வான்கா - Page 26
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“மண்ணை வெட்டி மாத்தணும்னா எவ்வளவு நேரமாகும்?”
“வாரக்கணக்குல ஆகும். சில நேரங்கள்ல மாதக் கணக்குல ஆனாலும் ஆச்சரியப்படுறதற்கில்ல.”
“நீங்க என்ன சொல்றீங்க?”
“முன்னாடி இதே மாதிரி விபத்து நடந்தப்ப, அவ்வளவு நாட்கள் ஆகியிருக்கு”
“அப்படின்னா, அவங்களை நாம இழக்க வேண்டியதுதானா?”
“வேற வழி? மொத்தம் ஐம்பத்தேழு ஆளுங்க. அதுல குழந்தைகளும் இருக்காங்க. அவங்களை இனி நாம பார்க்கவே முடியாது!”
முப்பத்தாறு மணி நேரம் தொடர்ச்சியாக முயற்சி செய்தும், அதனால் ஒரு பலனும் உண்டாகவில்லை. சுரங்கத்திற்குள் மாட்டிக் கொண்ட தொழிலாளிகளின் மனைவிமார்களையும், குழந்தைகளையும் தேற்றுவதற்கு யாராலும் முடியவில்லை என்பதே உண்மை. சில பெண்கள் காப்பியும் ரொட்டியும் கொண்டு வந்து தந்தாலும், அவர்கள் அதைச் சாப்பிடுவதாக இல்லை.
இரவு வந்ததும் வெர்ணெயை ஒரு கம்பளியில் சுற்றி மேலே கொண்டு வந்தார்கள். தலையில் இரத்தம் கோர்த்துவிட்டிருந்தது. அடுத்த நாள் காலையில் வெர்ணெ இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாகப் போய்விட்டார்.
நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குப் பிறகு தெக்ரூக்கின் மனைவியையும், குழந்தைகளையும் மிகவும் சிரமப்பட்டு போகச் சொன்னான் வின்சென்ட். பன்னிரெண்டு நாட்கள் தொடர்ந்து தேடியும், ஒரு பிரயோஜனமும் இல்லை என்றாகிவிட்டது. சுரங்கத்தில் வேலைகள் முழுக்க முழுக்க நின்று போய்விட்டதால் யாருக்கும் சம்பளம் கிடைக்கவில்லை. தெனியின் மனைவி ரொட்டி தயாரித்து எல்லோருக்கும் கடனுக்குக் கொடுத்தாள். அவளின் கையில் பணம் தீர்ந்தவுடன், அதுவும் இல்லை என்றாகிவிட்டது. பெயருக்குக் கூட கம்பெனி ஒரு சல்லிக்காசு யாருக்கும் தரவில்லை. பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு எல்லாத் தொழிலாளர்களையும் வேலைக்கு வரும்படி கேட்டுக் கொண்டது கம்பெனி.
அவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள்.
தன் சம்பளம் வந்ததும் அதில் உணவு வாங்கி எல்லோருக்கும் தந்தான் வின்சென்ட். கிராமத்து மக்கள் ஆறு நாட்கள் அதை வைத்து உண்டார்கள். பிறகு அவர்கள் காட்டுக்குள் நுழைந்து பழங்களும், இலையும், புல்லும் கொண்டு வந்தார்கள். ஆண்கள் காடுகளைத் தேடிப் போய் மிருகங்களை வேட்டையாடினர். பிராணிகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. எலி, பல்லி, பூனை, நாய் – அவர்களிடம் இவை கூட தப்பவில்லை. கடைசியில் அவையும் முடிந்தன. அதற்குப் பிறகு பசியைப் போக்க வேறு வழியே தெரியவில்லை. தங்கள் கண் முன்னே மனைவிமார்களும், குழந்தைகளும் பட்டினி கிடந்து சாவதை தொழிலாளிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கையற்ற நிலையில் சிலை என நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
மரணமடைந்தவர்களுக்காக இறுதி அஞ்சலி ஒன்று செலுத்த வேண்டும் என்று வின்சென்ட்டிடம் தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டனர். கடந்த சில நாட்களாக சாப்பிட எதுவுமே இல்லாமம் வின்சென்ட் வெறும் கறுப்பு காபி மட்டும் குடித்துக் கொண்டிருந்தான். அவனால், நேராக நிற்கக்கூட முடியவில்லை. இதயம் விரக்தியால் வெந்து போயிருந்தது. உடம்போ ஜுரம் வந்து நடுங்கிக் கொண்டிருந்தது. கண்கள் இரண்டும் பட்டினியால் குழி விழுந்து போய் சின்னதாக இருந்தன. கன்னங்கள் ஒட்டிப் போய் இருந்தன. தாடி வளர்ந்து சிவப்பு வண்ணத்தில் பார்க்கவே அசிங்கமாக இருந்தது. குளிரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு கோணியை எடுத்து தன் மேல் போர்த்தி இருந்தான் வின்சென்ட்.
