வான்கா - Page 22
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
இப்போது கூட அந்த பயம் எனக்கு உண்டாகத்தான் செய்யுது!”
கீழே சுற்றிலும் தண்ணீர் ஊறிக் கிடந்தது. மேலே பார்த்தால் சிறுதுளி போல் பகல் வெளிச்சம் தெரிந்தது. நூற்றைம்பது மீட்டர் கீழே இறங்கிய பிறகு, வின்சென்ட்டும், ஜேக்யுவும் வண்டியை விட்டு இறங்கினார்கள். மற்றவர்களைத் தாங்கிக் கொண்டு வண்டி இன்னும் கீழே போனது.
அகலமான ஒரு சுரங்கத்தை நோக்கி அவர்கள் நடந்தார்கள். சுற்றிலும் ஒரே குளிர்ச்சியாக இருந்தது. “இங்கே அப்படி ஒண்ணும் மோசமாகத் தெரியலையே - வெர்ணெ!”- வின்சென்ட் சொன்னான்.
“இங்க யாரும் வேலை செய்யிறது இல்லை”- வெர்ணெ சொன்னார்: “இங்கே இருந்த கரியை ஏற்கனவே வெட்டி எடுத்தாச்சு. காற்று மேலே இருந்துதான் வர்றது. ஆனால், அதனால் கீழே இருக்கிற தொழிலாளிக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.”
சிறிது தூரம் நடந்தபிறகு ஜேக்யு “எனக்கு பின்னாடியே வாங்க. லேசாக தடுக்கி விழுந்தால்கூட போதும் மரணம்தான், ஜாக்கிரதை”- என்று கூறியவாறு, முன்னால் இருந்த ஒரு இருளுக்குள் மறைந்து போனார்.
வின்சென்ட் வின்சென்ட் முழங்கால் போட்டு நடந்தவாறு வெர்ணெயைப் பின்பற்றினான். மரத்தூண்கள் தாங்கி பிடித்திருக்கும் இருட்டின் சின்னஞ்சிறு அறைகள். கரி வெட்டி எடுப்பதற்கும். அதை மாற்றி போடுவதற்கும், சிறிய வண்டிகளில் அவற்றை ஏற்றுவதற்கும், வண்டிகளை தள்ளுவதற்கும் தொழிலாளிகள் கூட்டமாக அங்கு நின்றிருந்தனர்.
கிழிந்துபோன, அழுக்கடைந்த கோணியால் ஆன ஆடைகளை அணிந்த தொழிலாளிகள். அந்தக் கூட்டத்தில் கோவணம் அணிந்த சிறுவர்களும், கிழிந்துபோன சிறு துணிகளைக் கட்டிக் கொண்டிருந்த சிறுமிகளும் கூட இருந்தார்கள். சுவர்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது. சொல்லப்போனால் மூச்சுவிடவே கஷ்டமாக இருந்தது. மூச்சை உள்ளே இழுத்தால் சூடான கரி உள்ளே ஏறியது. அங்கு உண்டான உஷ்ணத்தில் வியர்வை அருவி என ஒவ்வொருவர் உடம்பிலும் ஒழுகிக் கொண்டிருந்தது. முன்னால் போகப் போக அகலம் குறைந்துகொண்டே வரும் இடைவெளியில் பாம்புகளைப் போல ஊர்ந்து ஊர்ந்து, பாறையைப் பிளக்கிற அடிவாங்கின மிருகங்களைப் போல நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு கிடக்கிற, மதிய உணவிற்கு வெறும் பதினைந்து நிமிடங்கள்கூட ஓய்வென்று கிடைக்காத மனிதப்பிறவிகள்! அவர்களின் மனம் ஒவ்வொன்றும் எப்போது வெடித்துச் சிதறப் போகிறதோ? அடித்து அடித்து வைக்கப்பட்டிருக்கும் உணர்ச்சிகள் ஒருநாள் சிதறி பூதாகரம் எடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
கை நகங்களை நிலத்தில் வைத்து வின்சென்ட் ஜேக்யுவின் பின்னால் நகர்ந்து சென்றான். மூலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு இடம். ‘கும்’ என்று இருந்த இருட்டில் ஒன்றையுமே காண முடியவில்லை. கண்களுக்கு இருட்டு நன்றாக பழகிப்போன பிறகு, தூரத்தில் சுவரில் ஆங்காங்கே வெளிச்சத்தின் ரேகைகள் தெரிந்தன. வின்சென்ட்டின் உடல் வியர்வையில் தெப்பமாக நனைந்துவிட்டது. கரி கலந்த வியர்வை கறுப்பு நிறத்தில் கண்கள் வழியே ஒழுகியது. அது கண்களில் பட்டு ஒருவித எரிச்சல் உண்டானது. நீண்ட தூரம் நிலத்திலேயே ஊர்ந்து சென்றதால் முதுகு வலி எடுத்தது. அதனால், மெல்ல எழுந்து நின்றான் வின்சென்ட். மூச்சை நன்றாக இழுத்து சுவாசிக்க முயற்சித்தான். ஆனால், மூச்சை இழுக்கும்போது உள்ளே நுழைந்தது உஷ்ணமான வெப்பக் காற்றுதான். நெஞ்சே வெப்பத்தில் கருகிப் போனதுபோல் உணர்ந்தான் வின்சென்ட். நகரத்தைவிட மோசமான இருண்ட அந்த சுரங்கத்திற்குள் வயிற்றுப் பிழைப்புக்காக வாழ்க்கை வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் அந்த ஏழை மக்களின் பரிதாப நிலையை எண்ணிப் பார்த்து உண்மையிலேயே கண்ணீர் விட்டான் வின்சென்ட்.
