வான்கா - Page 34
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
எற்றன்
வீட்டுக்குத் திரும்பி வந்த வின்சென்ட்டை அவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் மன வருத்தத்துடன் வரவேற்றார்கள். வின்சென்ட்டின் தற்போதைய போக்கை, அவனின் தந்தை கொஞ்சமும் விரும்பவில்லை. சகோதரிகளில் விலெமின் மட்டுமே ஓரளவுக்கு அவனைப் புரிந்து கொண்டாள். மற்றவர்கள் எல்லாம் அவனிடம் பேசுவதைக் கூட தவிர்த்தனர். என்றைக்கும் போல அவனின் தாய் மட்டும்தான், தன் மகன் வின்சென்ட்டுக்காக பரிந்து கொண்டு பேசினாள்.
முதல் குழந்தை பிறந்து செத்துப்போன பிறகு, செல்ல மகனாக வந்து பிறந்தவன் வின்சென்ட். அன்னாகார்ணீலியா அவன் மீது நிறைய பாசம் வைத்திருந்தாள். வின்சென்ட்டிடம் இப்போது குடி கொண்டிருக்கும் இலட்சியக் கிறுக்கைப் பற்றி கேள்விப்பட்ட போது, அதற்கு எதிராக அவள் ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. அவர்களின் உறவுக்காரனான ஆன்டன் மவ் ஓவியங்கள் வரைந்து ஏகப்பட்ட பணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் தகவல்தான் அவள் நன்கு அறிந்த ஒன்றாயிற்றே!
தியோ பாரீஸுக்குத் திரும்பிப் போனான். ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தார்கள். அது வின்சென்ட்டின் உணவு விஷயம். சரியான உணவு உட்கொண்டதால் சில நாட்களிலேயே இழந்த பலத்தை மீண்டும் பெற்றான் வின்சென்ட்.
மழை பெய்ததால் சீதோஷ்ண நிலை மிகவும் நன்றாக இருந்தது. வின்சென்ட் தன் ஓவியக் கருவிகளுடன் புறம்போக்கு இடங்களில் அலைந்து திரிந்தான். சதுப்பு நிலத்தில் உட்கார்ந்து லில்லி பூக்களை ஓவியமாகத் தீட்டினான். அவனைப் பார்த்தவர்கள், அவனைப் பைத்தியக்காரப் பட்டியலில் சேர்த்தார்கள். இந்த வயதில் யாராவது படம் வரைகிறேன் என்று வயல்வெளிகளில் அலைந்து திரிவார்களா என்று ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தனர்.
ஒருநாள் அருவிக்கரையில் இருந்த ஒரு பைன் மரத்தை ஓவியமாக வரைந்து கொண்டிருந்தான் வின்சென்ட். பக்கத்திலேயே காட்டை வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு தொழிலாளி, மறைந்தவாறு வின்சென்ட் ஓவியம் வரைவதையே பார்த்துக் கொண்டிருந்தான். இடையில் என்ன நினைத்தானோ, தன்னை மறந்து அவன் சிரித்தான். அந்த ஆள் ஏன் சிரிக்கிறான்- சிரிக்கிற அளவிற்கு அப்படி என்ன நடந்துவிட்டது என்று மனதில் கேட்டவாறு அந்த மனிதனைப் பார்த்தான் வின்சென்ட்.
“நீங்க படம் வரைஞ்சுக்கிட்டு இருக்கீங்க! உண்மையிலேயே கிறுக்குத்தனம்தான் உங்களுக்கு!”
ஒரு நிமிடம் மவுனமாக இருந்த வின்சென்ட் கேட்டான்:
“நான் கேக்குறேன்- நான் ஒரு மரம் நட்டால் அது கிறுக்குத்தனமா?”
அந்த மனிதன் தன் சிரிப்பை நிறுத்தினான். அவன் சொன்னான்; “நிச்சயமா இல்ல.”
“மரத்திற்கு தண்ணீரும் உரமும் இட்டால் அது கிறுக்குத்தனமா?”
“நிச்சயமா கிடையாது.”
“பழம் பறிச்சோம்னா?”
“நீங்க என்ன என்கிட்ட விளையாடுறீங்களா?”
“மரத்தை வெட்டினா?”
“மரம் வெட்டுறது சாதாரண ஒரு செயல்தானே!”
“அப்படின்னா... மரத்தைப் படமா வரைஞ்சா மட்டும் அது அப்படி கிறுக்குத்தனம் ஆகும்?”
பற்களைக் காட்டியவாறு அந்தத் தொழிலாளி சொன்னான்: “இப்படி தனியே உட்கார்ந்து படம் வரையிற உங்களை சரியான கிறுக்குன்னுதான் எல்லாரும் சொல்றாங்க!”
¤ ¤ ¤
இன்னொரு நாள் வின்சென்ட் ஒரு படத்தை பல தடவைகள் வரைவதும், பின் அழித்து திருத்துவதுமாகவே இருந்தான். இதை அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டிருந்தார் அவனின் தந்தை அவரால் இனிமேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை.
“வின்சென்ட், உன்னால ஒரே தடவையில இந்தப் படத்தைச் சரியாக வரைஞ்சிட முடியாதா?”
