வான்கா - Page 25
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
வீட்டிற்குள் குளிர்ச்சியாக இருந்த தரைமேல் தெனியின் மனைவி கொடுத்த வைக்கோலைப் பரப்பினான் வின்சென்ட். ஒரு மெல்லிய போர்வையால் உடம்பை மூடினான். உறங்க முயற்சித்தர்ன். உறக்கம் வந்தால்தானே! பொழுது விடிந்தபோது, ஒரே இருமல்! காய்ச்சலின் கடுமை இன்னும் அதிகரித்திருந்தது. கண்கள் குழி விழுந்து போயிருந்தன. உடலைப் பற்றிய எண்ணமே இல்லாமல் படுத்த படுக்கையாய்க் கிடந்தான் வின்சென்ட். தன்னுடைய தினசரி வேலைகள் எந்த அளவுக்கு இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைத்து உண்மையிலேயே வருத்தப்பட்டான் அவன்.
¤ ¤ ¤
மார்ச் மாதம் மெதுவாக ஏப்ரலுக்கு வழிமாறி கொடுத்தது. கொடுமையான காற்று நின்றது. பனி உருகியது. பூமியில் மலர்கள் இதழ்களை விரித்து அழகு காட்டின. வானம்பாடிகளின் கீதம் எங்கு பார்த்தாலும் கேட்டது.
பனியின் கொடுமை நீங்கி, இளவேனில் காலம் மக்களை களிப்படையச் செய்தது. பெண்கள் மீண்டும் வீட்டை விட்டு வெளியே கரி சேகரிக்கப் புறப்பட்டார்கள். எல்லா வீடுகளிலும் அடுப்பில் தீ எரிந்தது. கண்களிலே இருந்த ஒருவகை சவக்களை நீங்கியது. எல்லோருடைய முகங்களிலும் பிரகாசமும் புன்சிரிப்பும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியே பளிச் என தெரிய ஆரம்பித்தது.
வின்சென்ட் தான் வழக்கமாக பிரசங்கம் செய்யும் பள்ளியைத் திறந்தான். கிராமம் முழுவதும் ஒவ்வொரு வீடாகத் தேடி பள்ளிக்கு வந்து பிரார்த்தனையில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டான் அவன்.
வின்சென்ட் ஆவேசமான குரலில் சொன்னான்:
“நல்ல நேரம் உங்களுக்கு வந்திடுச்சு. வயலில் சோளம் விளையும். சூரியன் உங்களுக்கு ஒளி தருவான். குழந்தைகள் வானம்பாடிகளைப் பின் தொடர்ந்து சென்று ஆடிப்பாடி காட்டில் பழம் சேகரிப்பார்கள். கடவுளுக்கு நேராக உங்களின் பார்வையை உயர்த்துங்கள். நல்ல காரியங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.”
¤ ¤ ¤
சில நாட்கள் சென்றன. வின்சென்ட்டும் சில குழந்தைகளும் கரித்தூள் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று சுரங்கத்துக்கு அருகில் ஒரு பரபரப்பு. தொழிலாளிகளில் சிலர் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாய் ஓடிக் கொண்டிருந்தனர்.
“என்ன நடந்தது? மணி மூன்று கூட ஆகலியே!”- வின்சென்ட் கேட்டான்.
“சுரங்கத்தில் ஏதோ விபத்து நடந்திருக்கும் போல இருக்கு.”- கூட்டத்தில் இருந்த ஒரு பையன் உரத்த குரலில் சொன்னான்: “இதே மாதிரி முன்னாடி ஒரு தடவை விபத்து உண்டாகுறப்ப ஆளுங்க பதறி ஓடுறதை நான் பாத்திருக்கேன்.”
வின்சென்ட்டும் அவனுடன் இருந்த குழந்தைகளும் அடுத்த நிமிடம் கரிக்குவியல்களில் இருந்து கீழே இறங்கினார்கள். மார்க்காஸைச் சுற்றியுள்ள வயல்களில் எலும்புகள் சாரை சாரையாக ஓடிக் கொண்டிருந்தன. கீழே போனால், ஒரே கூட்டம். கைக் குழந்தைகளை இடுப்பில் வைத்தவாறு தாய்மார்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் சிறு குழந்தைகள். எல்லோரும் ஒருவகை பீதியுடன் மார்க்காஸை நோக்கி ஓடினார்கள்.
வாசலை அடைந்தபோது யாரோ உரத்த குரலில் கத்துவது வின்சென்ட்டின் காதுகளில் விழுந்தது: “புதிய சுரங்கத்தில்... எல்லாரும் அமுங்கிப் போயிட்டாங்க.”
படுக்கையில் கிடந்த வெர்ணெ அதற்குள் அங்கு ஓடி வந்திருந்தார். பாவம்... எலும்பும் தோலுமாய் இருந்தார் மனிதர்! வின்சென்ட் அவரைத் தடுத்து நிறுத்தி கேட்டான்: “என்ன... என்ன விஷயம்?”
“தெக்ரூக்கோட அறை... நான் முன்னாடியே சொன்னேன்ல அங்கே விபத்து கட்டாயம் நடக்கும்னு!”
