வான்கா - Page 21
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“நீங்க சின்ன வாஸ்மேக்கு வந்து ரெண்டு மாசம் ஆயிடுச்சே!” ஒரு நாள் வெர்ணெ சொன்னார்: “ஆனால், நீங்க இன்னும் சரியா போரினேஜைப் பார்க்கல.”
“நீங்க சொல்றது சரிதான்...”- வின்சென்ட் சொன்னான்: “நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்த மக்களையே புரிஞ்சுக்கிட்டு வர்றேன்.”
“நான் சொல்ல வந்தது அதை அல்ல”- மூக்குக்குள் நீளமாக நீட்டிக் கொண்டிருந்த ஒரு ரோமத்தை விரலால் பிடுங்கியவாறு ஜேக்யு தொடர்ந்தார்: “நீங்கள் பூமிக்கு மேல் சாதாரணமாக மற்ற இடங்கள்ல ஜனங்கள் எப்படி வாழ்கிறார்களோ, அப்படித்தான் எங்களையும் பார்த்திருக்கீங்க. அதனால ஒரு பிரயோஜனமும் இல்ல. நாங்கள் உறங்குறது மட்டும்தான் இங்கே. உண்மையிலேயே எங்களைப் பற்றி தெரிஞ்சுக்கிடணும்னா சுரங்கத்துக்குள்ள நீங்களும் இறங்கி நாங்க எப்படி அதிகாலை மூணு மணியில் இருந்து சாயங்காலம் நாலு மணி வரை இடுப்புமுறிய வேலை செய்யிறோம்ன்றத நேர்ல பார்க்கணும்.”
¤ ¤ ¤
தன் புதிய பள்ளியில் வின்சென்ட் பிரசங்கம் செய்வதைக் கேட்பதற்காக சின்ன வாஸ்மேயைச் சேர்ந்த எல்லாக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அங்கு ஆஜராகியிருந்தனர். பெஞ்சுகள் முழுமையாக மக்களால் நிறைந்தவுடன் நாற்காலிகளையும், பெட்டிகளையும் மற்றவர்கள் தூக்கிக்கொண்டு வந்தனர். முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்களின் அன்பான வரவேற்பு வின்சென்ட்டின் மனதில் உற்சாகத்தை உண்டாக்கியது. தனக்கென்று உண்டாக்கியிருக்கும் சொந்த தேவாலயத்தில் இருந்து பிரசங்கம் செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவனின் பிரசங்கம் ஆத்மார்த்தமானதாகவும், நம்பிக்கை நிறைந்ததாகவும் இருந்தது. பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களின் முகத்தை அவன் பார்த்தான். ஒருவித பிரகாசம் அவர்கள் முகத்தில் தெரிவதை அவனால் உணர முடிந்தது.
“நாம இந்த உலகத்துல அனாதைகள்னு நினைச்சுக்கிட்டு இருக்கிற தவறான கருத்து”- வின்சென்ட் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தான்:
“ஆனால், இங்கே நாம மட்டும் தனியா இல்லை. நம்மோட தந்தையும் நம்முடனே இருக்கிறார். நாம் – சொல்லப் போனால் உலகத்துக்கு வழிப் போக்கர்களாக வந்தவர்கள்- நம்மோட வாழ்க்கை என்பது பூமியிலிருந்து சொர்க்கத்துக்குப் போகிற ஒரு தீர்த்தயாத்திரைதான்.”
“துக்கம்தான் மகிழ்ச்சியைவிட நல்லது. சிரித்து மகிழ்ச்சியாக இருக்கிறபோது கூட இதயத்தின் அடியில் துக்கம் இருக்கவே செய்யுது. துக்கம் நிறைந்தவர்களின் வீடு தேடிப் போவதே விருந்துண்ணப் போவதைவிட மேலானது. காரணம் – துக்கம் இதயத்தை மேலும் சுத்தமுள்ளதா ஆக்குது.”
“கடவுளை நம்புகிறவனுக்கு துக்கத்திலிருந்து விடுதலை உண்டு. ஒவ்வொரு முறையும் நாம் புதிதாகப் பிறக்கிறோம், வாழ்கிறோம். ஒவ்வொரு தடவையும் இருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி நகர்கிறோம்.”
“பிதாவே, தீமையிலிருந்து எங்களைக் காப்பாற்றும்படி நாங்கள் வேண்டிக்கிறோம். தரித்திரத்தையோ செல்வத்தையோ நாங்கள் கேட்கவில்லை. சாப்பிட அப்பம் எங்களுக்குத் தந்தால் போதும். ஆமென்.”
பிரசங்கம் முடிந்ததும் வின்சென்ட்டின் அருகில் தெக்ரூக்கின் மனைவி வந்து நின்றாள். அவளின் கண்களில் நீர் நிறைந்திருந்தது. நடுங்கிய உதடுகளுடன் அவள் சொன்னாள்: “என்னோட கஷ்டங்களுக்கு மத்தியில் நான் கடவுளை முழுமையாக மறந்து போயிருந்தேன். மறந்துபோன கடவுளை மறுபடியும் எனக்கு ஞாபகப்படுத்தியது நீங்கள்தான். அதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.”
