வான்கா - Page 6
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8806
மறுநாள் காலையில் வின்சென்ட்டைத் தூக்கத்தில் இருந்து எழுப்பயாரும் வரவில்லை. படுக்கையை விட்டு சோம்பல் முறித்தவாறு எழுந்தான். எந்தவித உற்சாகமும் இல்லாமல் முகச் சவரம் செய்தான். ஒழுங்காக சவரம் செய்யாததால், முகத்தில் ஆங்காங்கே சிறு சிறு ரோமங்கள் தெரிந்தன. ஊர்ஸுலா காலை உணவு சாப்பிட வரவில்லை. வின்சென்ட் குபில்ஸை நோக்கி நடந்தான்.
வழியில் நேற்று பார்த்த அதே மனிதர்கள். ஆனால், இன்று அவர்கள் முற்றிலும் மாறிப் போயிருந்தது மாதிரி தெரிந்தது வின்சென்ட்டிற்கு. அவர்கள் ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு தனிமைப்பட்டுப் போயிருக்கின்றனர். சாதாரண வேலைகளைப் பார்க்கக்கூட எப்படி எல்லாம் வேகவேகமாக அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த சூரியனோ, சாலையின் இரு பக்கங்களிலும் மலர்ந்து அழகு செய்து கொண்டிருக்கின்ற லபேர்ணமோ, செஸ்ட்நட்டோ வின்சென்ட்டின் கண்களில் படவில்லை.
அன்று பகலில் ஆங்க்ரா வரைந்த ‘வீனஸ்’ என்ற ஓவியத்தின் இருபது காப்பிகளை விற்பனை செய்தான் வின்சென்ட். குபில்ஸிக்கு அதில் நல்ல லாபம். இருந்தாலும், முன்பு மாதிரி வின்சென்ட்டுக்கு அதனால் மகிழ்ச்சி உண்டாகவில்லை. கலை வாசனையே இல்லாமல் ஓவியம் வாங்க வந்தவர்களிடம் எரிந்து விழுந்தான் அவன்.
“நம்ம வான்காவுக்கு என்ன ஆச்சு?”- அவனுடன் வேலை செய்யும் நண்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
“இந்த ஆளு காலையில படுக்கையை விட்டு எழுந்திருக்கிறப்ப கட்டிலோட தப்பான பக்கத்துல எந்திருச்சி இறங்கி இருப்பானோ என்னவோ!”- ஒரு ஆள் கிண்டல் பண்ணினான்.
“இந்த ஆளு ஏன் இப்படி எல்லாம் சிந்திச்சுத் திரியணும்?”- இன்னொரு ஆள் சொன்னான்: “இந்த ஆளோட சித்தப்பா வின்சென்ட் வான்கா பாரீஸ், பெர்லின், ப்ரஸ்ஸெல்ஸ், தி ஹேக், ஆம்ஸ்டர்டாம் ஆகிய இடங்கள்ல இருக்கிற குபில்ஸ் காலரிகளோட பாதி சொந்தக்காரர். அவருக்குப் பேர் சொல்லக் கூட குழந்தைகள் கிடையாது. போதாக்குறைக்கு அவர் நோயாளி வேற. தன்னோட சொந்த வியாபாரத்தை முழுசா இந்த ஆளுக்கு அவர் கொடுத்து விடுவார்னு பொதுவா சொல்றாங்க.”
“சில பேருக்கு இப்படித்தான் அதிர்ஷ்டம் தேடி வரும்”
“அதோட கதை முடியல. இன்னும் இருக்கு”- இன்னொரு ஆள் சொன்னான்: “ஹென்ட்ரிக் வான்காவுக்கு ப்ரஸ்ஸெல்ஸிலும் ஆம்ஸ்டர்டாமிலும் விற்பனை சாலைகள் இருக்கு. அந்தக் குடும்பத்துல மூணாவது ஆளான கார்ணீலியஸ் வான்கா போலண்ட்டில இருக்கிற மிகப்பெரிய ஆர்ட் காலரியோட உரிமையாளர். ஐரோப்பா கண்டத்திலேயே வான்கா குடும்பத்தினர் தான் இருப்பதிலேயே பெரிய கலை வியாபாரிகள். நம்ம சிவப்புத் தலை நண்பன் நிச்சயமா ஒரு நாள் உலகத்தையே ஆட்டிப் படைக்கிற அளவுக்கு பெரிய கலை வியாபாரியா வரத்தான் போறான்.”
அன்று இரவு வின்சென்ட் லோயர் இல்லத்தின் சாப்பாட்டு அறைக்குச் சென்றான். ஊர்ஸுலாவும் அவளின் தாயும் தங்களுக்குள் ஏதோ மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். வின்சென்ட்டைப் பார்த்ததுதான் தாமதம். தங்கள் பேச்சை அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள்.
ஊர்ஸுலா சமையலறைக்கு ஓடினாள். மேடம் லோயரின் கண்களில் ஒரு வகை கருமை தெரிந்தது.
