வான்கா - Page 8
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8806
“வின்சென்ட், என்னோட அப்பா ஒரு பாதிரியாரா இருந்தாரு. நீயும் அதே மாதிரி ஒரு பாதிரியாரா வருவேன்னு நான் நினைச்சேன்.”
“நான் அப்படி ஆக மாட்டேன்னு எப்படி நீங்க நினைச்சீங்க?”
“அப்படி ஒண்ணும் நான் சொல்லல. உனக்கு எப்போதாவது அப்படி ஆகணும்னு தோணினால், யுனிவர்சிட்டியில படிக்கணும்னு நினைச்சா, பிரச்சினையே இல்ல... ஜான் அங்கிள் கூட ஆம்ஸ்டர்டாம்ல தங்கிக்கலாம். ரெவரென்ட் ஸ்ட்ரிக்கர் படிப்பு விஷயமாக எதுவாக இருந்தாலும், உனக்கு கட்டாயம் உதவுறதா ஏற்கனவே சொல்லி இருக்காரு.”
“நான் குபில்ஸ் வேலையை விடணும்னு நீங்க சொல்றீங்களா?”
“நிச்சயமா அப்படி சொல்ல. ஒரு வேளை உனக்கு அங்க இருக்க பிடிக்கலைன்னா...?மனிதர்களோட மனோபாவம் எல்லா சமயமும். ஒரே மாதிரி இருக்கும்னு சொல்ல முடியாதுல்ல...”
“நீங்க சொல்றது சரிதான். ஆனால், குபில்ஸை விட்டு வரணும்ன்ற எண்ணம் எனக்கு இல்ல...”
¤ ¤ ¤
லண்டனுக்கு மீண்டும் திரும்பிய போது, வின்சென்ட்டின் தாயும் ப்ரெடா வரை அவனுடன் வந்தாள். “வின்சென்ட், கடிதம் எழுதணும்னா உன்னோட பழைய முகவரிக்குத்தானே எழுதணும்?”
“இல்ல... நான்வேற ஒரு இடத்துக்கு மாறி தங்குறதா இருக்கு”
“ரொம்ப நல்லது”- தியோடரஸ் சொன்னார்: “நீ அந்த லோயர் குடும்பத்தை விட்டு போறதுல உண்மையிலேயே நான் சந்தோஷப்படுறேன். அவங்களை எனக்கு எப்பவுமே பிடிக்கல. எதையும் மனசு விட்டு பேசத் தெரியாதவங்க.”
அதைக்கேட்டு வின்சென்ட்டுக்கு இலேசாகக் கோபம் உண்டானது. என்னவோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் அவனின் தாய், அவன் கையை மெல்ல பற்றி தடுத்துவிட்டாள். தாழ்ந்த குரலில் தியோடரஸுக்குக் கேட்காமல் அவள் சொன்னாள்:
“கவலைப்படாதேடா மகனே, உனக்குப் பொருத்தமா இருக்கறவ நிச்சயமா ஒரு டச் பொண்ணுதான். அந்த ஊர்ஸுலா உனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவ இல்ல...”
தாய்க்கு இந்த விஷயம் எப்படித் தெரிந்தது என்று உண்மையிலேயே ஆச்சரியப்பட்டான் வின்சென்ட்.
¤ ¤ ¤
திரும்பவும் லண்டனுக்கு வந்த வின்சென்ட் கென்ஸிங்டன் நியூ சாலையில் இருந்த ஒரு வசதியான அறையை வாடகைக்கு எடுத்தான். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரியான வயதான கிழவி தினந்தோறும் இரவு எட்டு மணி வந்துவிட்டால், தூங்கப் போய்விடுவாள். அதற்குப் பிறகு வீடே படு அமைதியில் ஆழ்ந்து கிடக்கும். வின்சென்ட்டின் மனதில் அந்த வீட்டில் தங்கி இருந்தபோது ஒரு தொடர் போராட்டமே நடந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு நாள் இரவிலும் பலவித எண்ணங்களுக்கு மத்தியில் அவன் மனம் ஒரு யுத்தமே செய்து கொண்டிருக்கும். லோயர் வீட்டுக்குப் போனால் என்ன என்ற எண்ணம் அவன் மனதில் உண்டாகும். வாசல் கதவை மூடிவிட்டு தூங்கப் போக வேண்டும் என்று நினைப்பான் அவன். ஆனால், கால்மணி நேரம் கழித்துப் பார்த்தால் அவனையும் அறியாமலே ஊர்ஸுலாவின் வீட்டை நோக்கி அவளின் கால்கள் நடந்து போய்க் கொண்டிருக்கும்.
அவளின் வீட்டை நெருங்குகிறபோது, ஏதோ ஒரு காந்த சக்திக்குள் தான் மாட்டிக் கொண்டிருப்பதை மட்டும் வின்சென்ட்டால் உணர முடிந்தது. அவளைப் பற்றி சதா நேரமும் இப்படியே நினைத்துக் கொண்டிருப்பது, பக்கத்தில் இருந்து கொண்டே அவள் தனக்குக் கிடைக்காமல் இருப்பது- இவற்றை விட வேதனை தரக்கூடிய விஷயங்கள் வேறு என்னவாக இருக்கும்? தான் தங்கியிருக்கும் அறையில் இருந்து கொண்டு அவளை விட்டு விலகி இருப்பது- இதுதான் அவனால் ஜீரணிக்க முடியாத ஒரு விஷயம்.
