வான்கா - Page 27
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“உனக்கு தற்காலிக நியமனம் கொடுத்தது ஒரு விதத்துல நல்லதாப் போச்சு. உன்னோட நியமனத்தை இன்னைக்கே ரத்து பண்றோம். இனி எந்தக் காலத்திலும் நீ எங்களோட சர்ச்ல பிரசங்கம் செய்ய முடியாது. உன்னோட நடவடிக்கை அவ்வளவு கேவலமா இருக்கு. உனக்கு பதிலா வேறொரு ஆள் உடனடியா நியமனம் பெற்று வருவார். உன்னோட பைத்தியக்காரத்தனமான செயல்களைப் பாக்குறப்போ, சர்ச்சோட மிகப் பெரிய எதிரி நீ தான்னு கூட சொல்லுவேன்.”
அறையில் ஒரே நிசப்தம் நிலவிக்கொண்டிருந்தது. சில நிமிட இடைவெளிக்குப் பிறகு ஜோங் கேட்டார்: “என்ன, ஒண்ணுமே பேசாம இருக்கே!”
மனம் வெறுத்துப் போயிருந்த வின்சென்ட்டிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை.
“சரி... நாம போவோம்”- ப்ரிங்க் சொன்னார்: “இங்கே நாம பண்றதுக்கு ஒண்ணுமே இல்ல. நல்ல ஒரு ஹோட்டல்ல அறை கிடைக்கலைன்னா, டவுனுக்கு இன்னைக்கு ராத்திரியே திரும்பிப் போயிட வேண்டியதுதான்.”
¤ ¤ ¤
மறுநாள் காலையில் கூட்டமாக சில தொழிலாளிகள் வின்சென்ட்டைப் போய் பார்த்தார்கள். “வெர்ணெ இறந்த பிறகு நாங்க பெரிசா நம்பிக்கிட்டு இருந்தது உங்களைத்தான். நாங்க இப்போ என்ன செய்யிறது? பட்டினி கிடந்து சாக எங்களுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. நீங்க போய் கம்பெனி மேனேஜரைப் பார்க்கணும். அதற்குப் பிறகு நீங்க எங்களைப் பட்டினி கிடக்கச் சொன்னா, அப்படி இருக்க நாங்க தயாரா இருக்கோம். வேலைக்குப் போகச் சொன்னா அதுக்கும் நாங்க தயார்தான். நீங்க என்ன சொல்றீங்களோ அதை நாங்க கேக்குறோம்.”
கம்பெனி மேனேஜர் கருணையுடன் வின்சென்ட் கூறியது அனைத்தையும் கேட்டார்: “தொழிலாளிகளோட கோபத்தை எங்களால் புரிஞ்சுக்க முடியுது. மூடப்பட்ட அறையை திறக்கலேன்றது அவங்களோட கோபத்துக்குக் காரணம். அதைத் திறந்து என்ன பிரயோஜனம்? அடியில சிக்கிக்கிட்டவங்க ஏற்கனவே செத்துப் போயிருப்பாங்க. மண்ணையும் பாறையையும் தோண்டி மாத்தணும்னா அதற்கே பல மாதங்கள் ஆகும். இவ்வளவும் பண்ணி என்ன ஆகப் போகுது? செத்துப் போனவங்களை ஒரு குழியிலிருந்து மாற்றி இன்னொரு குழியில போடுறதாத்தான் அர்த்தம். இது தேவையா?”
“செத்துப் போனவங்களுக்கு நீங்க உதவ முடியாது. ஒத்துக்குறேன். உயிரோட இருக்குறவங்களுக்கு உதவலாமே!”- வின்சென்ட் கேட்டான்: “சுரங்கத்தோட சூழ்நிலையை கொஞ்சம் மாத்தக் கூடாதா? இந்த தொழிலாளிகள், வாழ்க்கை முழுவதும் விபத்தை எதிர்பார்த்தே வாழ முடியுமா?”
“என்ன செய்யிறது? எல்லாத்தையும் மாத்தி அமைக்கணும்னா கம்பெனி கையில அவ்வளவு பணம் கிடையாது. இந்த வேலை நிறுத்தத்தால யாருக்கு நஷ்டம்? சொல்லுங்க. பாவம்... இந்தத் தொழிலாளிகளுக்குத்தான். ஒருவாரத்துக்குள்ள அவங்க வேலைக்குத் திரும்பலைன்னா மார்க்காஸை பூட்டுறதைத்தவிர வேற வழியே இல்லை. அதுக்குப் பிறகு அவங்களோட வாழ்க்கையை கடவுள்தான் பார்த்துக்கணும்.”
தன்னால் இனிமேல் இந்தத் தொழிலாளிகளுக்கு உதவ முடியாது என்பதை வின்சென்ட் புரிந்து கொண்டான். இந்த நரக வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பும்படி அவர்களை அவன் கேட்க வேண்டி நேரிடும். அதற்குப் பிறகு அவர்களின் முகத்தை அவன் எப்படிப் பார்ப்பான்?
