வான்கா - Page 2
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8806
லண்டன்
“ம்ஸ்யெ வான்கா... எழுந்திருக்க நேரமாயிடுச்சு.”
உறங்கிக் கொண்டிருந்த வின்செட்டின் காதுகளில் ஊர்ஸுலாவின் வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன.
“நான் விழிச்சிட்டேன் ஊர்ஸுலா.”
“இல்ல... இல்ல... சும்மா சொல்றே”- அவள் சிரித்தாள்.
அடுத்த நிமிடம் வின்சென்ட் கண் விழித்து பார்த்தான்.
அவள் வேகமாகப் படியில் இறங்கி அடுக்களையை நோக்கி நடக்கும் ஓசை இங்கிருந்தே அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
வின்சென்ட் பின் பக்கம் கைகளை ஊன்றி மெல்ல எழுந்தான். படுக்கையை விட்டு எழுந்து நின்றான். விரிந்த மார்பு... உறுதியான கைகள்.
ஆடைகள் அணிந்த வின்சென்ட், பாத்திரத்தில் சிறிது நீரை எடுத்து சவரக் கத்தியைத் தீட்டத் தொடங்கினான்.
ஒவ்வொரு நாளும் முகச் சவரம் செய்வது என்பது வின்சென்ட்டுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். வலது கன்னத்திலிருந்து வாய் வரை... வலது பக்க உதட்டுக்கு மேலே இருந்து கீழ் நோக்கி... பிறகு, இடது பக்கத்தில்... அதற்குப் பிறகு நாடிப் பகுதியில்...
ப்ரபாண்டினில் இருந்து வந்திருந்த ஓக் இலைகள் நிறைந்த பூக்கூடை மீது தன் முகத்தைப் பதித்து வாசனையை நுகர்ந்தான் வின்சென்ட். அவனின் தம்பி தியோ சுண்டர்ட்டுக்குப் பக்கத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் சேகரித்து அவற்றை லண்டனுக்கு அனுப்பி வைத்திருக்கிறான். மூக்கில் ஹாலண்டின் வாசனை நுழைந்தது. காலை நேரத்தில் அருமையான ஆரம்பம்தான்.
“ம்ஸ்யெ வான்கா”- ஊர்ஸுலா மீண்டும் கதவைத் தட்டினாள். `தபால்காரன் இப்போ ஒரு கடிதம் கொண்டு வந்திருக்கான்.’
தாயின் கையெழுத்து. கடிதத்தைப் பிரித்தான்; `அன்புள்ள வின்சென்ட், கடிதத்தில் உனக்காக சில வார்த்தைகள் எழுதுகிறேன்...’
முகம் குளிர்ச்சியாக இருந்தது. குபில்ஸிக்குப் போன பிறகு நேரம் கிடைக்கிறபோது கடிதத்தின் மீதிப் பகுதியை படித்துக் கொள்ளலாம் என்று நினைத்த வின்சென்ட், கடிதத்தை எடுத்து பாக்கெட்டுக்குள் வைத்தான். நீளமான அடர்ந்த சிவப்பு வர்ண முடியை வாரினான். வெள்ளை சட்டையையும், கருப்பு கலர் டையையும் எடுத்து அணிந்தான். காலை உணவிற்காகவும் ஊர்ஸுலாவின் புன்சிரிப்புக்காகவும் படிகளில் இறங்கி கீழே சென்றான்.
ஊர்ஸுலாவும் அவளின் அன்னையும் பின்பக்கம் இருந்த தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்த சிறிய அறையில் ஒரு குழந்தைகள் பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஊர்ஸுலாவிற்கு இப்போது பத்தொன்பது வயது நடக்கிறது. அகலமான கண்களையும், அளவான உடலமைப்பையும், அழகான முகத்தையும், வெளுத்த தேகத்தையும் கொண்டவள் ஊர்ஸுலா. வானவில்லின் வனப்பைப் போல முகத்தில் சதா நேரமும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் வசீகரமான அவளின் புன்னகையைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பான் வின்சென்ட்.
ஊர்ஸுலா உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது சலசலவென பேசிக்கொண்டே இருந்தாள். வின்சென்ட்டுக்கு இப்போது இருபத்தொரு வயது. தன் வாழ்க்கையில் முதல் முறையாக அவன் காதல் வலையில் விழுந்திருக்கிறான். வாழ்க்கை அவனுக்கு முன்னால் திறந்து கிடக்கிறது. வாழ்நாள் முழுவதும் இப்படியே ஊர்ஸுலா பக்கத்தில் இருந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிற மாதிரி காலம் தனக்கு துணை செய்தாலே போதும், உலகத்திலேயே தன்னை விட பாக்கியசாலி யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவன் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.