“நிச்சயமா முடியாது”
“அப்போ நீ போற பாதையே சரியான பாதையா எனக்கு தெரியல. தப்பான வழியிலேயே நீ போறேன்னு நினைக்கிறேன்.”
“நான் படம் வரையிறப்போ நிறைய தப்புகள் பண்ணிடுவேன். அப்பா, நீங்க என்ன சொல்ல வர்றீங்க?”
“நான் அதைச் சொல்லல. உனக்கு உண்மையிலேயே ஓவியம் வரையிறதுல ஆர்வமும் முழுமையான ஈடுபாடும் இருந்தா, முதல் தடவை வரையிறப்பவே அந்தப் படம் சரியா வரணும் இல்லியா?”
தான் இப்போது வரைந்து கொண்டிருந்த படத்தை வின்சென்ட் ஒருமுறை நோக்கினான். உருளைக் கிழங்கைக் கோணியில் நிறைப்பதற்காக குனிந்து நிற்கும் விவசாயி ஒருவரின் படம். அவரின் கையைத் தான் சரியாக வரையவில்லை என்பதை உணர்ந்தான் வின்சென்ட்.
“அப்பா... ஒருவேளை நீங்க சொல்றது சரியாக இருக்கலாம். ஆனா, ஆரம்பத்துல இயற்கை ஒரு கலைஞனையோ, ஓவியனையோ எதிர்க்கத்தான் செய்யும்”- பென்சிலைக் கையில் பிடித்தவாறு வின்சென்ட் சொன்னான்: “இயற்கையோட எதிர்ப்பை ஒரு பொருட்டா நினைக்காம பலத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாச் சேர்த்துக்கிட்டு அதை எதிர்த்துப் போராடினா மட்டுமே ஒருவனால கடைசில வெற்றி பெற முடியும்.”
“அதெப்படி? தீமையிலிருந்து எப்படி நன்மை உண்டாக முடியாதோ அதே மாதிரி கெட்டதில் இருந்து நல்லது எப்படி உண்டாகும்?”
“மத விஷயங்களில் வேணும்னா நீங்க சொல்றது சரியா இருக்கலாம். ஆனா, கலை சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல உங்களோட கருத்து சரியா இருக்காது.”
“கலையாகவே இருந்தாக் கூட அதுலயும் நல்லது எது கெட்டது எதுன்னு ஒரு கலைஞனுக்குப் பகுத்தறியத் தெரியணும். நல்லா ஒரு படத்தை வரையத் தெரியலைன்னா இந்த வேலையில நீ ஈடுபடுறதே தப்புன்னு நான் சொல்றேன்.”
“சரி... அப்படியே வச்சுக்குவோம். ஆனா, அதே நேரத்துல – எவ்வளவு மோசமான படைப்பா அது இருந்தாலும், தன்னோட படைப்புக்காக ஒரு கலைஞன் சந்தோஷத்தோட இருந்தான்னா...?”
தியோடரஸ் இதற்கு பதில் கூறுவதற்காக என்னவோ பெரிதாக ஆலோசித்துக் கொண்டிருந்த நிமிடத்தில், ஓவியத்தில் தனக்கு திருப்தியில்லாத விஷயங்களை மாற்றுவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தான் வின்சென்ட்.
“உள்ளுக்குள் இயற்கையும் கலைஞனும் ஒரே நேர்கோட்டில்தான் இருக்கிறாங்க. இயற்கையை கலைஞன் தனக்குக் கீழே கொண்டு வர பல வருடங்கள் ஆகும். ஆனா, ஒரு நாள் மோசமா தெரியிற ஓவியம் நிச்சயம் எதிர்காலத்துல மிகப் பெரிய கலைப் பொக்கிஷமா மாறும். இது மட்டும் உண்மை.”
“ஆனா, கடைசி வரை ஓவியம் மோசமாவே இருந்தா...? நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன். நீ எத்தனை நாட்களா அந்த குனிந்திருக்கும் மனிதனோட படத்தை வரைஞ்சிக்கிட்டு இருக்கே! ஆனா, அது சரியா வருதா பாரு. இப்படியே- இந்த ஒரு படத்தையே வருஷக் கணக்குல நீ வரைஞ்சுக்கிட்டே இருந்தா...?”
வின்சென்ட் சொன்னான்: “ஒரு கலைஞன் இந்தப் போராட்டத்துல தொடர்ந்து பங்கு பெற வேண்டியதுதான்”
“அதுல அவனுக்கு என்ன கிடைக்கப் போகுது?”
“என்ன கிடைக்கணும்?”
“பணம்... சமூகத்துல அந்தஸ்த்து... கவுரவம்.”
வின்சென்ட் தான் வரைந்து கொண்டிருந்த ஓவியத்திலிருந்து விழிகளை உயர்த்தி தன் தந்தையையே உற்றுப் பார்த்தான். இதுவரை தான் பார்த்தே இராத – அறிமுகமே இல்லாத ஒரு மனிதரைப் பார்ப்பது மாதிரி இருந்தது அந்தப் பார்வை.