வான்கா - Page 11
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8806
ட்யூஷன் கட்டணத்தை வசூல் செய்வதற்காக மிஸ்டர் ஜோன்ஸ், வின்சென்ட்டை லண்டனுக்கு அனுப்பினார். அவனிடம் பாடம் கற்ற மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பயங்கர தரித்திர சூழ்நிலையில் இருந்து வருபவர்களாக இருந்தார்கள். தெருக்கள் அசுத்தம் நிறைந்து நாறின. அங்கு அவன் கண்டவர்கள், கிழிந்துபோன ஆடைகளை அணிந்து, அழுகிப் போன மாமிசத்தையும் காய்ந்து போன ரொட்டியையும் தின்று உயிர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஊர்ஸுலா பற்றிய நினைவுகளுக்குப் புத்துயிர் கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன்தான் லண்டன் பள்ளியிலேயே கால் வைத்தான் வின்சென்ட். ஆனால், இந்த வறுமைக் கோலக் காட்சியைப் பார்த்த பிறகு ஊர்ஸுலாவைப் பற்றிய நினைவை, அவன் சொல்லப் போனால் மறந்து போனான். ஒரு பைசாகூட யாரிடமும் வாங்காமல் அவன் ஐஸ்ல்வொர்த்திற்குத் திரும்பினான்.
ஒரு வியாழக்கிழமை வின்சென்ட் பேசுவதற்காக தயார் செய்து வைத்திருந்த சர்ச் பிரசங்கத்தைக் கேட்க விரும்பினார் மிஸ்டர் ஜோன்ஸ். சொல்லப்போனால் கொஞ்சம் நடுக்கத்துடனேயே மேடை ஏறினான் வின்சென்ட். இதற்கு முன்பு இத்தகைய அனுபவம் இல்லாததால் அவன் முகம் வெளிறிப் போயிருந்தது. கைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாததால் ஒருவித செயற்கைத் தனத்துடன் அவை தொங்கிக் கொண்டிருந்தன. வாயிலிருந்து பேச்சே சரியாக வரவில்லை. வெளியே குரல் வரவே யோசித்தது. தடுமாறி தடுமாறி பேசினான் வின்சென்ட். ஆனால், ஒரு விஷயம் உண்மை. தன் மன வெளிப்பாடு முழுமையாக பேச்சில் இரண்டற கலந்திருந்தது என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது.
“உன் பேச்சு ரொம்ப நல்லா இருந்துச்சு, வின்சென்ட்...”- மிஸ்டர் ஜோன்ஸ் சொன்னார்: “அடுத்த வாரம் உன்னை ரிச்மண்டுக்கு அனுப்புறேன்.”
ஒரு இளவேனிற்கால நாளில் ஐஸ்ல்வொர்த்தில் இருந்து ரிச்மண்டை நோக்கி தேம்ஸ் நதியின் கரை வழியே பயணமானான் வின்சென்ட். நதி நீரில் நீலவானமும், மஞ்சள் இலைகளை உடைய பெரிய செஸ்ட்நட் மரங்களும் தெரிந்தன. புதிய டச் பாதிரியாரை தாங்கள் மிகவும் விரும்புவதாக ரிச்மண்டைச் சேர்ந்த நடுத்தர மக்கள் கடிதங்கள் மூலம் தெரிவித்திருந்தார்கள். அதனால்தான் இப்படியொரு வாய்ப்பை வின்சென்ட்டுக்கு உருவாக்கித் தந்தார் மிஸ்டர் ஜோன்ஸ். அவரின் டேண் ஹாம் க்ரீன் சர்ச் மிகவும் பிரபலமானது. அந்த சர்ச்சில் வழிபாடு நடத்த வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்கள். எதையும் புத்தி கூர்மையுடன் அணுகத் தெரிந்தவர்கள். அந்த சர்ச்சில் மட்டும் வின்சென்ட் நன்றாக பிரசங்கம் செய்துவிட்டால், வேறு எந்த சர்ச்சிலும் சர்வ சாதாரணமாக அவனால் பிரசங்கம் செய்ய முடியும் என்று திடமாக நம்பினார் மிஸ்டர் ஜோன்ஸ்.
சங்கீதம் 119 – 19 தான் தன் பிரசங்கத்திற்காக வின்சென்ட் தேர்ந்தெடுத்திருந்தது. “இந்த பூமியில் நான் ஒரு பரதேசி. உங்கள் கருத்தை எனக்குத் தெரியாமல் மறைத்து வைக்காதீர்கள்”- வின்செட்டின் குரல் மென்மையாக இருந்தாலும், அதில் நல்ல அழுத்தம் இருந்தது. அவனின் இளமைத் தோற்றமும், பெரிய தலையும், பிரசங்கத்தின் உஷ்ணமும், வலிமையும் – அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களை அதிகமாகவே கவர்ந்தன.
