வான்கா - Page 13
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8807
“ஆமா... நீ இதுவரை ஆம்ஸ்டர்டாமுக்கு வந்தது இல்லை. நான் ப்ரபாண்டுக்கு வந்தது இல்லை. நினைச்சுப் பார்த்தால், இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு! அட... நான் மறந்தே போனேன். உன்னை உட்காரக் கூட வைக்காம நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்கேனே! வா... உட்காரு.”
வின்சென்ட் அங்கிருந்த ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்தான். பிறகு என்ன நினைத்தானோ, வின்சென்ட் சொன்னான்: “நீ ப்ரபாண்டுக்கு வருவேன்னு அம்மா பல தடவை எதிர்பார்த்தாங்க. உனக்கு நிச்சயம் ப்ரபாண்டை ரொம்பவும் பிடிக்கும்.”
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அம்மா பல தடவை என்னை அங்கே வரச் சொல்லி கூப்பிட்டு இருந்தாங்க. கூடிய சீக்கிரம் நான் அங்க வரணும்னு முடிவெடுத்திருக்கேன்.”
“கட்டாயம் வரணும்”- வின்சென்ட் கூறினான்.
என்னதான் அவளிடம் பேசிக்கொண்டிருந்தாலும், உண்மையில் பார்க்கப் போனால், வின்சென்ட்டின் மனதின் ஒரு பகுதிதான் இந்த உரையாடலில் ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தது. மனதின் மீதி பக்கம் ஒரு திருமணமாகாத இளைஞனின் காம வேட்கையுடன் அந்த அழகிய பெண்ணின் உடல் அழகை ஆசை தீர அள்ளி அனுபவித்துக் கொண்டிருந்தது. டச்சு பெண்களுக்கே உரிய ஒரு வகை கம்பீரம் கேயின் முகத்தில் தெரிந்தது. அவளின் உடலே சிலை என கடவுளால் செதுக்கப்பட்டிருந்ததாக உணர்ந்தான் வின்சென்ட். தலைமுடியில் ஒரு வகை பிரகாசம் தெரிந்தது. வெயில் அதிகம் படாத உடலை அவள் கொண்டவள் என்பதைப் பார்த்தபோதே அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. வெளுத்த நாடி, சிவந்த கன்னம், வாழ்க்கையின் துடிப்பும், ஆனந்தமும் நிறைந்து இருக்கின்ற நீல நிற கண்கள்... முத்தமிட வேண்டும் என்று அழைக்கின்ற அதரங்கள்... இதுதான் கே.
“என்ன ஒரேயடியா ஏதோ சிந்தனையில இருக்கிறே! வேற ஏதோ ஒரு உலகத்துல நீ இருக்கிற மாதிரி தெரியுது...”
“உன்னைப் பற்றித்தான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். உன்னை மட்டும் பார்த்திருந்தால், நிச்சயம் ரெம்ப்ராண்ட் உன்னைக் கட்டாயம் ஓவியமா தீட்டி இருப்பான்!”
அதைக் கேட்டதும் கே அழகாகச் சிரித்தாள். “ஆனால், ரெம்ப்ராண்ட் அழகே இல்லாத கிழவிகளை ஓவியமா வரையத்தானே மிகவும் விரும்பி இருக்கார்!”
“அப்படிச்சொல்ல முடியாது. அழகான வயதான பெண்களை- அவங்க வாழ்க்கையையே வெறுத்துப் போனவர்களாகவும், வறுமையில சிக்கிக் கிடந்தவர்களாகவும் இருந்தாலும்- கஷ்டங்களில் ஆத்மாவை தரிசித்த அவர்களை ஓவியமாக வரைய ரெம்ப்ராண்ட் ரொம்பவும் விரும்பினார்ன்றது தான் உண்மை!”
வின்சென்ட் பேசுவதையே உற்று நோக்கினாள் கே. சாதாரணமாக முதல் தடவையாக அவனை அவள் பார்த்தபோது, அவனின் சிவந்த முடியும், பெரிய முகமும்தான் அவள் கண்களில் பட்டன. இப்போது அவளின் அழகான உதடுகளையும், என்னவோ ஆழமாக கூற நினைக்கும் கூர்மையான கண்களையும் வான்கா குடும்பத்திற்கென்றே இருக்கிற அகலமான நெற்றியையும், தனக்கு முன் நீண்டு இருக்கிற அவனின் நாடிப் பகுதியையும் அவள் பார்த்தாள்.
“என்ன ரெண்டு பேரும் இப்படி உட்கார்ந்து ஆழமா பேச ஆரம்பிச்சிட்டீங்க?”- வாசல் கதவோரம் நின்றிருந்த ரெவ.ஸ்ட்ரிக்கர் கேட்டார்.
