வான்கா - Page 15
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8808
“இந்த தொழிலாளிகளோட வாழ்க்கை எந்த அளவுக்கு துயரம் நிறைந்ததா இருக்குன்னு ஒரு நிமிடம் நினைச்சுப் பாரு. உடம்புல நோய் வந்தா அதைக் குணப்படுத்த இவங்க கையில பணம் கிடையாது. நாளைக்கு சாப்பிடணும்னா இன்னைக்கு ஒழுங்கா வேலை பார்த்தாத்தான் அது நடக்கவே செய்யும். இவங்க குடியிருக்கிற வீடு எந்த அளவுக்கு சின்னதா இருக்குன்னு பாரு. எங்கே பார்த்தாலும் வறுமையும், பட்டினியும்தான் தெரியுது. எந்த வசதியும் இல்லாத நிலையில் இவங்களோட வாழ்க்கை வண்டி ஓடிக்கிட்டிருக்கு. சொல்லப்போனால் வாழ்க்கைச் சக்கரத்துல சிக்கிக்கிட்டு இவங்க அல்லல்பட்டுக்கிட்டு இருக்காங்க. இவங்களுக்குத்தான் கட்டாயம் தெய்வம் தேவைப்படுது.”
“நகரத்துல இருக்கிறவங்களுக்கு...?”
“அவங்களுக்கென்ன? எல்லாமே இருக்கு. தினுசு தினுசா ஆடைகள் அணியிறாங்க. எதெல்லாம் வேணும்னு ஆசைப்படுறாங்களோ, அடுத்த நிமிடம் அது அவங்களுக்குக் கிடைக்குது. பேங்க்ல பணத்தைப் போட்டு வச்சிருக்காங்க. தெய்வத்தைப் பற்றி நகரத்துல இருக்கிறவங்க என்ன நினைக்கிறாங்க தெரியுமா? உலகத்துல எல்லாமே ஒழுங்கா நடந்துக்கிட்டு இருக்கு. இந்த நிலை இருப்பதற்கு மூல காரணமே கடவுள்தான். இது அவர்கள் நினைப்பு. இதுக்கு என்ன சொல்ற?”
“அதாவது... அவங்களுக்கு சிந்திச்சுப் பார்க்க மூளையே இல்லையா?”
“அப்படி நான் சொல்லல”
“நான் சொல்றேன்.”
¤ ¤ ¤
ஒரு வருடம் படு வேகமாகக் கடந்தோடியது. தான் இப்போது படித்துக் கொண்டிருக்கும் கல்வி தன் வாழ்க்கையில் எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தான் வின்சென்ட். பல மணி நேரம் உட்கார்ந்து படிக்கக் கூடிய இந்தக் கல்வி ஒரு விதத்தில் அவனைத் தளர்ச்சியடைய வைத்தது என்பதென்னவோ உண்மை. அதே நேரத்தில் இன்னொன்றையும் அவன் எண்ணிப் பார்க்காமல் இல்லை. ஸ்ட்ரிக்கரைப் போல் பிரபலமான ஒரு பாதிரியாராக வர வேண்டும் என்பதுதான் அவனின் இலட்சியமா என்ன? வறுமையில் வாடிக்கிடக்கும், ஏழ்மையில் உழன்று கிடக்கும் ஏழை மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அவனின் உள்மன விருப்பம் இன்னும் ஐந்து வருடங்கள் பலவிதத் தத்துவங்களையும், வசனங்களையும், இலக்கணங்களையும் கற்றுக் கொள்வதன் மூலம் நிறைவேறுமா? நிச்சயமாக இல்லை. இப்படிப் பல விஷயங்களையும் தனியே அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினான் வின்சென்ட்.
ஒரு மாலை நேரத்தில் வின்சென்ட்டின் மனதில் நடந்து கொண்டிருந்த முரண்பாடான போராட்டத்தை மெந்தெஸ் தெரிந்து கொள்ள நேர்ந்தது.
மழை பெய்து முடிந்து, ஆகாயம் நிர்மலமாக இருந்தது. கழுத்தில் ஒரு கம்பளி ஸ்கார்ஃபும் நீளமான காலரைக் கொண்ட கருப்பு நிற கோட்டும் அணிந்தவாறு மெந்தெஸ் வின்சென்ட்டுடன் நடந்து கொண்டிருந்தார்.
ஸ்பினோஸா (பெரிய தத்துவ அறிஞர். நாத்திகன் என்ற முத்திரை குத்தி யூத சமுதாயம் அவரின் உயிரையே எடுத்துவிட்டது) இறுதி மூச்சு விட்ட யூத சர்ச்சைத் தாண்டி, ரெம்ப்ராண்டின் பழைய வீடு இருந்த ஸீ ஸ்ட்ரேட் வழியாக அவர்கள் இருவரும் நடந்தார்கள். ரெம்ப்ராண்டின் வீட்டைப் பார்த்ததும் மெந்தெஸ் சொன்னார்: “ரெம்ப்ராண்ட் கடுமையான வறுமையையும் பலவித அவமானங்களையும் சந்திச்சுத்தான் மரணத்தைத் தழுவினார்.”
