வான்கா - Page 19
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
தொழிலாளர்கள் சுரங்கத்தை விட்டு வெளியே வருவதை வின்சென்ட் பார்த்தான். கிழிந்து போன பழைய ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தார்கள். தலையில் தோலால் ஆன தொப்பிகள். பெண்கள் கூட ஆண்கள் அணியும் ஆடைகளையே அணிந்திருந்தார்கள். கால் முதல் தலைவரை நிலக்கரி பட்டு கறுப்பு வண்ணத்தில் அவர்கள் இருந்தார்கள். கண்கள் மட்டும் வெள்ளையாய் தெரிந்தன. இருட்டுக்குள்ளேயே நாள் முழுவதும் வேலை செய்து உழைத்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு வெளியே வந்தபிறகு பார்க்கும் அந்த சூரிய ஒளி பழக்கமில்லாத ஒன்று போல் தெரிந்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? ஒடுங்கிப்போன தோள்களையும், மெலிந்த ஒட்டடைக்குச்சிபோல் காட்சியளிக்கும் கை, கால்களையும் கொண்ட அந்த உயரம் குறைவான மனிதர்கள் வின்சென்ட்டுக்குக் கொஞ்சமும் புரியாத ஏதோ ஒரு கிராமத்து மொழியை ‘சலபுல’வென்று பேசியவாறு, அவனைக் கடந்து போய்க் கொண்டிருந்தனர்.
¤ ¤ ¤
சாப்பாடு நேரத்திற்கு ஜேக்யு வெர்ணெ அங்கு வந்திருந்தார். தாழ்ந்து இறங்கிப் போயிருந்த தோள் எலும்பு, குழி விழுந்து போய் சோகம் கப்பிப் போயிருந்த கண்கள், மூக்கிலும் காதுகளிலும் கண் புருவத்திலும் வளர்ந்து தெரியும் ரோமங்கள்- இதுதான் ஜேக்யு வெர்ணை. தலையில் பெயருக்குக் கூட ஒரு முடி கிடையாது. பல வருடங்கள் தொடர்ச்சியாக சுரங்கத்திற்குள் வேலை பார்த்ததால், அந்த மனிதருக்கு ஆஸ்துமா அதற்குப் பரிசாகக் கிடைத்திருந்தது. வெர்ணெ இருமுகிறபோது, அவரின் நெஞ்சு வெடித்துச் சிதறி விடுமோ என்று எல்லோரும் உண்மையிலேயே பயந்து போய் விடுவார்கள்.
வின்சென்ட் ஒரு இவான்ஜலிஸ்ட் என்பதைத் தெரிந்தபோது அவர் சொன்னார்: “எங்களைக் காப்பாற்ற பலரும் முயற்சி செய்து பார்த்திருக்காங்க. ஆனால், எங்களைப் பொறுத்தவரை நாயையும் விடக் கேவலமாக நாங்க வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். அதை ஒண்ணும் நான் குறையா சொல்லல. அம்மா என்னைப் படிக்க வச்சதால, என்னோட இருபத்தொன்பதாம் வயசுல என்னால ஃபோர்மேனா வர முடிஞ்சது. அப்போதே மூச்சுக் குழாய்கள் சேதமடைஞ்சு இருந்துச்சு. இருந்தாலும்... தொழிலாளிகளைப் பற்றியும், அவங்களோட வாழ்க்கையைப் பற்றியும் என்னைவிட சிறப்பாக தெக்ரூக் சொல்லுவார்.”
¤ ¤ ¤
தெக்ரூக்கின் வீடும் மற்ற வீடுகளைப் போலத்தான் இருந்தது. தரை மெழுகப்பட்டிருந்தது. மேல் கூரை பாசி பிடித்திருந்தது. காற்று உள்ளே வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக சுவரில் பலகைகளுக்கு மத்தியில் சாக்குத் துண்டுகளை ஆங்காங்கே திணித்து வைத்திருந்தார்கள். அறையின் மூலையில் போடப்பட்டிருந்த கட்டிலில் அவரின் குழந்தைகள் உலகை மறந்து தூங்கிக் கொண்டிருந்தன. கட்டிலுக்கு அடியில் ஆடுகள் உறங்கிக் கொண்டிருந்தன. ஒரு அடுப்பு, மரத்தால் ஆன மேஜை, பெஞ்ச், நாற்காலி, பாத்திரங்கள் அடுக்கி வைக்க ஒரு பெட்டி. இவைதான் அந்த வீட்டில் இருந்த பொருட்கள்.
தெக்ரூக் உடல் ரீதியாக மிகவும் தளர்ந்து போன ஒரு மனிதராக இருந்தார். தலையின் ஒரு பக்கத்தில் ஒரு பெரிய காயம் இருந்தது. கால்களில் ஆங்காங்கே பல காயங்கள். உடலில் இருந்து இடுப்புப் பகுதியில் துருத்திக் கொண்டிருந்த எலும்புகள் – சுரங்கத்தில் நடந்த விபத்துக்கள் அவருக்குத் தந்த பரிசுகள் இவை. இருந்தாலும், சொல்லி அடங்காத அளவிற்கு அவரிடம் வேகமும், ஆவேசமும் இருந்தன இப்போதும். எப்போதும் கம்பெனிக்கு எதிராக குரல் உயர்த்தி பேசக்கூடிய மனிதர் என்பதால் சுரங்கத்திலேயே மிகவும் சிரமமான வேலை என்ன இருக்கிறதோ, அதைத்தான் அவர்கள் தெக்ரூக்கிற்குத் தருவார்கள். ஒவ்வொருமுறை தான் அடக்கி வைக்கப்படும் போதெல்லாம் பலமடங்கு அதிக தெம்புடனும், ஆக்ரோஷத்துடனும் எழுந்து நிற்கக் கூடிய சிங்கம்தான் தெக்ரூக்.
