வான்கா - Page 17
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8808
இங்கு உண்மையின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த அகன்ற உலகில் தனக்கென்று ஒரு இடம் இருக்கவே செய்கிறது – அது எந்த இடம் என்பதையும் வின்சென்ட் அறிந்தே வைத்திருந்தான். அவன் முன்னே முழு மூச்சுடன் நடந்து செல்வதற்கான உற்சாகத்தையும், தெம்பையும் மெந்தெஸ் அவனுக்குத் தந்திருக்கிறார். அவனின் செயலைப் பார்த்து குடும்பத்தில் உள்ள எல்லோரும் வருத்தப்பட்டு முகத்தைச் சுழிக்கலாம். அது பற்றியெல்லாம் இப்போதிருக்கும் சூழ்நிலையில் வின்சென்ட் கவலைப்படத் தயாராக இல்லை. தன்னுடைய அமைதியான வாழ்க்கையை தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். இது ஒன்றே அவனின் மனதில் இருக்கும் ஒரே எண்ணம்.
யாரிடமும் ஒரு வார்த்தை கூடக் கூறாமல் வின்சென்ட் அந்த வீட்டைவிட்டு புறப்பட்டான்.
¤ ¤ ¤
பெல்ஜியத்தில் இவான்ஜலைசேஷன் குழுவில் மொத்தம் மூன்று பேர் இருந்தார்கள். ரெவ. வான் டென் ப்ரிங், ரெவ. ஜோங், ரெவ. பீட்டர்ஸென் – இவர்களே அந்த மூவர். ப்ரஸ்ஸெல்ஸில் ஒரு இலவசப் பள்ளிக்கூடம் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வின்சென்ட் அங்கு மாணவனாகச் சேர்ந்தான். மூன்று மாதங்களுக்குள் தேவையான தகுதியைப் பெற்றுவிட்டால் பெல்ஜியத்தில் ஏதாவதொரு இடத்தில் வேலை கட்டாயம் கொடுப்பதாக அந்தக் கமிட்டி அவனுக்கு உறுதியளித்தது.
ரெவ.பீட்டர்ஸென் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த பிறகு, வின்சென்ட்டின் கையைப் பிடித்தவாறு வெளியே நடந்தார். வெளியே நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது.
“நீ எங்களைத் தேடி வந்ததில் நாங்கள் உண்மையாகவே சந்தோஷப்படுகிறோம், வின்சென்ட். பெல்ஜியத்தில் ஆக்கப் பூர்வமான வேலைகள் செய்வதற்கான சூழ்நிலைகள் நிறைய இருக்கு. உன்னோட ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் பார்க்குறப்போ, நீ நிச்சயம் நல்ல செயல்களைச் செய்யிறதுக்கு தகுதியான மனிதன் என்பதை மட்டும் என்னால உணர முடியுது.”
காய்ந்து கொண்டிருந்த வெயிலா அல்லது கொஞ்சமும் எதிர்பார்க்காமல் கிடைத்த வாய்ப்பா – எது தனக்கு இப்போது மனமகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பதில் கூற முடியாமல் திக்குமுக்காடிப் போயிருந்தான் வின்சென்ட்.
“நான் இங்கே இருந்து வேற வழியில போகணும். எப்போதாவது மாலை நேரம் என் வீட்டுப் பக்கம் வா. ஏதாவது பேசிக்கிட்டு இருக்கலாம்.” – பீட்டர்ஸென் அவனிடம் விடை வாங்கி விட்டு நடந்தார்.
பள்ளிக்கூடத்தில் வின்சென்ட்டைச் சேர்த்து மொத்தம் மூன்று மாணவர்கள். மற்ற இரு மாணவர்களும் மாஸ்டர் போக்மாவிடம் பவ்யமாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர் சொல்லித் தந்ததை கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பித்துக் கொண்டிருந்தார்கள். வின்சென்ட் நிச்சயம் அவர்களைப் போல் நடக்கத் தயாராக இல்லை. ஒவ்வொரு பிரசங்கத்திலும், அவனின் இதயம் உருகி வழிந்து கொண்டிருந்தது. வேதனை, வெறுப்பு, ஆக்ரோஷம் – இவற்றால் சில நேரங்களில் வார்த்தைகள் கூட அவன் வாயை விட்டு வெளியே வர மறுத்தன.
எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் பிரசங்கம் செய்ய வின்சென்ட் நிச்சயம் விரும்பவில்லை. இரவு நேரங்களில் தான் மட்டும் தனியே அமர்ந்து எப்படி எல்லாம் பேசலாம் என்று பிரசங்கத்தை தயார் பண்ணுவான் வின்சென்ட். மற்ற இரண்டு மாணவர்களும் கிளி பாடுவதைப் போல, இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், மோட்சத்தைப் பற்றியும் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, வின்சென்ட் தான் தயார் செய்து வைத்திருந்த பிரசங்கத்தைப் படிக்கத் துவங்கினான்.