வின்சென்ட் தலையை உயர்த்தி மெந்தெஸ்ஸைப் பார்த்தான். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அதை நன்கு அலசிப் பார்த்து அதற்கு சரியான தீர்வு சொல்வதில் வல்லவர் மெந்தெஸ் என்ற உண்மையை நன்றாகவே அறிந்து வைத்திருந்தான் வின்சென்ட். அவனின் மற்ற சொந்தக்காரர்கள் எல்லாம் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் ‘உண்டு’ அல்லது ‘இல்லை’ என்று மட்டும்தான் அவர்களால் பதில் கூற முடியும். ஆனால், மெந்தெஸ் அப்படிப்பட்டவர் இல்லை. எந்த சமாச்சாரமாக இருந்தாலும் அதை வெறுமனே மேலோட்டமாகப் பார்க்காமல் தன் மனதின் அடித்தளத்திற்கு அதைக் கொண்டு சென்று அந்த விஷயத்தை தோலுரித்துப் பார்த்து நன்மை அதில் என்னென்ன இருக்கிறது தீமை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை எல்லாம் எடை போட்டுப் பார்க்கக் கூடிய மனிதர் அவர். சொல்லப்போனால், எல்லாவற்றையும் அலசிப் பார்த்து அவர் சொல்லக்கூடிய முடிவு நன்கு சிந்தித்துப் பார்த்த ஒன்றாக இருக்கும்.
“ஆனால், ரெம்ப்ராண்ட் சாகுறப்போ நிறைவான மனசோடதானே செத்திருக்கார்?”- வின்சென்ட் கேட்டான்.
“தன் மனதில் ஒரு பூரணத்தன்மை இருப்பதை ரெம்ப்ராண்டால் உணர முடிந்தது. சொல்லப் போனால், அவர் வாழ்ந்த காலத்தில் அந்த முழுமைத் தன்மையை உணர்ந்தவர் ரெம்ப்ராண்ட் மட்டும்தான்னு கூட சொல்லலாம்”- மெந்தெஸ் கூறினார்.
“அந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் அவர் இருந்தார்ன்றதுக்காக தான் செய்யிறதெல்லாம் சரின்னு அவருக்குப்பட்டிருக்குமோ? அவர் செய்தது ஒருவேளை தவறாக இருந்தால்...? உலகம் அவரைக் கண்டுக்காமப் போனதுகூட சரியான ஒரு விஷயமாக இருந்தால்...?”
“உலகத்தோட அபிப்பிராயத்தைப் பற்றி அவர் எந்தக் காலத்திலும் கவலைப்பட்டதே இல்லை. ரெம்ப்ராண்டிற்கு ஓவியம் வரையணும்ன்ற உள் மன உந்துதல் மட்டும் எப்பவும் இருக்கும். அது நல்ல ஓவியமா? மோசமான ஓவியமா என்று அந்த மனம் ஒருபோதும் சிந்திச்சுப் பார்த்ததில்லை. அந்த ஓவியக் கலைதான் அவரை ஒரு மனிதனா உலகத்துக்கு முன்னாடி நிறுத்திச்சு. ஒரு கலைஞனோட ஆத்ம வெளிப்பாடுதான் கலையா பரிணமிக்குது. ரெம்ப்ராண்டைப் பொறுத்தவரை அவரோட வாழ்க்கை இலட்சியம் நிறைவேறிடுச்சு. வாழ்க்கைக்கு நியாயமுள்ள மனிதனா அவர் நடந்திருக்கார். தன்னோட உள்மனப் போராட்டங்களையும், வேதனைகளையும் ஒரு மூலையில ஒதுக்கி வச்சிட்டு, அவர் நினைச்சிருந்தா ஆம்ஸ்டர்டாம்லயே பெரிய பணக்காரனா மாறி இருக்கலாம். ஆனால், அந்த மாதிரியான ஒரு விஷயத்தை அவர் செய்யவே இல்லை. அவற்றை எல்லாம் விட எத்தனையோ பெரிய வெற்றிகளை தன்னோட கலைப்படைப்புகள் மூலம் அவரால அடைய முடிஞ்சது.”
“நீங்க சொல்றது ரொம்ப சரி.”
“சமுதாயம் சொல்லப்போனால் அந்த மனிதரை விரட்டி விரட்டி வேட்டையாடுச்சு. அவரை இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பார்த்துச்சு. இதையெல்லாம் மீறி அவரோட வாழ்க்கை ஒரு வெற்றிகரமான வாழ்க்கையா அமைஞ்சு போச்சு. உள் மன எண்ணங்களோடு முழுமையான ஈடுபாடு – இதுதான் அவரோட வெற்றிக்கு பிரதான காரணம்!”
மணல் வண்டிகளுடன் போய்க் கொண்டிருந்த தொழிலாளர்களையே பார்த்தவாறு அவர்கள் இருவரும் சிறிது நேரம் நின்றனர்.
“தன்னோட வழி சரிதானா என்பதை ஒரு மனிதன் எப்படி தெரிஞ்சுக்க முடியும்?” – வின்சென்ட் கேட்டான்: “வாழ்க்கையில் ஏதாவது பெரிசா செய்யணும்னு நினைச்சு ஒரு காரியத்துல ஈடுபடுறோம்னு வச்சுக்கோங்க. கொஞ்ச நாள் கழிச்சு நாம செய்யிற அந்தக் காரியம் அவ்வளவு நல்லதா நமக்குப் படலேன்னா, அப்பா என்ன செய்யிறது?”