தன் மன வேதனை என்னவென்று உணர்ந்தபோதுதான் வின்சென்ட்டிற்கு மற்றவர்களின் வேதனைகளும் எவ்வளவு ஆழமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மதிப்பு இல்லாத வெற்று விஷயங்களில் அவனுக்கு ஒருவித வெறுப்பே உண்டானது. இந்த விற்பனை சாலையில் தன் பணியைப் பற்றி அவன் சிந்தித்துப் பார்த்தான். ஓவியங்களை விலைக்கு வாங்க வருபவர்களிடம், அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஓவியம் எவ்வளவு மட்ட ரகமானது என்பதைக் கொஞ்சமும் மறைக்காமல் வெளிப்படையாகக் கூறினான் வின்சென்ட். அவ்வளவுதான்- அதை வாங்க வந்தவர்கள், வாங்காமலே திரும்பிப் போனார்கள். ஓவியத்தை வரைந்த கலைஞன் தன் மன வேதனையையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தி வரைந்த ஓவியங்களில் மட்டுமே வின்சென்ட் உண்மைத் தன்மையையும், உணர்வுப்பூர்வமான ஆழத்தையும் கண்டான்.
அக்டோபர் மாதம். நவநாகரீகமாக உடையணிந்த ஒரு தடித்த பெண், ஓவியங்கள் வாங்க வந்தாள்.
“எனக்கு இங்க இருக்குறதிலயே பிரமாதமா இருக்குற ஓவியங்கள் வேணும். விலை அதிகமா இருந்தால், அதைப் பற்றி கவலையே இல்ல. என் வீட்டோட அளவு இது. ஐம்பதடி நீளத்துல ரெண்டு சுவர்கள். அவற்றில் ஒரு சுவரோட நடுவுல ரெண்டு ஜன்னல்கள்.”
அன்று பகல் முழுவதும் ரெம்ப்ராண்ட், டேனர், மாரீஸ், கோரோ, தாபிக்னி ஆகியோரின் ஓவியங்களை அவளுக்கு விற்க முயன்றான வின்சென்ட். ஆனால், அவளின் ரசனையோ வேறு விதமா இருந்தது. தரம் குறைவான ஓவியங்களையே பெரும்பாலும் அவள் தேர்ந்தெடுத்தாள். அருமையான, உயர்நிலை ஓவியங்களை வாங்க அவள் மனம் ஒத்துக் கொள்ளவே இல்லை. நடுத்தர மக்களின் பிரதிநிதியாக அந்தப் பெண் வின்சென்ட்டுக்குத் தோன்றினாள்.
“என்ன... நான் தேர்வு செய்த ஓவியங்கள் எப்படி?”- தன்னைத்தானே பெருமையுடன் பார்த்தவாறு அந்தப் பெண் கேட்டாள்.
“ரெண்டு கண்களையும் மூடிக்கொண்டு தேர்தெடுத்திருந்தால் கூட இதைவிட நல்ல ஓவியங்களைத் தேர்ந்தெடுத்திருக்க முடியும்” என்றான் வின்சென்ட்.
அவ்வளவுதான்- அவளின் முகமே வெளிறிப் போனது.
“முட்டாள் மாதிரி பேசாதே”- என்று கோபத்துடன் கூறிய அவள் அடுத்த நிமிடம் திரும்பிக் கூடப் பார்க்காமல், படு வேகமாக கடையை விட்டு வெளியேறினாள்.
அதைப் பார்த்ததும் மிஸ்டர் ஒபாக்கிற்குக் கோபம் வந்து விட்டது. “என்னடா வின்சென்ட்... உனக்கு என்னடா ஆச்சு? இந்த வாரத்துலயே பெரிய அளவுல நடந்திருக்க வேண்டிய ஒரு வியாபாரத்தை உன்னோட தான் தோன்றித்தனமான நடவடிக்கையால கெடுத்துட்டியே... போதாதுன்னு, அந்தப் பொம்பளையை ஒரேயடியா அவமானப்படுத்த வேற செஞ்சுட்டே...”
“மிஸ்டர் ஒபாக்... நான் ஒண்ணு கேக்குறேன். பதில் சொல்வீங்களா?”
“என்ன கேக்கப்போறே, உன்கிட்ட நானும் சில கேள்விகள் கேக்கணும்.”
“நாம வாழப்போறதே ஒரே ஒரு வாழ்க்கை. இந்த ஒரு வாழ்க்கையில கண்ட முட்டாள்களுக்கெல்லாம் தரம் தாழ்ந்த- குப்பையான ஓவியங்களை விற்பனை செய்யணும்னு ஒரு ஆளால எப்படி முடியும்? சொல்லுங்க.”
அதற்கு மிஸ்டர் ஒபாக் பதில் கூறவில்லை. அவர் சொன்னார்: “இப்படியே உன் போக்கு போய்க் கொண்டிருந்தால், உன்னோட சித்தப்பாவுக்கு நான் கடிதம் எழுதும்படியா இருக்கும். பிறகு, தேவையில்லாமல்... நீ வேற இடத்துக்கு வேலை மாற்றம் வாங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். என்னோட வியாபாரம் உன்னால பாதிக்கப்படுவதை மட்டும் நிச்சயம் நான் அனுமதிக்க மாட்டேன்.”