அன்று இரவு அந்த கிராமத்து மக்களுக்கும் தனக்கும் இடையே இருந்த ஒரு இடைவெளி இல்லாமல் போய்விட்டதை வின்சென்ட்டால் உணர முடிந்தது. தன்னை அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். இந்த மாற்றம் இவ்வளவு சீக்கிரம் உண்டானதற்கான காரணம் என்ன, இதற்கு முன்பு கூட பல இடங்களிலும் வின்சென்ட் பிரசங்கம் செய்திக்கிறானே!
தன் அறையை அடைந்த வின்சென்ட் கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வாளியில் நிறைத்தான். சோப்பையும் கண்ணாடியையும் எடுத்தான். கண்ணாடியைச் சுவரில் தொங்கவிட்டு தன் முகத்தை அதில் பார்த்தான். அவனுடைய முகம் முழுக்க கரி படிந்திருந்தது. தன்னை இப்போது தந்தையும், தாயும் பார்க்க வேண்டும். அவ்வளவுதான் – ஆடிப் போவார்கள் அவர்கள். இதை நினைத்து விழுந்து விழுந்து சிரித்தான் வின்சென்ட்.
சோப்பை எடுத்து முகத்தைத் தேய்க்க ஆரம்பித்தபோது, திடீரென்று மனதின் ஒரு மூலையில் ஒரு தோணல். நீரில் நனைந்த கையை உயர்த்தியவாறே நின்றான். கண்ணாடியில் மீண்டும் தன்னைப் பார்த்தான். நெற்றியில், கண் புருவங்களில், தாடியில் – எல்லா இடங்களிலும் கரி படிந்திருந்தது.
“ஓ... இதுதான் காரணமா?”- வின்சென்ட் ஏதோ உண்மையைக் கண்டுபிடித்த மாதிரி வெற்றிக் களிப்புடன் தன்னைப் பார்த்தான்: “இதை வச்சுத்தான் அவர்கள் என்னை முழு மனசா ஏத்திருக்காங்க. நான் அவர்கள்ல ஒருவனா ஆயிட்டேன்.”
கை கழுவி, முகத்தை நனைக்காமல் படுத்துறங்கப் போன வின்சென்ட், அடுத்து வந்த எல்லா நாட்களிலும் முகத்தில் வேண்டுமென்றே கரியை எடுத்துப் பூசிக்கொண்டு அவர்களில் ஒருவனாக தன்னை ஆக்கிக் கொள்வதில் தனியாகக் கவனம் செலுத்தினான் என்பதே உண்மை.
¤ ¤ ¤
ஒரு நாள் வின்சென்ட் அதிகாலையிலேயே படுக்கையை விட்டு எழுந்தான். ஒரு துண்டு காய்ந்துபோன ரொட்டியை எடுத்து சாப்பிட்டான். ஜேக்யுவுடன் சுரங்கத்தைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டான். இரவு முழுக்க பெய்த மழையால் மார்க்காஸுக்குப் போகிற வழியே மறைந்து போயிருந்தது. நல்ல குளிர் வேறு. கிழிந்து போன கோட்டுக்குள் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் வரிசையாக நின்றிருந்தனர். மண்ணெண்ணெய் விளக்குகள் வைக்கப்பட்டிருந்த ஒரு அறையை நோக்கித்தான் முதலில் அவர்கள் சென்றார்கள். “கீழே ஏதாவது விபத்து நடந்திருச்சுன்னா இங்கே இல்லாத விளக்குகள் வச்சு யார் விபத்துல சிக்கியிருக்காங்கன்றதை நாங்க கண்டுபிடிச்சிருவோம்”-ழாக் சொன்னார்.
வின்சென்ட்டும், ஜேக்யுவும் சுரங்கத்திற்குப் போகிற தொழிலாளிகளிடம் போய் சேர்ந்து கொண்டார்கள். ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட ஆறு கூடுகள் அந்த வண்டியில் இருந்தன. நிலக்கரிக் குவியல்களைப்போல அதில் தொழிலாளிகள் ஏற்றப்பட்டனர். அந்த வண்டியின் மூலம்தான் அவர்கள் சுரங்கத்திற்குள் இறங்க வேண்டும்.
வண்டி கீழே இறங்குவதற்கான கட்டளை கிடைத்தது. இரும்புத் தூண்கள் வழியாக குறுகிய பாறைகளுக்கு நடுவே இருண்டு போய்கிடக்கும் அந்த அதல பாதாளத்தை நோக்கி ஒரு வெடிகுண்டைப் போல அந்த வண்டி கீழ்நோக்கிப் பாய்ந்தது. வாழ்க்கையில் இதுவரை எந்தக் காலத்திலுமே உண்டாகியிராத ஒரு வகை நடுக்கம் வின்சென்ட்டின் உடலில் உண்டானது. இங்கு ஏதாவது ஆபத்து உண்டானால் மரணம் தான்! அதுமட்டும் நிச்சயம்!
தான் நடுங்கிப்போனதை வின்சென்ட் ஜோக்யுக்கிடம் சொன்னபோது ஜேக்யு சொன்னார்: “எல்லாத் தொழிலாளிக்கும் இந்த பயம் எப்போதும் உண்டு. நானும் இப்படித்தான் பயந்து நடுங்கினேன். ஆனால், நான் வேலைக்கு வந்து 32 வருஷமாச்சு.