அறையில் ராந்தல் விளக்கின் மங்கலான வெளிச்சம் அங்கு அமைதியாக உட்கார்ந்திருந்த நூறு ஆத்மாக்களின் மேல் பட்டு நிழல் உண்டாக்கியது. வைக்கோல் படுக்கையில் சாய்ந்து படுத்தவாறு, வறண்டுபோன, உயிர்ப்பே இல்லாத குரலில் வின்சென்ட் பேசத் தொடங்கினான். பட்டினி கிடந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த ஏழை தொழிலாளர்கள் அதைக கூட மறந்து வின்சென்ட் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் வின்சென்ட் கடவுள் மாதிரி!
திடீரென்று வெளியே ஒரு ஆரவாரம். வாசல் கதவு திறக்கப்பட்டது. ஒரு குழந்தையின் குரல்: “ம்ஸ்யெ வின்சென்ட் இங்கதான் இருக்காரு.”
வின்சென்ட் தன் பிரசங்கத்தை நிறுத்தினான். எல்லோரும் வாசல் பக்கம் தலையைத் திருப்பிப் பார்த்தார்கள். நாகரீகமாக உடையணிந்த இரண்டு மனிதர்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்களின் முகத்தில் வெறுப்பும், பயமும் கலந்து இருந்ததை வின்சென்ட் பார்த்தான்.
“வாங்க ரெவ.ஜோங், ரெவ.ப்ரிங்க்”- வின்சென்ட் படுக்கையில் படுத்தவாறே சொன்னான்: “நாங்க செத்துப் போனவங்களுக்காக இறுதி அஞ்சலி நடத்திக்கிட்டு இருக்கோம். இங்க கூடியிருக்கிற மக்கள் ஆறுதல் அடையிற மாதிரி ரெண்டு வார்த்தைகள் கூறுவீங்களா?”
ரெவ.ஜோங் ஒன்றுமே பேசாமல் மவுனமாக சில நிமிடங்கள் நின்றார். பின்னர் என்ன நினைத்தாரோ, “வெட்கம்... வெட்கம்...” என்றார் – தன் முன்னால் உந்திக் கொண்டிருந்த தொந்தியைத் தடவியபடி.
“நீ என்ன ஆப்ரிக்கன் காடுகள்ல இருக்கிறதா நினைப்பா?”- ரெவ.ப்ரிங்க் கேட்டார்.
“இவன் இங்கே என்ன செய்துக்கிட்டு இருக்கான்னு கடவுளுக்குத்தான் தெரியும்.”
“இவங்க மறுபடியும் வாழ்க்கை மேல நம்பிக்கை வைக்க இன்னும் பல வருஷங்கள் ஆகும்.”
“நான் அன்னைக்கே சொன்னேன்ல இவனுக்கு நாம நியமனம் தரக் கூடாதுன்னு!”
“அது எனக்கும் தெரியும். ஆனா, பீட்டர்ஸென்தான் சிபாரிசு பண்ணினாரு. இவன் இப்படிச் செய்வான்னு நான் கனவுல கூட நினைக்கல. சுத்த கிறுக்குப் பயலா இருக்கானே!”
“நான் இதை முன்பே எதிர்பார்த்தேன்”
அவர்கள் ஃப்ரெஞ்ச் மொழியில் படுவேகமாகப் பேசியது அந்த கிராமத்து மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. கடுமையான ஜுரத்தில் படுத்துக் கிடந்த வின்சென்ட் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்கவே இல்லை.
கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு முன்னால் நீக்கிய ரெவ.ஜோங் வின்சென்ட்டிடம் சொன்னார்: “இந்த அசிங்கம் பிடிச்ச நாய்களை முதல்ல இந்த இடத்தை விட்டு விரட்டு”
“ஆனால். இறுதிச் சடங்குகள் இன்னும் முடியலியே!”
“என்ன பெரிய இறுதிச் சடங்குகள்! வெளியே இவக்ளை விரட்டுறயா இல்லியா?”
தொழிலாளிகள் மெல்ல பின்னால் நகர்ந்தார்கள். இரண்டு பாதிரியார்களும் வின்சென்ட்டுக்கு நேர் எதிரே வந்து நின்றார்கள்.
“நீ இப்போ இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே! இந்த அசிங்கமான இடத்துல இறுதிச் சடங்குகள் உன்னை யார் நடத்தச் சொன்னது? ஏன் இந்த மாதிரி காட்டுத்தனமா நடக்குறே? நாகரீகம்னா என்னன்னு உனக்கு தெரியவே தெரியாதா? ஒரு பாதிரியார் நடக்குற மாதிரியா நீ நடக்குறே? சர்ச்சை அவமானப்படுத்துறோம்னு உனக்கு தோணவே இல்லையா?”
அசுத்தமான வீட்டையும், வைக்கோல் படுக்கையையும், கோணியால் உடலைப் போர்த்திக் கொண்டு படுத்துக்கிடந்த வின்சென்ட்டையும் ரெவ.ஜோங் வெறுப்பு மேலோங்கப் பார்த்தார்.“”