வான்கா - Page 30
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
இருந்தாலும், தான் கைப்பட வரைந்த ஓவியங்களாக இருப்பதால் எங்கே அதில் தவறு இருக்கிறது என்பதை அவனைப் பொறுத்தவரையில் கண்டுபிடிப்பது கஷ்டம். எத்தனையோ ஓவியர்கள், ஓவியக் கலைக்காக தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த போரினேஜில் அப்படிப்பட்ட ஒரு ஆளைக் காண்பது என்பது முட்டாள்தனம் தானே!
நல்ல மழை பெய்து கொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில் அறையில் அமர்ந்து படம் வரைந்து கொண்டிருந்தபோது, வின்சென்ட்டின் மனதில் பீட்டர்ஸென் ஞாபகத்தில் வந்தார். ப்ரஸ்ஸல்ஸில் ஸ்டுடியோவில் நிற்கும் பீட்டர்ஸென்னை மனக்கண் முன்கொண்டு வந்து ஞாபகப்படுத்திப் பார்த்தான் அவன். நிச்சயம் தான் தேடிக் கொண்டிருந்த சரியான ஆள் பீட்டர்ஸென்தான் என்று அந்த நிமிடத்திலேயே முடிவு செய்தான் வின்சென்ட்.
ப்ரஸ்ஸல்ஸுக்கு புகை வண்டியில் போக கையில் பணமில்லை. கிட்டத்தட்ட அங்கிருந்து அந்த ஊர் எண்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நடந்துபோனால் என்ன என்று யோசித்தான். ஆனால், அவ்வளவு தூரம் நடந்து செல்கிற அளவிற்கு தாங்கக்கூடியவை அல்ல அவனின் காலணிகள். இப்போதே அது இலேசாக கிழிந்துதான் இருக்கிறது. கோட்டைப் பார்த்தால் அது பல இடங்களில் அழுக்கடைந்து காணப்பட்டது. இருந்தாலும் பரவாயில்லை என்று நடக்கத் தொடங்கினான் வின்சென்ட். கால்கள் இரண்டிலும் தாங்க முடியாத வேதனை. பசியும், தாகமும் அவனை வாட்டி எடுத்தன. ஆனால், வின்சென்ட் அது பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை. தான் இப்போது காணப்போவது இன்னொரு திறமையான கலைஞனை!- இது மட்டுமே அவனின் மனதில் இருந்தது.
பீட்டர்ஸென்னின் வீட்டு வாசல் கதவைத் தட்டினான் வின்சென்ட். கதவைத் திறந்த பீட்டர்ஸென்னின் மகள் உண்மையில் பயந்தே போய்விட்டாள். அழுக்கடைந்த உடல், ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்த கால்கள், ஒழுங்காக வாராமல் காட்டுத்தனமாகக் காட்சியளித்த தலைமுடி – ‘ஓ’வென்று கத்தியவாறு உள்ளே ஓடினாள் அந்தச் சின்னப்பெண்.
அடுத்த நிமிடம் ரெவ.பீட்டர்ஸென் வேகமாக அங்கே வந்தார்.
வின்சென்ட்டைக் கண்டுபிடிக்க அவருக்கு ஒரு நிமிட நேரமே ஆனது. மகிழ்ச்சி பொங்க அவனை வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு போனார்.
“மகனே வின்சென்ட்... உன்னை இப்போ பார்க்கிறதுல நான் எவ்வளவு சந்தோஷப்படுறேன் தெரியுமா... வா... வா... உள்ளே போவோம்.”
உடம்பை தண்ணீரில் நன்கு கழுவி, சுத்தமாக்கி, உணவு முடித்து, நிம்மதியாகத் தூங்கினான் வின்சென்ட். காலையில் மீண்டும் பசியெடுத்தது. காலைச் சிற்றுண்டி முடித்தான். அதற்குப் பிறகு அவனும், பீட்டர்ஸென்னும் படிக்கும் அறைக்குள் நுழைந்தார்கள்.
“நீங்க இங்கே நிறைய வேலை செய்திருக்கீங்கன்னு தெரியுது – இதெல்லாம் புதிதாக நீங்க வரைந்த ஓவியங்கள்தானே?”- வின்சென்ட் கேட்டான்.
“ஆமா... நான் ஓவியம் வரையிறதுல உண்மையிலேயே மகிழ்ச்சி அடையிறேன்.”
“ஆனா”- வின்சென்ட் புன்சிரிப்பு தவழ கேட்டான்: “உங்களோட முக்கியமான வேலைகளை விட்டுட்டு – விலை மதிப்புள்ள நேரத்தை இப்படி படம் வரையறதுல செலவிடுறதுக்காக நீங்கள் வருத்தப்படலையா?”
