வான்கா - Page 9
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8806
“இந்த தரம் தாழ்ந்த பொருட்களை விற்று பெரிய அளவில் லாபம் சம்பாதிப்பது நல்லதா? இங்கு ஓவியங்கள் வாங்க வர்ற பணக்காரர்களுக்கு மிகத் தரமான- உயர்வான ஓவியங்களைப் பார்க்கிறப்போ அவர்களுக்கு அவை பிடிக்க மாட்டேங்குது. பணம் அவங்களோட பார்வையையே குருடாக்கிடுது. அதே நேரத்துல கலை அம்சம் உள்ள ஓவியங்களை ரசிப்பவர்கள் கையில் காசு இல்லை. இதுதான் புரியாத புதிரா இருக்கு.”
“என்ன சோஷலிஸமா பேசிக்கிட்டு இருக்கே!”- வியப்புடன் வின்சென்ட்டைப் பார்த்தவாறு கூறினார் ஒபாக்.
வீட்டிற்குத் திரும்பி வந்த வின்சென்ட் ரெனானின் (பிரெஞ்சு ஓவியன்,விமர்சகன்) புத்தகத்தில் தான் அடிக்கோடிட்டு வைத்திருந்த பக்கத்தைப் பிரித்து வைத்து படிக்க ஆரம்பித்தான். “இந்த உலகத்தில் ஒரு பெரிய ஆளாக வரவேண்டும் என்றால், அவன் தனக்குத்தானே பல முறை செத்துப் பிழைக்க வேண்டும். அதாவது- தனக்குத்தானே பல வழிகளிலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். மனிதன் இந்த பூமியில் பிறந்ததன் நோக்கம் வெறுமனே மகிழ்ச்சியுடன், உண்மையானவனாக வாழ்வதற்கு மட்டுமல்ல, மனித நன்மைக்காக பல சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே அவன் இங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறான். இருளைக் கிழித்து ஒளியை உண்டாக்க வேண்டிய அவனின் தலையாய கடமை.”
¤ ¤ ¤
“கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே லோயர் குடும்பம், அழகான ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டின் முன் பக்க வாசல் பக்கத்தில் நட்டது. இரண்டு இரவுகள் கழிந்த பிறகு எல்லா அறைகளும் வெளிச்சத்தில் மூழ்கிக் கிடப்பதையும், விருந்தினர்கள் அங்கு அதிகமாக நடமாடிக் கொண்டிருப்பதையும் வின்சென்ட் பார்த்தான். வீட்டுக்குள் இருந்து சிரிப்பு சத்தம் நிறையவே கேட்டது. அங்கு கிறிஸ்துமஸ் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. வின்சென்ட் வீட்டை நோக்கி ஓடினான். என்ன நினைத்தானோ உடனடியாக முகத்தைச் சவரம் செய்தான். புதிய ஆடைகள் அணிந்து, கழுத்தில் டை கட்டி மீண்டும் லோயர் ஹவுஸை நோக்கி நடந்தான். அந்த வீட்டின் படிகளுக்குக் கீழே எந்தவித அசைவும் இல்லாமல் அமைதியாக நின்றான்.
என்ன இருந்தாலும் இது கிறிஸ்துமஸ் நாளாயிற்றே! பொறுமையும், கருணையும் தன்னைச் சுற்றிலும் சூழ்ந்திருப்பதாக உணர்ந்தான் வின்சென்ட். படிகளில் ஏறி கதவைத் தட்டினான் அவன். அவனுக்கு நன்கு அறிமுகமாகியிருந்த ஒரு காலடி சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அவனை நெருங்கி வந்து கொண்டிருந்தது. கேட்பதற்கு மிக மிக இனிமையான அந்த காலடி ஒலிகள் அவனின் இதயத்தை நோக்கி என்னவோ கூறுவதாக உணர்ந்தான் அவன். வாசல் கதவு திறந்தது. வின்சென்ட்டின் முகத்தில் விளக்கொளி விழுந்தது. அவன் தன்முன் நின்றிருந்த ஊர்ஸுலாவைப் பார்த்தான். கை இல்லாத பச்சை வர்ணத்தில் ஆடை அணிந்திருந்தாள். கழுத்தில் பெரிய பட்டை. மெல்லிய சல்லடை போன்ற அலங்காரங்கள். அவளை இந்த அளவிற்கு ஒரு பேரழகியாக இதற்கு முன்பு அவன் எப்போதும் பார்த்ததே இல்லை.”
“ஊர்ஸுலா...”
அன்று தோட்டத்தில் தான் கூறிய வார்த்தைகளை இன்னொரு முறை அவனிடம் கூற அவள் விழைவது மாதிரி அவளது முக பாவம் இருந்தது.
“இங்க நிக்காதே... போ...”- வேகமாக கூறிய ஊர்ஸுலா வாசல் கதவை அவனின் முகத்தில் அடிப்பது மாதிரி அடைத்தாள்.
