வான்கா - Page 5
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8806
வின்சென்ட் மென்மையான வார்த்தைகளால் தன் மனதிற்குள் உள்ள எண்ணத்தை அவளிடம் இப்போது வெளியிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். ஊர்ஸுலா திரும்பி நின்றாள். விளக்கில் இருந்து வந்த ஒளி அவளின் கண்களில் பட்டு பிரகாசித்தது. இருட்டில் கலந்து முகம் தெளிவாகத் தெரிந்தது. மென்மையான வெளுத்த முகம். சிவந்த பட்டுப் போன்ற இதழ்கள். இதற்கு முன் தான் அனுபவித்தே இராத ஒரு வகை உணர்வு தன் மனதிற்குள் ஊர்வதை வின்சென்ட்டால் உணர முடிந்தது.
அர்த்தம் நிறைந்த அமைதியான சூழ்நிலை. தன் மனதில் உள்ளதைக் கேட்பதற்காக அவள் காத்து நின்றிருக்கிறாள் என்று உணர்ந்த வின்சென்ட் தன் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான். ஊர்ஸுலா தலையைச் சாய்த்தவாறு அவன் கண்களைப் பார்த்தாள். பின் என்ன நினைத்தாளோ, வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே ஓடினாள்.
எங்கே அந்தக் கணம் ஒன்றுமே நடக்காமல் வீணாகிப் போய்விடுமோ என்று பயந்த வின்சென்ட் அவளுக்குப் பின்னே ஓடினான். ஆப்பிள் மரத்திற்குக் கீழே அவள் நின்றிருந்தாள்.
“ஊர்ஸுலா... தயவு செய்து...”
அவள் திரும்பி நின்று அவனைப் பார்த்தாள். குளிரில் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் நட்சத்திரங்களும் நடுங்கிக் கொண்டிருந்தன. அவர்களைச் சுற்றிலும் ஒரே இருட்டு. அறையில் விளக்கை வைத்து விட்டுத்தான் வின்சென்ட் இங்கு ஓடி வந்தான். சமையலறையின் ஜன்னல் வழியே மங்கலான வெளிச்சம் மட்டும் இலேசாக வந்து கொண்டிருந்தது. ஊர்ஸுலாவின் தலைமுடியில் இருந்து வந்த ஒரு வகை வாசனை மூக்கிற்குள் நுழைந்து அவனை என்னவோ செய்தது. அவள் கழுத்துப் பட்டையை மேலும் கொஞ்சம் இறுக்கமாக்கினாள். நெஞ்சின் மேல் கைகளைக் கோர்த்தவாறு அவள் நின்றிருந்தாள்.
“நல்ல குளிர், இல்லியா?”- வின்சென்ட் கேட்டான்.
“ஆமா...” ஊர்ஸுலா சொன்னாள்: “நாம உள்ளே போவோம்.”
“இல்ல... நான்... நான்..”- வின்சென்ட் அவளைத் தடுத்தான்.
ஊர்ஸுலா தலையைக் குனிந்து நின்றிருந்தாள். அவளின் அகலமான கண்களில் வியப்பு தெரிந்தது. “ம்ஸ்யெ வான்கா, என்ன விஷயம்? எனக்கு ஒண்ணும் புரியலியே...” அவள் சொன்னாள்.
“நான் உன்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லணும்னு நினைக்கிறேன். நான்... அதாவது... நான்...”
“எது இருந்தாலும் இப்போ சொல்ல வேண்டாம்... தயவு செஞ்சு... எனக்கு ஒரேயடியா குளிரா இருக்கு”
“எனக்கு இன்னையில இருந்து வேலையில உயர்வு கிடைச்சிருக்கு. லித்தோகிராஃப் அறைக்கு என்னை மாற்றம் செஞ்சிருக்காங்க. இரண்டாவது தடவையா சம்பள உயர்வு தர்றதா சொல்லியிருக்காங்க.”
ஊர்ஸுலா இரண்டடி பின்னால் வந்தாள். கழுத்துப்பட்டையை நீக்கி குளிரைப் பொருட்படுத்தாமல் நின்றாள்.
“நீ இப்போ என்ன சொல்லணும்னு நினைக்கிறே?”
அவளின் குரலில் ஒரு வகை மென்மைத்தனம் தெரிந்தது. வின்சென்ட் தன் குழப்ப நிலையை மனதிற்குள் திட்டினான். அவன் உள்ளத்தில் எழுந்த உணர்வுகள் பலமிழந்து போய் இருந்தன. மீண்டும் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெதுவான குரலில் அவன் சொன்னான்:
“உனக்கு நல்லா தெரிஞ்ச விஷயத்தை இப்போ நான் சொல்லப் போறேன். ஊர்ஸுலா, உன்னை நான் மனப்பூர்வமா காதலிக்கிறேன். நீ மட்டும் என் மனைவியா ஆயிட்டன்னா, உலகத்துலயே பெரிய பாக்யசாலி நான்தான்.”
