வான்கா - Page 12
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8807
வின்சென்ட்டின் மனதில் அலை மோதியது. திடீரென்று ஏதோ தகர்ந்து வெடித்ததுபோல் அவன் உணர்ந்தான். இதுவரை தான் சிக்கிக் கொண்டிருந்த ஒரு மந்திர வளையத்தைவிட்டு வெளியே வந்துவிட்டதுபோல் உணர்ந்தான் அவன். இவ்வளவு எளிதாக இது நடக்கும் என்பதை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
மீண்டும் மழையில் நனைந்தவாறே- எந்தவித உணர்வுப் போராட்டங்களும் இல்லாமல் சாதுவான மனிதனாக ஐஸ்ல்வொர்த்திற்குத் திரும்பி வந்தான் வின்சென்ட். தொடர்ந்து தன் பொருட்களை எல்லாம் எடுத்து மூட்டை கட்டினான். இங்கிலாந்தோடு காலா காலத்திற்கும் விடைபெற்று புறப்பட்டான் அவன்.
¤ ¤ ¤
போரினேஜ்
டச் கப்பல் படையில் உயர்ந்த பதவியில் அமர்ந்திருப்பவர் வைஸ் அட்மிரல் ஜோகன்னஸ் வான்கா. வின்சென்ட்டின் தந்தையின் சகோதரர். வான்கா குடும்பத்திற்கென்றே அடையாளமாக இருக்கிற மேலே துருத்திக் கொண்டிருக்கிற தாடை எலும்பும், நீண்ட மூக்கும், சற்று மேடான நெற்றியும் ஜோகன்னஸ் வான்காவிடமும் இருந்தன. வின்சென்ட் தன்னைத் தேடி வந்த நாளன்று சீருடை அணிந்த கோலத்தில் நின்றிருந்தார் ஜோகன்னஸ் வான்கா.
“நீ இங்கே வந்திருப்பது குறித்து நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா வின்சென்ட்? என் பசங்க திருமணம் ஆகி போன பிறகு இந்த வீடு எவ்வளவு அமைதியா ஆகிப் போச்சு!”
படிகளில் ஏறி வின்சென்ட்டை அழைத்துக் கொண்டு போன ஜோகன்னஸ், அவனுக்கென்று ஒதுக்கி வைத்திருந்த அறைக்குள் வின்சென்ட்டைப் போகச் சொன்னார். கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்த அவர் மெதுவான குரலில் சொன்னார்:
“வின்சென்ட், நீ தெய்வ சேவைக்காக உன்னை அர்ப்பணிச்சுக் கிட்டதற்காக உண்மையிலேயே நான் சந்தோஷப்படுறேன். வான்கா குடும்பத்துல ஒரு ஆளாவது கடவுளுக்குத் தொண்டு புரிய இருக்கணும்.”
வின்சென்ட் மெல்ல எழுந்து சென்று தன் பைப்பில் புகையிலையை நிரப்பத் தொடங்கினான். கொஞ்சம் சிந்திக்க நேரம் வேண்டும் என்பதற்காகவே இந்த செயல்!
“ஒரு இவான்ஜலிஸ்ட்டாக உடனே வேலையைப் பார்க்கலாம்னு நான் நினைச்சேன்.”
“இவான்ஜலிஸ்ட்டுகளுக்கு படிப்பு தேவையில்லை. அவங்க சொல்லித் தர்ற மதத் தத்துவங்களைப் புரிஞ்சுக்கிறதுக்கு கடவுளால மட்டுமே முடியும். ஆனால், நம்ம குடும்பத்துல அப்படி இல்லை. எல்லாருமே பல்கலைக்கழகத்துல கல்வி கற்று பட்டம் பெற்றவங்க. சரி... அது இருக்கட்டும்... சாமான்களையெல்லாம் ஒழுங்கா சரிப்படுத்தி வை. எட்டு மணிக்கு உணவு தயாரா இருக்கும்!”
மனதில் ஏதோ குறை இருந்தது மாதிரி இருந்தது வின்சென்ட்டிற்கு. அறை நல்ல சவுகரியம் உள்ளதாகவே இருந்தது. இருந்தாலும் அவன் மனதில் என்னவோ நெருடிக் கொண்டிருந்தது. திடீரென்று என்ன நினைத்தானோ, வெளியே நடந்து சென்று ஒரு யூத புத்தகக் கடைக்காரனின் கடைக்குள் நுழைந்து அறையில் மாட்டுவதற்கென்று சில படங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கினான்.
வாங்கி வந்த ஓவியங்களைச் சுவற்றில் மாட்டிக் கொண்டிருந்தபோது, ரெவ.ஸ்ட்ரிக்கர் அங்கு வந்தார். அவரின் மனைவியும், வின்சென்ட்டின் தாயும் சகோதரிகள். ஊரில் தனக்கென்று புகழையும், நல்ல பெயரையும் சம்பாதித்து வைத்திருக்கும் மனிதர் அவர்.
