
ஜூலை மாதம் வந்தது. விடுமுறை காலம் தொடங்கியது. இரண்டு வார காலம் லண்டனை விட்டு பிரிந்திருக்க மிகவும் தயங்கினான் வின்சென்ட். தான் இங்கு இருக்கிற காலம் வரை ஊர்ஸுலா இன்னொரு நபரைக் காதலிக்க மாட்டாள் என்று உறுதியாக நம்பினான் அவன்.
பார்லருக்கு அவன் போனபோது, அங்கு ஊர்ஸுலாவும் அவளின் தாயும் இருந்தார்கள். வின்சென்ட்டின் முகத்தைப் பார்த்ததும், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“நான் ஒரு சின்ன பையை மட்டும்தான் எடுத்துட்டுப் போறேன். மற்ற என்னோட சாமான்களை எல்லாம் அறையிலதான் வச்சுட்டுப் போறேன். இரண்டு வாரத்துக்கான வாடகை இப்ப தர்றேன். வச்சுக்கோங்க.”
“உன்னோட சாமான்களை நீ இப்பவே எடுத்துட்டுப் போறது நல்லது”- ஊர்ஸுலாவின் தாய் கூறினாள்.
“எதற்கு அப்படிச் சொல்றீங்க?”
“திங்கட்கிழமை முதல் உன்னோட அறையை வேற ஒரு ஆளுக்கு வாடகைக்கு கொடுக்கிறதா இருக்கு. நீ வேற எங்கேயாவது மாறி தங்குறது நல்லதுன்னு நாங்க நினைக்கிறோம்...”
“நாங்கன்னா...?”- ஊர்ஸுலாவின் முகத்தைக் கேள்வி கேட்கிற தொனியில் பார்த்தான் வின்சென்ட்.
“ஆமா... நாங்கதான். என் மகளோட எதிர்கால கணவன் உன்னை வீட்டை விட்டு உடனடியா வெளியே அனுப்பும்படி கடிதம் எழுதியிருக்கான். நீ இங்கே வராமலே இருந்திருந்தா நல்லா இருக்கும்னு நாங்க நினைக்கிறோம்.”
¤ ¤ ¤
ப்ரேடா ஸ்டேஷனுக்கு மகனை அழைத்துப் போவதற்காக வந்திருந்தார் தியோடரஸ் வான்கா. கறுத்த கோட், வெள்ளை சட்டை, பெரிய கழுத்துப் பட்டை. ஒரே பார்வையில் தந்தையின் தோற்றம் வின்சென்ட்டின் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. வலது கண்ணின் மேல் தோல் இட கண்ணைவிட கீழே தாழ்ந்து, கிட்டத்தட்ட கண்ணையே முக்கால் பகுதி மறைத்து விட்டிருந்தது. கண்களில் ஒருவித அமைதி குடி கொண்டிருந்தது.
சுண்டர்ட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் சில்க் தொப்பி அணிந்தவாறு சாலையில் நடந்து செல்லும் தியோடரஸைப் பார்க்கிறபோது தங்களுக்குள் கூறிக் கொள்வார்கள். “அங்கே பார் யார் போறதுன்னு... ஊரை நல்லாக்கணும்ன்ற எண்ணத்தோட அவர் போறதைப் பாரு.” வாழ்க்கையில் தான் மட்டும் ஏன் பெரிதாகச் சொல்லிக் கொள்கிற மாதிரியான ஒரு நிலையை அடையவே இல்லை என்பதற்கான காரணம்தான் தியோடரஸுக்குக் கடைசி வரை புரியவே இல்லை. இவ்வளவுக்கும் அவர் நன்கு கல்வி கற்றிருந்தார். மனிதர்களுடன் நன்கு பழகக்கூடிய குணத்தைக் கொண்டிருந்தார். ஆன்மீகச் சிந்தனைகளை மனதில் கொண்டிருந்தார். தெய்வ பக்தி இயற்கையாகவே அவரிடம் இருந்தது. எல்லோரிடமும் அன்புடன் உறவு கொண்டிருந்தார். இத்தனை நல்ல அம்சங்கள் அவரிடம் இருந்தும், சுண்டர்ட் என்ற சின்னஞ்சிறு கிராமத்துக்குள்ளேயே அவரின் வாழ்க்கை முடக்கப்பட்டு விட்டது. ஆறு வான்கா சகோதரர்களில் அவர் மட்டும்தான் பிரபலமே ஆகாமல் சாதாரண நிலையிலேயே நின்றுவிட்டவர்.
வின்சென்ட்டின் தாய் அன்னா கார்ணீலியா வின்சென்ட்டை எதிர்பார்த்து ஜன்னல் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். பச்சையும் நீலமும் கலந்த, அன்பு துளிர்க்கும், நன்மைகளை மட்டுமே பார்க்கக்கூடிய அழகான கண்களுக்குச் சொந்தக்காரி அவள். மூக்கின் இரு பக்கங்களில் இருந்தும் உதடை ஒட்டியவாறு இருந்த ஆழமான கோடுகளால், எப்போதும் அவள் புன் சிரிப்புடன் இருப்பது மாதிரியே தெரியும்.