வின்சென்ட்டின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஊர்ஸுலாவுக்கு அதிர்ச்சியடைந்ததுபோல் இருந்தது. இருந்தாலும், அவள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெறுமனே நின்றிருந்தாள். அவளை அருகில் சென்று இறுக அணைத்தால் என்ன என்று நினைத்தான் வின்சென்ட்.
“உன்னோட மனைவியா?”- அவளின் குரல் இலேசாக உயர்ந்திருந்தது. “ம்ஸ்யெ வான்கா, இது நடக்காத விஷயம்.”
இறுகிப் போன முகத்துடன் நின்றிருந்த வின்சென்ட் தன் கூர்மையான கண்களால் அவளையே பார்த்தான். “இப்போ நீ என்ன சொல்றன்னு எனக்குப் புரியல...”
“உனக்கு ஒரு விஷயம் இன்னும் தெரியாம இருக்குறதுதான் ஆச்சரியமா இருக்கு. எனக்குக் கல்யாணம் நிச்சயமாகி ஒரு வருஷமாச்சு.”
அவ்வளவுதான்-
ஆடிப் போனான் வின்சென்ட். சில வினாடிகள் அதிர்ச்சியடைந்து உறைந்துபோய் சிலை என நின்றான் அவன். மனதிற்குள் ஆயிரம் எண்ண ஓட்டங்கள். சிறு இடைவெளிக்குப் பிறகு அவன் மரத்துப் போன குரலில் கேட்டான்: “யார் அந்த ஆள்?”
“எனக்கு வரப் போற கணவரை நீ பார்க்கலியா? நீ வர்றதுக்கு முன்னாடி உன் அறையில அவர்தான் தங்கி இருந்தாரு. உனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும்னு நினைச்சேன்.”
“எனக்கெப்படி இது தெரியும்?”
அவள் சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்தாள். “நான்... நான் நினைச்சேன் யாராவது உன்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லி இருப்பாங்கன்னு...”
“நான் உன்னைக் காதலிக்கிறேன்னு தெரிஞ்ச பிறகும், நீ ஏன் இந்த விஷயத்தை என்கிட்ட இருந்து மறைச்சு வச்சே?”
“நீ என்னை காதலிக்கிறேன்னா, அது என் தப்பா? உன்னோட நான் நட்பா பழகினேன். அவ்வளவுதான்.”
“நான் இங்கே தங்கினப்புறம் அந்த ஆளு வந்திருக்காரா?”
“இல்ல... அவர் வேல்ஸ்ல இருக்காரு. வர்ற கோடை விடுமுறையில இங்கே வர்றாரு.”
“நீங்க ரெண்டு பேரும் நேர்ல பார்த்தே ஒரு வருஷமாயிடுச்சு. அந்த ஆளை நீ மறந்துபோயிட்டே. நீ இப்போ காதலிக்கிறது என்னைத்தான்.”
கட்டுப்பாடு என்ற ஒன்றையே மறந்துபோனான் வின்சென்ட். அருகில் சென்று அவளைக் கட்டிப்பிடித்தான். தனக்கு ஒத்துழைக்காத அவளின் அதரங்களில் மூர்க்கத்தனமாக முத்தமிட்டான். அவளின் மென்மையான இதழ்களின் சுவையையும், நுண்ணிய உணர்வையும், தலைமுடியின் நறுமணத்தையும் அவன் சில வினாடிகள் தன்னை மறந்து அனுபவித்தான். அவன் உள்ளத்தில் காதல் உணர்வு பொங்கி வழிந்தது.
“ஊர்ஸுலா... நீ அவனைக் காதலிக்கல. நான் அதற்குச் சம்மதிக்க மாட்டேன். உன்னை என்னால விட முடியாது. நீ அவனை மறந்து என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிக்கிறது வரை நான் விட மாட்டேன்.”
“உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறதா? என்னை யாராவதொருத்தன் காதலிச்சான்னா, உடனே நான் அவனை கல்யாணம் பண்ணிக்கணுமா? தயவு செஞ்சு என்னைப் போக விடு. இல்லாட்டி, நானே சத்தம் போட்டு ஆளுகளை கூட்டிடுவேன்.”
அவன் பிடியில் இருந்து திமிறி விடுபட்ட அவள் அடுத்த நிமிடம் பாதை வழியே ஓடினாள். வாசல்படியை அடைந்தவுடன் திரும்பி நின்று மெல்லிய குரலில் கோபத்துடன் சொன்னாள்:
“சிவப்பு தலை முடிக்காரன்... முட்டாள்.”
அவளின் அந்த வார்த்தைகள் தன் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிப்பதாக வின்சென்ட் உணர்ந்தான்.