“என்ன, ஒவ்வொரு நாளும் 50 ஃப்ராங்க் நாங்கள் எப்படி சம்பாதிக்கிறோம் என்பதை நேர்ல பார்க்கலாம்னு வந்தீங்களா?” கீழேயிருந்து அவனுக்கு நன்கு பழக்கமான தெக்ரூக்கின் குரல் கேட்டது.
“ஜேக்யு இங்கே வந்திருக்கக்கூடாது”- தெக்ரூக் குரலைச் சற்று இறக்கிக் கொண்டு சொன்னார். “எப்போ அந்த மனிதர் சுயநினைவு இல்லாம விழப்போகிறாரோ? யாருக்குத் தெரியும்?”
“தெக்ரூக்...”- ஜேக்யு குரலை உயர்த்திக் கேட்டார்: “இந்த விளக்குகள் நாள் முழுவதும் எரிஞ்சுக் கிட்டு இருந்துச்சா?”
“ஆமா... விஷ வாயு கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சுக்கிட்டு இருக்கு. ஒருநாள் இதெல்லாம் பெரிசா வெடிக்கப் போகுது. அதோட நம்பளோட கஷ்டங்களும் மறையப் போகுது.”
“போன வாரம்தானே எல்லா அறைகளையும் பம்ப் வச்சு சுத்தம் செஞ்சாங்க?”
“அதனால? விஷவாயு எப்படி இருந்தாலும் திரும்பவும் வரத்தான் செய்யும்.”
“அப்படின்னா, நீங்க எல்லாரும் ஒருவாரம் வேலைக்கு வராம இருக்கலாமே? அந்த நேரத்துல இங்க சுத்தப்படுத்தலாமே!”
அவ்வளவுதான்-
தொழிலாளிகளின் எதிர்ப்புக் குரல் வேகமாக வந்தது: “நாங்க வாங்கிக் கொண்டிருக்கிற சம்பளம் குழந்தைகளுக்கு சாப்பாடு போடவே பத்தமாட்டேங்குது. இந்த லட்சணத்துல வேலைக்கு வராம எப்படி வீட்ல இருக்கிறது? நாங்க இங்க இல்லாத நேரத்துல சுத்தம் செய்ய வேண்டியதுதானே! மத்தவங்களைப் போல நாங்களும் சாப்பிடணும். இதை மொதல்ல ஞாபகத்துல வச்சுக்கோங்க.”
“சரி... சரி...” தெக்ரூக் சிரித்தவாறு சொன்னார்: “இந்த சுரங்கத்தில நிச்சயம் என் உயிர் போகாது. நான் படுக்கையில் படுத்துத்தான் தூங்குவேன்.”
¤ ¤ ¤
வின்சென்ட் இந்த பாதாளத்திற்குள் இறங்கி ஆறு மணி நேரம் ஆகிவிட்டது. சுத்தமான காற்று கிடைக்காமல் உஷ்ணத்தாலும், கரிப் பொடியாலும் அவனால் மூச்சே விட முடியவில்லை. இனி ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க முடியாது என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தபோது ஜேக்யு சொன்னார்: நாம இப்ப போகலாம்.” மேலே பனியால் மூடப்பட்ட வாசலை அடைந்தபோது, மஞ்சள் நிறத்தில் காட்சியளித்த சூரிய வெளிச்சம் கூட வின்சென்ட்டுக்கு என்னவோ போல் இருந்தது. உடலை நீரால் கழுவ வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாமல் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஒரே வேட்கையுடன் வயலுக்குக் குறுக்கே ஓடினான் வின்சென்ட். தனக்கும் காய்ச்சல் ஏதாவது வந்துவிட்டதா? தான் இதுவரை பார்த்ததெல்லாம் உண்மையா? இல்லாவிட்டால் கனவா? கடவுள் தன்னுடைய குழந்தைகளுக்கு இப்படியொரு அடிமைத் தனத்தை ஏன் தர வேண்டும்?
வெறுப்படைந்த மனதுடன் அசுத்தமான பாதை வழியே நடந்து செல்கின்றபோது, வின்சென்ட்டின் கால்கள் இடறின. தெக்ரூக்கின் வீட்டு வாசல் கதவைத் தட்டினான். அவரின் ஆறு வயது மகன் வந்து கதவைத் திறந்தான். வெளுத்துப் போய் சரியான ரத்த ஓட்டம் இல்லாமல், உரிய வளர்ச்சி கூட இல்லாமல் அவன் இருந்தாலும் அவனிடம் தெக்ரூக்கிடம் இருக்கக்கூடிய தைரியத்தின் ரேகையைக் காண முடிந்தது.
“அம்மா கரி பொறுக்க போயிருக்காங்க. நீங்க இங்கே உக்காருங்க... நான் பசங்களை பார்த்துக்கிட்டிருக்கேன்.”