அன்னா கார்ணீலியா கார்பெந்தஸ் பிறந்தது தி ஹேகில். அவளின் தந்தை ராஜாவின் புத்தகங்களை பைண்ட் செய்கிற ஒரு புத்தக வியாபாரி. ஹாலண்டில் சட்டப் புத்தகங்களை பைண்ட் செய்வதற்கு ஒரு ஆள் வேண்டும் என்ற சூழ்நிலை வந்தபோது, அதற்காகத் தேர்வு செய்யப்பட்டவர் கார்பெந்தஸ். அவர் எல்லோருக்கும் தெரிந்த நபரானது இப்படித்தான். அன்னாவின் ஒரு சகோதரியைத் திருமணம் செய்தது வின்சென்ட்டின் சித்தப்பா. மற்றொரு சகோதரியைத் திருமணம் செய்தவர் ஆம்ஸ்டர்டாமில் இருக்கும் ரெவரண்ட் ஸ்ட்ரிக்கர்.
உணவு முடிந்ததும், சாப்பாட்டு அறையிலேயே வான்கா குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பல்வேறு விஷயங்களைப் பற்றியும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அன்னாவிற்கு வின்சென்ட்டைப் பற்றித்தான் முழுக் கவலையும். அவன் ரொம்பத்தான் மெலிந்து போய்விட்டதாக அவள் உணர்ந்தாள். ஏதோ பிரச்சினையில் சிக்கிக்கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
“வின்சென்ட், உனக்கு ஏதாவது பிரச்சினையா? சொல்லு. மனசுல ஏதோ கோளாறுன்றது மட்டும் தெரியுது”- உணவு சாப்பிட்ட பிறகு அன்னா கேட்டாள்.
வின்சென்ட் தன்னைச் சுற்றிலும் ஒருமுறை பார்த்தான். மேஜையைச் சுற்றிலும் தன் தாயைத் தவிர அமர்ந்திருந்த அவனுக்கு அறிமுகமே இல்லாத அவனின் சகோதரிகள் முறை வரக் கூடிய பெண்கள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல...” வின்சென்ட் சொன்னான்.
“லண்டனில் வேலை பார்க்குறது உனக்குப் பிடிக்கலியா? பிடிக்கலையின்னா, அதை உன்னோட சித்தப்பாக்கிட்ட சொல்லிட்டு பாரீஸ்ல இருக்கிற கடைக்குப் போற மாதிரி பார்த்துக்குவோம்”- தியோடரஸ் கூறினார்.
“அய்யய்யோ... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்”- வின்சென்ட் பதறிப்போய் சொன்னான். ‘நான் நிச்சயம் லண்டனை விட்டு போகவே மாட்டேன்.’- தனக்குள் கூறிக்கொண்ட வின்சென்ட் தொடர்ந்தான்: “வின்சென்ட் சித்தப்பா, என்னை வேற இடத்துக்கு மாற்றணும்னு நினைச்சார்னா அவரே அதைச் செஞ்சிடுவாரு.”
“உன் விருப்பம்போல நடக்கட்டும்”- தியோடரஸ் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
¤ ¤ ¤
‘பிரச்சினையே அந்தப் பொண்ணாலதான். அவனோட கடிதத்துல இருந்த குழப்பமான வரிகளுக்கு இப்பத்தான் காரணம் என்னன்னு தெரியுது’- அன்னா தனக்குள் கூறினாள்.
தான் மட்டும் தனியே வயல்வெளியில் நடந்து செல்வது- ஓக் மரங்களும், பைன் மரங்களும் வளர்ந்திருக்கும் காட்டுப் பகுதிகளில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் நீர் குட்டைகளையே பல நிமிடங்கள் ஏதோ ஒருவித சிந்தனையுடன் உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பது – பல நாட்கள் வின்சென்ட் இப்படித்தான் தன் நேரத்தைப் போக்கினான். அவ்வப்போது சில ஓவியங்களையும் வரைவான். தோட்டத்தையும், சனிக்கிழமை நடைபெறும் சந்தையையும் படமாகத் தீட்டினான். ஊர்ஸுலாவைச் சில நிமிடங்களாவது மறந்திருக்க இந்த ஓவியம் வரையும் செயலால் முடிந்தது.
மூத்த மகன் தன் பாதையைப் பின்பற்றாதது குறித்து உண்மையிலேயே தியோடரஸுக்கு வருத்தம் அதிகம்தான். ஒருமுறை உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஒரு விவசாயியைப் பார்க்கப் போய்விட்டு திரும்பி வருகிறபோது, வண்டியை விட்டு இறங்கிய தந்தையும் மகனும் கொஞ்சம் தூரம் கால்நடையாக நடந்து சென்றார்கள். பைன் மரக் காடுகளுக்குப் பின்னால் சிவப்பாக சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அது அருகில் தேங்கிக் கிடந்த நீரில் தெரிந்தது. காடும், மணலும் ஒரே கோட்டில் இயங்குவதை அவர்களால் உணர முடிந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook