வான்கா - Page 20
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
நாங்கள் நாய்களைப் போல துடிச்சு சாகுறப்போ, எங்களோட மனைவிமார்களையும் குழந்தைகளையும் மத்தவங்க பார்த்துக்குவாங்க. எட்டு வயசு முதல் நாற்பது வயசு வரை இருண்டு போன இந்த நரகத்தில்... அதற்குப் பிறகு குன்றுகளைத் தாண்டி ஏதாவதொரு மலைச்சரிவில் இருக்கும் ஒரு புதை குழியில் எல்லாவற்றையும் மறந்து நிரந்தர உறக்கம்.”
¤ ¤ ¤
நிலக்கரித் தொழிலாளர்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும், அவர்கள் புத்திசாலிகளாகவும், உழைக்க வேண்டும் என்பதில் அக்கறை உடையவர்களாகவும், தைரியசாலிகளாகவும், வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள் என்பதே உண்மை. திருப்பி அடிக்கத் தெரியாத நல்ல மனம் கொண்ட அவர்களின் சோகம் நிறைந்த கண்களையும், ஆயிரக்கணக்கான கறுத்த வரிகள் இருக்கும் மேல் தோலையும் கொண்ட இந்த மனிதர்களை, என்ன காரணத்தாலோ வின்சென்ட்டுக்கு மிகவும் பிடித்துப் போனது தனிமையுணர்வு என்ற ஒன்று இவர்களைப் பார்த்த நிமிடத்திலிருந்தே வின்சென்ட்டிடமிருந்து இல்லாமல் போனது. இந்த கிராமத்துக்கு என்றே தனித்துவமாக இருக்கிற அமைதியான தனிமைச் சூழ்நிலை தனக்கு எதையோ சொல்வதாக உணர்ந்தான் வின்சென்ட்.
¤ ¤ ¤
தெனியின் பேக்கரிக்குப் பின்னால் இருந்த ஷெட்டில் வின்சென்ட் தன் முதலாவது மதக் கூட்டத்தை நடத்தினான். அதிகாலை குளிரில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தலையையும் கழுத்தையும் கம்பளி ஆடைகளால் மறைத்துக் கொண்டு அந்த ஊர் மக்கள் அங்கு வந்தார்கள். ஒரு மூலையில் ‘மினுக் மினுக்’கென்று எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் இலேசாக ‘க்ரீச் க்ரீச்’ என்று ஓசை எழுப்பிக் கொண்டிருந்த பெஞ்சுகளில் அவர்கள் கைகளைக் கோர்த்தவாறு அமர்ந்திருந்தார்கள்.
நீண்ட நேர யோசனைக்குப் பிறகு, வின்சென்ட் தன் முதல் பிரசங்கத்திற்காக ‘அப்போஸ்தலர்களின் செயல்கள் 16.9’ என்ற பகுதியைத் தேர்ந்தெடுத்தான். ‘இரவில் பவுலுக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. மேசிடோனியா நாட்டுக்காரனான ஒருவன் அவன் முன் தோன்றி இப்படி வழிபட்டான்: மேசிடோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவுக.’
“நண்பர்களே...”- வின்சென்ட் சொன்னான்:
“அந்த மேசிடோனியாக்காரன் ஒரு தொழிலாளின்னு மனசுல நினைச்சுக்கோங்க. கஷ்டமும், சோகமும், பசியும் முகத்துல தெரியிற தொழிலாளி. அதற்காக அவன் மதிப்பே இல்லாதவன், தகுதியே இல்லாதவன்னு சொல்லிட முடியுமா? சொல்ல முடியாது. காரணம், அழிவே இல்லாத ஆத்மாவுக்குச் சொந்தக்காரன் அவன். அவனுக்கு நிரந்தரமான உணவு... அதாவது – தெய்வ வசனம் கட்டாயம் தேவை. மனிதன் கடவுளைப் போல எளிமையாக வாழணும். எட்ட முடியாத இலட்சியங்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்காமல் வேத நூல்களில் சொல்லி இருக்கிற மாதிரி இதயத்தில் எளிமை உள்ளவனாக, இறுதி நாளன்று சொர்க்க வாசலுக்குள் நுழைவதற்குத் தகுதி உள்ளவனாக அவன் இருக்க வேண்டும்.”
வாஸ்மேயில் நோயாளிகளுக்குப் பஞ்சமே இல்லை. டைஃபாய்ட் பிடித்த, கெட்ட கனவுகள் பலவும் கண்டு புலம்பிக் கொண்டிருக்கும் நோயாளிகள் சர்வ சாதாரணம். ஒரு டாக்டரைப் போல அவர்களின் வீடுகளைத் தேடிப் போனான் வின்சென்ட். தன்னால் முடிந்தவரை ஒரு துண்டு ரொட்டி, இல்லாவிட்டால் கொஞ்சம் பால், படுக்கை விரிப்பு, இல்லாவிட்டால் காலுறை – இப்படி ஏதாவது அவர்களுக்கு வின்சென்ட் தருவான். கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த ஏழை தொழிலாளர்களுக்கு வாழ்க்கையில் விளக்கொளி காட்டும் மனிதனாக தன்னை ஆக்கிக் கொண்டான் வின்சென்ட்.
அடுத்த புத்தாண்டு தினத்தன்று ரெவ.பீட்டர்ஸென்னின் கடிதம் கிடைத்தது. பெய்து கொண்டிருந்த மழையைக் கூடப் பொருட்படுத்தாமல் அதில் நனைந்தவாறே தன் அறையைத் தேடி ஓடிய வின்சென்ட், நடுங்குகின்ற விரல்களால் அந்தக் கடிதத்தைப் பிரித்தான்.
‘அன்புள்ள வின்சென்ட், இவான்ஜலைசேஷன் கமிட்டி உன்னுடைய ஆத்மார்த்தமான பணிகளைப் பற்றி பலரும் சொல்லி கேள்விப்பட்டது. அதனால், இந்த வருடம் முதல் தேதியில் தொடங்கி, முதல் ஆறு மாதங்களுக்கு உன்னை தற்காலிக வேலைக்கு நியமனம் செய்கிறது.
ஜூன் மாதம் வரை எல்லாம் ஒழுங்காக நடைபெற்றால், அதற்குப் பிறகு நிரந்தரமான வேலையில் நீ அமர்த்தப்படுவாய். அதுவரை உனக்கு மாதம் ஒன்றுக்கு சம்பளமாக ஐம்பது ஃப்ராங்க் தரப்படும்.
இடையில் நேரம் கிடைக்கிறபோது கடிதம் எழுதுவாய் அல்லவா? உன் பார்வை எப்போதும் உயரங்களை நோக்கி இருக்கட்டும். அன்புடன் –பீட்டர்ஸென்.’
கையில் கடிதத்தைப் பிடித்தவாறு படுக்கையில் சாய்ந்தான் வின்சென்ட். கடைசியில் வின்சென்ட் வெற்றி பெற்றுவிட்டான். மாதம் ஒன்றுக்கு ஐம்பது ஃப்ராங்க் சம்பளம். உணவுக்கும் தங்குவதற்கும் இந்தச் சம்பளம் தாராளமாகப் போதும். இனி ஒரு போதும் அவனின் சொந்தத் தேவைக்கு மற்றவர்களை நம்பியிருக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை.
அன்றே தன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினான் வின்சென்ட். ‘இனிமேல் நீங்கள் எனக்கு பண உதவி எதுவும் செய்ய வேண்டாம். எனக்கு நம் குடும்பம் செய்த உதவிகளை எந்தக் காலத்திலும் மறக்க மாட்டேன்.’
இந்தக் கடிதத்தை எழுதி முடித்தபோது, மாலை நேரமாகிவிட்டது. வெளியே மார்க்காஸில் தொடர்ந்து வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வின்சென்ட் ஓடிச் சென்று ஒரு குன்றின் மேல் ஏறினான். போரினேஜின் பெரும்பாலான பகுதிகளை அங்கிருந்து அவனால் பார்க்க முடிந்தது. புகைக் குழாய்களும், நிலக்கரிக் குவியல்களும், தொழிலாளிகளின் வீடுகளும் அங்கிருந்து தெளிவாகத் தெரிந்தன. எறும்புகளைப் போல இங்குமங்குமாய் இருளோடு கலந்து தொழிலாளர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் பைன் மரக்காடும், சிறிய வெள்ளைச் சாயம் பூசிய வீடுகளும், சர்ச் கோபுரமும் தெரிந்தன. அதையும் தாண்டி ஒரு பழைய மில் தெரிந்தது. எங்கிருந்தோ வந்த மூடுபனியால் அடுத்த சில நிமிடங்களில் அவை எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. மேகங்களின் நிழல்கள், இருட்டையும் வெளிச்சத்தையும் இரண்டறக் கலந்து வைத்து அற்புதமான ஒரு ஓவியத்தை வரைந்து காட்டின.
¤ ¤ ¤
அங்கீகாரம் கிடைத்த ஒரு இவான்ஜலிஸ்ட்டாக வாய்ப்புக் கிடைத்தவுடன், ஒரு நிரந்தர இடம் வேண்டுமென்று தேடினான் வின்சென்ட். கடைசியில் குன்றுகளுக்குக் கீழே முன்பு குழந்தைகள் நடனம் கற்றுக் கொண்டிருந்த ஒரு பழைய வீட்டை அவன் கண்டுபிடித்தான். எல்லா நாட்களிலும் நான்கு வயதிலிருந்து எட்டு வயது வரை உள்ள குழந்தைகளை அங்கு வரவழைத்து அவர்களுக்கு பாடங்கள் சொல்லித் தருவான். பைபிள் கதைகளைச் சொல்லித் தருவான். வெர்ணெயும், அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், மற்ற குடும்பத்தினரும் மாலை நேரம் வந்ததும், கொடுமையான குளிரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நிலக்கரிக் குவியல்களிலிருந்து கொஞ்சம் கரியைக் கையில் எடுத்துக்கொண்டு வின்சென்ட்டைத் தேடி வந்தார்கள்.