ஊர்ஸுலா சுட்ட ரொட்டியையும், முட்டையையும், ஒரு கப் பால் கலக்காத தேநீரையும் அவன் முன்னால் கொண்டு வந்து வைத்தாள். அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் சாய்ந்தவாறு அமர்ந்து, தனது ப்ரவுன் கலர் சுருள் முடியை விரலால் ஒதுக்கியவாறு வின்சென்டைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“நீ நட்டு வச்ச மின்யநெட் செடி கொஞ்சம் வளர்ந்திருக்கு” – உதட்டை நாக்கால் ஈரப்படுத்தியவாறு அவள் சொன்னாள்: “காலரிக்குப் போறதுக்கு முன்னாடி அதைக் கொஞ்சம் பார்த்திட்டுப் போகலாம்ல? “
“சரி... வின்சென்ட் இலேசாக தயங்கியவாறு கூறினான்: எனக்கு நீ அது எங்கே இருக்குன்னு காட்டுறியா?”
“இப்படியா மர மண்டையா இருக்குறது. செடி நீ தானே நட்டது! அது எங்கே இருக்குன்னே தெரியலியா?” அவளுக்கு மற்றவர்களைப் பற்றி ஏதோ அவர்கள் அருகில் இல்லவே இல்லை என்பது மாதிரி கிண்டல் பண்ணி பேசவது என்றால் படு குஷி.
வின்சென்ட் பதில் எதுவும் பேசாமல் எச்சிலை விழுங்கிக் கொண்டிருந்தான். ஊர்ஸுலாவுக்கு என்ன பதில் கூறுவது என்று ஒரேயடியாக மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரும் ஒன்றாக முற்றத்தை நோக்கி நடந்தார்கள். ஏப்ரல் மாதமாதலால் அந்த அதிகாலை வேளையில் நல்ல குளிர்ச்சி இருந்தது. வீட்டிற்கும் பள்ளிக்கூடத்திற்கும் இடையில் இருந்த வெற்றிடத்தில் ஒரு சிறு பூந்தோட்டம் இருந்தது. அங்கு ஆப்பிள் செடிகள் பூக்களுடன் காட்சி தந்தன. சில நாட்களுக்கு முன்பு வின்சென்ட் அங்கு பாப்பியும், பட்டாணியும் நட்டிருந்தான். அவன் நட்ட மின்ய நெட் செடிகள் மெல்ல பூமிக்கு மேலே தலையை உயர்த்திக் கொண்டிருந்தன. வின்சென்ட்டும் ஊர்ஸுலாவும் அவற்றின் இரு பக்கங்களிலும் இரண்டு பேர் தலைகளும் இடிக்கிற மாதிரி அமர்ந்துகொண்டு முளைத்திருக்கின்ற செடிகளையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஊர்ஸுலாவின் கூந்தலில் ஒரு அருமையான நறுமணத்தை அவன் நுகர்ந்தான்.
“ஊர்ஸுலா...”
“ம்...”- அவள் தலையைச் சாய்த்தவாறு அவனைப் பார்த்து சிரித்தாள்.
“நான்... நான்... அது...”
“அய்யய்ய... என்ன இப்படி தடுமாறுற?”
அவள் துள்ளி எழுந்தாள். வின்சென்ட் அவளுடன் பள்ளிக்கூட வாசல் கதவு வரை நடந்தான்.
“பசங்க இப்போ வந்திருவாங்க. காலரிக்குப் போக தாமதமொண்ணும் ஆகலியே!”
“தாராளமா நேரம் இன்னும் இருக்கு. ஸ்ட்ரான்ட் வரை நடந்து போறதுக்கு நாற்பத்தஞ்சு நிமிஷம் போதும்”
பேசுவதற்கு ஒன்றும் இல்லாததால் அவள் பறந்து கொண்டிருந்த தலைமுடியை இரண்டு கைகளாலும் ஒதுக்கி விட்டாள்.
“என்னோட பள்ளிக்கூடத்துக்குத் தர்றதா சொன்ன அந்த பிரபாண்ட் படம் என்னாச்சு?”
“ஸ்கெச்சோட ஒரு காப்பியை நான் பாரீஸ்க்கு அனுப்பி இருக்கேன். ஸெஸார்டிகோக் அதுல உனக்காக கையெழுத்துப் போட்டு சீக்கிரம் அனுப்பி வைப்பார்.”
“அப்படியா? கேட்கவே ரொம்பவும் சந்தோஷமா இருக்கு”- அவள் முகம் மகிழ்ச்சியால் பிரகாசித்தது.
“சில நேரங்கள்ல... சில நேரங்கள்ல மட்டும் நல்ல மனிதனா எப்படியோ நீ நடந்திடுற”
அவளின் கண்களிலும், சிவந்த அதரங்களிலும் வசீகரமான புன்சிரிப்பு. அவள் போக ஆரம்பித்தபோது, அவளின் கையைப் பிடித்து நிறுத்தினான் வின்சென்ட். “நேத்து ராத்திரி நான் தூங்கப் போறப்போ உனக்காக நான் ஒரு பேர் கண்டு பிடிச்சு வச்சிருக்கேன். அது என்ன தெரியுமா? லாங்லோ புப்பாங். பேர் எப்படி இருக்கு?”