“ஆம்ஸ்டர்டாமில் உனக்கு இதைத்தான் சொல்லித் தந்தார்களா?”- மாஸ்டர் போக்மா கேட்டார்: “இங்கே பார் வின்சென்ட், என் வகுப்பில் இதுவரை யாரும் முன்கூட்டியே பிரசங்கம் தயார் பண்ணுவது கிடையாது. பிரசங்கம் கேட்க வந்திருப்பவர்களை கட்டிப் போட்ட மாதிரி உட்கார வைத்திருக்கிறார்கள்- இதுவரை என்னிடம் படித்த மாணவர்கள் எல்லோரும்.”
வின்சென்ட் பிரசங்கம் செய்ய முயற்சித்தான். ஆனால், முடியவில்லை. இதுவரை எழுதி தயார் பண்ணி வைத்திருந்த வார்த்தைகள் அனைத்தும் மறந்து போய்விட்டன. உடன் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து மாஸ்டரும் அவனைக் கேலி பண்ணி சிரித்தார்.
“மாஸ்டர் போக்மா, நான் எப்படி பிரியப்படுகிறேனோ, அப்படி பிரசங்கம் பண்ணத்தான் நான் விரும்புகிறேன். என் வேலையை நான் முழுமையா செய்வேன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்க சொல்றபடியெல்லாம் கேக்குறதுக்கு நான் தயாராக இல்லை.”
“நான் என்ன சொல்றேனோ, அதை நீ கேட்டால் போதும்”- போக்மா கடுப்பான குரலில் கூறினார்: “இல்லாட்டி நீ என்னோட வகுப்புல உட்கார்ந்திருக்க முடியாது.”
இந்த ஒரு சம்பவம் காரணமாக வின்சென்ட்டிற்கு வேலை கிடைக்காமல் போனது. அவனுடன் படித்த இரண்டு மாணவர்களுக்கும் வேலை கொடுக்கப்பட, அவனுக்கு அது மறுக்கப்பட்டது.
“வேணும்னா இன்னும் ஆறு மாசம் பள்ளிக்கூடத்திலே இரு. அப்பவாவது நீ...” சொல்ல வந்ததை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தினார் ரெவ. ப்ரிங்க்.
என்ன பதில் கூறுவது என்று தெரியாததால் வின்சென்ட், எதுவுமே கூறாமல் வெளியே இறங்கி நடந்தான். கால் போன படி எங்கு போகிறோம் என்று தெரியாமலே நடந்தான். தூரத்தில் ஒரு வயல் தெரிந்தது. அதை நோக்கி நடந்தான். அங்கிருந்த ஒருமர நிழலில் ஒதுங்கினான். ஆஹா... என்ன தனிமை நிலை! மெல்ல பைப்பைக் கையில் எடுத்து புகைத்தான். வாய் கசந்தது. வயலில் நடந்து கொண்டிருந்த கிழட்டுக்குதிரை அவன் அருகில் வந்து நின்றது. வின்சென்ட்டின் உடம்போடு உரசிக் கொண்டு நின்றது அது. பல வித சம்பவங்களையும் அசை போட்டுப் பார்த்த வின்சென்ட் தெய்வத்தை நினைத்துப் பார்த்தான். ‘இயேசு கிறிஸ்து கொடுமையான காற்றுக்கு மத்தியிலும் சாந்த சொரூபனாக இருந்தார்.’ ‘நான் ஒண்ணும் தனி மனிதனில்லை. கடவுள் என்னை எந்தக் காலத்திலும் கைவிட மாட்டார். எந்த நேரத்திலும் எப்படியாவது நான் கடவுள் சேவைக்கு தயாரான மனிதனாக இருப்பேன். அதற்கான வழியை நிச்சயம் கண்டு பிடிப்பேன்.’ தன் அறைக்கு அவன் திரும்பி வந்தபோது அவனுக்காக அங்கு ரெவ.பீட்டர்ஸென் காத்திருந்தார். ‘நான் உன்னை வீட்டுக்குச் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டுட்டுப் போகலாம்னு வந்தேன் வின்சென்ட்’- வின்சென்ட்டைப் பார்த்ததும் அவர் சொன்னார்.
வீட்டுக்குப் போகிற வழியெங்கும் எதுவுமே நடக்காத மாதிரி அவனுடன் என்னென்னவோ பேசிக் கொண்டே வந்தார் பீட்டர்ஸென். வின்சென்ட் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் அவர் மிகவும் கவனமாகக் கேட்டார். அவர் தன் வீட்டின் முன்னறையை ஒரு ஸ்டுடியோவாக மாற்றி இருந்தார். அந்த அறையின் ஒரு மூலையில் ‘ஈஸல்’ (படம் வரைவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்டாண்ட்) வைக்கப்பட்டிருந்தது. சுவரில் சில ஓவியங்களும் மாட்டப்பட்டிருந்தன.