வான்கா - Page 31
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“இங்க பாரு வின்சென்ட்... அடுப்புக்கு முன்னால் குனிந்த பெண் இருக்காள்ல... இவ மோசம்னு சொல்ல முடியாது. நீ வரைஞ்ச முறை சரியில்ல. ட்ராயிங்கோட ஆரம்பப் பாடம் படிச்ச ஒரு ஆள் நிச்சயம் சொல்லுவான் தப்பான முறையில இந்தப் படம் வரையப்பட்டுருக்குன்னு. ஆனா, அதே நேரத்துல இந்தப் படத்துல இருக்குற ஏதோ ஒண்ணு என்னைப்பிடிச்சு நிறுத்துது. இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி ஒரு உணர்வை உண்டாக்குது. இந்தப் பெண்ணோட சுயத்தைப் பக்கத்துலேயே இருந்து பார்த்திருக்கே! கணக்கும், சட்டங்களும் உனக்குத் தெரியாது. அதைப் பத்தியெல்லாம் நீ கவலைப்படல. ஆனா, நீ கண்ட அந்த தனித்துவம் இருக்குதே அதுதான் ரொம்பவும் முக்கியம். நீ வரைஞ்ச இந்தப் பெண் என்கிட்ட என்னவோ சொல்ல நினைக்கிற மாதிரி இருக்கு. இவளை எனக்குத் தர்றியா? இவளை நான் என்னோட அறையில வைக்கப் போறேன். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாயிருப்போம்...”
என்ன பதில் சொல்வது என்றே வின்சென்ட்டுக்குத் தெரியவில்லை. பீட்டர்ஸென்னைப் போன்ற கலை மீது தணியாத தாகத்தையும், முழுமையான ஈடுபாட்டையும் கொண்ட ஒரு மனிதரே இப்படிப் பேசுவதென்றால்...
¤ ¤ ¤
வாஸ்மேக்கு திரும்பி வந்த வின்சென்ட் பெரிய ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதைத் தன் ஸ்டுடியோவாக மாற்றினான். தொழிலாளிகள், தங்களை ஓவியமாக வின்சென்ட் வரைவதைப் பார்த்து சந்தோஷம் கொண்டனர். வேலை இல்லாத நேரங்களில் அவர்கள் வின்சென்ட்டின் வீட்டைத் தேடி வருவார்கள். அவர்களை வெவ்வேறு கோணங்களில் உட்கார வைத்து, நிற்க வைத்து ஓவியங்களாகத் தீட்டுவான் வின்சென்ட். எல்லோரும் படு ஆர்வத்துடன் அவன் படம் வரைவதையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு-சொல்லப்போனால், அதுவே நல்ல பொழுது போக்காக இருந்தது.
தியோ தபால் வழியாக அனுப்பி வைத்த மில்லெயின் ஓவியங்களை மிகவும் உற்சாகமாக வாங்கிய வின்சென்ட், அவற்றைப் பார்த்து அப்படியே வரைய ஆரம்பித்தான். தியோ ஸ்கெட்ச் பேப்பர்கள் வேறு அனுப்பியிருந்தான். அது வின்சென்ட்டிற்கு மிகவும் வசதியாகப் போனது. மில்லேயின் ஓவியங்களை வரைந்து முடிந்ததும், தன்னுடைய ஒரு பழைய நண்பன் அனுப்பியிருந்த சில ஓவியங்களைப் பார்த்து அவற்றை வரைய ஆரம்பித்தான் வின்சென்ட்.
கையில் உணவு சாங்க காசு இல்லை என்ற நிலை வின்சென்ட்டிற்கு வந்தபோது தொழிலாளி பெண்கள் அவனுக்கு தங்கள் வீடுகளிலிருந்து உணவு அனுப்பினார்கள். அவனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, பக்கத்திலேயே இருந்து அவனைப் பார்த்தார்கள். ஜுரம் உடம்பில் இருந்தாலும் மனது என்னவோ மிகவும் தெளிவாகத்தான் இருந்தது. இனி எவ்வளவு நாட்களுக்கு இப்படியே உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் வரைந்த படத்தைப் பார்த்து அதை அப்படியே வரைந்து கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பது என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தபோது ஒரு ஆள் வாசல் கதவைத் தட்டாமல் வீட்டுக்குள் வந்தான். அவன் வேறு யாருமல்ல- வின்சென்ட்டின் தம்பி தியோதான்.
தியோ எவ்வளவோ மாறிப்போயிருந்தான்! அவனுக்கு இப்போது நடந்து கொண்டிருப்பது இருபத்து மூன்று வயதுதான். இந்த வயதில் பாரீஸில் உள்ள ஆர்ட் காலரியின் மேனேஜராக இருந்து கொண்டு ஆக்கப்பூர்வமான பல காரியங்களை அவன் அங்கு பண்ணிக் கொண்டிருக்கிறான். நண்பர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவும், அன்பும் அவனுக்கு நிறையவே இருக்கிறது. இப்போது அவன் அணிந்திருப்பது இன்றைய நாகரீகத்திற்கேற்ற கறுத்த கோட், உயர்ந்த காலர், வெள்ளை நிறத்தில் டை.