‘ம்ஸ்யெ வான்கா...’- தெக்ரூக் சொன்னார்:
“நீங்க சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கீங்க. இங்கே நாங்க அடிமைகளாக மட்டும் வாழ்ந்துக் கொண்டிருக்கவில்லை- மிருகங்களை விடக் கேவலமாகவும் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். அதிகாலை சரியா மூணு மணிக்கு நாங்க சுரங்கத்துக்குள்ளே நுழைவோம். மத்தியான சாப்பாட்டுக்கு பதினைந்து நிமிடம் இடைவெளி விடுவாங்க. அதற்கப்புறம் தொடர்ந்து கடுமையான வேலை. சாயங்காலம் நாலு மணி வரை மாடு மாதிரி உழைக்கணும். வேலை செய்யிற இடம் ஒதே இருட்டா இருக்கும். உஷ்ணம் சொல்லவே வேண்டாம். சொல்லப் போனால் எந்தவித ஆடையும் இல்லாமத்தான் நாங்க அங்கே வேலை பாக்குறோம். நிலக்கரித்தூள், விஷவாயு – இதுக்கு மத்தியில் எப்படி சவாசிக்கிறது? மூச்சு விடுறதுக்கே அவ்வளவு கஷ்டமா இருக்கும். முதுகை நிமிர்த்தி நிக்கலாம்னா அதுக்கு இடம் இருக்காது. முழங்கால் போட்டு வேலை செய்யணும். இங்க இருக்கிற எல்லா குழந்தைகளும் அவங்களுக்கு எட்டு அல்லது ஒன்பது வயசு ஆயிடுச்சுன்னா, இந்த நரகத்துல வந்து இறங்கிடுவாங்க. இருபத்தஞ்சு வயசு ஆகுறப்போ காய்ச்சலும், ஆஸ்துமாவும் வந்து உயிரை எடுக்கும். அதுக்கு முன்னாடி சாகலைன்னா நாற்பது வயசுல நிச்சயம் க்ஷயரோகம் வந்து ஆள் மரணத்தைத் தழுவுகிறதைத் தவிர வேற வழியே இல்லை. என்ன வெர்ணெ, நான் சொல்றது சரிதானே?”
“சரிதான்” தெக்ரூக்கின் மனைவி இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பக்கத்தில் நின்றவாறு கேட்டுக் கொண்டிருந்தாள். அவளும் முன்பு நிலக்கரிச் சுரங்கத்தில் தொழிலாளியாக வேலை பார்த்தவள்தான். நிலக்கரி ஏற்றப்பட்ட வண்டியைப் பல வருடங்கள் தள்ளிக் கொண்டிருந்ததாலும், தொடர்ந்து குழந்தைகள் பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாலும், இந்தச் சின்னஞ்சிறு குடிசையில் மீதிக் காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்ததாலும், அவளுடைய உடம்பில் சக்தியே இல்லை என்றாகிவிட்டிருந்தது. அவளுக்கு இப்போது நடந்து கொண்டிருப்பது இருபத்தாறு வயதுதான். ஆனால் அதற்குள் ஒரு கிழவிக்குரிய முதுமையையும், சவக்களை விழுந்த முகத்தையும் கொண்டவளாக இருந்தாள் அவள்.
தெக்ரூக் தொடர்ந்து சொன்னார்: “இந்த வேலை செய்யிறதுனால எங்களுக்கு என்ன கிடைக்குதுன்னு நினைக்கிறீங்க? ஒரே ஒரு அறையை மட்டும் கொண்ட ஒரு குடிசை- பிக்காஸ் (நிலக்கரியைத் தோண்ட உபயோகப்படும் கருவி) தூக்குவதற்குத் தேவையான சக்தி தர கொஞ்சம் உணவு- அதாவது, ரொட்டியும், புளிச்சுப் போன வெண்ணையும், பால் இல்லாத கருப்பு காப்பியும். வருஷத்துல ஒரு தடவையோ ரெண்டு தடவையோ இறைச்சி கிடைச்சா பெரிசு. சம்பளத்துல ஐம்பது பைசாவை வெட்டிட்டாங்கன்னு வச்சுக்கோங்க. அவ்வளவுதான்- நாங்க பட்டினி கிடந்து சாகுறதைத் தவிர வேற வழியே இல்லை. அவங்களோட நிலக்கரியை எடுக்க வேற ஆளுங்க இல்லாமப் போவாங்கன்ற ஒரே காரணத்துக்காகத்தான் எங்களுக்கு இதையாவது அவங்க தந்துக்கிட்டு இருக்காங்க. சொல்லப்போனால், ஒவ்வொரு நாளும் நாங்க எல்லாரும் செத்துப் பிழைச்சுக்கிட்டு இருக்கோம். வேலை செய்யிற தொழிலாளிக்கு உடம்புக்கு ஆகாமப் போச்சுன்னு வச்சுக்கோங்க, அடுத்த நிமிஷமே ஒரு பைசா தராமல் வெளியே போகச் சொல்லிடுவாங்க.