வான்கா - Page 16
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8808
மெந்தெஸ்ஸின் கறுத்த விழிகளில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. “இங்க பாரு வின்சென்ட். சூரிய அஸ்தமனம் அந்த மேகங்களை அழகுமயமா ஆக்குறதைப்பாரு.”
இதற்குள் அவர்கள் இருவரும் துறைமுகத்தை அடைந்திருந்தார்கள். படகுகளும், வீடுகளும், மரங்களும் அந்த மாலை நேர வெயிலில் ஒருவித அழகுணர்வுடன் காட்சியளித்தன.
“நாம யூத சர்ச்சுக்கு இப்போ போவோம்”- மெந்தெஸ் கூறினார்: “என்னோட முன்னோடிகள் உறங்கிக் கொண்டிருக்கின்ற கல்லறைகள் அங்கே இருக்கு. அங்கே போய் கொஞ்ச நேரம் உட்காருவோம்”
“எந்த நேரத்திலும் எல்லா விஷயத்தைப் பற்றியும் உறுதியான அபிப்ராயம் நம்மால கூற முடியாது, வின்சென்ட். உண்மையில் எது தேவை தெரியுமா? சரின்னு நம்ம மனசுக்கு எது தோணுதோ அதைச் செய்யிறதுக்கான துணிச்சல் நமக்கு இருக்கணும். சில நேரங்கள்ல நாமே தப்பு செஞ்சிடலாம். ஆனா, செய்ய வேண்டியதை நாம் செஞ்சிட்டோம்ன்றதுதான் இங்கே முக்கியம். நாம செய்யிற காரியத்தோட பலனை கடவுள்கிட்ட விட்டுடுவோம். உனக்கு தெய்வ சேவை முக்கியமான விஷயமாகப் பட்டால், அந்த நம்பிக்கைதான் உன்னோட எதிர்காலத்திற்கான வழிகாட்டியா இருக்கும்.”
“நான் அதற்கு தகுதியில்லாத ஆளாக இருந்தால்?”
“தெய்வத்தை வழிபடுவதற்கா?”
“இல்ல... பல்கலைக்கழகம் உற்பத்தி செய்யிற ஒரு அகாடெமிக் பாதிரியாரா ஆக...”
எல்டர் பெரி மரங்களும், பச்சைப் பசேல் என்ற பரந்துகிடந்த புல்வெளியும் நிறைந்த யூத சர்ச். கல்லறைகளில் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட வாசகங்கள். தகோஸ்தா குடும்பத்திற்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த ஒரு கல் பெஞ்சில் இருவரும் போய் அமர்ந்தார்கள்.
“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கு வின்சென்ட்”- தன் தாய், தந்தையரின் கல்லறைகளைப் பார்த்தவாறு மெந்தெஸ் கூறினார்: “நமக்குன்னு ஒரு சொந்த வழி இருக்கும். அந்த வழியில பயணம் செஞ்சால் கடைசியில் எல்லாமே நல்லபடியாக நடக்கும். நீ ஒரு ஓவியம் விற்பனை செய்யக்கூடிய ஆளா இருக்கலாம். இல்லாவிட்டால், ஒரு ஆசிரியரா இருக்கலாம். எந்த வேலைன்னு கிடையாது. எதை நீ தேர்ந்தெடுத்திருந்தாலும், நீ என்ன மற்றவர்களிடம் சொல்லணும்னு நினைக்கிறியோ, அதை என்னைக்கு இருந்தாலும் நீ சொல்லத்தான் செய்வே. அதை மட்டும் ஞாபகத்துல வச்சுக்கோ.”
“நான் ஒரு பாதிரியாரா வரணும்ன்றதுக்காக ஆம்ஸ்டர்டாம்ல தங்கலேன்னா?”
“அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய தேவையே இல்லை. நீ எதைச் செஞ்சாலும் ஒழுங்காச் செய்வேன்ற நம்பிக்கை எனக்கு பலமாவே இருக்கு. உன்னோட உள் மனசு என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். உன்னால என்னவெல்லாம் பண்ண முடியும் என்பதையும் நான் தெளிவாவே தெரிஞ்சு வச்சிருக்கேன். நீ நினைக்கலாம், வாழ்க்கையில நாம எத்தனை தடவை தோல்வியைச் சந்திச்சு கீழே விழுந்திருக்கோம்னு. எத்தனை தோல்விகளைச் சந்திச்சாலும் ஒருநாள் நிச்சயம் உனக்கு சிறகு முளைக்கும். அன்னைக்குத்தான் வாழ்க்கையோட பயன் என்னன்னு உனக்கே தெரியும். இது நிச்சயம் நடக்கப் போகுது, வின்சென்ட்.”
“மிக மிக நன்றி சார். நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் வேத வாக்கா நான் எடுத்துக்கறேன்.”
சூரியன் மெல்ல கடலுக்குப் பின்னால் மறைந்தது. கல்பெஞ்சில் குளிர்ச்சி தோன்றியது. மெந்தெஸ் எழுந்து நின்றார். மெதுவான குரலில் சொன்னார்: “நாம போகலாம் வின்சென்ட்.”
