வான்கா - Page 23
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
உள்ளே-தெக்ரூக்கின் சிறு குழந்தைகள் இரண்டு நிலத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. அவர்களின் உடல் குளிர்ச்சியடைந்து நீல நிறத்தில் இருந்தன. அறையிலிருந்த அடுப்பில் இருந்து சிறிய அளவில் உஷ்ணம் வெளியேறி அறைக்குள் பரவிக் கொண்டிருந்தது. வின்சென்ட் குழந்தைகளைத் தூக்கிப் படுக்கையில் போட்டான். கழுத்து வரை அவர்களை கோணியால் மூடினான். இவர்களுக்கு உதவுகிற மாதிரி நிச்சயம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று அவன் மனம் கூறியது. இந்த கிராமத்து மக்களின் கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கையை தன்னால் தெளிவாக அறிய முடிகிறது என்ற உண்மையை இவர்களுக்குத் தெரிவித்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் வின்சென்ட்.
தெக்ரூக்கின் மனைவி உடம்பெல்லாம் கரி புரள, வீடு நோக்கி வந்தாள். கரி படிந்த உடலுடன் நின்று கொண்டிருந்த வின்சென்ட்டை அவளுக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை. அடையாளம் தெரிந்தவுடன் ஓடிப்போய் கொஞ்சம் கருப்பு காப்பி சூடாக்கி கொடுத்தாள். அவளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக கசப்பான காப்பியை ருசித்துக் குடித்தான் வின்சென்ட்.
“நீங்கதான் பார்த்துக்கிட்டு இருக்கீங்களே! இங்க இருக்கிற எங்களோட வாழ்க்கை உண்மையிலேயே படு மோசமானது”- அவள் சொன்னாள்: “கம்பெனி பெரிசா எதுவுமே தர்றதில்ல. இந்தக் குழந்தைகளை கடுமையான குளிர்ல இருந்து எப்படி காப்பாத்துறது? நீங்களே சொல்லுங்க. இந்த கோணித்துணியை விட்டா இங்கே வேற என்ன இருக்கு? இதைப் போர்த்தி படுத்தால், குழந்தைகளுக்கு உடம்புல நமைச்சல் எடுக்குது. இப்படி வீட்டுக்குள்ளேயே குழந்தைகளை அடைச்சு வச்சா இவங்க எப்படி வளருவாங்க?”
இதைக் கேட்டதும் வின்சென்ட்டின் கண்கள் கலங்கிவிட்டன. இந்த அளவுக்கு மனிதர்கள் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பதை இதற்கு முன்பு அவன் வேறு எங்குமே பார்த்ததில்லை. இந்தச் சின்னஞ்சிறு குழந்தைகள் குளிரில் நடுங்கிப் போய் செத்துக் கொண்டிருக்கிறபோது பிரார்த்தனையும் உபதேசமும் கொண்டு என்ன செய்ய முடியும்? உண்மையிலேயே தெய்வம் என்ற ஒன்று இருக்கிறதா என்ன?
கையிலிருந்த கொஞ்சம் பணத்தை தெக்ரூக்கின் மனைவியின் கையில் கொடுத்துவிட்டு வின்சென்ட் சொன்னான்:
“இந்தக் குழந்தைகளுக்குத் தேவையான கம்பளி ஆடைகளை வாங்கிக்கோங்க.”
¤ ¤ ¤
தெனியின் மனைவி வின்சென்ட் குளிக்க சுடுதண்ணீர் தயார் செய்து வைத்திருந்தாள். உணவுக்காக அவனுக்கு வேண்டி பிரத்யேகமாக முயல்கறியும் வெண்ணெய் புரட்டிய ரொட்டியும் தயார் பண்ணி தயாராக வைத்திருந்தாள்.
சாப்பாடு முடிந்து தன் அறைக்கு வந்த வின்சென்ட், தன்னைச் சுற்றி பார்த்தான். நன்கு சுத்தமாக்கப்பட்ட அறை, படுக்கை, படுக்கை விரிப்பு, தலையணை, பீரோவுக்குள் தேவையான உடைகள், இரண்டு ஜோடி காலணிகள், ஓவர் கோர் – தன் அறையில் இருந்த இந்தப் பொருட்களைப் பார்த்தான் வின்சென்ட்.
