வான்கா - Page 3
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8806
ஊர்ஸுலா தலையைப் பின்பக்கமாய் திருப்பி சிரித்தாள்: “லாங்லோ புப்பாங் நான் அம்மாக்கிட்டே இதைச் சொல்றேன்”
அவள் கையை விட்டு விலகிய அவள், தலையை ஆட்டி சிரித்தவாறு தோட்டத்தைத் தாண்டி வீட்டை நோக்கி ஓடினாள்.
¤ ¤ ¤
வின்சென்ட் தொப்பி அணிந்து கைக்கு உறை இட்டு சாலையில் நடக்க ஆரம்பித்தான். லண்டன் நகரத்தின் எல்லையில் இருக்கும் இந்த இடத்தில் வீடுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. எல்லா தோட்டங்களிலும் லைலாக், ஹாத்தோன், லபேர்ணம் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன.
நேரம் காலை 8.15 மணி. குபில்ஸுக்கு ஒன்பது மணிக்குப் போனால் போதும். வின்சென்ட் தன் நடையை சற்று வேகப்படுத்தினான். சொல்லப் போனால் இந்தப் பகுதியில் வீடுகளின் எண்ணிக்கை கூடி விட்டது. வேலைக்குப் போவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடிவிட்டது. சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த எல்லோரையும் பிரியத்துடன் பார்த்தான் வின்சென்ட். அவர்களுக்குத் தெரியாதா காதல் என்பது எவ்வளவு சுகமான ஒரு விஷயம் என்று. தேம்ஸ் நதிக்கரை வழியே வெஸ்ட் மின்ஸ்ட்டர் பாலத்தைக் கடந்து, பள்ளியையும் பாராளுமன்ற கட்டிடத்தையும் தாண்டி, வின்சென்ட் 17, சதாம்ப்டன், ஸ்ட்ரான்ட்டை அடைந்தான். கலைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடிய குபில் அண்ட் கம்பெனியின் லண்டன் கிளை அது.
அகலமானதும், விலை உயர்ந்த தரை விரிப்பையும் கொண்ட பெரிய அறை. சுவரில் பெரிய ஒரு ஓவியம் அழகு செய்து கொண்டிருந்தது. ஒரு திமிங்கிலத்தின் மேல் ஏறி நிற்கும் ஒரு மனிதனின் ஓவியம் அது. அந்த ஓவியத்தின் கீழ் எழுதப்பட்டிருந்தது: “தேவ தூதனான மைக்கேல் சாத்தானைக் கொல்கிறான்.”
“மேஜை மேல் உங்களுக்கு ஒரு பார்சல் இருக்கு”- ஒரு க்ளார்க் வின்சென்ட்டிடம் கூறினான்.
மில்லே, பாட்டன், டர்னர் ஆகியோரின் ஓவியங்கள் வைக்கப்பட்டிருக்கிற அறையையொட்டி “எட்சிங்” (அமிலம் உபயோகித்து உலோகத்திலோ, கண்ணாடியிலோ வரைந்த ஓவியங்கள்) “லித்தோக்ராபி” (கல்லால் ஆன ஓவியங்கள்) ஆகியவற்றின் அறை இருக்கின்றன. ஒரு வியாபார மையம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி தோன்றுகிற மூன்றாவது அறையில்தான் பெரும்பாலும் விற்பனை நடக்கும்.
முதல் நாள் மாலை நேரத்தில் ஓவியம் வாங்க வந்த பெண்ணை நினைத்துப் பார்த்து இப்போது சிரித்தான் வின்சென்ட்.
“இந்த ஓவியத்தை எனக்குப் பிடிக்கல, ஹாரி... உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”- அந்தப் பெண் தன் கணவரிடம் கேட்டாள்.
“இந்த நாயைப் பாக்குறப்போ போன கோடை காலத்துல ப்ரைட்டனில் என்னைக் கடிச்ச நாய் மாதிரியே இருக்கு”
“நண்பரே...”- ஹாரி சொன்னான்: “எங்களுக்கு இந்த நாய் வேண்டாம். என் மனைவிக்கு இந்த நாயைப் பார்த்தால் பயங்கர பயம்...”
மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிற ஓவியங்கள் மேல்தான் மக்களுக்கு விருப்பம் அதிகம். இங்கு ஓவியங்கள் வாங்க வருகிற முக்கால்வாசிப் பேருக்கு தாங்கள் வாங்குகிற ஓவியத்தைப் பற்றிய அறிவு கொஞ்சம் கூடக் கிடையாது. தரம் தாழ்ந்த ஓவியங்களுக்கு சில நேரங்களில் அவர்கள் பணத்தை அதிகமாகக் கொடுப்பார்கள். ஆனால்,அதைப்பற்றி வின்சென்ட்டுக்கு என்ன கவலை? கூடுமானவரை அதிக ஓவியங்களை அவன் விற்க வேண்டும். இதுதானே அவன் வேலை?