வான்கா குடும்பத்திற்கென்றே அடையாளமாக இருக்கிற அகலமான நெற்றி. ப்ரவுன் கலரில் தலைமுடி, முகத்தில் ஒரு வகை மென்மைத்தனம், கண்களில் ஒரு கூர்மைத்தன்மை- இதுதான் தியோ.
வாசல் கதவின் அருகில் நின்றவாறு வின்சென்ட்டையே உற்றுப் பார்த்தான் தியோ. இந்த வீட்டில் தான் காணும் காட்சி ஒவ்வொன்றுமே ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. பாரீஸில் இருக்கும் தன் வீட்டில் இருக்கும் நவநாகரீக பொருட்களோடும், அங்கிருக்கும் சுக சவுகரியங்களோடும் இப்போது தான் இங்கு கண்டு கொண்டிருக்கும் விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்தான். தன் அண்ணன் வின்சென்ட்டின் இப்போதைய வாழ்க்கை நிலையை எண்ணிப் பார்த்தான். அறையில் அழுக்கடைந்துபோன ஒரு பாய் கிடந்தது. அதுதான் வின்சென்ட்டின் படுக்கை என எண்ணிப் பார்த்தபோது தியோவின் மனதில் சங்கடம் உண்டானது. வின்சென்ட் குளித்தே பல நாட்கள் ஆகியிருக்கும் போலிருந்தது. முகம் நிறைய சிவப்பு ரோமங்கள் பரந்து கிடந்தன.
தியோவால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை. வார்த்தைகள் திக்கி திக்கி வந்தன: “ஏன் வின்சென்ட், உனக்கு என்ன ஆச்சு? நீ இப்போ இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?”
“ஏய்... ஒண்ணுமில்ல... கொஞ்சம் உடம்புக்குச் சரியில்ல. அவ்வளவுதான். இப்போ சரியாயிட்டேன்.”
“ஆனா, இந்த இடம்... இவ்வளவு அசிங்கமா இருக்கே! நீ இங்கேதான் இருக்கியா?”
“இதுல என்ன இருக்கு? இதுதான் என்னுடைய ஸ்டுடியோ”
“என்ன சொல்ற வின்சென்ட்?”- தியோ வின்சென்ட்டின் தலைமுடியைத் தன் விரல்களால் வருடினான். அவனால் பேசக்கூட முடியவில்லை.
“தியோ... உன்னை நான் பார்த்துட்டேன்ல. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?”
“வின்சென்ட், உனக்கு என்ன ஆச்சு? உன்னோட உடம்புக்கு என்ன? எதையும் மறைக்காம சொல்லு!”
வின்சென்ட் எல்லாவற்றையும் விவரமாகக் கூறினான். அனைத்தையும் கேட்ட தியோ கேட்டான்:
“நீ எந்த அளவுக்கு மெலிஞ்சு போயிட்டே தெரியுமா? சரி... இங்கே என்ன சாப்பிடுறே?”
“இங்கே இருக்கிற பெண்கள் ஏதாவது சாப்பிட கொண்டு வந்து தருவாங்க. ரொட்டி, காப்பி இப்படி ஏதாவது...”
“காப்பியையும், ரொட்டியையும் மட்டும் சாப்பிட்டு உன்னால வாழ முடியுமா? முட்டையும், காய்கறியும், மாமிசமும் வாங்கி சாப்பிடலாமே!”
“அதை வாங்கணும்னா இங்கே அதுக்கு பயங்கர விலை ஆச்சே!”
தியோ கட்டிலில் அமர்ந்தான்: “வின்சென்ட், உன்னோட நிலைமை என்னன்னு எனக்கே இங்க வந்தப்புறம்தான் தெரியுது. நீ எவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்னு பார்க்குறப்போ மனசுக்கு ரொம்பவும் சங்கடமா இருக்கு. தெய்வத்தை மனசுல நினைச்சுக்கிட்டு என்னை நீ மன்னிக்கணும். உன்னோட வாழ்க்கை இந்த அளவுக்கு மோசமா இருக்கும்னு நான் கனவுல கூட நினைக்கல...”
“தியோ... இதைப்பத்தி நீ கவலைப்படாதே. உன்னால முடிஞ்சதை எல்லாம் எனக்கு நீ செஞ்சிருக்கே. நான் இங்கே நல்லாத்தான் இருக்கேன். இன்னும் சில நாட்கள்ல என்னால வெளியே இறங்கி நடக்க முடியும்.”
தன் விரலால் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தவாறு தியோ சொன்னான்: உன்னை நான் சரியா புரிஞ்சுக்கிடல... நான் நினைச்சேன்... நீ...”