போரினேஜுக்கு வின்சென்ட் வந்ததே தெய்வ வசனத்தை இங்குள்ள மக்களின் இதயத்தில் பதிய வைப்பதற்காகத்தான். ஆனால், இங்கே தெய்வமே அவர்களைக் கைவிட்டு விட்டது. அவர்களின் இந்த வறுமைச் சூழலுக்கும், பட்டினிக்கும், கேவலமான நிலைமைக்கும் உண்மையிலேயே மூலகர்த்தா யார், இவர்களின் எதிரி நிச்சயம் சுரங்கம் அல்ல! தெய்வம்தான்.
மனதின் ஒரு மூலையில் ஒளிந்து கிடந்த ஒரு கீற்று, பலம் பெற்று பூதாகரமாக வெளியே வந்தது. தெய்வத்தைப் பற்றி அது இதுவென்று பேசிக் கொண்டிருப்பதெல்லாம் வெறும் கற்பனைதான். தன்னைத்தானே ஆறுதல் படுத்திக் கொள்வதற்காக, தன்னைச் சுற்றிலும் இருக்கிற இருட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மனிதன் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒரு கற்பனைக் கதாபாத்திரம்தான் கடவுள்! உண்மையில் கடவுள் என்று யாரும் இல்லை. அளவில்லாத, புரிந்து கொள்ள முடியாத சூனியம் இருப்பது மட்டுமே உண்மை.
¤ ¤ ¤
தொழிலாளர்கள் வேலைக்குப் போகத் தொடங்கினார்கள். எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்ட தியோடரஸ், வின்சென்ட்டுக்கு பணம் அனுப்பி வைத்தார். எற்றனுக்கு வரும்படி எழுதினார். ஆனால், வின்சென்ட் தெனியின் மனைவி வீட்டிற்கே திரும்பிப் போனான்.
அதற்குப் பிறகு வந்த ஒவ்வொரு நாளுமே வின்சென்ட்டைப் பொறுத்தவரை குழப்பமான ஒன்றுதான். அவனுக்கு இப்போது வேலை இல்லை. கையில் பணம் கிடையாது. உடல் நலமும் பெரிதாக பாதிக்கப்பட்டு விட்டது. உடம்பில் பலமே இல்லை. மனதில் பெரிதாக எண்ணங்களோ, லட்சியமோ கிடையாது. மருந்துக்குக் கூட உற்சாகமில்லை. மோகங்கள் இல்லை. எதன்மீதும் விருப்பம் கூட இல்லாமல் போய்விட்டது. வாழ்க்கை மீது நம்பிக்கை கொள்ள தற்போதைக்கு அவனிடம் எதுவுமே இல்லை. ஐந்து முறை தோற்றிருக்கிறான். இனியொரு முறை எழுந்து நிற்க, மனதில் தைரியம் கூட கிடையாது.
வின்சென்ட் கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். முகம் முழுவதும் காடுபோல சிவப்பு ரோமங்கள் அடர்ந்திருந்தன. ரோமக்காட்டின் ஆக்கிரமிப்பில், சொல்லப் போனால் அவனின் முகமே மறைந்து போனது. தலையில் முடி உதிர ஆரம்பித்துவிட்டது. உதடுகள் உலர்ந்து போய் வெளிறித் தெரிந்தன. பளபளப்பாக இருந்த அவனின் உடல் மெலிந்து சக்கையாகி விட்டது. வின்சென்ட் வான்கா சுருங்கிப் போய் வத்தல் என மாறி, கிட்டத்தட்ட செத்துப் போன பிணம் மாதிரி தோற்றம் தந்தான்.
இயந்திரத்தனமாக எதையாவது சாப்பிடுவது, தூங்கிக் கொண்டே இருப்பது, எதையோ பறி கொடுத்த மாதிரி கூரையையே பார்த்துக் கொண்டு இருப்பது – வாரக் கணக்கில் இவைதான் வின்சென்ட்டின் தினசரி செயல்கள் என்றாகிவிட்டது. ஒருநாள் தாடியைச் சவரம் செய்தான். தெனியின் மனைவி தந்த ஆடையை அணிந்தான். உணவு ருசியாக இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பார்க்காமல் உள்ளே அனுப்பினான்.
வீட்டிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. கேயின் கணவன் மரணமடைந்துவிட்டதாக அதில் தெரிவித்திருந்தார்கள். ஆனால், ஏற்கனவே கவலையிலும், விரக்தியிலும் மூழ்கிப்போன வின்சென்ட்டின் மனதில் இந்தச் செய்தி எந்தவித சலனத்தையும் உண்டாக்கவில்லை.
மெல்ல மெல்ல வின்சென்ட்டை பாதித்த ஜுரம் அவனை விட்டு நீங்கியது. உடம்பில் கொஞ்சம் பலம் ஏறியது மாதிரி இருந்தது. இருந்தாலும், அவன் கண்கள் என்னவோ சவத்தை வைத்திருக்கும் பெட்டியில் இருக்கும் கண்ணாடி போலவே இருந்தன.
இளவேனில் காலம் வந்தது. வின்சென்ட் எந்தவித நோக்கமும் இல்லாமல் தன் இஷ்டப்படி வயல் வெளிகளில் அலைந்து திரிந்தான். மன மகிழ்ச்சிக்காகவோ, இயற்கைக் காட்சிகளை ரசிக்க வேண்டும் என்பதற்காகவோ அவன் இப்படி நடந்து திரியவில்லை.