“ரூபென்ஸைப் (ஃப்ளான்டேர்ஸின் புகழ் பெற்ற ஓவியர்) பற்றி நீ கேள்விப்பட்டதில்லையா? ஸ்பெயின்ல அம்பாசிடரா அவர் இருந்த காலத்துல சாயங்கால நேரங்கள்ல மாளிகை மண்டபத்துல இருந்துக்கிட்டே ஓவியங்கள் வரையிறத வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.ஒருநாள் குறும்புத்தனமான ஒரு மாளிகை ஊழியர் `நீங்க சில நேரங்கள்ல ஓவியங்கள் வரைவீங்க இல்லையா?’ன்னு கேட்டதற்கு ரூபென்ஸ் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘நீங்க சொல்றது தப்பு. நான் ஒரு ஓவியன். சில நேரங்கள்ல அம்பாசிடரா இருப்பேன்.’ எப்படி இருக்கு அவரோட பதில்?”
வின்சென்ட் தான் கொண்டு வந்த கட்டைப் பிரித்தான். “நானும் சில படங்களை வரைஞ்சிருக்கேன். இவை எப்படி இருக்கு? உங்களோட கருத்தை நீங்க சொல்லணும்.”
பீட்டர்ஸென் கொஞ்சம் தயங்கினார். புதிதாக ஒரு காரியத்தில் ஈடுபடும் ஒரு மனிதனின் படைப்பை விமர்சனம் செய்வது என்பது கஷ்டமான ஒரு விஷயம் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் வின்சென்ட் வரைந்த ஓவியங்களை தன் முன்னால் விரித்து வைத்தார். சிறிது தூரம் தள்ளி நின்று அவற்றைப் பிரித்தார். வின்சென்ட்டும் அவற்றைப் பார்த்தான்.
“என்னோட கருத்தைச் சொல்லட்டுமா?”- பீட்டர்ஸென் சொன்னார்: “இந்த மாடலுக்கு ரொம்பவும் பக்கத்துல நின்னு இந்த படங்களை நீ வரைஞ்சு இருக்கே!”
“ஆமா... தொழிலாளிகளோட சின்ன குடிசைக்குள்ள இருந்து இவற்றை வரைஞ்சேன்.”
“அதனாலதான் இதுல ஒரு முழுமை இல்லை. கொஞ்சம் தள்ளி நின்னு வரைஞ்சிருக்கக்கூடாதா? அப்படி வரைஞ்சிருந்தா காட்சிகள் இன்னும் தெளிவா இருந்திருக்கும்.”
“ஒரு பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்தா எப்படி இருக்கும்?”
“நிச்சயமா நல்லாவே இருக்கும்”- சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு, பீட்டர்ஸென் கேட்டார்: “நீ ட்ராயிங் படிச்சிருக்கியா? அளவு அனுசரிச்சா நீ படத்தை வரையிறே? உடல் அமைப்பை எதைக் கணக்கு வச்சு வரையிறே?”
வின்சென்ட்டுக்கு வெட்கமாக இருந்தது. “இதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் ட்ராயிங் படிக்கல. ஏதோ தோணிச்சு. வரையிறேன். இந்த நிமிஷம் வரைக்கும் இது போதும்னுதான் நினைச்சேன்.”
“அப்படி இல்ல. ஆரம்ப விஷயங்கள்னு சில இருக்கு. அதை முதல்ல தெரிஞ்சுக்கணும். அதுக்குப் பிறகு ஓவியம் நல்லாவே வரும். இங்க பாரு. நீ வரைஞ்ச இந்த பெண்ணோட படத்துல என்ன தப்பு இருக்குன்னு நான் சொல்லித்தர்றேன்.”
பீட்டர்ஸென் ஒரு உருளையை எடுத்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்தார். தான் வரைந்ததில் எந்த அளவிற்கு தவறுகள் இருக்கின்றன எனப்தை வின்சென்ட்டிற்கு உணர்த்தினார் பீட்டர்ஸென். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செலவழித்து வின்சென்ட் வரைந்த படத்தையே சற்று மாற்றி வரைந்தார்.
“இப்ப பாரு... வடிவம் எவ்வளவு சரியா இருக்குன்னு...”
வின்சென்ட் சற்று தூரத்தில் நின்று படத்தைப் பார்த்தான். அவர் சொன்னது சரிதான். உடலமைப்பு மிகவும் சரியாக அமைந்திருந்தது. ஆனால், இது ஒரு போரினேஜ் பெண்ணாக இல்லையே! கணக்குப்படி வரைந்த ஒரு பெண்ணின் படமாக அது இருந்தது. அவ்வளவுதான். ஒன்றும் பேசாமல், பீட்டர்ஸென் சரி பண்ணிய படத்தையும், தான் வரைந்த மற்றொரு படத்தையும் அடுத்தடுத்து வைத்து உற்று நோக்கினான் வின்சென்ட்.
“வின்சென்ட், நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்குப் புரியுது. நான் அவளுக்கு உடல் வடிவம் தந்தேன். ஆனா, அவளோட தனித்துவத்தை எடுத்துட்டேன்.”
பீட்டர்ஸென் தொடர்ந்து சொன்னார்: