயர்த்து முடித்தவுடனும், என்னை மறந்து தேம்பித் தேம்பி அழுதேன்.
வின்சென்ட் வான்கா என் இரத்தத்தில் இரண்டறக் கலந்துவிட்டான் என்பது சத்தியம். அதனால்தானோ என்னவோ, அவன் காதலிக்கிறபோது நானே காதலிப்பதாக உணர்ந்தேன். அவன் சிரித்தபோது, நானும் சிரித்தேன். அவன் அழுதபோது, அவனுடன் சேர்ந்து நானும் அழுதேன்.
‘பிறவிப் பயன்’ என்று சொல்வார்கள். லாங் ஃபெல்லோ என்ற ஆங்கிலக் கவிஞன் ‘Leaving the foot prints on the sands of time’ என்று ஒரு கவிதையில் கூறுவான். அந்த வகையில் இந்த நூலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)