இவற்றைப் பார்த்தபோது வின்சென்ட்டின் மனதில் ஒருவித அவமான உணர்ச்சி உண்டானது. தன்னை நினைத்து ஒருவிதத்தில் அவனே வெட்கப்பட்டான். தானொரு கோழை, வஞ்சகன் என்ற முடிவுக்கு வந்தான் அவன். தரித்திரத்தைப் பற்றியும், வறுமையைப் பற்றியும் வாய்கிழியப் பேசுவது - தான் மட்டும் நல்ல வசதிகளுடன் சுகபோகமாக வாழ்வது! ‘வெறும் வாய்ச்சொல் பேசி நாடகமாடிக் கொண்டு வாழும் கபட வேடதாரிதானே நான்’ என்று தன்னைத்தானே ஒரு நிமிடம் எடைபோட்டு, தான் நினைப்பது சரியே என்ற முடிவுக்கு வந்தான் வின்சென்ட். தான் செய்யும் பிரசங்கத்தால் யாருக்கு என்ன பிரயோஜனம்? மணி கணக்கில் பல தத்துவங்களைத் தான் பேசுவதால் அதைக் கேட்பவர்களுக்கு எந்த அளவிற்கு அது உபயோகமாக இருக்கிறது? இந்த வறுமையில் வாடிக்கிடக்கும் மக்களின் கஷ்டத்தில் பங்கெடுப்பதாகச் சொல்லி நடிப்பது... தான் மட்டும் பல்வேறு வகைப்பட்ட உடைகளை அணிந்து எந்தவித கஷ்டமும் இல்லாமல் சுவையான உணவு சாப்பிட்டு, பஞ்சு போன்ற மெத்தையில் கிடந்து உறங்குவது, நிச்சயம் தான் இதுவரை செய்தது சரியல்ல. எல்லாமே போலித்தனமானது! கபடம் நிறைந்தது! தான் பேசியதற்கும் செயல்பட்டதற்கும் ‘சம்பந்தமே இல்லை என்ற முடிவுக்கு வந்தான் வின்சென்ட். ஒருவிதத்தில் அந்த மக்களின் வாழ்க்கையோடு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் தன் அன்றாட வாழ்க்கை அமைந்திருந்ததற்காக தனக்குத்தானே வருத்தப்பட்டுக் கொண்டான் அவன்!
அவன் முன் இப்போது இருப்பது இரண்டே இரண்டு வழிகள்தாம். ஒன்று – தன் கபட நாடகம் எல்லோருக்கும் தெரிவதற்கு முன்பே அவர்களிடமிருந்து ஓடி தப்பித்துக் கொள்வது. இன்னொன்று – இனிமேலும் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இல்லாமல் வாழ்வதை விட்டு, தன் மனதில் என்ன உள்ளதோ அதன்படி போலித்தனம் இல்லாமல் மக்களோடு நெருங்கி உண்மையான மனிதனாக வாழ்வது...
தன்னிடமிருந்த ஆடைகளையும், காலணிகளையும், புத்தகங்களையும், ஓவியங்களையும் வின்சென்ட் எடுத்து ஒரு பெரிய கோணியில் போட்டு நாற்காலியின் மேல் வைத்தான். எல்லாம் முடிந்ததும், வெளியே இறங்கி வேகவேகமாக நடந்தான்.
மலைச் சரிவில் ஒரு சிறிய அருவிக்கரையோரம் சில தொழிலாளிகளின் வீடுகள் இருந்தன. சில நிமிட அலைச்சலுக்குப் பிறகு ஆர்ப்பாட்டமில்லாத – அமைதியான ஒரு இடத்தில் இருந்த ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்தான் வின்சென்ட். மண்ணால் ஆன தரை. வெளியே இருந்த கடுமையான குளிர் மேல் கூரையிலும், சுவர்களிலும் இருந்த ஓட்டைகள் வழியே வீட்டுக்குள் நுழைந்தது.
“இந்த வீட்டோட சொந்தக்காரர் யார்? இதற்கு எவ்வளவு வாடகை?”- தனக்கு இந்த வீட்டைக் காட்டிய பெண்ணிடம் கேட்டான் வின்சென்ட்.
“இந்த வீட்டோட சொந்தக்காரர் வாஸ்மேயில் இருக்கிற ஒரு வியாபாரி. வாடகை ஐம்பது ஃப்ராங்குன்னு நினைக்கிறேன்.”
“அப்படியா? அப்ப நானே எடுத்துக்குறேன்.”
“ஆனா, வின்சென்ட், இங்க உங்களால தங்க முடியாதே!”
“ஏன் தங்க முடியாது?”
“இந்த வீடு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கு பார்த்தீங்களா, என்னோட வீட்டை விட இது பல மடங்கு மோசமா இருக்கு. சின்ன வாஸ்மேயிலேயே ரொம்பவும் மோசமான நிலையில் இருக்கிற வீடு அனேகமாக இதுவாகத்தான் இருக்க முடியும்!”
“அதனாலதான் இந்த வீடே எனக்கு வேணும்னு நான் சொல்றேன்.”
¤ ¤ ¤
வின்சென்ட்டின் அறையில் சாமான்கள் வைத்து கட்டப்பட்டிருந்த மூட்டையை தெனியின் மனைவி பார்த்தாள். வின்சென்ட் திரும்பி அந்த அறைக்குள் வந்தபோது அவள் கேட்டாள்: “இங்கே ஏதாவது பிரச்சினையா? எதுக்காக இவ்வளவு சீக்கிரம் நீங்க ஹாலண்டுக்கு திரும்பப் போறீங்க?”
“நான் ஏன் ஹாலண்டுக்குப் போகணும்? போரினேஜில்தான் நான் இருக்கப் போறேன்.”
“அப்படின்னா, இந்த மூட்டை...?”
வின்சென்ட் தன் மனதில் இப்போது எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தைக் கூறியபோது, அவள் மெதுவான குரலில் சொன்னாள்: “அப்படி உங்களால வாழுறதுன்றது ரொம்பவும் கஷ்டமான விஷயம்.