மறுநாள் மாலை நேரத்தில் தன் அறையின் ஜன்னல் அருகில் நின்று வெளியே பார்த்தான் வின்சென்ட். வெளியே துறைமுகம் தெரிந்தது. மாலை நேர ஆகாயம் பார்ப்பதற்கே சுகமாக இருந்தது. காற்றில் பாப்லார்ஸ் மரங்கள் இப்படியும் அப்படியுமாய் ஆடிக் கொண்டிருந்தன.
“லத்தீன் மொழியையும், கிரேக்க மொழியையும் கத்துக்காம போயிட்டா நான் ஒண்ணுக்குமே லாயக்கு இல்லாத மனிதனாப் போயிடுவேனோ!”- தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் வின்சென்ட்.
கீழே ஜான் அங்கிள் என்னவோ தீவிரமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார். தூரத்தில் படகுகள் ஒவ்வொன்றாக அணிவகுத்து கடலில் போய்க் கொண்டிருந்தன.
“கணக்கு படிக்க எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்ல. தெய்வ சேவை செய்வதில்தான் எனக்கு விருப்பம். பெரிய சர்ச்சுகளில் பந்தாவாகப் போய் நின்னுக்கிட்டு பிரசங்கம் பண்ண நான் தயாரா இல்லை. நான் எப்பவும் கஷ்டப்படுகிற மக்களோடு கலந்து வாழ நினைக்கிறேன். அதுவும் இந்த நிமிடத்தில் இருந்தே. ஐந்து வருஷம் இதுக்காக நான் காத்திருக்கத் தயாராக இல்ல...”
கீழே மணியடிக்கும் சத்தம் கேட்டது. தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக கேட்டை நோக்கி ஓடுகிறார்கள். கப்பல் தளத்தில் விளக்குகள் எரியத் தொடங்கின. வின்சென்ட் ஜன்னலை விட்டு நகர்ந்து சென்றான்.
வின்சென்ட்டின் தந்தையும், ஜான் அங்கிளும், ஸ்ட்ரிக்கரும் அவனுக்கு வேண்டி இந்த ஒரு வருடத்தில் எவ்வளவோ பணத்தையும், நேரத்தையும் செலவிட்டிருக்கிறார்கள். அவை எல்லாம் இப்போது எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டதே என்ற எண்ணம் அவர்கள் மனதில் உண்டாகலாம். ஆனால், வின்சென்ட் இதுவரை மனப்பூர்வமாக தான் ஈடுபட்ட காரியத்தில் முழுமையான அக்கறை செலுத்தினான் என்பது உண்மை. யாருக்குமே பயனில்லாத விஷயங்களைப் படித்துக் கொண்டு அதில் வாழ்க்கையின் நாட்களை வீண் செய்வதில் இனியும் வின்சென்ட்டுக்கு விருப்பம் இல்லை. ஒரு இவான்ஜலிஸ்ட்டாக, கடவுளின் மக்களுக்காக தன் வாழ்க்கையை ஒரு மனிதன் அர்ப்பணிப்பது தவறான ஒரு செயலா என்ன? கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் கூறுவதும், பாவம் செய்தவர்களைத் திருத்தியும், வாழ்க்கை மீது நம்பிக்கை இல்லாதவர்களை நல்ல திசை நோக்கி மனதை மாற்றிவிட்டும் – இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை ஒரு மனிதன் மேற்கொண்டால் இதில் என்ன தவறு இருக்கிறது?
நிச்சயம் வின்சென்ட்டின் குடும்பத்தில் உள்ளவர்கள் இது தெரிந்தால் மிகவும் வருத்தப்படவே செய்வார்கள். “இவன் எதற்குமே தகுதியில்லாத உதவாக்கரை” என்று திட்டவும் செய்வார்கள். “ஏன் இப்படி நன்றி கெட்ட தனமாக இவன் நடக்கிறான்?” என்று வெறுப்புடன் அவர்கள் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மெந்தெஸ் என்ன சொன்னார்? `நீ எதைச் செய்தாலும் ஒழுங்காச் செய்வேன்ற நம்பிக்கை எனக்கு பலமாவே இருக்கு. ஒருநாள் நிச்சயம் உனக்கு சிறகு முளைக்கும். அன்னைக்குத்தான் வாழ்க்கையோட பயன் என்னன்னு உனக்கே தெரியும். இது நிச்சயம் நடக்கப் போகுது.’
கே மட்டுமே தன்னைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறாள் என்பதாக உணர்ந்தான் வின்சென்ட். தனக்கென்று ஒரு சிறிய உலகை அமைத்துக்கொண்டு- குறுகிப் போன மனதைக் கொண்ட ஒரு உபதேசியின் குணம் அவனிடம் இருந்ததைப் பார்த்து கே எந்த அளவிற்கு ஆச்சரியப்பட்டு நின்றாள்? ஆம்ஸ்டர்டாமில் இனியும் அவன் இருந்தால் நிச்சயம் அவன் அந்த வேலைக்குத்தான் போக முடியும்.