“நான் இங்கே மிக உயர்ந்த பண்டிதரான மெந்தெஸ் த கோஸ்தாவிடம் உனக்கு லத்தின் மொழியையும், கிரேக்க மொழியையும் சொல்லித் தரச் சொல்லி இருக்கேன். யூதப்பாளயைத்தில் தான் அவர் இருக்கார். திங்கட்கிழமை மூணு மணிக்கு நீ அங்கே போகணும். ஆனா, நான் இப்போ வந்தது உன்னை வீட்டுக்கு அழைக்கத்தான். உன்னோட அம்மா விலெமினாவும், கஸின் கேயும் உன்னைப் பார்க்கணும்னு வீட்ல காத்து இருக்காங்க.”
“அங்க வர்றதுல எனக்கு சந்தோஷம்தான். எப்போ வரணும்?”
“நாளைக்கு மதியம். என்னோட கடைசி காலை நேர வழிபாட்டுக்குப் பிறகு...”
“என்னோட அன்பையும், பாசத்தையும் வீட்ல இருக்கிற எல்லார்க்கிட்டயும் சொல்லுங்க.”
“சரி... அப்போ நான் வர்றேன். நாளைக்கு வீட்ல பார்ப்போம்”- ஸ்ட்ரிக்கர் வெளியே புறப்பட்டார்.
¤ ¤ ¤
ஆம்ஸ்டர்டாமில் பெரிய பணக்காரர்கள் வசிக்கக்கூடிய கைஸர்ஸ்க்ராக்ட் என்ற இடத்தில் இருந்தது ஸ்ட்ரிக்கரின் வீடு. வீட்டுக்குப் பக்கத்திலேயே அருவியொன்று இருந்தது. ஃப்ளெமிஷ் பாணியில் கட்டப்பட்ட வீடுகள் வரிசையாக ஒரே மாதிரியாக அமைந்திருந்தது, அணிவகுத்து நிற்கும் சிப்பாய்களை ஞாபகப்படுத்தியது.
அடுத்த நாள் வின்சென்ட் ஸ்ட்ரிக்கரின் வீட்டை நோக்கி பயணமானான். திடீரென்று தெரிந்த சூரிய வெளிச்சம், ஏற்கனவே இருந்த கரு மேகங்களை இருந்த இடம் தெரியாமல் விரட்டியடித்தது. ஆகாயம் ஒரே பிரகாச மயமாக இருந்தது. மெல்ல நடந்து செல்கிறபோது, ஆற்றில் நீர்ப் போக்குக்கு எதிரே போய்க் கொண்டிருக்கும் படகுகளைப் பார்த்தான் வின்சென்ட். கருத்த, நீளமான, மணலை ஏற்றிச் செல்லும் படகுகள்! படகோட்டி துடுப்பை எவ்வளவு வேகமாக தண்ணீரில் துழாவினானோ, அதற்கேற்றபடி படு கம்பீரமாகப் போய்க் கொண்டிருந்தது படகு. அவனின் மனைவி பின்பக்கத்தில் அமர்ந்து மரத்தைக் கையால் பிடித்துக் கொண்டிருந்தாள். அவர்களின் குழந்தைகளும் நாயும் படகுக்குள் இருந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஸ்ட்ரிக்கரின் வீடு மூன்று மாடிகளைக் கொண்டிருந்தது. கட்டிடமெங்கும் மலர்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. மூன்றாவது மாடியின் ஒரு அறையில் இருந்து ஒரு மரத் தடி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
விலெமின் பெரியம்மா வின்சென்ட்டை வரவேற்றாள். மரப் பலகையால் ஆன சுவர்கள். ஒருபக்கம் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் கெல்வினின் படம் இருந்தது. மங்கலான வெளிச்சத்தில் கண் பார்வை தெளிவாகத் தெரியாத நிலையில் சற்று உயரமான ஒரு பெண் வின்சென்ட்டின் முன் வந்து நின்று சொன்னாள்.“உனக்கு நான் யார்னு தெரியாது. நான்தான் உன்னோட கஸின் - கே”
அவள் தன் கைகளை நீட்ட, அவற்றைத் தன் கைகளால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் வின்சென்ட். இளமை துடித்துக் கொண்டிருக்கும் ஒரு அழகிய பெண்ணின் கையின் மென்மைத் தன்மையையும், இளம் சூட்டையும் பல மாதங்களுக்குப் பிறகு உணர்ந்தான் வின்சென்ட்.
“நாம ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை”- அந்தப் பெண் சொன்னாள்: “உண்மையிலேயே நினைச்சுப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கு. எனக்கு இப்போ இருபத்தாறு வயசு நடக்குது. உன்னோட வயசு என்ன?”
வின்சென்ட் அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.நிமிடங்கள் ஒவ்வொன்றாக கடந்து போய்க் கொண்டிருந்தன. அவள் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் கூறாமல் இருக்கிறோம் என்பதே இப்போதுதான் தெரிந்தது வின்சென்ட்டிற்கு. இருந்தாலும், இவ்வளவு நேரமாய் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்ததை மறைக்கக்கூடிய விதத்தில் குரலைச் சற்று உயர்த்தி வின்சென்ட் சொன்னான்: “இருபத்தி நாலு... உன்னைவிட ரெண்டு வயசு கம்மி.”