பாரீஸில் இருக்கும் குபில்ஸில் இருந்து வந்திருந்த பார்சலை வின்சென்ட் அவிழ்த்துப் பார்த்தான். ஸெஸார்டி காக் அனுப்பி இருக்கிறார். மேலே எழுதப்பட்டிருந்தது: “வின்சென்ட்டிற்கும் ஊர்ஸுலாவிற்கும்... லெஸாமித் மெஸாமி ஸாங் மெஸாமி” (என் நண்பர்களின் நண்பர்கள் எனக்கும் நண்பர்களே என்பது இதன் அர்த்தம்.)
இதை ஊர்ஸுலாவிடம் கொடுக்கிறபோது, மனதைத் திறந்து கூறி விட வேண்டியதுதான் என்ற தீர்மானத்திற்கு வந்தான் வின்சென்ட். வயது இருபத்திரெண்டு ஆகிவிட்டது. ஒரு மாதத்திற்கு ஐந்து பவுன் சம்பளமாகக் கிடைக்கிறது. இனியும் ஏன் காத்திருக்க வேண்டும்?
எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்தது குபில்ஸின் அந்த அறை. நேரம் படு வேகமாக நீங்கிக் கொண்டிருந்தது. முன்பு குபில் அண்ட் கம்பெனிக்காக சராசரி ஐம்பது புகைப்படங்கள் விற்பனை செய்வான் வின்சென்ட். ஆயில் ஓவியங்களும், எச்சிங்குகளும் விற்கத்தான் அவனுக்கு விருப்பம் அதிகம். எனினும், கம்பெனிக்கு வருமானம் அதிகமாகக் கிடைப்பது குறித்து அவனுக்கு மனப்பூர்வமான மகிழ்ச்சியே. உடன் பணியாற்றும் நபர்கள் எல்லோருக்குமே வின்சென்ட்டை மிகவும் பிடிக்கும். அவனும் எல்லோரிடமும் நல்ல அன்பு பாராட்டக் கூடியவன்தான். ஒன்றாகச் சேர்ந்து உலகத்தில் நடக்கும் பல விஷயங்களையும் அவர்கள் பேசுவார்கள்- விவாதிப்பார்கள்.
இளம் பிராயத்தில் வின்சென்ட்டுக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது. யாரோடும் அதிகம் பழகாமல், வித்தியாசமான ஒரு பையனாக சுற்றிக் கொண்டிருப்பான். ஆனால், அவனின் பழக்க வழக்கங்களையும் நடவடிக்கைகளையும் மாற்றியது முழுக்க முழுக்க ஊர்ஸுலாதான். மற்றவர்களுடன் எப்படி நெருங்கி மனம் விட்டு பழகுவது என்பதை அவனுக்குச் சொல்லித்தந்ததே அவள்தான். தனக்குள் ஒரு உலகத்தை அமைத்துக் கொண்டு சுருண்டு கிடக்காமல், தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது, சின்னச் சின்ன விஷயங்களில் கூட உன்னதங்கள் எப்படி மறைந்திருக்கின்றன என்பதை எல்லாம் ஊர்ஸுலா மூலம்தான் வின்சென்ட் தெரிந்து கொண்டான்.
ஆறு மணிக்கு ஸ்டோர் அடைக்கப்பட்டது. வெளியே புறப்படத் தயாரானபோது மிஸ்டர் ஓபாக், வின்சென்ட்டை அழைத்தார்.
“உன்னோட சித்தப்பா உன்னைப் பற்றி விசாரிச்சு கடிதம் எழுதியிருக்காரு. தொழில்ல நல்ல அக்கறையோட இருக்கியான்னு கேட்டு எழுதியிருக்காரு. இங்க நல்லா வேலை பாக்குற க்ளார்க்குகள்ல வின்சென்ட்டும், ஒரு ஆளுன்னு நான் எழுதியிருக்கேன். மகிழ்ச்சிதானே?”
“உங்களோட நல்ல மனசுக்கு நன்றி.”
“அது இருக்கட்டும். வர்ற கோடை விடுமுறைக்குப் பிறகு நீ அந்தப் பின்னாடி அறையை விட்டுட்டு, லித்தோ கிராஃபி, எச்சிங் இருக்கிற அறைக்கு வந்திடணும்.”
“அப்படி வர்றதா இருந்தா, அது எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் சார். காரணம் – நான்... நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.”
“அப்படியா? நல்ல விஷயமாச்சே... எப்போ செய்யப் போறே?”
“அனேகமா இந்தக் கோடை சமயத்துல இருக்கும்.” திருமணம் எப்போது என்பதை அவன்தான் இன்னும் நிச்சயம் செய்யவே இல்லையே...
“ரொம்ப நல்லது. உனக்கு சமீபத்துலதானே சம்பள உயர்வு கொடுத்தது! கல்யாணம் நடந்த பிறகு, இன்னும் கொஞ்சம் சம்பளத்தை உயர்த்தித் தர்றோம்.”
¤ ¤ ¤
“அந்த ஓவியத்தை இப்போ எடுத்துத் தர்றேன், ஊர்ஸுலா”- இரவு உணவுக்குப் பிறகு நாற்காலியைப் பின்னால் நகர்த்தியவாறு வின்சென்ட் சொன்னான்.
நவ நாகரீக பாணியில் எம்ப்ராய்டர் செய்யப்பட்ட பச்சை வர்ண ஆடையில், அழகுப் பொம்மை என இருந்தாள் ஊர்ஸுலா.