வின்சென்ட் தான் மட்டும் தனியே அமர்ந்து உணவை அருந்தினான். ஊர்ஸுலாவின் நடவடிக்கை அவனின் மனதில் ஏமாற்றத்தை உண்டாக்கி இருந்தாலும், தான் தோற்று விட்டதாக அவன் ஒத்துக் கொள்ளத்தயாராக இல்லை. ‘இல்லை’ என்ற பதிலை மட்டும் அவன் என்றுமே ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவளின் மனதைவிட்டு ஏற்கனவே குடியேறி இருக்கிற அந்த மனிதனை வெளியேற்ற வேண்டும். அவன் தெளிவாக தீர்மானித்திருந்த விஷயம் இதுதான்.
அதற்குப் பிறகு ஒரு வாரம் கழித்துத்தான் ஊர்ஸுலாவுடன் பேசுவதற்கான வாய்ப்பே அவனுக்குக் கிடைத்தது. இவ்வளவு நாட்களும் அவனால் சரிவர உறங்கவோ, ஒழுங்காக உணவு சாப்பிடவோ முடியவில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு நாளும் பைத்தியம் பிடித்தவனைப்போல் அவனின் வாழ்க்கை நீங்கிக் கொண்டிருந்தது. கண்களில் இருந்த ஒளி இருந்த இடம் தெரியாமல் வேறெங்கோ காணாமல் போயிருந்தது. சொல்லப் போனால் அவனால் பேசக் கூட முடியவில்லை. வார்த்தைகளைத் தேடிப் பிடிக்க வேண்டி இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்குப் பிறகு, வின்சென்ட், ஊர்ஸுலாவுக்குப் பின்னாலேயே தோட்டத்திற்குப் போனான்.
“ஊர்ஸுலா... அன்னைக்கு ராத்திரி நீயே பயப்படுற அளவுக்கு நான் நடந்ததற்காக உண்மையாகவே வருத்தப்படுறேன்.”
தன் அகன்ற, குளிர்ச்சியான கண்களால் வின்சென்ட்டைப் பார்த்தாள் ஊர்ஸுலா. “எனக்குப் பின்னாடி ஏன் வந்தே?” என்ற கேள்வி அந்தப் பார்வையில் தெரிந்தது.
“பரவாயில்ல...”- ஊர்ஸுலா சொன்னாள்: “நாம ரெண்டு பேருமே அதை மறந்திடுவோம்”
“நான் உன்கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்கிட்டதுக்காக மன்னிப்பு கேட்டுக்கறேன். ஆனால், அன்னைக்கு நான் சொன்னது அத்தனையும் உண்மை... உண்மை...”
வின்சென்ட் அவளை நோக்கி ஒரு அடி முன்னால் நடந்தான். ஊர்ஸுலா சற்று பின்னால் நகர்ந்தாள்.
“அதைப் பற்றி இப்போ பேசறதுக்கு என்ன இருக்கு? அந்த நிகழ்ச்சியை நான் எப்பவோ மறந்துட்டேன்”
அவள் திரும்பி நடந்தாள். அவளைத் தொடர்ந்தான் வின்சென்ட்.
“நீ என்னை விட்டு ஓடணும்னு ஏன் நினைக்கிறே?”
“நாம உள்ளே போவோம். அம்மா காத்திருக்காங்க.”
“இன்னொரு ஆளை நீ காதலிக்கிறதா சொல்றது சுத்த பொய். நீ சொல்றது உண்மையா இருந்தா அதை உன் கண்களிலேயே என்னால் பார்க்க முடியும்.”
“உன் கூட பேசிக்கிட்டு இருக்கிறதுக்கு எனக்கு இப்போ நேரமில்லை. நீ எப்போ விடுமுறையில ஊருக்குப் போறே?”
“ஜூலையில...”- திக்கிய குரலில் சொன்னான் வின்சென்ட்.
“நல்லதாப் போச்சு... என் எதிர்கால கணவர் விடுமுறையில என்னோட இருக்க வர்றாரு. அவர் ஏற்கனவே இருந்த அறை இப்போ அவருக்கு தேவைப்படும்.”
“உன்னை அந்த ஆளுக்கு நான் விட்டுத் தர்றதா இல்ல...”
“நீ இந்த மாதிரி பேசுறதை நிறுத்து. இல்லாட்டி வேற இடத்துல போய் தங்கச் சொல்லி அம்மா சொன்னாங்க...”
¤ ¤ ¤
அடுத்த இரண்டு மாத காலமும் அவளின் மனதை மாற்ற வின்சென்ட் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான். நாளடைவில் முன்பு இருந்த மாதிரி நடக்கத் தொடங்கினான். தனக்குள் ஒரு உலகத்தை அமைத்துக் கொண்டு அதன்படி அவன் செயல்பட்டான். ஊர்ஸுலா இல்லாத நேரத்தில் சதா நேரமும் அவளைப் பற்றிய நினைப்புடன் கால்போன இடமெல்லாம் நடந்து திரிந்தான். கடையில் வேலை பார்க்கும் எல்லோரிடமும் தேவையில்லாமல் சண்டை போட்டான். ஊர்ஸுலாவுடன் பழகிய பிறகு உண்டான உற்சாக உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. சுண்டர்ட்டில் அப்பா-அம்மாவுக்கு தெரிந்த அந்த பழைய வின்சென்ட்டாக, அமைதியே வடிவமான எந்த நேரமும் கவலை தோய்ந்த முகத்துடன் காட்சியளிக்கும் வின்சென்ட்டாக அவன் மாறிப்போனான்.