“அங்கே எத்தனை பேர் இருக்காங்க! நாம அவங்களைக் காப்பாற்ற முடியாதா?”
“தெரியல. நான் கீழே போறேன்.”
“நானும் கூட வர்றேன்.”
“வேண்டாம். இந்த மாதிரி விஷயங்களுக்கு ஏற்கனவே முன் அனுபவம் இருக்கிறவங்கதான் சரியா இருக்கும்.”
வெர்ணெ சுரங்கத்தை நோக்கி ஓடினார். விபத்திலிருந்து தப்பித்த தொழிலாளிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தேடிப்போய், அவர்களுடன் இணைந்தார்கள். குழந்தைகளின் அழுகை சத்தம் எங்கு பார்த்தாலும் கேட்டது. எல்லா பக்கங்களிலும் ஒரே ஆரவாரம்... கூக்குரல்கள்... ஓலம்!
சுரங்கத்திற்குள் இருந்து வட்டமாக சிலர் வெளியே வந்தார்கள். கம்பளியால் மூடப்பட்ட ஏதோ ஒன்றை அவர்கள் தூக்கி வந்தார்கள்.
“யார் அது? ஆளுக்கு உயிர் இருக்கா? கடவுளை நினைச்சுக்கிட்டு சொல்லு... கொஞ்சம் இந்தப் பக்கம் காண்பி. என்னோட புருஷன் அங்கே இருக்காரா? என் குழந்தைங்க... என்னோட பேரக் குழந்தைங்க...”
கூட்டத்தில் இருந்த ஒருவர் சொன்னார்: “அறைக்கு வெளியே இருந்த மூணு பேரை காப்பாத்திட்டோம். ஆனால், எல்லோருக்கும் நல்ல காயம்.”
“யார் அவங்க? தெய்வத்தை மனசுல நினைச்சுக்கிட்டு சொல்லு. யார் அவங்க? என்னோட குழந்தைங்க...?”
போர்த்தியிருந்த கம்பளியை நீக்கியபோது, உள்ளே மூன்று குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண். முகம் கருத்துப் போயிருந்தது. மயக்கமடைந்திருந்தார்கள். குழந்தைகளுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள் மேல் விழுந்து கதறி அழுதார்கள்.
குழந்தைகள் மூன்றையும் ஒரு வண்டியில் ஏற்றி முன்னால் கொண்டு போனார்கள். வின்சென்ட்டும் மற்றவர்களும் ஒருவித பரபரப்புடன் வண்டியைப் பின்பற்றி நடந்து போனார்கள். பின்னால் பயத்தாலும், வேதனையாலும் உண்டான அழுகைக் குரல்கள் நேரம் செல்லச் செல்ல அதிகமானது. வின்சென்ட் கரிக்குவியல்களை தலையை உயர்த்திப் பார்த்தான்.
“கறுப்பு எகிப்து”- வின்சென்ட் தனக்குள் கூறினான்: “இன்னொரு முறை நீ மக்களை அடிமைகள் ஆக்கியிருக்கிறே! என் தெய்வமே! நீ ஏன் இதைச் செய்தே? ஏன்? சொல்...”
குழந்தைகள் உடம்பின் மேல் பகுதி பெரும்பாலும் வெந்து போயிருந்தது. வின்சென்ட் ஒரு குழந்தையின் குடிசைக்குள் நுழைந்தான். குழந்தையின் தாய் என்ன செய்வது என்று தெரியாமல் சிலை என நின்றிருந்தாள். வின்சென்ட் குழந்தையின் ஆடையைக் கழற்றினான். வெந்துபோன பகுதியில் அவன் தைலத்தை எடுத்து தேய்த்தான். “பேன்டேஜ் ஒட்டணும்”- வின்சென்ட் தனக்குத்தானே கூறினான்.
குழந்தையின் தாய் வின்சென்ட்டின் செயலையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு நின்றிருந்தாள்.
“இங்கே ஒரு துண்டு துணி கூட இல்ல....”- அந்தத் தாய் அழுதவாறு சொன்னாள்.
குழந்தை வேதனை தாங்க முடியாமல் அழுதது. அடுத்த நிமிடம் என்ன நினைத்தானோ வின்சென்ட் கொஞ்சமும் யோசிக்காமல் தான் அணிந்திருந்த சட்டையைக் கிழித்து, குழந்தைக்கு பேன்டேஜ் போட்டான். அது முடிந்ததும் அடுத்த குடிசைக்குள் நுழைந்தான். அங்கேயும் இதே காரியத்தைச் செய்தான்.
தூரத்தில் ஒரே ஆரவாரம். வேதனை ஓலங்கள்! மனைவிமார்களும், தாய்மார்களும் வாய்விட்டு அழுதார்கள்.
கேட்டுக்குப் பக்கத்தில் விபத்திலிருந்து உயிர்களைக் காப்பாற்றியவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு ஆளிடம் வின்சென்ட் கேட்டான்:
“காப்பாத்துறதுக்கு வழி இருக்கா?”
“அவங்க இறந்திருப்பாங்க”
“நாம அங்கே போனால் என்ன?”
“பாறைக்குக் கீழே அவங்க அமுங்கிப் போய் கிடக்குறாங்க.”