“நாங்க ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்திக்கிட்டோம். எனக்கு இப்படி ஒரு கஸின் இருக்கிறதா நீங்க இதுவரை சொல்லவே இல்லியேப்பா?”- கே தந்தையைப் பார்த்துக் கேட்டாள்.
அப்போது அந்த அறைக்குள் ஒரு மனித பிரவேசித்தான். சிரித்த முகத்தையும், காண்போரைக் கவரக்கூடிய வசீகரமான தோற்றத்தையும் கொண்டிருந்தான் அவன். அவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்த கே, அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். “இது என்னோட கஸின். பெயர் வின்சென்ட். இது என்னோட கணவர் பெயர் வோஸ்.”
அவள் உள்ளே போய் இரண்டு வயது பெண் குழந்தையுடன் வந்தாள். அவள் மகள்தான். குழந்தை தாயைப் போலவே நீல நிறக் கண்ளையும், அழகான முகத்தையும் கொண்டிருந்தது. வோஸ் தாயையும் குழந்தையையும் ஒன்று சேரக் கட்டிப்பிடித்து அணைத்தான்.
“வின்சென்ட், மேஜைக்குப் பக்கத்துல என் அருகில் வந்து உட்காரேன்” என்றாள் விலெமின் அம்மா. வின்சென்ட்டுக்கு எதிரில் கேயும், அவளது கணவனும் அமர்ந்தார்கள். வோஸ் வந்தவுடன் வின்சென்ட்டையே கிட்டத்தட்ட மறந்துபோனது மாதிரி இருந்தாள் கே. அவள் முக பாவம் கூட முன்பு இருந்தது மாதிரி இல்லாமல் வேறு மாதிரி மாறித் தெரிந்தது. கணவன் காதில் ஏதோ முணுமுணுக்க, அவள் ஆவேசமாகத் திரும்பி அவனை முத்தமிட்டாள். அதைத் தன் கண்களால் பார்த்தான் வின்சென்ட்.
அவர்களுக்கிடையே இருந்த ஆழமான காதல் பிணைப்பைப் பார்த்து திக்குமுக்காடிப் போனான் வின்சென்ட். இதுவரை மனதிற்குள் ஏதோ ஒரு மூலையில் மறைந்து கிடந்த ஊர்ஸுலாவைப் பற்றிய நினைவலைகள் மேலே எழுந்து, அவன் மனதையும் உடலையும் வாட்டத் தொடங்கின. இந்தச் சிறிய குடும்பத்தில் நிலவும் அன்பும், பாசமும், ஆனந்த சூழ்நிலையும் வின்சென்ட்டை இன்னும் பல விஷயங்களை நினைக்க வைத்தன. கடந்த பல மாதங்களாக அன்பிற்காக தான் ஏங்கி அலையோ அலை என்று ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்ததை இப்போது காணும் காட்சிகளோடு அவன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, அவன் மனதில் வேதனையே எஞ்சி நின்றது.
¤ ¤ ¤
வின்சென்ட் எல்லா நாட்களிலும் அதிகாலையிலேயே படுக்கையை விட்டு எழுந்து விடுவான். ஐந்து மணிக்கு சூரியன் உதிக்கத் தொடங்குகிற நேரத்தில் படுக்கையை விட்டு எழுந்து, ஜன்னல் பக்கத்தில் போய் நிற்பான். கப்பல் தளத்திற்கு வேலைக்குப் போகிற தொழிலாளர்களின் இருண்ட உருவங்கள் வரிசையாக அவன் கண்களில் படும். ஸுய்டர்ஸி அணையில் படகுகள் அழகாக சஞ்சரித்துக் கொண்டிருக்கும்.
சூரியனின் கதிர்கள் பட்டு மரத்தடிகளில் இருக்கும் பனி கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கும். வின்சென்ட் ரொட்டியும், ஒரு கிளாஸ் பீரும் முடித்து அடுத்த ஏழு மணி நேரங்களில் லத்தீனும், கிரேக்க மொழியும் கற்றுக் கொள்வதில் மூழ்குவான்.
ஐந்து மணி நேரம் ஆகிறபோது தலை இலேசாக வலிக்கும். தன்னை விட்டு சிந்தனை வேறு எங்கே போய்க் கொண்டிருப்பதாக வின்சென்ட் உணர்வான். எத்தனையோ கசப்பான அனுபவங்களையும், விரக்தி அடையக் கூடிய சம்பவங்களையும் பார்த்த பிறகு தன்னால் எப்படி மொழியைக் கற்றுக் கொள்வதில் நூறு சதவிகித கவனத்துடன் அமர்ந்திருக்க முடியும் என்ற விஷயத்தை அவன் யோசிக்காமல் இல்லை. இருந்தாலும், எப்படியோ கஷ்டப்பட்டு உட்கார்ந்து, மாலை நேரம் வந்ததும் மெந்தெஸ் தகோஸ்தாவைப் பார்க்க அவன் கிளம்பி விடுவான்.