பிரசங்கம் முடிந்ததும், அங்கு கூடியிருந்த பலரும் அருகில் வந்து வின்சென்ட்டின் கையைப் பிடித்து மனம் திறந்து பாராட்டினார்கள். சுற்றிலும் மறைக்கப்பட்டிருந்த அந்தத் தனி இடத்தில் ஒரு கனவு காணும் மனிதனைப்போல நின்று புன்சிரிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் வின்சென்ட். எல்லோரும் இடத்தைவிட்டு நீங்கியதும், பின் வாசல் வழியாக வெளியேறி நடந்தான். அவன் கால்கள் லோயர் இல்லத்தை நோக்கி நடந்தன.
வெளியே காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. வின்சென்ட் கோட், தொப்பி எதுவும் அணியாமல் வந்திருந்தான். தேம்ஸ் நதி நீரின் நிறம் மஞ்சளாக இருந்தது. சூரியனின் மென்கதிர்கள் பட்டு நீர் ஜொலித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஆகாயம் சாம்பல் வர்ண மேகங்களால் மூடப்பட்டது. இலேசாக தூறல் மேலே விழுந்தது. உடல் நனைந்தாலும், அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் வின்சென்ட் படுவேகமாக நடந்து போனான். அவனின் மனதில் இனம் புரியாத ஒரு உற்சாகம் இருந்தது.
அவனின் வாழ்க்கையின் நோக்கம் அவனுக்கு இப்போது புரிந்துவிட்டது. தன் வாழ்க்கைப் பாதை எந்த திசையை நோக்கி போக வேண்டும் என்பதை அவன் தெரிந்து வைத்திருக்கிறான். அவன் தான் யார் என்பதையே இப்போதுதான் கண்டு பிடித்திருக்கிறான். தான் கண்டுபிடித்த இந்த விஷயத்தை ஊர்ஸுலாவிடம் இப்போதே கூற வேண்டும். தன் மன மகிழ்ச்சியை அவளுடன் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
மழை கொஞ்சம் பலமாகவே பெய்தது. ஹாத்தோன் செடிகள் இப்படியும் அப்படியுமாய் பேயாட்டம் ஆடின. தூரத்தில் நகரம், கோபுரங்களும், மில்களும், கோதிக் பாணியில் அமைக்கப்பட்ட வீடுகளும் கொண்டு ஜெர்மன் நாட்டு ஓவியன் ட்யூரர் வரைந்த ஓவியத்தைப் போல கம்பீரமாக இருந்தது.
மழை நீர் தலை வழியே ஒழுகி காலில் அணிந்திருந்த பூட்ஸை நிறைத்தது. லோயர் இல்லத்தை வின்சென்ட் அடைந்தபோது, மாலை நேரமாகிவிட்டிருந்தது. தவிட்டு நிறம் கலந்த மாலை நேரம். தூரத்தில் வருகிற போதே லோயர் இல்லத்திலிருந்து புறப்பட்டு வந்த வயலின் இசையை வின்சென்ட்டால் கேட்க முடிந்தது. எல்லா அறைகளிலும் ஒரே வெளிச்ச மயம். வெளியே ஏகப்பட்ட வாகனங்கள் நிறைந்திருந்தன. ஹாலில் ஆட்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். மழையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வண்ணம் பெரிய ஒரு குடையின் கீழ் தன்னைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்த வண்டிக்காரனைப் பார்த்து, “என்ன இங்கே ஒரே கூட்டம்?” என்று கேட்டான் வின்சென்ட்.
“அனேகமாக கல்யாணம் நடக்குதுன்னு நினைக்கிறேன்”- அவன் சொன்னான்.
வின்சென்ட் ஒரு வாகனத்தின் மேல் சாய்ந்தவாறு நின்றான். அவனின் சிவந்த முடியில் இருந்து மழை நீர் ஒழுகி முகத்தில் வழிந்தது. சிறிதுநேரத்தில் வாசல் கதவைத் திறந்தார்கள். ஊர்ஸுலாவும் அவளுக்கு அருகில் ஒரு வாலிபனும் அவன் கண்ணில் பட்டார்கள். ஹாலில் கூடியிருந்த ஆட்கள் சிரித்து, ஆரவாரம் எழுப்பி அவர்கள் மேல் அரிசியை வீசி எறிந்தார்கள்.
வின்சென்ட் இருளான ஒரு மூலையில் போய் ஒதுங்கி நின்றான். ஊர்ஸுலாவும் அவளின் கணவனும் வண்டியில் ஏறினார்கள். வண்டிக்காரன் சாட்டையைச் சுழற்றினான். வண்டி மெல்ல அந்த இடத்தைவிட்டு புறப்பட்டது. சில அடிகள் வண்டி முன்னால் சென்றதும், வின்சென்ட் வண்டிக்குள் தன் பார்வையைச் செலுத்தினான். ஊர்ஸுலாவும் அவளின் கணவனும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்தவாறு அமர்ந்திருந்தார்கள். அவளின் உதடுகள் அவனின் உதடுகளைக் கவ்விக் கொண்டிருந்தன. வண்டி வேகமாக முன்னேறியது.