அடுத்த நாள் வின்சென்ட் ஹாலண்டுக்குக் கப்பல் ஏறினான்.
¤ ¤ ¤
கிறிஸ்துமஸ் காலத்தில் குபில் காலரிகளில் எப்போது பார்த்தாலும் ஒரே கூட்டமாக இருக்கும். ஹாலண்டுக்குப் போவதாக ஒரு வார்த்தைகூட சொல்லி அனுமதி வாங்காமல் வின்சென்ட் போனதற்காக அவன் மீது குற்றம் சுமத்தி மிஸ்டர் ஓபாக், அவனின் சித்தப்பாவுக்குக் கடிதம் எழுதினார். அவனின் சித்தப்பா, வின்சென்ட்டை பாரீஸில் ர்யூ காப்தாலில் இருக்கும் பெரிய காலரிக்கு வேலை மாற்றம் செய்ய தீர்மானித்தார்.
கலைப்பொருட்களை விற்பனை செய்யும் எண்ணம் இனி தனக்கு இல்லை என்பதை அமைதியாக நின்றவாறு கூறினான் வின்சென்ட். அதைக் கேட்டதும் உண்மையிலேயே அதிர்ந்து போனார் அவனின் சித்தப்பா. இப்படிப் பேசினால் இனி எதிர்காலத்தில் அவனுக்காக தான் எதுவும் செய்வதாக இல்லை என்பதை திட்டவட்டமான குரலில் கூறினார் அவர். இருந்தாலும், விடுமுறை கழிந்த பிறகு தன் பெயரைக் கொண்ட அவனுக்கு டோர்ட்ரெக்ட் என்ற இடத்தில் இருக்கும் ப்ளூஸெ அண்ட் ப்ராம் புத்தகக் கடையில் ஒரு வேலையை அவர் ஏற்பாடு பண்ணி கொடுக்கவே செய்தார். இரண்டு வின்சென்ட் வான்காக்களுக்குமிடையில் உண்டான கடைசி சந்திப்பு அதுதான்.
டொர்ட்ரெக்தில் வின்சென்ட் நான்கு மாதங்கள் தங்கினான். மகிழ்ச்சியும், துக்கமும் இல்லாமல் வெற்றியும், தோல்வியும் இல்லாமல் – மொத்தத்தில் எந்தவித பரபரப்பும் இல்லாமல், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை.
வின்சென்ட்டிற்கு ஏனோ அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. ஒரு சனிக்கிழமை வின்சென்ட் ஒளடன் பாஸ்க்கிற்குப் போகிற கடைசி வண்டியைப் பிடித்தான். அங்கிருந்து சுண்டர்ட்டை நோக்கி கால் நடையாக நடந்தான்.
வழியெங்கும் கண்ணைக் கவரும் அழகான காட்சிகள். இயற்கை தன் அழகை எல்லா இடங்களிலும் அள்ளி கொட்டியிருந்தது. அந்த இரவு நேரத்தின் குளிர்ந்த காற்றில் அருமையான வாசனை மிதந்து வந்தது. இருட்டில் பைன் மரங்களும், சதுப்பு நிலமும் தெளிவாகத் தெரிந்தன. வானத்தில் மேகங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. மேலே நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. தூரத்தில் சோளக் காட்டில் வானம்பாடிகள் பாடிக் கொண்டிருந்தன.
வின்சென்ட் என்னவோ மன சஞ்சலத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் அவனின் தாயும் தந்தையும் புரிந்து கொண்டார்கள். தியோடரஸுக்கு இடம் மாற வேண்டிய சூழ்நிலை உண்டானதால், அவர் எற்றன் என்ற சிறு நகரத்திற்கு வீட்டை மாற்றினார்.
நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. வின்சென்ட் அடுத்து என்ன செய்வது என்று ஒரு தீர்மானமும் எடுக்காமல் வெறுமனே சிலை என இருந்தான். என்ன முடிவு எடுப்பது என்றே அவனுக்குத் தெரியவில்லை.
“உனக்கு இந்த வேலை எல்லாம் சரியாக இருக்காது வின்சென்ட். கடவுளுக்குச் சேவை செய்யிறதுதான் உனக்குப் பொருத்தமா இருக்கும்”- தியோடரஸ் கூறினார்.
“எனக்கு அது தெரியும் அப்பா.”
“பிறகு ஏன் ஆம்ஸ்டர்டாமுக்குப் போய் இது விஷயமா நீ படிக்கக் கூடாது?”
“எனக்கும் இதுல விருப்பம்தான். ஆனால்...”
“ஏன் ஒரு முடிவு எடுக்க உன்னால் முடியலையா?”
“ஆமா... அதுதான் உண்மை. ஏன் இப்போ தெளிவான ஒரு முடிவை என்னால எடுக்க முடியலைன்றதுக்கான காரணத்தை இப்போது என்னால சொல்ல முடியாது. எனக்கு தயவு செய்து கொஞ்சம் முடிவெடுக்க நேரம் கொடுங்க.”